www.arulezhilan.com

நண்பர்களே புதிய இணையதளம் ஒன்றை துவங்கியிருகிறேன்.


http://arulezhilan.com/

தமிழகத்தையும் ஈழத்தையும் இணைப்பது எது எனக் கேட்டால்..? -தீராநதி

சந்திப்பு: டி.அருள் எழிலன்

போருக்குப் பின்னர் ஈழத்திலிருந்து புதிய தலைமுறை எழுத்தாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். சாத்தியாமான எல்லா எல்லைகளையும் தொட்டு விடும் துடிப்பு அவர்களிடம் உள்ளது. அந்த வகையில் தனது ‘ஆறாவடு’ நாவல் மூலம் தமிழ் இலக்கியப்பரப்பில் அறிமுகமாகியிருப்பவர் சயந்தன். நாவல் வெளி வந்த மிகக்குறுகிய காலத்திலேயே புகலிடத்திலும், இலங்கையிலும் விவாதிக்கப்படும் முன்னணி படைப்பாளியாகியிருக்கிறார். “கடவுள் படங்களுக்கு முன்னே நின்று முப்பது வயதுவரையாவது உயிரோடு வாழ்ந்தால் போதுமென வேண்டிய காலங்கள் என் நினைவில் நிற்கின்றன.” என்று சொல்லும் சயந்தன் இப்போது சுவிஸ்சில் வாழ்கிறார். மனதுக்குப் பட்டதை பளிச்சென்று பேசிவிடும் சயந்தனின் நேர்காணல்……
தீராநதி: உங்களுடைய ஆறாவடு நாவலுக்கு கிடைத்த வரவேற்பு எப்படி இருக்கிறது?
சயந்தன்: நாவல் வெளியான நாளிலிருந்து, அங்கீகாரமும் நிராகரிப்பும் மாறி மாறி வந்தபடியிருந்தன. ஆறாவடு எனது முதல் படைப்பு, முதற் படைப்பொன்றின் படைப்பாளி என்ற வகையில் அங்கீகாரங்களும் எனக்கு நெருக்கமான எழுத்துக்களைப் படைத்த எழுத்தாளர்களது பாராட்டுக்களும் ஒரு வித கிளர்ச்சியைத் தந்தன என்பதை மறைக்க முடியாது. விமர்சனங்கள் என்ற வகையில், அது விமர்சகர்களது இலக்கிய அழகியல் கொள்கைகள், அவர்களது வாசிப்புச் சார்ந்த எதிர்பார்ப்புக்கள், வாசிப்புச் சார்ந்த அனுபவங்கள், படைப்பாக்கம் மீதான தேடல்கள் மேலும் அவர்களது அரசியல் பார்வைகள் கூட தீர்மானிக்கின்றன என்பதை அறிந்தேயிருந்தேன். என்னுடையதற்கு மாற்றாக முற்றிலும் மாறுபட்ட எதிர்நிலைப் பார்வையொன்றை ஒருவர் கொண்டிருக்க முடியும் என்ற உண்மையை ஏற்றுக் கொள்வதோடு விமர்சனத்திற்கும் எனக்குமான உறவு முடிந்து விடவேண்டுமென்பதே எனது விருப்பம். மட்டுமல்லாது நாவல் மீதான எதிர் நிலைப் பார்வைகளை ஒளித்தும் மறைத்தும் வைக்காதிருத்தல், அவற்றிற்கான வெளிகளை உருவாக்குதல் என்பவற்றிலும் ஆர்வம் கொண்டிருக்கிறேன்.இன்னொரு நிலையில் நாவல் மீதான அங்கீகாரங்களும் நிராகரிப்புக்களும் தமக்குள் உரையாட ஆரம்பித்தன. அவற்றைக் கூர்மையாக அவதானிக்கத்தொடங்கினேன். ஒரு படைப்பாளியாக பயன்தரு விடயமாக அவ்வுரையாடல்கள் அமைந்தன. அவ்வாறான உரையாடல்களிலிருந்தே கற்கவும் முடிந்தது.
தீராநதி: ஆறாவடு என்பது யுத்தம் ஏற்படுத்திய வடுதான் இல்லையா? அது உங்களுக்குள் என்ன பாதிப்பை ஏற்படுத்தியது. நீங்கள் எப்போது இடம் பெயர்ந்தீர்கள்?
சயந்தன்: இலங்கைத்தீவின் அனைத்து மனிதர்களையும் யுத்தம் ஏதோ ஒரு வகையில் பாதித்தே இருக்கிறது. அவர்களது இயல்பு வாழ்வினைக் குலைத்துப் போட்டிருக்கிறது. நினைத்தும் பார்த்திரா திருப்பங்களை ஒரு பயணத்தின் வழியிலிருக்கும் பாழும் கிணற்றினைப் போல உருவாக்கியிருக்கிறது. எல்லோரையும் மூடி யுத்தம் போர்த்திருந்தது. பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பும் வழியில், கோயிலுக்குச் செல்லும் பாதையில், சந்தையில் கூடி நிற்கையில், தெருவில் செல்கையில் விமானக்குண்டு வீச்சிலோ ஷெல் தாக்குதல்களிலோ அல்லது குண்டு வெடிப்புக்களிலோ உயிரிழந்தும் அங்கங்களை இழந்தும் ஆகிற வாய்ப்புக்கள் எல்லோருக்கும் இருந்தன. சாவுகள் பெரும்பாலும் இவ்வாறன சூழல்களிலேயே ஏற்பட்டன. இவ்வாறான பொதுவான அச்சுறுத்தல்களின் மத்தியிலேயே இருபது வயதுகள் வரை வாழ்ந்திருந்தேன். தவிரவும் யுத்தம் ஒவ்வொரு ஊராக நம்மை விரட்டியடித்தபடியிருந்தது. தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளுக்கு மேல் நான் ஒரே பள்ளியில் படித்ததில்லை. புதிய ஊர்களையும் புதிய பள்ளிக் கூடங்களையும் யுத்தம் தந்து கொண்டேயிருந்தது.
இதனைத் தவிர்த்து, யுத்தம் தனது பிரதிநிதிகளுடாக குறித்த மனிதர்களின் பெயர்களையும் தேடி அலைந்தது. இந்திய இராணுவத்தோடு இணைந்திருந்தவர், புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர், புலிகளுக்கு சாப்பாடு கொடுத்தவர், புலிகளைக் காட்டிக் கொடுத்தவர், அரச பயங்கரவாதத்தை எதிர்த்து எழுதிய பத்திரிகையாளர்கள், புலிகளது செயற்பாடுகளை எதிர்த்தவர்கள் என எல்லோரையும் அது தேடித் தேடி அழித்தது.விரும்பியோ விரும்பாமலோ யுத்தத்தின் சாயலின்றி எந்த ஈழத் தமிழரும் வாழ முடியாது என்ற நிலைக்கு தள்ளியது. இவ்வாறாக, பெயர்களைத் தேடி அலையும் அச்சுறுத்தல்களின்றி பொதுவான அல்லது வழமையான அச்சுறுத்தல்களையே நான் எதிர்கொண்டிருந்தேன்.
ஆயினும் எனது சிறிய வயதில் அது பெரும் மனப்பாதிப்பினை ஏற்படுத்தியிருக்கிறது. பத்துப் பன்னிரெண்டு வயதுகளில் கடவுள் படங்களுக்கு முன்னே நின்று முப்பது வயதுவரையாவது உயிரோடு வாழ்ந்தால் போதுமென வேண்டிய காலங்கள் என் நினைவில் நிற்கின்றன. பத்திரிகைகளில் முதல்நாளில் நடந்த விமானக் குண்டுவீச்சில் செத்தவர்களின் விபரமும் படங்களும் வரும்போது, நேற்று இதே நேரம், அவர்கள் சாகப்போவது தெரியாமல் உயிரோடிருந்தார்கள். நாளைக்கு எனக்கும் நிகழுமோ என்ற வெப்பியாரம் மிகுந்த உணர்வுகள் எனக்குள் ஓடிப்படர்ந்திருக்கின்றன. இன்றைக்கும் சடுதியாக விமான இரைச்சல்களைக் கேட்க நேர்கையில் திடுக்கிட்டு விடுகின்றேன்.
இறுதி யுத்த நாட்களின் கொடூரம் போலொன்றை நான் அனுபவித்ததில்லை. அந்தச் சுழலுக்குள் உறவுகளையும் அவயங்களையும் உடமைகளையும் இழந்து திரும்பிய மனிதர்களதும் சிறுவர்களதும் மனநிலை எதிர்காலத்தில் என்னவாயிருக்குமோ என்பது அச்சமாயிருக்கிறது.
தீராநதி: ஆறாவடு அரசியலை நீக்கி விட்டு நிகழ்வுகளைக் கொண்டு உரையாடுகிறது என்று ஒரு சாரார் சொல்கிறார்களே?
சயந்தன்: ஆம். அரசியல் நீக்கம் செய்யப்பட்ட பிரதி என்றும், எதிர்ப்பரசியலை ஆழமாக முன்னிறுத்தாத நாவல் என்றும் விமர்சனங்கள் வெளியாகின. அண்மையில் நண்பர் சசீவன், ஆறாவடு குறித்து ஒரு விமர்சனக்குறிப்பினை எழுதியிருந்தார். அதில் இவ் அரசியல் நீக்கம் குறித்துப் பேசியிருந்தார். அதனை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்..
இருவேறு அதிகார மையங்களுக்குள் வாழச்சபிக்கப்பட்ட தலைமுறையொன்றின் – ‘எஞ்சியுள்ள வாழ்வைத் தக்கவைக்கும்’ தலைமுறையொன்றின் அலைக்கழிவான வாழ்க்கை அரசியல் நீக்கம் செய்யப்பட்டிருப்பதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. அரசியல் அதிகாரங்களுக்குள்ளே சென்றவர்கள் கூட அரசியல் நீக்கம் செய்யப்பட்டிருந்தததைக் கண்டும் கேட்டும் இருக்கின்றோம். தொன்னுாறுகளுக்குப் பிறகான தலைமுறையின் அரசியல் சார்ந்த சிறு கருத்துதிர்ப்பும் கூட, தீவிரமான அரசியற் செயற்பாடுதான் என்றே கூற வேண்டும். தமிழ்த்தேசியத்திற்கு எதிரான ஒரு சிறு வரியைக் கூட வாசித்திருக்காத , அறிந்தேயிருக்காத ஏராளமான இளைஞர்களை எங்களது தலைமுறையில் கண்டிருக்கின்றோம். அதிலிருந்து மாறுமட்டு, இந்தத் தலைமுறையின் உரையாடலுக்குத் தயாராயிருக்கும் பிரதி இது.
நாவலில் அதிகார மையங்களுக்குமெதிராக எங்கேயும் போர்க்கொடி தூக்கப்படவில்லை. எதிர்த்து வசனம் பேசப்படவில்லை. நாவலில் வரும் பாத்திரங்கள், யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு அப்பால் நகர்பவர்களாகவே நாவல் முழுவதும் வந்து செல்கின்றார்கள். அப்பால் சென்று, அதிகாரத்தை வைகின்றார்கள். தனியே இருந்து தலையிலடித்து கதறி, ஆற்றாமையை வெளிப்படுத்துகின்றார்கள். அதிகாரத்தின் இருப்பை மறுதலிக்க முடியாத தமது இயலாமையை நோகாமல், அதிகாரத்தை ஓயாமல் நையாண்டி செய்கின்றார்கள். நையாண்டி மூலம் தமது உடன்பாடின்மையைத் தெரிவிக்கின்றார்கள். ஆயுதம் மூலமான, உயிரை எந்நேரமும் பறித்துவிடக்கூடிய அதிகாரத்தின் பலமான இருப்பைத் தம்மால் அசைத்துவிட முடியாது என்று தெரிந்தும், தமது நையாண்டிகளும் நக்கல்களும் அதிகாரத்தை எதுவும் செய்துவிடப்போவதில்லை என்பது தெரிந்தும் அதிகாரத்தைத் தொடர்ச்சியாக நையாண்டி செய்தபடியேயிருக்கின்றார்கள். அதிகாரத்தின் காதுகள் தம்மைச் சுற்றி உள்ள போதெல்லாம் மனதிற்குள் நையாண்டி செய்கின்றார்கள். அதிகாரத்தின் துப்பாக்கிகளின் முன்பு கைகட்டி வாய்பொத்தி மௌனியாகி நிற்கின்றார்கள். அதிகாரத்தின் கால்களை தடவிய மறுகணமே அப்பால் சென்று, அதிகாரத்தை நையாண்டி செய்கின்றார்கள். இங்கு, மனிதர்கள் அரசியல் நீக்கம் செய்யப்பட வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அரசியல் நீக்கம் செய்யப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து தம்மைப் பழக்கப்படுத்தினார்கள்.
தீராநதி: ஆறாவடுவில் புலிகள் சாதிப்பிரச்சனையைக் கையாண்ட விதம் தொடர்பாக ஒரு பகுதி வருகிறது. உண்மையில் தமிழர்களிடையேயான சாதி வழக்கத்தை புலிகள் எவ்வாறு எதிர்கொண்டார்கள்?
சயந்தன்: சாதிக்கு எதிராகப் போராடுவதென்பது ஒரு பண்பாட்டுப் போராட்டம். நிலவும் பண்பாட்டை மாற்றி எழுதி ஒரு புதிய பண்பாட்டை நிறுவுவது. அந்த வகையில் புலிகளால் சாதியக் கருத்துருவை அழிக்க முடியவில்லை. சீதனமுறைமைக்கு எதிராக மேற்கொண்ட பரப்புரைகளோடு ஒப்பிடுகையில் சாதியத்திற்கு எதிரான விழிப்புணர்ச்சியை ஒரு செயற்பாடாக அவர்கள் மேற்கொள்ள வில்லை. ஆனால் தீண்டாமைக் கொடுமைகளை துப்பாக்கியின் துணை கொண்டு அவர்களால் ஒடுக்க முடிந்திருந்தது. புலிகளின் ஆளுகைக்கு வெளியில் அது ஒரு போராட்டக்குழுவாக பார்க்கப்பட்டாலும் 90 களுக்குப் பிறகு புலிகள் தம்மை ஒரு குறை நிலை அரசாக பாவனை செய்து கொண்டார்கள். சாதிய அடிப்படையிலான பாகுபாட்டினை ஒரு குற்றமாகக் கருதி, அதனை தாம் உருவாக்கிய சட்டக் கட்டமைப்பின் ஊடாக அணுகினார்கள். அது தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான கொடுமைகளை ஓரளவுக்கேளும் நிறுத்தியிருந்தது. எப்படியென்றால் ஆதிக்க மனங்களில் கசடு அப்படியே நிலைத்திருக்க அவர்களின் கைகளைக் கட்டிப் போட்டிருந்தார்கள். எங்கேனும் அவ்வாறான கொடுமைகள் மேற்கொள்ளப்பட்டால் கடுமையான முறையில் தண்டனைகள் வழங்கப்பட்டிருந்தன. இது காரணமாக தமிழ் சமூகத்தில் முன்னர் தலைவிரித்தாடிய சாதிப்பாகுபாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட புறவயமான கொடுமைகள் நிறுத்தப்பட்டிருந்தன. அவ்வளவே,


