பெண் போலீசும் கட்டப் பஞ்சாயத்துக்களும்‘‘வயதானவர்களையும்,கைக்குழந்தையுடன் வரும் பெண்களையும்,சிறுவர்களையும்,கர்ப்பிணிப் பெண்களையும்,அவர்களது வயது,உடல் நலம்,என எந்த வித்தியாசமும் பார்க்காமல் விசாரணை என்ற பெயரில் கொடுமைப் படுத்துவதாகவும்,தாக்குவதாகவும்,அவசியமே இல்லாமல் கைது நடவடிக்கைகளில் இறங்குவதன் மூலம் குடும்ப வன்முறைச் சட்டம்,வரதட்சணை கொடுமை சட்டம் போன்ற சட்டங்கள் கொண்டு வந்ததன் நோக்கமே பாதிக்கப்பட்டு விட்டது.கணவன் மனைவி பிரச்சனைகளை போலீஸ் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.அதனால் அவர்கள் மீண்டும் ஒன்று சேர வழி பிறக்கும் இத்தகைய வழக்குகளை பெண் போலீசார்தான் திறமையாக கையாள்வர் என்று கருதியதால்தான் தமிழகம் முழுக்க மகளிர் காவல் நிலையங்கள் துவங்கப்பட்டன.இந்த மகளிர் காவல் நிலையங்கள் எல்லாம் கணவன் மனைவி ஒன்று சேர்வதற்கான சமரச மையங்களாக இருக்கும் என்று ஒவ்வொருவரும் எதிர் பார்த்தனர்.ஆனால் நடைமுறை அனுபவத்தைப் பார்த்தால் சிறிய சிறிய பிரசனைகளுக்குக்கூட பெரிய அளவிலான குற்றம் என்ற வர்ணம் பூசப்படுகிறது.கணவனுக்கும் அவர் குடும்பத்துக்கும் எதிராக குற்றச்சாட்டுகளை கூறுமாறு பெண்கள் உற்சாகப்படுத்தப் படுகின்றனர்.இதனால் வரதட்சணைத் தடுப்புச் சட்டத்தின் நோக்கமே பாழடிக்கப்படுகிறது’’
தமிழக மகளிர் காவல் நிலையங்களில் நடக்கும் அத்து மீரலுக்கு எதிராக கொட்டப்பட்ட இந்த வார்த்தைகள் மனித உரிமை அமைப்பினுடையதோ அல்லது சமூகப்பணியாளர்களின் வார்த்தைகளோ அல்ல...முன் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி ரோசைய்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் சிந்தாதிரிப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் கையே உடைந்து போகும் அளவுக்கு அடித்ததாக குறிப்பிட அதை விசாரித்த நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவுத் தீர்ப்பில் சொன்ன வார்த்தைகள்தான் மேற்கண்டவை.

மகளிர் காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது,சாதாரண குடும்ப பிரச்சனைகளில் காவல் நிலையங்களுக்கு செல்வோரை அடித்து துன்புறுத்தி இரண்டு பக்கமும் வசூலைப் போடுபவர்களாக உருமாறி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் தொடர்ந்து மகளிர் காவல் நிலையங்கள் மீது உயர் நீதிமன்றம் கணடனக் கணைகளை தொடுத்த படியிருக்கிறது.
150 ஆண்டுகால வரலாறுள்ள தமிழக காவல்துறையில் பெண் போலீஸ் சேர்த்துக் கொள்ளப்பட்டது 1973&ல் இப்படிச் சேர்த்துக் கொள்ளப்பட்ட பெண் போலீசார் ஆண் காவலர்கள் பணிபுரியும் காவல் நிலையங்களிலேயே பணியாற்றினர்.இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் ‘‘பெண்கள் தொடர்பான வழக்குகளில் போலீசாரின் அணுகுமுறை மாற வேண்டும்’’என்ற நோக்கில் 1992&ல் சென்னையில் முதன் முதலாக துவக்கி வைக்கப்பட்டது மகளிர் காவல் நிலையம்.இந்தியாவிலேயே முதன் முறையாக என்றெல்லாம் பெருமையாக பேசப்பட்ட மகளிர் காவல் நிலையங்களின் எண்ணிக்கை இன்று இருநூறைத் தொடுகிறது.ஆனால் தமிழகம் முழுக்க ஆண் காவலர்களுக்கு நாங்களும் சற்றும் சளைத்தவர்களல்ல என்பதை பல வழக்குகளிலும் நீரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் மகளிர் காவலர்கள்.

சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர்கள் சதீஷ்குமார்,சியாமளா தம்பதிகள் ஐந்து வயது பெண் குழந்தைக்கு பெற்றோர்களான சதீஷ-க்கும் சியாமளாவுக்கும் குடும்ப வாழ்வில் மனஸ்தாபம்.‘‘சதீஷ§க்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு,வரதட்சணை கேட்டு துன்புறுத்துகிறார்’’என்று அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் சியாமளா.சதீஷ் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடப்பட்டு தினமும் அண்ணாநகர் காவல் நிலையத்தில் கையெழுத்து இட்டு வந்தார் .இந்நிலையில்தான் அண்ணாநகர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணி புரியும் ராஜலட்சுமி சியாமளாவை பிரித்து வைப்பதாக சதீஷிடமும் சதீஷை சேர்த்து வைப்பதாக சியமாளாவிடமும் பேரம் பேசி கடைசியில் சியாமளா பத்தாயிரம் ரூபாய் தருவதாக ஒப்புக் கொண்டதோடு லஞ்ச ஒழிப்பு போலீசாரிடமும் முறையிட இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இது ஒரு சாம்பிள் சம்பவம்தான்....தமிழகம் முழுக்க குடும்ப பிரச்சனைகளை கையாளும் விதத்தில் பெண் போலீசாரும் ஆண் போலீசைப் போலவே தடித்தனமாக நடந்து கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு தமிழகம் முழுக்க ஒலிக்கிறது.போலீசின் தொல்லைகளுக்கு ஆளாகும் பல குடும்ப ஆண்களும் பெண்களும் பயந்து போய் இதை வெளியில் சொல்லப் பயப்படுவதோடு போலீசார் கேட்கும் தொகையையும் கொடுத்து விட்டு வசூலுக்கு துணையாக ஆண்களுக்கு எதிரான வாக்குமூலங்களையும் கொடுக்கிறார்கள்.