மற்றும்படி திருமணம், தொழில் என சாதி தனது கட்டமைப்பை தொடர்ச்சியாகப் பேணியபடியிருந்தது.ஒரு சம்பவம் சொல்கிறேன். தொன்னுாற்று இரண்டுகளாக இருக்க வேண்டும். மாவீரர்தின நிகழ்வுக் கலை நிகழ்வொன்றில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. அப்போது வடபகுதியில் சவர்க்காரம் சீனி மண்ணெண்ணெய் உட்பட பல அத்தியாவசியப் பொருட்களுக்கு இலங்கை அரசால் தடை விதிக்கப்பட்டிருந்தது. வில்லுப்பாட்டில் ஏதோ ஒரு இடத்தில், “ஏன் தெரியுமா.. யாழ்ப்பாணத்திற்கு சவர்க்காரத்தினை அனுப்புவதில்லை. பிரேமதாசா வண்ணான் தானே.. அதுதான் அவர் முழுச் சவர்க்காரங்களையும் எடுத்துவிட்டார்” என்று கூறினார்கள். நிகழ்ச்சியினைப் பார்த்துக் கொண்டிருந்த யோகி உடனடியாக மேடையேறி நிகழ்ச்சியை நிறுத்தச் சொன்னார். பிரேமதாசா நம்முடைய எதிரியாக இருக்கலாம். அதற்காக சாதியைச் சுட்டி கேலி செய்வதை ஏற்கமுடியாதென்றார். நிகழ்ச்சி இடைநடுவில் நிறுத்தப்பட்டது. இதே பிரேமதாசாவை அடுத்த மே தினத்தில் ஊர்வலமொன்றில் வைத்து சைக்கிளில் மோதிய புலிகளின் தற்கொலைக் குண்டுதாரியொருவர் கொலை செய்தார். இந்த இரண்டு சம்பவங்களுமே புலிகளும் சாதியும் என்ற பார்வையில் பதிவு செய்ய வேண்டிய முக்கிய சம்பவங்களாக எனக்குத் தோன்றுகிறது. ஒரு படைப்பாளி என்ற வகையில் இந்த இரண்டையும் நான் பதிவு செய்வேன். இவற்றில் ஒன்றை மட்டுமே பதிவு செய்பவர்களைக் குறித்தும் ஒன்றை மட்டுமே பதிவு செய் என ஆணையிடுபவர்கள் குறித்தும் எனக்கு அக்கறையில்லை.
தீராநதி: போருக்குப் பின்னர் இலங்கை எழுத்தாளர்களின் சிந்தனை முறையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? சுதந்திரமாக சிந்திக்கவும் பேசவும் முடிகிறது என்றொரு கருத்து பொதுவாகச் சொல்லப்படுகிறதே?
சயந்தன்: நீங்கள் இந்தக் கேள்வியை போருக்குப் பின்னர் புலிகள் தொடர்பாக சுதந்திரமாக விமர்சிக்க முடிகிறதே என்ற அர்த்தத்தில் கேட்கிறீர்கள் என நம்புகின்றேன். உண்மையில் போருக்கு முன்னரும் புலிகள் இருந்த காலத்திலேயே புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து சுதந்திரமாக புலிகளையும் அரசினையும் விமர்சித்து எழுதிவருபவர்கள் இருக்கிறார்கள். இலங்கையில் போருக்கு முன்னர் புலிகள் தரப்புக் குறித்து கடுமையான விமர்சனங்களை வைக்க முடியாதிருந்தவர்களுக்குப் பல்வேறு காரணங்கள் இருந்தன. அவர்கள் புலிகளின் ஆளுகைக்குள் இருந்தார்கள். சிலர் புலிகளில் இணைந்திருந்தார்கள். சிலர் புலிகளுக்காக ஏதோரு ஒரு வகையில் செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். சிலர் சிவனே என்று சும்மாயிருந்தார்கள். இவர்களுக்கு போரின் பின்னரான சூழல், இதுநாள் வரை தம்மால் வெளியிட முடியாதிருந்த புலிகள் மீதான விமர்சனங்களை அல்லது திடீரென ஞானம் பெற்று உய்த்த கருத்துக்களைச் சொல்வதற்கு வழியைத் திறந்து விட்டிருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
ஆனால் மறுவளமாக அரச பயங்கரவாதம் குறித்து ஒரு வார்த்தையேனும் கதைக்க முடியாத நிலைமை இப்பொழுது அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.அதாவது புலிகளது சூழலில் அரச பயங்கரவாதத்திற்கு மட்டும் எதிராகவும் இராணுவச் சூழலில் புலிகளது அராஜகச் செயற்பாடுகளுக்கு மட்டும் எதிராகவும் எழுதவும் பேசவும் முடிகிற சுழலுக்குள் மாறி மாறி அகப்பட்டாக வேண்டியிருப்பது பெரும் துயரம். இருப்பினும் கிடைக்கின்ற வாய்ப்பினைப் பயன்படுத்தி பேசக் கூடியவற்றை பேச முடிவதென்பது முக்கியமானதுதான். எப்போதாவது இரண்டு பக்கங்கள் குறித்துப் பேசும் நாளொன்று அவர்களுக்கு வரும்போதே மனச் சாய்வுகள் குறித்து அறியக் கிடைக்கும்.
என்னளவில் ஒரு மூன்றாம் தரப்பாக நின்று புலிகளை விமர்சிக்க முடியவில்லை. அது ஒரு பெரும் குற்ற உணர்ச்சி. விவரணைகளுக்கு அப்பாலானது. எனது நாவலிலும் சிறுகதைகளிலும் வருகிற புலிகளைச் சுட்டுகிற பதிவுகள் முழுக்கவும் சுய விசாரணைக் குறிப்புக்கள்தான். நேற்றுவரை நான் நின்ற வட்டத்தின் உள்ளேயே நின்றவர்கள், இரவோடு இரவாக வெளியே பாய்ந்து காலையில் என்னைக் கை கொட்டிச் சிரிப்பதுவும் எள்ளி நகையாடுவதும் போல எனக்கும் ஓரிரவு அதிசயம் ஏதும் நடந்தால் பாழாய்ப்போன இந்த குற்ற உணர்ச்சியைக் கூட்டியள்ளி எறிந்து விட்டு ஜோதியில் கலந்து விடலாம். முடியவில்லை.
சயந்தன்: புகலிட தமிழ் அரசியல் சூழல் எப்படி இருக்கிறது?
தீராநதி: எனது இருபதுகள் வரை மிகத் தட்டையான ஒற்றைப்பார்வையைக் கொண்டிருந்தேன். புலிகளின் ஆளுகைக்குள் நீண்ட காலம் வாழநேர்ந்த எனது தலைமுறைக்கு இப்படியான நிலையே வாய்த்திருக்கும். சுய வெட்கத்துடன் சொல்வதெனில் முஸ்லீம்களின் வெளியேற்றத்தை நான் விடுதலைப் பயணத்தில் ஒரு தடையை நீக்கியதாகவே அந்த வயதுகளில் நம்புகிற அளவிற்கு மனநிலை இருந்தது.அந்த சூழலில் இருந்து முற்றாக வெளியேறி புகலிடத்திற்கு வந்தபோது அங்கு நிலவியதாக கருதிய மாற்றுச் சூழல் முற்றிலும் புதியதாக இருந்தது. ஒருவகையில் எனது முன்னைய ஒற்றைப் பார்வை குறித்த வெட்கமும் உருவாகியது. ஆயினும் அவ்வாறான மாற்றுச் சூழலின் செயல் இயக்கம் ஒரு குட்டையில் தேங்கிய நீரைப்போலவே தேங்கி நின்றது.
ஒரு கட்டத்தில் அதிகார எதிர்ப்பு நிலையாளர்கள் என்றளவிலாவது அம் மாற்று அரசியல் மீதான மரியாதை நீடித்திருந்தது. அதாவது ஒரு இயக்கமாகச் செயற்படமுடியாத ஆனால் புலிகள், அரசு முதலான அதிகாரங்களுக்கு எதிரான மனநிலை கொண்டதாக அவ் அரசியலை அடையாளம் கண்டுகொண்டேன்.
இருப்பினும் புலிகளுடைய தோல்வியின் பிறகு, புகலிட மாற்றுச் சூழலின் அதிகாரங்கள் மீதான எதிர்ப்புணர்வு தன்னைத் தோலுரித்து உள்ளே பல்லிளித்தபடியிருந்த புலியெதிர்ப்பின் முகம் கோரமாக வெளித்தெரிந்தது. மாற்றுக்கருத்தாளர்கள் என அறியப்பட்ட சிலர் இலங்கை அரசோடு சமாந்தரமாகப் பயணித்ததை கண்டுகொள்ள முடிந்தது. அவர்களது அதிகாரங்களுக்கு எதிரான மனநிலை எங்கேயென்று தேடுகிற அளவிற்கு நிலைமையானது. பலர் யதார்த்தமென்பது இலங்கை அரசோடும் , அரசோடு இணைந்த தமிழ் கட்சிகளோடும் இணைந்தே மக்களுக்காக எதையேனும் செய்ய முடிகிறது என்கிறார்கள். இருக்கலாம். ஆனால் ஒரு விவாதத்திற்காக, போரின் மிகப்பெரும் அழிவுகளின் பின்னரும் ஒருவேளை புலிகளின் கை ஓங்கியிருந்தால் அப்பொழுது மக்களின் நலன் கருதி புலிகளோடு கை நனைத்துக் கொள்ள இவர்கள் தயாராக இருந்தார்களா என்று கேட்டால் பதில் என்னவாக இருக்கும்.. ?
உண்மை என்னவென்றால், புலிகளது வெளியில் தமக்கான அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள முடியாதிருந்ததே, சிலரது பிரச்சனையாக இருந்ததாக நான் உணர்கின்றேன். இன்றைய நிலையில் புலிகள் அற்ற மூன்று வருடங்களின் பின்னரும் புகலிடத்தில் புலி ஆதரவு அரசியலும், புலி எதிர்ப்பும் அரசியலும்தான் நிலவுகிறது.
புகலிடச் சூழலில் பரவியிருந்த புலி ஆதரவு அரசியல் மட்டுமல்ல மேற்குறிப்பிட்ட புலி எதிர்ப்பு அரசியல் என்பதும் புலிகளது இருப்பு என்ற அச்சிலேயே திரண்டிருந்தது. புலிகளது அழிவின் பிறகு அது தன்னைத்தானே உதிர்த்துக்கொண்டிருக்கிறது. புலிகள் என்ற இலக்கு அற்ற நிலையில் தோளில் மாட்டிய அம்புறாத்தோணிகளோடும், வில்லும் அம்புகளோடும் இனிமேல் என்ன செய்வதென்றே அவர்களும் திசைதெரியாது இருக்கின்றனர் என நான் நினைக்கிறேன்,
தீராநதி: போர் முடிந்து மூன்றாண்டுகள் ஆகி விட்ட நிலையில் இப்போது உங்கள் மன நிலை என்ன?
சயந்தன்: ஒரு முட்டுச்சந்தில் நிற்பதைப் போன்றிருக்கிறேன். எனக்குத் தெரியவில்லை. தமிழர்களின் அரசியல் பிரச்சனைகள் அப்படியேதான் இருக்கின்றன. தமிழ் பகுதிகளில் இராணுவப் பிரசன்னம் இன்னமும் இருக்கிறது. இலங்கை அரசுகள் அரசியல் பிரச்சனை விவகாரத்தை அப்படியே தொடர்ந்தும் பேணுவார்கள். ஒரு தீர்வினை எட்டுவதற்கான முயற்சிகளில் அவர்கள் ஒருபோதும் இறங்கப்போவதில்லை. அவ்வாறான அழுத்தத்தை பிரயோகிப்பதற்கு தமிழர்களிடமும் இப்போதைக்கு வழியேதுமில்லை.
சிலர் சொல்கிறார்கள், மீளவும் ஆயுதப்போர் வெடிக்கும், தமிழீழம் கிடைக்குமென்று. உண்மையில் தமிழர் பிரச்சனைக்கான தீர்வொன்றுக்கு எதுவிதமான வேறு வழிகளும் தெரியாதவிடத்து ஆயுதப்போர் வெடிக்கும் என்று கும்பலில் கோவிந்தா போட்டுவிட்டு இருக்கலாம்தான். ஆனால் அது என்னளவில் இயலுதில்லை.
இறுதிப்போரின் அழிவுகளும், அக் குழந்தைகளும் சிறுவர்களும் முதியவர்களும் கருகிய நிலமும் புகை கலந்த காற்றும் இரத்தமும் எரிந்த சதைத்துணுக்குகளும் அவற்றிற்கு சற்றேனும் சம்பந்தமற்ற இடத்தில் நான் இயல்பான வாழ்வொன்றுக்குள் இருப்பதுவும் ஆயுதப்போரினை நான் நினைத்தும் பார்க்க முடியாத நிலையில் என்னை நிறுத்தியிருக்கின்றன.போர்க்குற்ற விவகாரங்களில் எனது ஈடுபாடெல்லாம் கூட மகிந்தவிற்கோ வேறு எவரிற்குமோ தண்டனை வாங்கிக் கொடுத்தலின் பாற்பட்டதல்ல. இவ்விவகாரங்கள் மூலமான அழுத்தம் தமிழர்களுக்கு ஏதேனும் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் என்ற அளவிலேயே. அது நடந்துவிட வேண்டுமென விரும்புகிறேன்.
தீராநதி: சிங்களர்களுடன் பகை மறுப்புத் தேவை? என்று தொடர்ந்து தமிழர்களுக்கு சிலர் சொல்கிறார்கள். உண்மையில் இந்த பகை மறுப்பு என்னும் விஷயத்தை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?
சயந்தன்: ஆம். பகை மறப்பு குறித்து சிலர் பேசியும் எழுதியும் வருகிறார்கள். உண்மையில் பகை மறப்பென்பது இலங்கை அரசோடும் இராணுவ இயந்திரத்தோடுமா அல்லது சிங்கள மக்களோடா என்பது தெளிவுபடுத்தப்படவேண்டியது. சிங்கள அரசோடு இணங்கிப் போவதென்பதை பகை மறப்பு என எண்ண முடியவில்லை.சிங்கள மக்களைக் குறித்த சந்தேகங்களும் கோபங்களும் தமிழர்களிடத்தில் இருக்கிறது. மறுவளமாக சிங்கள மக்களிடத்திலும் அவ்வாறான சந்தேகங்கள் உள்ளன. 2003 இல் சமாதான காலத்தில் ஒருமுறை சிங்களப் பகுதிகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இயற்கை அனர்த்தத்தில் வீடுகள் அழிந்தன. பல குடும்பங்கள் வீதிக்கு வந்தன. அப்பொழுது வன்னியில் திரட்டிய அத்தியாவசியப் பொருட்களோடு புலிகளின் அரசியல் அணியொன்று சிங்களப் பகுதிகளுக்குச் சென்றிருந்தது. அப்பொழுது சிங்களப் பெண்மணியொருவர் புலிகளின் உறுப்பினர் ஒருவரிடம் உண்மையாகவே நீங்கள் புலிகள்தானா.. என்று ஆச்சரியத்தோடு கேட்டதும் கைலாகு கொடுத்தபோது நம்பவே முடியவில்லை. புலிகள் என்பவர்களும் எம்மைப் போலவே மனிதர்களாக இருக்கிறார்கள் எனச் சொன்னதுமான சம்பவங்களை பின்னர் அவ் உறுப்பினர் நினைவு கூர்ந்திருந்தார்.
தமிழீழத்தினை பெற்ற பிறகு கூட சிங்களதேசமே நமது அயல்நாடாக இருக்கப் போகிறது என்றும் இரண்டுக்கும் இடையில் கால்வாய் வெட்டி கடலை உட்கொண்டு வரமுடியாது என்றும் அயல்தேசத்து மக்களாக சிங்கள மக்களே இருக்கப் போகிறார்கள் பொருளாதாரத் தொடர்புகளில் இரு நாடுகளும் பின்னியே இருக்குமென்றும் கருத்துக்களை பாலகுமாரன் போன்ற புலிகளின் முக்கியஸ்தர்கள் கொண்டிருந்தார்கள்.ஆக சிங்களமக்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான பகைமறப்பு என்பது ஆரோக்கியமானதே.ஆனால் இறுதிப்போரில் இலங்கை அரசு வென்றபோது சிங்களமக்கள் வர்க்க பேதமற்று வெடி கொளுத்திக் கொண்டாடினார்கள். அந்த யுத்தத்தில் வெல்வதற்காக இலங்கை அரசு மேற்கொண்ட யுத்த மீறல்கள், அப்பாவிப் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொலைகள் அனைத்தையும் அங்கீகரித்தபடியே அந்தக் கொண்டாட்டங்கள் இருந்ததாக ஒரு தோல்வியுற்ற இனமாக தமிழர்களின் மனங்களில் ஆறாத காயமாக அந்த நிகழ்வுகள் இருக்கின்றன. அவற்றைத் தணிக்கும் பொறுப்பு சிங்கள மக்களிடமே உள்ளது.
ஒரு பெரும் போருக்குப் பின்னதாக பகை மறப்பின் முதல் அடியினை வெற்றி கொண்ட தரப்பே மேற்கொள்ள முடியும். பகை மறப்பென்பது எக்காளமும், குரூரமும், வென்ற திமிரும் அற்ற மனநிலையில் எதிர்காலம் என்ற நோக்கு நிலையில் மட்டுமே தோல்வியுற்ற மனதொன்றோடு செய்து கொள்ளக் கூடியது. மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். அவ்வாறான பகை மறப்பிற்கான சமிக்கைகள் எதுவும், சிங்கள அரசிடமிருந்து வருகிறதா.. மாறாக போராளிகளின் கல்லறைகள் சிதைத்தல், கொலைகளைக் கொண்டாடுதல், கடத்தல் கொலை என்று அச்சம் தரும் சூழலைத் தொடர்ந்தும் பேணுதல், வழிபாட்டு இடங்களை மூடுதல் என மேலும் இடைவெளிகளை அதிகரிக்கும் செயல்களே நடக்கின்றன. தன் பிள்ளையின் உடல் துாங்கிய கல்லறையை புல்டோசரைக் கொண்டு கொத்திக் கிளறிய ஒரு தரப்போடு எந்தத் தாயால் எந்தத் தந்தையால் எந்த அண்ணனால் எந்த தம்பியால் பகை மறப்பு குறித்து யோசிக்க முடியும்..
தீராநதி: ஈழ விவாகரத்தில் இந்தியாவைத் தவிர்க்க முடியுமா? இந்தியாவை எப்படி அணுகின்றீர்கள்?
சயந்தன்: தெற்காசிய அரசியல் நகர்வுகளில் இந்தியாவைத் தவிர்த்து இலங்கையில் தமிழர்கள் தமக்கான தீர்வொன்றினைப் பெற்றுவிட முடியாது என்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள். ஆனால் இந்தியாவை அவ் விடயத்தில் தலையிடாதபடி இலங்கை மிகுந்த இராஜதந்திரத்தோடு காய்களை நகர்த்துவதோடு தனக்கு ஏற்றபடியும் பயன்படுத்திக் கொள்கிறது.நான் இந்தியாவை நம்பிக்கெட்ட ஒருவனின் கண்களுக்கூடாகவே பார்க்கிறேன். இனி என்னிடம் இந்தியா குறித்த எந்த எதிர்பார்ப்புக்களும் இல்லை. இந்தியா மட்டுமென்றல்ல. தமிழ்நாடு குறித்தும் அதுவே நிலைப்பாடு.
தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள், பிரமுகர்களின் தமிழீழம் குறித்த ஸ்டேட்மென்ட்களை ஒரு வித துயரம் சுமந்த ஏளனப் புன்னகையோடு பார்த்தபடியிருக்கிறேன்.இந்தியாவில் ஈழத்தமிழ் விவகாரமென்பது சிலருக்கு செய்தி, சிலருக்கு அரசியல், சிலருக்கு வியாபாரம், சிலருக்கு எரிச்சல், சிலருக்கு ஆற்ற முடியாத பெரும் துயரம். அப்படித் துயரம் கொள்வோரின் கண்ணீர் உண்மையானது. ஆனால் அதனை நாமே துடைத்து விட வேண்டியிருக்கிற யதார்த்தத்தை நான் உணர்ந்து நீண்ட நாட்களாகிவிட்டன.இப்பொழுது தமிழ்நாட்டினையும் ஈழத்தினையும் எதுவெல்லாம் இணைக்கின்றன எனக் கேட்டால் எதுவுமல்ல, பாக்குநீரிணை ஒன்றைத் தவிர என்பதுவே எனது பதில்.
நேர்காணல்: குமுதம் தீராநதி யூலை 2012

பேராசிரியர் அ.மார்க்ஸ்.சென்னை வேளச்சேரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரண்டு வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்று போலீசாராலும். போலீசார் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் ஊடகங்களாலும் சொல்லப்பட்டு அறைக்குள் இருந்த ஐந்து இளைஞர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். போலீசாரின் இக்கருத்துக்கள் தொடர்பாக இருவேறு கருத்துக்கள் மக்களிடம் நிலவுகின்றன. பெரும்பலான மக்கள் இவர்களை இப்படித்தான் கொல்ல வேண்டும் என்கிறார்கள். அதே சமையம் கணிசமான மக்களிடம் இது முழுக்க முழுக்க திட்டமிடப்பட்ட படுகொலைதான் இது. என்கிற சந்தேகமும் நிலவுகிறது. சில ஊடகங்கள் இந்த படுகொலை தொடர்பாக பல் வேறு கேள்விகளையும் எழுப்ப போலீசார் பொது மக்களை தூண்டி விட்டு மக்கள் இக்கொலைகளை ஆதரிப்பது போன்று ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள். சென்னை மெரீனா கடற்கரையில் திருவல்லிக்கேணி வணிகர் சங்கம் சார்பில் மெகா சைஸ் பிளெக்ஸ் போர்டில் பொது மக்களின் கையொப்பங்களை வாங்கிக் கொண்டார்கள். சென்னை நகரைக் காக்கும் போலீசைப் பாராட்டுவோம் என்ற அறிவிப்போடு போர்ட் வைக்கப்படுவதற்கு முன்னால் வணிகர் சங்கத் தலைவர் த. வெள்ளையன் சென்னை கமிஷனரைச் சந்தித்து கொள்ளையர்களை வீழ்த்தியதற்காக பாராட்டு தெரிவித்ததாக தினத்தந்தியில் படித்தேன். இவர்களுக்கெல்லாம் ஈழப் பிரச்சனையில் மனிதப் படுகொலை பற்றி பேசும் யோக்கியதை உண்டா? உயிர்க்கொலையை சட்ட விரோதப் படுகொலையை நியாயப்படுத்தும் அளவுக்கு காட்டுமிராண்டித்தனமான போக்கு வளர்ந்து விட்ட நிலையில், இந்த அக்கிரமங்களை தட்டிக் கேட்கவும் இதற்காக குரல் கொடுக்கவும் இன்று யார் உள்ளார்கள்.

பேராசிரியர் அ.மார்க்ஸ் தனியொரு மனிதராக நீண்டகாலமாக மனித உரிமை போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசு பயங்கரவாதம், இந்துத்துவ வெறியர்களின் படுகொலைகள், சாதி வெறிப் படுகொலைகள் என்று வெகு சிலரே இம்மாதிரியான விவாகரங்களில் உண்மை நிலையை வெளிக்கொண்டு வருகிறார்கள். அதில் மிக மிக முக்கியமான மனிதராக பேராசிரியர் அ.மார்க்ஸ் உள்ளார். அவரும் நண்பர்களும் சேர்ந்து சென்னை வேளச்சேரி போலீஸ் கொலை தொடர்பாக விசாரிக்கச் சென்ற இடத்தில் போலீசாரின் ஏற்பாட்டின் பேரில் அங்கு குழுமியிருந்த சில சமூக விரோத சக்திகள் அ.மார்க்ஸையும் உடன் சென்ற நண்பர்களையும் அசிங்கமாக திட்டியிருக்கின்றனர். அவர்களின் மனித உரிமைப் பணிகளைச் செய்ய விடாமல் தடுத்திருக்கின்றனர். தினத்தந்தி நாளிதழ் அதை மனித உரிமையாளர்கள் விரட்டியடிப்பு என்ற செய்தியை படித்த போது பதறி விட்டேன். நிம்மதியற்ற ஒரு மன நிலையில் இதை எழுதுகிறேன். பொது சனம் என்பவர்களை வெறும் பொதுப்புத்தியோடு செயல்படுகிறவர்கள் என்று எளிமையாக இன்றைய காலச்சூழலில் புரிந்து கொள்ள முடியாது. அதற்கு சிறந்த உதாரணமாக டைம்ஸ் ஆப் இந்தியாவின் இன்றைய நாளிதழில் முதல் பக்க செய்தி வந்துள்ளது .

பேராசிர்யர் அ.மார்க்ஸ் மீது அளவற்ற அன்பு கொண்டவன் நான் என் திருமணத்தின் போது சினிமா நடிகர்களையோ பிரபலங்களை அழைப்பதிலோ நான் ஆர்வம் காட்டவில்லை. என்னை நேசித்த எல்லா என் நண்பர்களும் என் உடன் இருந்தனர். பேராசிர்யர் அ.மார்க்ஸ் திருமணத்திற்கு வரவில்லை மறு நாள் வீட்டிற்கு வந்து நீலாவையும் என்னையும் பார்த்தார். பொன்னிலா பிறந்த போது வீட்டிற்கே வந்து பார்த்தார். இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால் நான் நேசிக்கும் மனிதர்களில் ஒருவராக எப்போதும் மார்க்ஸ் இருக்கிறார் என்பதைச் சொல்வதற்காக, வெவ்வேறு விஷயங்களில் அவரோடு ஒத்த கருத்தோடு நின்ற போதும் , ஈழப் பிரச்சனை வந்த போது நான் அவரோடு முரண்பட்டேன். இப்போதும் சொல்கிறேன் என் அன்பிற்குரிய அ.மார்க்ஸ்சின் ஈழம் தொடர்பான கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை. என் கருத்துக்களை நான் மாற்றிக் கொள்ளவில்லை. நான் எந்த தேசியவாதப் போக்கையும் ஆதரித்ததும் இல்லை. அதே சமையம் ஈழம் தொடர்பான கருத்துக்கள் மாறுவதற்காக சூழல் இந்த பிராந்தியத்தில் மாறி விடவும். இல்லை. ஆனால் இந்த முரண்பாடுகள் ஒரு கட்டத்தின் மனகச்சப்புகளாகி மன வேறுபாடுகளை உருவாக்கி விட்டது.

ஆனாலும் அவர் ஈழம் தொடர்பாக மட்டும் வேலை செய்கிறவர் அல்ல,. நானும் பல் வேறு சமூகச் செயற்பாடுகளை என் அளவிற்கு மேற்கொள்கிறேன். கோவை முஸ்லீம் படுகொலைகள், பரமக்குடி படுகொலைகள், தாமிரபரணி படுகொலைகள், என கடந்த இருபது ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த எல்லா மனித உரிமை மீறல்களை வெளிக் கொண்டு வந்ததில் பேராசியரின் பங்கு அளப்பரியது. சாதியைத் தாண்டாத நமது எழுத்தாளர்களுக்கு மத்தியில் அ.மார்க்ஸ் ஒரு உண்மையான போராளி. அவரது குழுவினரை சுற்றி வளைத்து போலீசார் ஏற்பாட்டில் வந்தவர்கள் தடுத்திருந்தாலும். பொது மக்கள் தடுத்திருந்தாலும் அது கேடு கெட்ட செயலாகும். மனித உரிமைகள் கொல்லப்பட்ட காலச்சூழலுக்குள் வாழும் நிலையில் இது போன்ற அநாகரீமான உயிர்க் கொலையை ஆதரிக்கும் போக்கை ஏற்றுக்கொள்ள இயலாது. பேராசியரின் மனித உரிமைச் செயற்பாடுகளுக்கு நாம் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும். போலீஸ் கொலையை ஆதரிக்கும் மனப் போக்குகள் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்க்க வேண்டும்.

இறுதியாக,

ஒரு சில ஊடகங்களும், போலீசும் இணைந்து உருவாக்கும் பொதுப்புத்தி என்பது அவ்வளவு எளிமையானதல்ல என்று துவக்கத்தில் சொல்லியிருந்தேன். சென்னை பள்ளிக்கரணையில் பாலாஜி நகர் என்ற இடத்தில் உள்ள குடிசைப்பகுதியில் வட மாநில இளைஞரைப் போன்ற தோற்றம் கொண்ட ஒரு இளைஞர் நடந்து சென்றிருக்கிறார். அவரை சிலர் பாலோ பண்ணியிருக்கிறார்கள். சிலர் தன்னை பாலோ பண்ணுவதை அறிந்த அந்த அப்பாவி இளைஞர் ஒரு கட்டத்தில் வேகமாக நடக்கத் துவங்கி, ஓடத் துவங்கியிருக்கிறார். துரத்தியவர்கள் அதற்குள் 15 பேர் வரை சேர்ந்து அந்த இளைஞரை பிடித்து கட்டைகளால் தாக்கியிருக்கிறார்கள். அந்தப் பகுதி மக்கள் சுமார் ஆயிரக்கணக்கானோர் இதை வேடிக்கை பார்த்து அடித்தவர்களை உற்சாகப்படுத்தி ஆர்பரிக்க உற்சாகமடைந்தவர்கள் அடித்து நொறுக்கியதில் அந்த இளைஞர் நினைவிழந்திருக்கிறார், அந்தப் பகுதியில் சென்ற போலீசார் இதை வேடிக்கை பார்த்து விட்டுச் சென்று பின்னர் வந்து அந்த இளைஞரை வேனில் வாரிப் போட்டுச் சென்றுள்ளார்கள். தோற்றத்தில் வடமாநிலத்தவராக இருந்ததாலும் கொள்ளையர் போல இருந்ததாலும் அவரை இப்படித்தாக்கியதாக தாக்கியவர்கள் சொல்கிறார்கள். இதைப் படித்த போது அழுது விட்டேன். போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த இளைஞர் ஆந்திராவைச் சார்ந்தவர் என்றும் சரிவர பேசக் கூட தெரியாத ஒரு அப்பாவியை இவர்கள் அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். கடைசியில் அவரது கைரேகையை பதிவு செய்த போலீசார் அடித்தவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அந்த இளைஞரை விடுவித்திருக்கிறார்கள். என்ன ஒரு கொடுமை சுமார் மூன்று லட்சம் ஏழை வடமாநிலத் தொழிலாளர்கள்தான் இன்றைய தமிழக கேடுகளுக்குக் காரணமா? உங்கள் வீரத்தை இங்குள்ள ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சும் மார்வாடி பனியாவிடம் காட்ட முடியுமா? வலுவற்ற ஒரு ஏழையை பிடித்து கும்பலாக சேர்த்து அடித்து உதைக்கின்றீர்களே.. இதைச் செய்யச் சொன்னது யார்?

நாம் வாழும் சமூகம் வெகு வேகமாக பாசிச மயப்படுகிறது. யூதர்களுக்கு எதிரான இனப்படுகொலையைச் செய்த ஹிட்லருக்கு இளம் வயதில் மேன்மை மிக்க தன் இனத்தின் வறுமைக்கு காரணம் யூதர்கள் என்ற போதை ஏற்றப்பட்டிருந்ததாக வாசித்திருந்தேன். 1930 களில் உருவாக கிரேட் டிப்ரஷன் என்னும் பொருளாத நெருக்கடியினால் இலங்கையின் தேயிலைத் தொழில் வீழ்ச்சியடைய வேலையிழந்த சிங்கள தொழிலாளர்களுக்கு தேசியவாத போதை ஊட்டப்பட்டது. சிங்களர்களின் இந்த நிலைக்கு மலையாளிகளே காரணம் என்று கற்பிக்கப்பட்டது விளைவு சுமார் 30,000 மலையாள வீட்டுப்பணியாளர்கள் இலங்கையிலிருந்து சிங்களர்களால் துரத்தப்பட்டார்கள். இலங்கை இனவரலாற்றில் முதல் துரத்தல் இது என்றுதான் நினைக்கிறேன், மலையாளிகள், இஸ்லாமியர்கள், பின்னர் தமிழர்கள் என்றுதான் அந்த இனவாத நெருப்பு வளர்ந்து சென்றது வரலாறு.

தமிழகத்தில் உள்ள மின்வெட்டுக்கு கூடங்குளம் அணு உலை திறக்கப்படாததே காரணம் என்று சொல்லும் ஆளும் வர்க்கம். மக்களின் வேலையிழப்பு, கூலியின்மை, வறுமை, பசி உள்ளிட்ட எல்லா பிரச்சனைகளுக்கும் என் கவுண்டர்களை பரிசளித்து போதையில் ஆழ்த்துகிறது. இந்த போதை பெரும் பிரசாரமாக முன்னெடுக்கப்படும் போது ‘’ நாடு நல்லா இருக்க ஒரு கிராமம் அழிவதில் தவறென்ன” என்று பொது ஜனத்தை சிந்திக்க தூண்டுகிறது. நாம் தொடர்ந்து இடைவிடாது பொதுப் புத்திக்கு எதிராக அதன் மனங்களில் படிந்துள்ள ரத்த வாடைக்கு எதிராக பேசிக் கொண்டேயிருக்க வேண்டும். அந்த வகையில் தான் பேராசிரியர் அ.மார்க்ஸின் பணிகளை நான் பாராட்டுகிறேன். என் அன்பை அந்த மனித உரிமைக் குழுவினருக்குத் தெரிவிக்கின்றேன். நண்பர்களே குரல்கள் மங்கி தேசியவாத வெறி மேலெழுந்து வரும் நிலையில் நாளை நாமும் தாக்கப்படலாம் .

"its a simple ethics, people expect" -commissioner Tripathi -டி.அருள் எழிலன்.தன் குழந்தை திருடனாகவோ, கொலைகாரராகவோ, ரௌடியாகவோ , அல்லது சமூகத்திற்கு பயனுள்ள மனிதனாகவோ உருவாவான் என்பதெல்லாம் குழந்தை பிறக்கும் போது தெரிவதில்லை. அழகாக பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோர் தாங்கள் விரும்பிய பெயர்களை இடுகிறார்கள். நாளை அவர்கள் கொலை வழக்கு ஒன்றிலோ, குற்றச் செயல்களிலோ ஈடுபட்டு போலீசாரால் கை விலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லும் போது கூட பெற்றவர்கள் பிள்ளைகளை மறுதலித்து விடுவதில்லை. திருடனே என்றாலும் அவன் குழந்தைதான்.

சென்னையில் இரண்டு வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டதாக போலீசாரால் சொல்லப்பட்டு எவ்வித சாட்சியங்களுமின்றி சந்திரிகா ரே, ஹரீஸ் குமார், வினய் பிரசாத், வினோத்குமார், அபய் குமார் ஆகிய ஐந்து திருமணமாகாத இளைஞர்கள் அநியாயமான முறையில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் அபய்குமார் ஒருவர் மேற்கு வங்கத்தைச் சார்ந்தவர் என்றும் ஏனைய நால்வரும் பீஹார் மாநிலத்தைச் சார்ந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. பொதுவாக தமிழகத்தில் நடைபெறும் கொலை கொள்ளைகளுக்கு வட மாநிலத்தவர்தான் காரணம் என்று சொல்கிறது ஊடகங்களும் போலீசும். ஒரு கொள்ளை நடந்தால் அதில் விசாரிக்கப்படுகிறவர்கள் வட மாநில ஏழைத் தொழிலாளர்களாகவே இருக்கிறார்கள். திருப்பூரில் ஜாய் அலுக்காஸ் நகைக்கடையில் 14 கோடி ரூபாய் பெருமான முள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதில் நூற்றுக்கணக்கான வட மாநிலத் தொழிலாளர்களை விசாரித்துக் கொண்டிருக்கிறது போலீஸ். தமிழகத்தில் நடைபெறும் கட்டுமானப்பணிகளுக்கு மிகக் குறைந்த கூலி கொடுக்கப்பட்டு தமிழகத்திற்குள் இறக்குமதி செய்யப்பட்டவர்கள் இந்த நவீன கொத்தடிமைகள். இது போன்ற வட மாநில மாணவர்கள். நேபாளிகள், என எண்ணற்றவர்கள் தமிழகத்தில் வந்து பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். காலம் காலமாக ஏழை மக்களின் ரத்தத்தைச் சுரண்டிப் பிழைத்து வரும் பனியா, மார்வாடிகளும் இவர்களும் ஒன்றல்ல அவர்கள் வேறு இவர்கள் வேறு.

ஆனால் இந்த என் கவுண்டர்களை ஆதரிக்கும் சில காட்சி ஊடகங்கள் வட மாநிலத் தொழிலாளர்களை கண்காணிக்க வேண்டும் என்று சொல்கிறது. இக்கொலைகள் பற்றி ஊடகங்களுக்குப் பேசிய சென்னை கமிஷனர் திரிபாதி // ஜன்னல் வழியாக அவர்கள் சுட்டார்கள் பாதுகாப்புக்காக நாங்கள் சுட்டோம்// என்றும் இன்னொரு கேள்விக்கு ‎"its a simple ethics, people expert" -commissioner Tripathi அதாவது மக்களின் எதிர்பார்ப்பை நாங்கள் பூர்த்தி செய்திருக்கிறோம் என்கிறார் கமிஷனர் திரிபாதி

பாராளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதி இந்திய மக்களின் கூட்டு மனச்சாட்சிக்காக இவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கிறேன் என்றார். அந்த தீர்ப்பை வழங்கக் கோரி டில்லி மத்யமரும், பிஜேபி, இந்துத்துவ அமைப்புகளும் தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தின. ஆனால் தமிழகத்தில் நடைபெறும் கொள்ளைகள் பெரும்பலான மக்களிடம் அச்சத்தைத் தோற்று வித்ததே தவிற குற்றவாளிகளை சுட்டுக் கொல்லுங்கள் என்று எந்தமக்களும் உங்களிடம் கோரவில்லை. ஆனால் மின்வெட்டுக்கு எதிராக, விலைவாசி உயர்வுக்கு எதிராக, அணு உலைக்கு எதிராக, இழந்து விட்ட தங்களின் நிலங்களை மீட்க, நீர் உரிமைக்காக, உழைப்புக்காக, கூலி உயர்வுக்காக, உற்பத்தி செய்த உணவின் நல்ல விலைக்காக மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதிருப்தியை மறைக்க இந்த ஐந்து பேரின் ரத்தத்தையும் மக்களுக்கு பரிசாகக் கொடுத்திருக்கிறது தமிழக போலீஸ்.

மிக நேர்மையாகச் சொன்னால் தொண்ணூறு சத வீத வழக்குகளில் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படுவதில்லை. கண்டு பிடிக்கப்படுகிறவர்கள் சட்ட நடவடிக்கை மூலம் தண்டிக்கப்படுவதில்லை. காரணம் போலீஸ், ரௌடி, அரசியல்வாதிகளின் கூட்டுடனேயே பெரும்பலான குற்றங்கள் நடைபெறுகின்றன. அரசியல் கிரிமினல் மயமாகி விட்டது என்று வோரா கமிஷன் குற்றம் சுமத்தியது. கிட்டத்தட்ட எல்லா அரசியல் வாதிகள் மீதும் அதிகாரிகள் மீதும் ஊழல் புகார்கள் உள்ளன. பத்து ரூபாய் பெருமானம் உள்ள ஒரு அரசு காரியத்திற்கு ஐம்பது ரூபாய் வரை லஞ்சம் அழுதால் மட்டுமே சாத்தியமாகும் அரசு இயந்திரம்.
எந்த அரசியல்வாதி யோக்கியம் சொல்லுங்கள் போலீசின் துப்பாக்கிகள் இவர்களுக்கு எதிராகத் திரும்புமா? நவீன வசதிகள் பெருகிவிட்ட இந்த காலத்தில் இவர்கள் ஐந்து பேரையும் உயிரோடு போலீசாரால் பிடித்திருக்க முடியும். ஆனால் அந்த வீட்டின் உரிமையாளர் மனைவியின் தம்பி முருகன் என்பவர் வெளியில் கொடியில் காய்ந்து கொண்டிருந்த சட்டைத் துணியை கண்டு சந்தேகமடைந்து கிண்டி போலீசில் தொலைபேசி மூலம் புகார் கொடுத்திருக்கிறார். அவர்தான் தன் அக்காளிடம் அவர்களுக்கு அட்வான்சை திருப்பிக் கொடுக்காதே என்றும் சொல்லியிருக்கிறார். அவர் கொடுத்த தகவலின் பெயரில்தான் போலிசார் வந்து அண்டை வீட்டுக்காரர்களுக்குக் கூடத் தெரியாமல் சுட்டுக் கொன்று விட்டு கலர் கலராக கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது போலீசும் , ஊடகங்களும், முதலாளிகளும் மக்கள் மீது சேர்ந்து நடத்துகிற யுத்தம். இன்று இவர்களைக் கொன்று நமக்கு வேடிக்கை காட்டுகிறார்கள். நாளை நம்மைக் கொன்று இன்னொரு கூட்டத்திற்கு வேடிக்கை காட்டுவார்கள்.


இவர்கள்தான் அந்த கொள்ளையர்கள் என்பதர்கு எந்த விதமான ஆதாரங்களும் இல்லை. ஐந்து பேரில் வினோத்குமார் என்பவர்தான் அந்த வீடியோவில் உள்ளவர் என்று போலீஸ் சொல்கிறது. அவர் போட்டிருந்த சட்டை ரத்தக் கரைகளோடு அங்கு கிடக்கிறது. ஆனால் ஏனைய நால்வரும் யார் அவர்களும் கொள்ளையர்கள் என்ற முடிவுக்கு போலீஸ் எப்படி வந்தது. உண்மையில் அவர்கள் நிராபராதிகளாக இருந்தால் போன உயிரை திரிபாதி திருப்பிக் கொடுப்பரா? அல்லது அந்த வீட்டு உரிமையாளர்தான் திருப்பிக் கொடுப்பாரா? கொல்லப்பட்டது உயிர்களப்பா.... ஒரு வேளை நாளை அதில் கொள்ளையடித்த அந்த இளைஞர் நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். கொள்ளையடித்தது தவறு என்று மனந்திருந்தி இனி என் வாழ்நாளில் மீதி காலங்களை நான் மக்களுக்காக வாழ்கிறேன் என்று மக்களுக்காக உழைக்கும் ஒரு மனிதனாக அந்த வினோத் குமார் மாற வாய்ப்பு இல்லையா? அந்த உரிமையை அவருக்கு வழங்க மறுத்து துப்பாக்கியைத் தூக்கி இப்படிச் சுட்டுக் கொன்றிருக்கீற்களே காவல்துறையினரே உங்கள் வாழ்வில் என்றாவது ஒரு நாள் மக்களுக்கு நீங்கள் நன்மை செய்ததுண்டா? வாழும் உரிமையை மறுக்கும் உரிமையை சென்னை கமிஷனர் திரிபாதிக்கு வழங்கியவர்கள் யார்.

இப்போது அந்த பிணங்கள் அநாதைப் பிணங்காளாக ராயப்பேட்டை மருத்துவமனையில் உள்ளது. தன் பிள்ளைகளின் பிணங்களை வாங்கச் சென்றால் போலீசாரின் துன்புறுத்தலுக்கு ஆளாவோம் என்று பயந்து கூட அந்த பெற்றவர்கள் வராமல் இருக்கலாம்.

போலிஸ் கொலைகளும் பொதுப் புத்தியும்....

போலீசாரை நோக்கி சுடத் தொடங்கினார்களாம். அதில் ஒரு குண்டு அதிகாரி மீது பாய்ந்ததாம். ஆனால் குண்டு அவர் உடலுக்குள் இல்லையாம், அதனால் கட்டுப் போட்டிருக்கிறார்களாம், பொது மக்களை சுடுவோம் ( அதாவது கொள்ளையர்களை சுற்றி வளைத்தது இரவு ஒரு மணி, அதுவும் யாருக்கும் தெரியாமல்) என்று கொள்ளையர்கள் மிரட்ட கூடுதல் ஏற்பாடுகளோடு முன்னேறிய போலீசார் சரணடையச் சொன்னார்களாம். பதிலுக்கு அவர்கள் சுட போலீசார் ஐந்து பேரையும் சுட்டுக் கொன்றார்களாம்.... இது நேரடியாக போலீசார் சொன்ன தகவல் இல்லை. அறிவிக்கப்படாத போலீசாக செயல்படும் சில காட்சி ஊடகங்கள் சொன்ன தகவல்கள்.

கடந்த பத்து வருடங்களாக தமிழகமெங்கிலும் கொலை, கொள்ளை, வழிப்பறி திருட்டு, நகைக்கடை கொள்ளை, வங்கிக் கொள்ளை என பல குற்றங்கள் சிறியதும் பெரியதுமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் கொண்டு குவிக்கப்பட்ட தனியார் மூலதனங்கள் அதற்கு முன் நிபந்தனையாக மக்களின் நிலங்களை அபகரித்தது, பாரம்பரீய தொழில்களிலிருந்து மக்களை அந்நியப்படுத்தி பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமாட்டு கூலிக்கு வேலை செய்யும் வாட்ச் மேன்களாக மாற்றியது,வறுமை, என மக்கள் பெரும் துன்பங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 3,000- க்கும் மேல் ஆனால் இவைகள் வெறும் குடும்பப் பிரச்சனையாக பதியப்படுகின்றன. ஆனால் கடன் தொல்லைதான் இந்த மரணங்களுக்குக் காரணம்.
கேடு கெட்ட பொருளாதார சுரண்டலுக்கு மக்கள் ஆட்படும் போது கொலையும் கொள்ளையும் மிகச் சாதாரணமான ஒன்றாக மாறும். ஆக மொத்தம் தனியார் தாராள மயத்தின் விளையாய் நாடு முன்னேறியிருப்பதன் கண்கூடான காட்சிகளே இந்த கொள்ளைகள். இதில் பல் வேறு விஷயங்கள் மறைந்துள்ளன. அவர்கள் பொறியியல் படித்த மாணவர்கள் என்பது உண்மையாக இருக்கும் என்றால் அவர்களை வெறும் கொள்ளையர்களாக மட்டுமே புரிந்து கொள்ள நான் தயாரில்லை.

இந்த குற்றவாளிகளை உயிரோடு பிடிப்பதை போலீசார் விரும்பாத ஒரு நிலை இதில் தெரிகிறது. சமீபகாலமாக உங்களின் பிரச்சனைகளுக்கு நீங்களே காரணம் என்று மக்கள் மீதே பிரச்சனைகளுக்கான பழியை அரசு போடுவதை நாம் கண்டு வருகிறோம். மின் வெட்டா கூடங்குளத்தை திற, பெரும்பலான பொது மக்களும் மந்தைகளைப் போல ஊடகங்கள் சொல்வதையும் போலீசார் வாந்தி எடுப்பதைப் போன்ற மந்தைகளாக உருவாகி விட்டன. கோவையில் மோகன்ராஜை சுட்டுக் கொன்ற போலீசார் ஊடகங்களில் அவன் பெண் குழந்தையை பாலியல் வன்முறை செய்ததாக செய்திகளை கசிய விட்டு பின்னர் மோகன்ராஜை சுட்டுக் கொன்றனர். மக்களோ மோகன்ராஜின் கொலை வெடிக் கொளுத்தி கொண்டாடினார்கள். ஆனால் மோகன்ராஜால் கொல்லப்பட்ட குழந்தைகள் பாலியல் வன்முறைக்குள்ளானதற்கான சான்றுகள் எதுவும் இல்லை.

இதுதான் போலீஸ் புத்தி இப்போதும் இந்தக் குற்றத்தின் முழுப் பின்னணியும் போலீசார் மூடி மறைக்கப்பட்டுள்ளது என்றே தெரிகிறது, போலீசார் என்பவர் தீர்ப்பு வழங்குகிறவர்கள் அல்ல நீதிமன்றங்களே அந்த உரிமையைப் பெற்றுள்ளன. போலீசார் இங்கே தங்கள் மீது கவிந்துள்ள மக்கள் தங்கள் மீது கொண்டுள்ள வெறுப்பை போக்கிக் கொள்ள இம்மாதிரி கொலைகளை நடத்திக் கொண்டே செல்கின்றனர். கருணாநிதி ஆட்சியிலும் சகட்டு மேனிக்கு என்கவுண்டர்கள் நடந்தன. இன்றைக்கு ஜெயலலிதா சந்திக்கும் நெருக்கடிகளை பொது மக்கள் புத்தியில் மறக்கடிக்கும் வல்லமை இந்த என் கவுண்டர்களுக்கு உண்டு.

“ இவனை எல்லாம் கேஸ் கோர்ட் என்று அழைத்துச் சென்று அரசு பணத்தை வீணடிப்பது வேஸ்ட்”

‘இவனுங்களெல்லாம் இதுதாம்பா சரியான பனிஸ்மெண்ட்”

’’கொன்னது சரிதான் தப்பே கிடையாது”

பொதுவாக போலீஸ் கொலைகளைக் கொண்டாடும் பொது மக்கள் குறிப்பாக மத்யமர் மன நிலைதான் இது. பெரும்பாலான பத்திரிகைத் துறை சார்ந்தவர்கள். தொலைக்காட்சியில் நியூஸ் ரிப்போர்ட்டர்சின் பார்வைகள் கூட இப்படித்தான் இருக்கின்றன. இங்கே அவர் ஒரு ஊட்கவியலாளர் என்பதை மறந்து தேசப்பற்றாளானாக அவரே தன்னை ஒரு போலீசாக நினைத்துக் கொண்டு செய்திகளை போலீசாரிடம் பெற்று உற்சாகமாக வெளியிடுகிறார். இந்த ஐந்து பேர் என் கவுண்டரில் தொடங்கி தமிரபரணி படுகொலைகள் 19 பேர், பரமக்குடி படுகொலை 7 பேர் என கொத்துக் கொத்தாக போலீஸ் கொடுமைகளுக்கு மக்கள் சாகும் போது கூட பொதுப்புத்தி கேடு கெட்ட போலீஸ் கொலைகளை கொண்டாடுவதாகவே இருக்கிறது.

போலீஸ் கொலைகளை கொண்டாடும் மனம் கொடூரமானது அந்த மனோபாவம் எந்த ஒரு கொலைகளிலும் நமக்கு இருக்கக் கூடாது குற்றங்கள் அதிகரிக்க காரணமான சமூகக் காரணிகள் களையப்பட வேண்டும், என் கவுன்டர் எனப்படும் போலீஸ் கொலைகளை மக்கள் வெடி வெடித்து எப்போது கொண்டாடுகிறார்களோ அப்போதே அந்த துப்பாக்கி அவர்களுக்கு எதிராகவும் திரும்பி குறி பார்த்திருக்கிறது என்பதை அறியாமல் அவர்கள் வெடிக் கொளுத்துகிறார்கள். பார்ப்போம் இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து என்கவுண்டர்கள் என்பது இதே வடிவங்களோடு தொடராது என்றே நினைக்கிறேன்.

சந்திராவின் அழகம்மா சிறுகதை தொகுப்பு குறித்து.........


பூமியோடு வானம் தொடுவது போன்ற தோற்றத்திலிருந்தாலும் அது எங்குமே ஒன்றை ஒன்று தொடுவதில்லை. எல்லா மூலைகளிலும் அது தொடாத வானம்தான். மனிதர்களும் அப்படித்தான் மேன்மையான உறவுகள் என்று சொல்லப்படும் எல்லா உறவுகளுமே ஒரு கட்டத்தில் தன் சமூகத்திலிரிந்து தன்னை தற்காத்துக் கொள்ளப் போராடுகின்றன. மோதி மடிகின்றன. பின்னர் பழி வாங்குகின்றன, ஆற்றாமையில் வாழ்வை சபித்துச் செல்கின்றன, எளிதாக காதல் வயப்படுகின்றன, ஒருவர் மீதான கோபத்தை இன்னொரு வலிமையற்றவர் மீது ஏவுகின்றன. இப்படித்தான் வாழ்வை நாம் கடந்து கொண்டிருக்கின்றோம்.

சமீபத்தில் வெளிவந்த சந்திராவின் அழகம்மா சிறுகதைத் தொகுப்பை வாசித்து முடித்த போது எனக்கு ஏற்பட்ட உணர்வுகள் இவைகள்தான் . சந்திராவை எனக்கு ஏற்கனவே அறிமுகம் உண்டு. நண்பராக அல்ல சக ஊழியராக. நான் விகடன் ஆசிரியர் குழுவில் இருந்த போது அவர் அவள் விகடன் ஆசிரியர் குழுவில் இருந்தார் . இதைத்தாண்டி அவரைப் பற்றிய அறிமுகம் எதுவுமே எனக்கு இல்லை.ஆனால் அவர் ஒரு சிறந்த எழுத்தாள என்பதை அழகம்மாவை வாசித்து முடித்த போது தோன்றியது.

ஒரு கதையோடு என்னை நான் ஈடுபடுத்திக் கொள்வதென்பது. வாசிக்கிற கதையில் நான் என்னவாக இருக்கிறேன். அது எப்படி என்னை உள்வாங்கிக் கொள்கிறது என்பதைப் பொறுத்த விஷயம்தான்.எதிர்காலம் என்ற ஒன்றை இட்டுக் கட்டி கடந்த காலத்தில் கொலை செய்யப்பட்டவர்கள் நாம் . ஆகவே இறந்து போன அந்தக் காலத்தை நினைவில் மீட்டிக் கொண்டிருப்பதன் மூலமே நமது உலகை நாம் வசீகரப்படுத்திக் கொள்கிறோம். சிறந்த எதிர்காலம் என்ற ஒன்றுக்காகவே நமது குழந்தைகளின் பால்யத்தை நாமே இன்று பலியிடுகிறோம். இந்தக் கதைகளில் வரும் மனிதர்களும் எதிர்காலம் பற்றிய கனவுகளில் வாழ்வை தொலைத்தவர்களாக இருக்கிறார்கள். அல்லது தொலைந்து போன ஒன்றை தேடிக் கொண்டிருப்பவர்களாக இருக்கிறார்கள்.

அவரது அழகம்மா சிறுகதைத் தொகுப்பில் மொத்தமாக எட்டு கதைகள் உள்ளன. அதென்ன எட்டே எட்டு கதைகள் ஒன்பதாகவோ, பத்தாகவோ எழுதினால் வேண்டாம் என்றா சொல்லப் போகிறார்கள். இதிலுள்ள எட்டு கதைகளில் அறைக்குள் புகுந்த தனிமை, தொலைவதுதான் புனிதம், கட் சொன்ன பிறகும் கேமிரா ஓடிக்கொண்டிருக்கிறது என்ற மூன்று கதைகளைத் தவிற ஏனைய ஐந்து கதைகளும் நமக்குள் ஒரு நிலப்பரப்பை மனதில் நிறுத்துகிறது. அது மலையடிவார நிலப்பகுதியாக என்னுள் விரிந்து செல்கிறது. நிலத்தை விட கொஞ்சம் மேடான பகுதியாக அது ஒரு சித்திரத்தை நமக்குள் உருவாக்குகிறது. பொதுவாக தஞ்சை , மதுரை போன்ற பகுதிகளில் விவசாய நிலங்களை காடு, காட்டு வேலை என்பார்கள். எங்கள் ஊரில் கன்னியாகுமரி பகுதியில் வயலை வயல் என்பார்கள், கடலை கடல் என்பார்கள், சில இடங்களில் வயக்காடு என்பார்கள். ஆனால் எனக்கு காடு என்பது காடுதான்..... ஒன்றிலோ மரங்கள் அடர்ந்த காடு அல்லது கருவேலமரங்கள் வளர்ந்த காடு இதுதான் என் மனதின் சித்திரம். ஆனால் சந்திராவின் சிறுகதைகளிலும் வரும் நிலம் வெறும் காடல்ல, அதுவே அப்பகுதி விவசாயிகளுக்கு வாழ்வு தரும் நஞ்சை, புஞ்சை நிலமாகவும் இருக்கிறது. அதானால்தான் ஒரே நேரத்தில் காடாகவும், விவசாயக நிலமாகவும் இருக்கும் அந்த பாரம்பரீய வதிவிடத்தை காடு என்று அழைக்கிறார்கள் போல. இக்கதைகளைப் படிக்கும் போது மலையடிவார கிராமங்கள் , படுகை போன்ற வீட்டு அமைப்புகள், நினைவுக்கு வந்து போகிறது. ஒரு கதைக்கு அதன் நிலப்பரப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக நான் நினைக்கிறேன். ஏனெனில் எழுத்து என்பது சித்திரத்தை உருவாக்கினால் மட்டுமே அது முழுமையான ஒன்றாக நான் நினைகிறேன்.

இனி கதைகளைப் பார்ப்போம்,

வெகு நாட்களுக்குப் பின்னான மழை


என்ற கதையில் , அவன் வெறுமையோடும், குற்றத்தோடும் ஊர் திரும்புவதாக துவங்குகிறார் சந்திரா. அந்த அவன் என்பவன் பஞ்சகால மொன்றில் முறுக்குச் சுட ஆந்திராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டவன். வாழ்க்கையின் திசைபோக்கில் சூறையாடப்பட்டு இப்போது சித்தியைக் கொன்று விட்டு கிழவின் முன்னால் நிற்கிறான் ‘’ எல்லாமே மாறிப்போச்சுடா நீயும் ஆம்பிளையா வந்து நிக்கிற.... உங்க அம்மா மகளை எல்லாம் கட்டிக்குடுத்திட்டாங்கடா.... என்ற கிழவி அவனது குடும்பம் சீரழிந்து போன அந்த சின்ன வரலாற்றைச் சொல்லி விட்டு அவனுக்கு சோறு போடுகிறார். தனது பால்யம் சித்தியால் சூறையாடப்பட்டது, தங்கைகள் தூக்கு மாட்டிக் கொண்டது, அப்பாவும் இறந்து போனது என பழிவாங்கும் வெறியோடு அவன் இப்போது சித்தியைக் கொன்று விட்டான்.கஞ்சா பயிரிட்டும் , காடு விளைந்தும் ஊர் வசதி பெற்று விட ஆம்பிளை என்பது இங்கே பரிதாபத்திற்குரியதாகி நிற்கிறது.அவன் தன் இளமைக்காலத்தை இதோ ஒரு கொலைக்குற்றவாளியாக சிறையில் கழிக்கப்போகிறான். அவன் கைது செய்யப்படுவதற்கு முன்னால் அந்த மழை பெய்யத் துவங்குகிறது என்று அதை காட்சிப் படுத்துகிறார் சிறுகதையாசிரியர்.

கட் சொன்ன பின்னும் கேமிரா ஓடிக் கொண்டிருக்கிறது.

இச்சிறுகதைத் தொகுப்பில் மிகச் சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று. அதில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளோடு பழகும் வாய்ப்புக் கிடைத்தால் அதுவே பத்து சினிமாவுக்காக வாசலைத் திறக்கும், இன்றைக்கு ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருக்கும் 99.9 % பேரும் அரவமற்ற ஒரு அதிகாலையில் ஹீரோயினாகும் கனவோடு வந்தவர்களாகவே இருப்பார்கள். பீல்டிங்கில் நடக்க, கும்பலோடு சேர்ந்து நிற்க, திருவிழாக்கூட்டத்தில் கும்பல் காட்ட, கலவரக்காலத்தில் குறுக்கும் நெடுக்குமாக ஓட, என்று இவர்கள் பயன்படுவார்கள். மேக்கப்மேனில் தொடங்கி காஸ்ட்யூமர், ஜெனரேட்டர் ஆப்பரேட்டர் வரை இந்த பெண்களுக்கு கிடைக்கும் மரியாதை கொடுமையானது. அவர்கள் சினிமாவில் கைவிடப்பட்ட மனிதர்களே. ஜுனியர் ஆர்ட்டிஸ்டை விட கொஞ்சம் மேம்பட்டவர்கள் ரிச் கேர்ளஸ், பெரும்பாலும் ஜீன்ஸ் அணிந்திருப்பார்கள். அதிலும் பல வகை பெங்களூர் ரிச் கேர்ள்ஸ், மும்பை ரிச் கேர்ள்ஸ், என்று வரவழைப்பார்கள் அதுக்கு தனி ரேட், சென்னை கல்லூரி மாணவிகளும் ரிச் கேர்ள்சாக வருவார்கள். ஆனால் முகம் தெரிகிற மாதிரி ஷாட்டுகளில் மட்டுமே நடிப்பார்கள். டயலாக் பேசி நடிக்க வேண்டிய ஷாட்டுகளில் நடிக்க மாட்டார்கள். சினிமாவில் நடிகையாக வேண்டும் என்ற கனவு இம்மாதிரி பெண்களுக்கு பெரும்பாலும் இருக்காது. ஒன்லி பாக்கெட் மணி. இவ்வகை ரிச் கேர்ள்சை விட ஜூனியர் ஆர்ட்டிஸ்ட், குழந்தைகளை வாடகைக்கு எடுத்து வரும் பெண்களின் நிலை பரிதாபகரமான கதைகளால் நிரம்பியிருக்கும். அப்படியோரு பெண்ணின் கதையை பதிவு செய்திருக்கிறார் சந்திரா. இத்தொகுப்பில் மிகவும் தரமான கதைகளில் இதுவும் ஒன்று. இக்கதையை படித்துக் கொண்டிருந்த போது மாதுர் பண்டார்கரின் ‘சாந்தினி பார் ‘ சினிமாதான் எனக்கு நினைவுக்கு வந்தது.

தொலைவதுதான் புனிதம்.

சினிமா ஒரு மாயப்புல்லாங்குழல் இனம் புரியாத அந்த இசை மயக்கம் இன்னும் நான் உள்ளிட்ட எல்லா நண்பர்களையுமே அலைக் கழித்துக் கொண்டிருக்கிறது. சென்னை வந்த புதிதில் எங்கு கிளம்பினாலும் பளிச்சென்று கிளம்புவோம். மணி ரதனம் சார் அலுவலகத்தில் அப்ளிகேஷன் கொடுக்க போன போது அங்கே ரிஷப்சனிஷ்டாக இருந்தவர் உமா ஷக்தி. நான் பயோடேட்டாவை கொடுத்ததும் அவரிடம்தான். அப்புறம்தான் ஒரு நண்பன் சொன்னான் ஏண்டா நீயே மணி ரத்னம் மாதிரி போகக் கூடாது டா... கொஞ்சம் தாடி வெச்சுட்டு பஞ்சகால பரதேசி மாதிரி போய் பி,சி சாரைப் பாரு அவரோட வீட்டு வாசல்ல போய் நிண்ணு என்றான். நான் ஆழ்வார்பேட்டையில் இருக்கும் அவரது இல்லத்தின் வாசலில் அதிகாலையே போய் நிற்பேன். ஒரு நாள் ஆபூர்வமாக அவரைப் பார்த்ததும் அழைத்துப் பேசியதெல்லாம் தனிக்கதை... உலகசினிமா விழாக்களில் அந்த இயக்குநரை அடிக்கடிப் பார்ப்பேன். அவர் படம் இயக்குகிறார் என்றவுடன் அவரைப் போய் பார்த்தேன். என்னை அமர வைத்து வறுத்தெடுத்து விட்டார். // நீங்களெல்லாம் பசி தாங்க மாட்டீங்க// என்று அட்வைஸ் பண்ணினார். எனக்கு சிரிப்பாகவும் அருவறுப்பாகவும் இருந்தது. கிட்டத்தட்ட மூன்றாயிரம் உதவி இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளுக்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள். வென்றவர்கள் மட்டுமே அவர்களின் அவமானங்களை பதிவு செய்திருக்கிறார்கள். வாய்ப்பில்லாமல் நிராகரிக்கப்பட்ட பலரின் கதைகள் இதுவரை தமிழில் பதிவாக வில்லை. வாய்ப்புகளைத் தேடும் உதவி இயக்குநர்களுள் அதில் சந்திராவும் ஒருவர் . இந்த மூன்றாயிரம் பேருக்கும் சேர்த்து மிக சுவராஸ்யமாக இக்கதையைச் சொல்லிச் செல்கிறார் சந்திரா...


மஞ்சனாத்தி மாலை


என்ற கதை அவரது இளம்பருவ தோழர்களுடனான அனுபவத்தை விரிகிறது... குழந்தைகள் ஒரு வயதுக்குப் பின் ஆண்களாகவும், பெண்களாகவும், மாறி விடுகிறார்கள். எல்லா ஏமாற்றங்களும் அங்கிருந்தே துவங்குகின்றன. குடும்பம், கலாசாரம், கிராமம், என யார் குழந்தைகளின் உலகைப் பற்றி கவலைப்பட்டார்கள். மஞ்சனத்தை மாலையை படிக்கும் போது அதுவே நாம் தொலைத்த பால்யமாக இருக்கிறது.

இந்த தொகுப்பிற்கு அவர் வைத்த பெயர் அழகம்மா.....

அழகம்மா பெயருக்கேற்ற அழகு அதுதான் பிரச்சனையே பெண்கள் அழகாக இருப்பது ஆண்களை துன்புறுத்துகிறது. பல நேரங்களில் பெண்களுக்கான சிறையில் வாசிக்கப்படாத குற்றப்பத்திரிகையாக ஒழிந்திருப்பது அழகுதான். அழகம்மாவும் அழகுதான். ஆனால் அவள் கட்டிக் கொடுத்த மாமன் மேல் மூடத்தனமான அன்பைக் கொண்டிருக்கும் கிராமத்துப் பெண்...ஒரு வழியாக கணவன் குடும்பம் அவளை நிராகரிக்க அழகம்மா மாமனுடன் ஊரை வீட்டு ஓடி விடலாம் எனக் கேட்கிறாள் அவனுடன் ஓடிப்போக அவன் கிளம்புகிற இரவை இப்படிச் சித்தரிக்கிறார் எழுத்தாளர் // மேற்கு மலையும் கிழக்கு மலையும் கூட மடிந்த இரண்டு சவமாய்க் கிடந்தது.கூடடைந்த பட்சிகளும் சிலிர்ப்புக் காட்டவில்லை. ஆந்தையும் பாங்கிணத்துக்குள் பதுங்கிக் கிடந்தது. ஈரப்பனி உடம்பை குறுக்க சேலையால் இறுக்கப் போர்த்தி குறுக்கும் மறுக்குமாக ....கல்லு முறி வைத்தவளைப் போல ஊரைத் திரும்பிப் பார்க்காமல் போனாள்// என்று எழுதுகிறார் எழுத்தாளர். அழகம்மா எல்லையில் காத்திருக்கும் மாமனுடன் சேர்ந்து கிளம்பத்தயாரானாள். // அவிழ்ந்து கொண்டிருந்த கொண்டையை கலைத்து இறுக்கமாக கொண்டை போடுவதற்காக கூந்தலை விரித்தாள்.. அது இன்னொரு காட்டைப் போல் காட்டின் மேலே விரிவது போன்று இருந்தது// என்று எழுதுகிறார். சந்திரா. அழகம்மாவை மாமனும் அவனது நண்பர்களும் கிணற்றில் தள்ளி கொலை செய்து விடுகிறார்கள். கொன்றவர்கள் எல்லோரும் வஞ்சிக்கப்பட்டு சாகிறார்கள். // பேயுருகொண்ட அழகம்மா கிணற்றை தன் ஒற்றைக் காலில் மூடியபடி நிற்கிறாள் பனி கொண்ட இரவின் தனிமையில்// என்று இக்கதையை அற்புதமாக முடிக்கிறார் சந்திரா. கண்ணகி மதுரையை எரித்தாள் என்பது பழமரபுக்கதை. ஆனால் பகுத்தாறிவாளர்களோ //கண்ணகி என்ன தன் முலையில் பாஸ்பரஸ் வைத்திருந்தாளா என்று கேட்டார் கள்// புத்திசாலித்தமான கேள்விதான். பதிலற்ற கேள்வியும் கூட ஆனால் எளிய மக்களின் நம்பிக்கைகளை நான் எப்போதுமே என் அறிவால் தகர்க்க முற்படுவதில்லை. கண்ணகி மதுரையை எரித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அநீயான அந்த அமைப்பை அவரது ஆட்கள் எரித்திருக்கிருக்கலாம். அதை பதிவு செய்த எழுத்தாளன் அதை fantasy யாக முன் மொழிகிறான். கிரேக்க இலக்கியங்களில் இதுமாதிரியான பழ மரபுக் கதைகள் ( legend story) வரும் போது அதைக் கொண்டாடுகிறோம். அதுவே தமிழில் இருந்தால் தடி கொண்டு அடிக்கிறோம். தமிழ் இலக்கியங்களில் பொதிந்துள்ள பல் வேறு பிற்போக்குவாதங்களை நிராகரிக்கும் அதே நேரம் இம்மாதிரியான நம்பிக்கைகளை நான் வரவேற்கிறேன். அம்மாதிரியான நம்பிக்கையை தன் சிறந்த சித்தரிப்புகளால் விரித்துச் செல்கிறார். இப்போது அந்தக் காடு அழகம்மாவின் கூந்தலாக தொரட்டி மரம் கிணற்று வழியாக நடந்து செல்லும் ஆண்களுக்கெல்லாம் கெட்ட சகுனமாக விழித்துக் கொண்டிருக்கிறது இரவும் பகலும்.

தன் மகனை போலீசார் கைது செய்து அழைத்துச் செல்வதையும், அவன் ரிமாண்ட் செய்யப்படாமல் காப்பாற்றப் போராடும் ஒரு தகப்பனின் கதையை அதற்கேயுரிய கரிசனத்தோடு பதிவு செய்கிறார் வன்மம் கதையில், அது போல பால்ய கால காதலை, அது இன்னதென்று தீர்மானிக்கப்படாத அந்த உணர்வையும் ஒரு ஈர்ப்பையும் விட்டுச் செல்லும் ஒரு பெண்ணின் மனப்பதிவையும் அழகேசனின் பாடலில் சொல்கிறார். எதற்காகவும் அவள் அழகேசன் மீது ஈர்ப்புக் கொள்ளவில்லை. அவனோ ஏழை டிராக்டர் ஓட்டும் தொழிலாளி. அவன் கசிய விடும் பாடல்களே ஒரு காதலை உருவாக்கி பின்னர் அதுவும் அழகேசனும் நிற்கதியாய் விடப்படுகிற இடத்தில் மனசு என்னமோ கனத்துத்தான் போகிறது.

இந்த தொகுப்பின் முதல் கதை அறைக்குள் புகுந்த தனிமை.


வாழ்வின் வெவ்வேறு தனிமை மன உணர்வுகளைக் கொண்ட இரண்டு தோழிகள் கடற்கரைக்குச் செல்கிறார்கள். உடன் சென்றவள் அங்கிருந்து இன்னொரு நட்புடன் செல்ல தனிமையில் கைவிடப்பட்டவள் திரும்பிப்பார்க்கிறாள். இந்த திரும்பிப் பார்த்தல் அவ்வளவு எளிமையானதல்ல அது மகா நகரத்தைப் பார்ப்பது, சந்தடியைக் காண்பது, அப்போதுதான் ஒரு பையன் இவளைப் பார்க்க... தன் தனிமையைப் போக்கும் ஒரு இடையீடாக பட்டும் படாமலும் அவனைத் தொடர அனுமதிக்கிறார். எனக்கு பொறிக்குள் சிக்கிக் கொண்ட எலியை இரவு முழுக்க, ஏன் பகம் முழுக்க அடைத்து வைத்து விட்டு திறந்து விட்டால் அது தப்பித்து ஓடுமே அப்படித்தான் அவனும் நினைவுக்கு வருகிறான். ஆமாம் ஏன் இந்த பெண் அவனுடன் இந்த விளையாட்டை நடத்த வேண்டும். சும்மா ஒரு சுவராஸ்யத்திற்கா? அல்லது இன்னமும் வாழ்வின் வண்ணங்கள் மிச்சமிருக்கின்றன என்கிற நினைப்பிலா? அல்லது தனிமையைக் கொலை செய்யவா? அவர் இப்படி எழுதுகிறார் // எல்லா நினைவுகளையும் ஆயுதமின்றிக் கொலை செய்ய தனிமையால் மட்டும்தான் எப்பொழுதும் இயல்கிறது// என்கிறார் அதெப்படி தனிமை நினைவுகளைக் கொல்லும். தனிமைதான் நினைவுகளை உற்பத்தி செய்யும் அது மட்டுமே வசீகரமான ஒரு உலகைக் கொடுக்கிறது. ஆனால் இவர் தனிமையை நினைத்துத்தான் அவனை அனுமதிக்கிறார். ஆனால் அவனை எங்கே தடுத்து நிறுத்துவது எனத் தெரியவில்லை. கடைசியில் அவனை அறையில் அடைத்து காலையில் பொறியைத் திறந்து ஓட விடுகிறார். அதே தனிமை...அதே தேடல் தொடர்ந்து கொண்டிருக்கிறது...


சந்திராவின் கதைகள் ஆழமானவை அதில் வரும் மனிதர்கள் கைவிடப்பட்ட மனிதர்கள், உணர்வுகளைக் கைவிட்டவர்கள், மறுக்கப்பட்டவர்கள், தனித்து நடக்கத் தெரியாதவர்கள், எளிய நம்பிக்கைகளால் சூழப்பட்டு அதன் பேரில் வாழக் கடமைப்பட்டவர்கள். வித விதமான இந்தக் கதைகளில் இசையும், காட்சியும் சந்திராவை ஒரு நல்ல திரைக்கதையாசியராக்கியிருக்கிறது. அவர் தன் பாட்டியின் தோள்களில் ஏறி மனிதர்களைப் பார்த்திருக்கிறார்.

சில எழுத்தாளர்களுக்கு வசீகரமான எழுத்து நடை சாத்தியப்பட்டாலும், சொல்ல கதை இருக்காது. எழுத்தை மட்டுமே வைத்து கதை சொல்லி வசீகரித்து விடுவார்கள். ஆனால் மனிதர்களை அவர்களின் வாழ்வை நுட்பமாக பதிவு செய்வது அவ்வளவு எளிதன்று, அப்படி வாய்க்கப்பெற்றவர்கள் வெகு சிலரே. எனக்கு தமிழில் பூமணி, பாமா, வத்சலா, ஆர்.சூடாமணி , நாஞ்சில் நாடன், ஜெயமோகன், பிரபஞ்சன், பாஸ்கர் சக்தி, எழில் வரதன், யூமா வாசுகி, என நீளும் பட்டியலிலிருந்து சொன்னால் பூமணியின் கதைகளில் ஏராளமான கிளைகள் பரந்து விரிந்திருக்கும் ஆனால் திரைக்கதையை அதிலிருந்து எடுத்து தனியாகச் செய்ய வேண்டும். சந்திராவின் கதைகள் கதை சொல்லும் போக்கிலேயே வேறு பட்டிருக்கிறது. அவர் தமிழில் தவிர்க்க முடியாத சிறுகதையாசிரியர் அல்ல மிகச் சிறந்த சிறுகதையாரிசியர்களுள் ஒருவர். எழுத நினைப்பவர்கள், சிறுகதை எழுத நினைப்பவர்கள், மனித உணர்வுகள் அதன் வண்ணங்களை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் சந்திராவின் கதைகளை அவசியம் வாசிக்க வேண்டும்.

அழகம்மா (சிறுகதைத் தொகுப்பு)
ஆசிரியர் - சந்திரா,
விலை- ரூபாய் எழுபது.
வெளியீடு-
உயிர் எழுத்து
9, முதல் தளம், தீபம் வணிக வளாகம்,கருமண்டபம்,
திருச்சி- 620001

கூடங்குளம் அணு உலை தமிழக அரசு குழுகடந்த மூன்று நாட்களாக தமிழகமெங்கிலும் வரலாறு காணாத மின் வெட்டு சுமார் நாளொன்றுக்கு எட்டு மணி நேரம் மின்வெட்டு. சென்னை வாசிகளுக்கு ஒரு மணி நேரமும் சென்னைக்கு வெளியில் உள்ளவர்களுக்கு எட்டு மணி நேரமுமாக தனது மின் பற்றாக்குறையை கசப்பு மருந்தாக மக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. மாபெரும் மக்கள் ஆதரவுடன் ஆட்சியமைத்த ஜெயலலிதா கசப்பு மருந்து கொடுப்பதில் கை தேர்ந்தவர். அவர் கொடுத்த , கொடுக்கும் மருந்துகள் கருணாநிதி கொடுக்கும் கசப்பு மருந்துகளை விட விசித்திரமானவை.

கருணா, ஜெயா இருவருமே கொடுக்கும் கசப்பு மருந்துகள் பல நேரங்களில் மக்களால் அருந்த முடியாதவையாக இருந்துள்ளன. இதோ இன்னொரு கசப்பு மருந்து அணு உலையை உடனடியாக திறக்க வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவுக்கு ஒப்புதல் வழங்கி அதை தமிழக மக்களின் பொதுப் புத்தியாக கட்டமைக்க அவர் கண்டு பிடித்த கசப்பு மருந்துதான் எட்டு முதல் பன்னிரண்டு மணி நேர மின் வெட்டு. இப்போது கோவை தொழில் அதிபர்களின் கூடாரமான கொடிஷியாவிலும், இன்னும் சில இடங்களிலும் கூடங்குளம் அணு உலையை திறப்பதன் மூலம் மின் தேவையை பூர்த்தி செய்யலாம் என்கிற பேச்சுக்கள் துவங்கி விட்டன. செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த மின்வெட்டு கசப்பு மருந்து பொதுப் புத்தியில் வேலை செய்யத் துவங்கி விட்டது.கூடங்குளம் அணு உலை போராட்டம் துவங்கிய இந்த மூன்று மாதங்களில் அவர் போராடும் மக்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வது போல பட்டும் படாமலும் மக்களின் அச்சம் நீங்கும் வரை அணு உலை வேண்டாம் என்ற தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். பலரும் இத்தீர்மானத்தை நம்பினார்கள். மூன்று மாதங்கள் உருண்டோடி விட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த திமுக பொதுக்குழுவில் கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆரம்பத்தில் எதிர்த்த பல பெரிய கட்சிகள் நாசூக்காக ஒதுங்கிக் கொண்டன. சில தலைவர்கள் வழக்கம் போல சடங்கு அறிக்கைகளை வெளியிட., மத்திய மாநில அரசு அதிகாரிகள் வர்க்கமோ அரசு இயந்திரத்தின் உதவியுடன் தீவீரமாக செயல்பட்டனர்.

மீனவ சங்கங்கள், மீனவ மக்கள், கடலோரப் பகுதி மக்கள் என முழுமையாக மீனவ மக்கள் ஆதரிக்க சம வெளிச்சமூகங்களின் ஆதரவு முழுக்க முழுக்க கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இல்லை. கூடங்குளத்தை அண்டிய நாகர்கோவில் போன்ற பகுதியில் பெரும்பலான நாடார் விவசாயிகள் இப்போராட்டத்தை மிஷனரிகளின் போராட்டம் என்றும் கடப்புறத்தார்களின் போராட்டம் என்றுமே கூறுகிறார்கள். இது நான் நேரில் விசாரித்தரிந்த உண்மை. திராவிட இயக்க அரசியலில் அதிகாரம் பெற்றுள்ள சம வெளிச்சமூகங்களின் வாக்கு வங்கியும், சம வெளிச் சமூகங்களின் பிரதிநிதித்துவத்திற்கு ஓட்டுப் போடும் பிண்டங்களாக மாற்றப்பட்டிருக்கும் எல்லையோர மீனவ, பழங்குடிகள் தொடர்பாக இந்த அரசுக்கோ, அல்லது திராவிட இயக்கங்களுக்கோ சிறிதளவேனும் அக்கறை இல்லை. இந்த உதாசீனமே, வலுவற்ற மக்களாக கடலோரம் எங்கும் துண்டு துண்டாக சிதறிடிக்கப்பட்டுள்ள, தலைமையற்ற, அரசியல் வலுவற்ற அந்த மக்களை உதாசீனப்படுத்தி பெரும்பான்மை சம வெளிச்சமூகத்தை திருப்திப்படுத்த தமிழக அரசு கூடங்குளம் அணு உலையைத் திறக்கும் முடிவை எடுத்திருக்கிறது.

தமிழக அரசுக் குழுவின் நோக்கம்

சிறிய மக்களை, எளிய மக்களை பற்றிய கவலைகளோ அவர்களின் அடையாள அரசியல் தொடர்பான அக்கறையோ தமிழக பொதுப்பரப்பில் இல்லை. அதுவே கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவான தமிழக அரசின் முடிவு. இப்போது மாநில அரசு அமைத்துள்ள குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் நால்வர் ஒருவர் முன்னாள் அணுக் கழக தலைவர் சீனிவாசன் இவர் தொடர்ந்து அணு உலைக்கு ஆதரவாக எழுதி வருகிறவர். இன்னொருவர் அண்ணா பல் கலைக்கழகத்தைச் சார்ந்த அறிவொளி இவர் அணு மின் கழகத்திடமிருந்து நிதி பெற்று வருகிறவர் என்று சொல்லப்படுகிறது. அப்துல் கலாமை வைத்து அண்ணா பல்கலையில் பல கூட்டங்களை நடத்தியவர். அது போல எரிசக்தித்துறை தலைவர் இனியன், முன்னால் ஐ ஏ எஸ் அதிகாரி விஜயராகவன் என அனைவருமே அணு உலைக்கு ஆதரவானவர்கள். ஜெயலலிதா குழுவை அமைத்ததோடு மிகத் தெளிவாக அந்தக் குழுவின் நோக்கங்களையும் தெளிவு படுத்தி விட்டார். இந்தக் குழு யாரோடும் பேச்சு வார்த்தை நடத்தாது. அணு உலையின் பாதுகாப்பு குறித்து ஆராயும். மக்களின் அச்ச உணர்வு குறித்து ஆராயும். அவ்வளவுதான் கூடங்குளம் அணு எதிர்ப்புப் போராட்டத்தையும் அதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவையும் அது கண்டு கொள்ளவே இல்லை.


நாடாளுமன்றத் தேர்தல் வந்தது - ’’என் சொற்படிக் கேட்கும் அரசு அமைந்தால் ஈழம் பெற்றுத் தருவேன் என்றார். சட்டமன்றத் தேர்தல் வந்தது - இனப்படுகொலை குற்றவாளிகளை கூண்டில் ஏற்றுவேன் என்றார்- உள்ளாட்சித் தேர்தல் வந்தது - தூக்குத் தண்டனையை நிறுத்த வேண்டும். அச்சம் நீங்கும் வரை அணு உலை வேண்டாம் என்றார். நண்பர்களே இப்போது வெகு மக்களின் ஆதரவைப் பெற்று வெல்ல ஜெயலலிதாவுக்கு ஒரு தேர்தல் இல்லை. கருணாநிதிக்கும்தான். ஆளும் கட்சி மட்டுமே வெல்லும் இடைத் தேர்தல் மட்டுமே அதில் மீனவ மக்கள் வழக்கம் போல ஓட்டுப் போடும் பிண்டங்கள் மட்டுமே..... அதனால் அடுத்த தேர்தலில் அம்மா எதிர்ப்பார் கூடங்குளம் அணு உலையை.

நபிகளின் கருணையும் கருத்துரிமையும் - டி.அருள் எழிலன்.

மதச்சார்பின்மையின் மகாத்தான வரலாற்றில் இந்தியாவின் வேறெந்த மாநிலங்களை விடவும் தமிழகம் மேம்பட்ட ஒன்று. பாபர் மசூதி இந்து மதவெறியர்களால் இடித்து தரை மட்டமாக்கப்பட்ட போது எல்லா மாநிலங்களிலும் கலவரம் வெடிக்க தமிழகம் அமைதியாக இருந்தது. இதே அமைதியை நீங்கள் கோவை சிறுபான்மை மக்களுக்கு எதிரான கலவரங்களின் போதும், அதற்கு முன்னர் கிறிஸ்தவ மீனவர்கள் மீதான மண்டைக்காடு கலவரங்களின் போதும் கண்டிருக்கலாம். ஆக அமைதி என்பது வளர்ச்சி பெற்ற மௌனமாக விரிவடைந்து சென்றிருக்கிறது. முற்போக்கு என்பது ஒடுக்கப்படும் மக்களுக்காகப் பேசாமல் ஒதுங்கிச் செல்வது, அல்லது ஒதுங்கிக் கொள்வது என்கிற அளவில் மத்யமர் மனோபாவமாக தமிழகத்தில் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. கடந்த நாற்பதாண்டுகளாக செல்வாக்குச் செலுத்தும் திராவிட இயக்கங்கள் சாதி விஷயங்களில் கவனம் செலுத்தாதது போல, சிறுபான்மை மக்கள் விஷயத்திலும் கவனம் கொள்ளவில்லை என்னும் நிலையில், இந்து மதவெறி அமைப்புகள் எங்கெல்லாம் சிறுபான்மை மக்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் வலுவான மத வெறி அமைப்புகளை கட்டி விட்டார்கள். இன்றைக்கு வரை சாதிரீதியாக ஒடுக்கப்படும் மக்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் நம்பிக்கையளிக்கும் சக்திகளாக இடதுசாரிகளே தமிழகத்தில் ஓரளவு செயல்படுகிறார்கள் என்பதுதான் நம்பிக்கையளிக்கிறது.

பெரும்பான்மை மதவாதச் சக்திகளின் பாசிசப் படுகொலைகள், துரத்தல்கள் ஒரு பக்கம் என்றால் சிறுபான்மை மக்கள் மத அடிப்படைவாதத்திற்கோ மூட நம்பிக்கைகளுக்கோ பலியாவது சிறுபான்மை சமூகங்களில் உள்ள சாபக்கேடு. இந்த அடிப்படைவாதிகளில் இருந்துதான் தலிபான்களும், முஜாஹீதீன்களும் உருவாகுகிறார்கள். பாசிசத்தை எதிர்கொள்ள மக்கள் திரளை நம்பாமல் ஆயுதங்களை நம்பி தங்களின் சொந்த சமூகத்திற்கே வாழும் கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். சமூகத்தை கண்காணிக்கவும், மக்களை ஒழுக்கமாக வாழவும் இறைவன் தங்களை நியமித்திருப்பதாக நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையிலிருந்தே பதில் பயங்கரவாதம் உருவாகிறது.

ஆனால் தாங்கள் நம்பும் இறைவனை வழிபடவோ, அதை தூய்மையானதென்று சொல்லவோ அந்த மதத்தை பின் பற்றும் மக்களுக்கு உரிமை உண்டு. ஆனால் தன் மதம்தான் உயர்ந்தென்றும் ஏனைய மதங்கள் கீழானவை, மற்றவர்களெல்லாம் மிலேச்சர்கள், வந்தேறிகள் என்றும் மூளைக்குள் ஏற்றப்படும் மூட நம்பிக்கை மற்ற மக்களையும் பாதிக்கிறது. கடவுள் உண்டு என்று சொல்கிறவன் பெருவாரியான மக்களுக்கு மறுக்கப்பட்ட வழிபாட்டு உரிமைக்காக போராடியவன் இல்லை. ஆனால் கடவுள் இல்லை என்று எவன் எல்லாம் நம்பினானோ, அதற்காக காலம் முழுக்க பிரச்சாரம் செய்தானோ அவனே சமூகத்தில் எல்லா பிரிவு மக்களின் வழிபாட்டு உரிமைக்காகவும் குரல் கொடுத்தார். இதிலிருந்தே கடவுள் மறுப்பாளர்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சம்பவம்-1

ஆகஸ்ட் 15, 2000 குமரி மாவட்டம் தக்கலையில் மைலாஞ்சி (மருதாணி) என்ற கவிதைநூலை வெளியிட்டார் ரசூல் என்ற கவிஞர். கவிதை நூல் இஸ்லாத்தை இழிவு படுத்துகிறது. என்பது ஜமாத்தின் குற்றச்சாட்டு. தமிழகம் முழுக்க கவிஞர் ரசூலுக்கு எதிராக துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. சுமார் 120 பேர் கையெழுத்திட்டு ரசூல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளிக்கப்பட்டது. ரசூல் ஜம்மாத்திடம் கொடுத்த விளக்கங்காள் நிராகரிக்கப்பட்டு பத்வா எனப்படும் தீர்ப்பு அவருக்கு வழங்கப்பட்டு அவர் ஊர் விலக்கம் செய்யப்பட்டார். எஞ்சியிருக்கும் மைலாஞ்சி நூலை ஜமாத்திடம் ஒப்படைத்து விட்டு மன்னிப்புக் கேட்குமாறு ஜமாத் கோர அதற்கு கட்டுப்படாத ரசூல் இன்று வரை மத நீக்கம் செய்யப்பட்டவாரகவே வாழ்கிறார்.

சம்பவம் -2

ஜோடிகுரூஸ் ஆழி சூழ் உலகு என்னும் தமிழின் மிகச்சிறந்த நாவலை எழுதினார். அது வரை மீனவர் வாழ்வை ஒரு சிலர் பதிவு செய்திருந்தாலும் ஜோடி குரூஸ் அதற்கு முன்னர் மீனவர் வாழ்வியல் தொடர்பாக எழுதப்பட்ட எல்லா பிரதிகளையும் நிராகரிக்கும் படியான ஒரு எழுத்தைக் கொடுத்தார். காரணம் அவர் ஒரு மீனவர். குமரி மாவட்டத்தில் உவரி என்னும் கடலோரக் கிராமத்தைச் சார்ந்தவர். ஆனால் அந்த சிறப்பான நாவலை கொண்டாடியிருக்க வேண்டிய அவரது சமூகம் அவரை நிராகரித்தது. காரணம் கிறிஸ்தவ பாதிரிகள். வெளிப்படையாகவே ஜோடிகுரூஸ் அவர்களுக்கு தடை விதித்தார்கள். ஊரை விட்டு அறிவிக்கப்படாத விலக்கு இன்று வரை அவர் குடும்பத்தின் மீது உள்ளது. கோவில் வழிபாட்டிலேயே ஒரு பாதிரியார் ஜோடிகுரூசின் நூலைக் காட்டி உண்மையான கிறிஸ்தவனாக இருந்தால் இந்த நூலை எரிக்க வேண்டும் என்று பேசினார். அன்றிலிருந்து இன்று வரை ஜோடிகுரூசால் தன் சொந்த ஊருக்குச் செல்ல முடியவில்லை. திருச்சபை பாதிரிகள் அவர் மீது தடை விதித்திருக்கிறார்கள்.

சம்பவம்-3

மக்கட்டி துராப்ஷா என்பவர் கடையநல்லூர் ஜமாத்தை சேர்ந்தவர். ஆனால் தன் பெயரை கம்யூனிஸ்ட் கொள்கையின் பால் கொண்ட ஈர்ப்பால் செந்தோழன் ஷா என்று மாற்றியிருக்கிறார். ஊரில் கறிக்கோழிக்கடை ஒன்றையும் இந்த செந்தோழன் நடத்தி வருகிறார். இவரை இன்று கடையநல்லூர் ஜ்மாத்திலிருந்து விலக்கி வைத்திருக்கிறார்கள். பின்னர் போலீஸ் சென்று மீட்டு ஒரு வழியாக அவர் இப்போது தலைமறைவாகியிருக்கிறார். செந்தோழன் நபிகள் நாயகத்தை விமர்சனம் செய்யும் கட்டுரைக்ளை தன் முகநூலில் பகிர்ந்ததாகவும், நபிகள் நாயகத்தின் குடும்பத்தினரை இழிவு செய்ததாகவும் குற்றச்சாட்டு. உண்மையில் துராப்ஷா தன் கோழிக்கடையில் கோழிகளை வெட்டும் போது ‘’இஸ்லாமிய முறைப்படி யா..அல்லா என்று சொல்லி வெட்ட வேண்டுமாம். ஆனால் அவர் அப்படிச் சொல்லாமல் கோழிகளை வெட்டியிருக்கிறார். சிலர் இதை சுட்டுக்காட்டிய போது நான் என் இஷ்டப்படிதான் வெட்டுவேன். என்றும் சொல்லியிருக்கிறார். இதனால் கோபமடைந்த உள்ளூர் முஸ்லீம் மக்கள் அவருடைய கடையில் கோழிகள் வாங்குவதில்லை என்று சொல்லப்படுகிற நிலையில், நீண்டகாலமாகவே அவர் மீது உள்ளூர் ம்ககளுக்கு கோபம் இருந்துள்ள நிலையில், கடும் போக்குடைய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பைச் சார்ந்த சில இளைஞர்கள் இவரை சில முறை எச்சரித்திருக்கிறார்கள். இந்நிலையில் அவர் வேறு ஒருவர் எழுதிய இஸ்லாம் தொடர்பான கட்டுரை ஒன்றை முக நூலில் பகிர இளைஞர்கள் இவர் மீது புகார் கொடுக்க நேற்று துராப்ஷா ஜமாத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.

சுமார் 150 முதல் 200 பேர் வரை ஜமாத்தில் திரண்டிருக்கிறார்கள். தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சார்ந்தவர்கள் கடும் கொந்தளிப்பில் இருக்க பயந்து போன துராப்ஷாவின் உறவினர்கள். ஜமாத்திற்கு அழைத்துச் சென்று மன்னிப்புக் கேட்கச் சொல்லியிருக்கிறார்கள்.அவரும் மன்னிப்புக் கேட்கச் சென்ற போது அவரைக் கண்டவுடன் கூட்டம் ஆவேசமாகி, அவரது விளக்கம் எல்லாம் தேவையில்லை. நீங்கள் தீர்ப்பைச் சொல்லுங்கள் . தீர்ப்பைச் சொன்ன பிறகு அவர் ஜமாத்தில் வந்து மன்னிப்புக் கேட்டு எழுதிக் கொடுத்தால் ஜமாத்தில் இணையலாம் என்றிருக்கிறார்கள். ஜாமாத்தாரும் உடனே அவர் நபிகளை இழிவு செய்ததாகக் கூறி ஊர் விலக்கம் செய்திருக்கிறார்கள். சிலர் அவரை அடிக்கப் பாய்ந்ததாகத் தெரிகிறது. உடனே அங்கு வந்த போலீசாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். இப்போது தலைமறைவாக இருக்கிறார். நான் எழுதிய இந்தத் தகவல்கள் முழுக்க முழுக்க கடையநல்லூர் ஜமாத்தைச் சார்ந்த ஒரு இஸ்லாமியப் பெரியவர் சொன்னது. அவர் பேச்சில் நபிகளை அவர் இழிவு செய்து விட்டார். அவர் மன்னிப்புக் கேட்டால் வந்து ஜமாத்தில் இணையலாம். மற்றபடி அவருக்கு எதிரான எந்த ஒரு வன்முறைச் செயல்களும் நடக்கவில்லை என்றார்.

உலகெங்கும் எப்போதெல்லாம் எதிர்ப்பு வலுத்ததோ அப்போதெல்லாம் இஸ்லாமிய மதம் ஆழமாக மக்களிடம் வேரூன்றியது என்பதுதான் அதன் கடந்த கால வரலாறு. உலகில் கிறிஸ்தவ மதவாதிகளாலும், இந்தியாவில் இந்து மத வாதிகளாலும் இஸ்லாமும் இஸ்லாமிய மக்களும் இழிவு படுத்தப்பட்ட போது அது வலுவாக தன்னை இந்த மண்ணில் அழுத்தமாக காலூன்றிக் கொண்டது. உதிரியாக சிதறிக் கிடந்த இஸ்லாமிய மக்கள் தங்களுக்கான தனி அமைப்புகளை உருவாக்கிக் கொண்டார்கள். தங்கள் மீதான தாக்குதல்கள், படுகொலைகள், இழிவுகள், இவைகளுக்காக பொதுச் சமூகமோ பொது அரசியல் இயக்கங்கங்களோ குரல் கொடுக்கவில்லை என்ற உண்ர்வில் அவர்கள் அமைப்பாக ஒன்று திரண்டார்கள் . இந்த திரட்சியே அவர்களுக்கு இன்று பாதுகாப்பாக உள்ளது. ஆனால் அந்த திரட்டி மத ரீதியானது, ஒரே மக்கள் குலம் என்கிற ரீதியில் இருப்பதால் அது தன்னகத்தே பலவீனத்தையும் கொண்டிருக்கிறது. அந்த பலவீனங்களில் ஒன்றுதான் சொந்த சமூகங்களில் இருந்து வரும் கலகக்குரல்களுக்கு தடை விதிப்பது என்பதும். தனிமைப்படுத்தப்பட்ட ஒரு இனம் தான் நம்பும் கடவுளை பற்றிப் பிடிப்பதன் மூலம் அதை பேணுவதிலிருந்து உருவாகும் சமூக உளவியல் பிரச்சனை.

துராப்ஷாவை பொறுத்தவரையில் அவர் கம்யுனிஸ்டாக இருந்துள்ளார். அவரது தளத்தில் இஸ்லாமிய கோட்பாடுகளை விமர்சித்ததை விட இந்து மத வெறியர்களை விமர்சித்தது அதிகம். சொந்த மதத்திற்கும், சாதிக்கும் துரோகம் செய்வதையே இன்றைய புரட்சிகர அரசியலின் ஒரு நிபந்தனையாக நாம் பார்க்கும் போது துராப்ஷாவின் எண்ணங்களை நாம் புரிந்து கொள்ளலாம். சொந்த மதம் என்று நான் சொல்வது மக்களை அல்ல, நிறுவனமயமாகி விட்ட அதன் அதிகாரத்தை என்பதாக புரிந்து கொள்ளவும். இஸ்லாமிய உலமாக்கள் தங்களின் நம்பிக்கைகளுக்கப்பால் வெளியில் தங்களுக்கான வாழ்வுரிமையை உறுதியாய் ஆதரித்து நிற்கிற ஜன்நாயக வெளி ஒன்று உள்ளதை கண்டு கொள்ள வேண்டும். அது பெரும்பான்மை வாதத்திற்கு எதிரானது என்பதையும், சிறுபான்மை மக்களை ஆதரிக்கும் சக்திகள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் எதிர்ப்பு என்பதும் எல்லையில்லா கருணை உள்ளம் கொண்டவர்களாலேயே முன்னெடுக்கப்படுகிறது. அது உலமாக்களை விட மேலான அன்பொன்றை மனித குலத்திற்கு வழங்குகிறது. எல்லையில்லா அன்பின் அடையாளமாக இருக்கும் நபிகள் நாயகத்தைப் போல.