பொதுவாக,கணவர் என்னை ஏமாற்றுகிறார் வேறு பெண்ணோடு தொடர்பு வைத்திருக்கிறார்.மாமனார் மாமியாரோடு சேர்ந்து கொண்டு தனிக்குடித்தனம் வர மறுக்கிறார்.இப்படி குடும்பத்துக்குள் எழும் நடைமுறை சிக்கல்களைத் தீர்த்து வைக்க வேண்டும் என மகளிர் காவல் நிலையங்களுக்கு பெண்கள் சென்றால் உடனே வரதட்சணை கொடுமை சட்டத்தின் படியே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது.இந்த வறையறைக்குள் இப்போது வந்திருப்பது குடும்ப வன்முறைச் சட்டம்.உண்மையில் குடும்பத்தில் நடக்கும் வன் கொடுமைகளை சந்திக்கும் பெண்களில் பெரும்பாலானோர் வெளியில் வருவதில்லை.அவர்கள் தங்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளுக்கு நீதி வேண்டி காவல் நிலையங்களுக்கும் செல்வதில்லை.


குடும்பங்களில் கணவன் மீதோ மாமனார் மாமியார் மீதோ ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டி அதாவது பிரச்சனையை சுமூகமாக தீர்க்க மகளிர் காவல் நிலையங்களை அணுகினால் கூட அதை தீர்த்து வைக்கும் சமரச மையங்களாக மகளிர் காவல் நிலையங்கள் செயல்படுவதில்லை.எடுத்த எடுப்பிலேயே வரதட்சணை வழக்காக அதை பதிவு செய்யும் படி அறிவுறுத்தி அதன் மூலம் கணவன் குடும்பத்தை மிரட்டி பணிய வைக்கும் ஒரு தவறான போக்கை பெண் போலீசார் கையாளுகின்றனர்.மகளிர் காவல் நிலையத்துக்குப் போன சியாமளா கூட தன் கணவரை தன்னுடன் இணைத்து வைக்க வேண்டும் என்று போனவர்தான்.ஆனால் இவரிடம் இணைத்து வைப்பதாகவும் சதீஷிடம் பிரித்து வைப்பதாகவும் வசூலைப் போட்டது போலதான் பெரும்பாலான வழக்குகளில் நடவடிக்கை உள்ளதாகச் சொல்லப்படுகிறது.தனிக்குடித்தனப் பிரச்சனை இன்னும் மோசம் கணவனின் உடன் பிறந்த சகோதரிகள் அவர்கள் வேறு எங்காவது வசித்தால் கூட அவர்களையும் தொலைபேசியில் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக சேர்த்து விடுகிறது பெண் போலீஸ்.இப்படி ஒரு முறை கணவனுடன் தனிக்குடித்தனம் நடத்த விரும்பிய ஒரு பெண் வழக்கறிஞரின் அறிவுரைப்படி மாமனார் மாமியார் கணவனை தனிக்குடித்தனம் செல்ல விடாமல் தடுப்பதாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சொன்னார்.அந்தப் பெண்ணும் அப்படியே கொடுத்தார்.போலீசார் நம்மை விசாரிக்க வருகிறார்கள் என்பதை அறிந்த மாமனாரும் மாமியாடும் வீட்டிலேயே தூக்கு மாட்டிக் தற்கொலை செய்து கொண்ட கொடுமையும் நடந்திருக்கிறது.

சமீப காலத்தில் குடும்ப வன்முறைச் சட்டத்தை தவறாக கணவனுக்கு எதிராக மாற்றும் போக்கு அதிகரித்து வருவதை உச்ச நீதிமன்றமே கண்டித்திருக்கிறது.விருப்பமில்லாத இருவரை கட்டாயமாக திருமணம் செய்து வைப்பதும்.சின்ன பிரச்சனைகளோடு காவல் நிலையம் செல்பவர்களை நிரந்தரமாக பிரித்து வைப்பதற்கும் பல இடங்களில் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. தீர்க்கமாக சொல்லப்படுகிற பொய்கள் நியாயங்களாக மாற்றப்படுவதும்.ஒரு சாராரின் கருத்தே எடுபடாமல் போவதும் அதன் மூலம் பாதிக்கப்படுகிற ஆண்களுக்கு எவ்வித தீர்வும் கிடைக்காமல் போவதும் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது.

இன்னொரு பக்கம் பழைய தாலி செண்டிமெண்டுகளையும் கெடுத்தவனுக்கே பெண்ணை திருமணம் செய்து வைக்கும் கொடுமையான பழமரபிலும்தான் நம் கலாசாரம் கட்டமைக்கப் பட்டிருக்கிறது.அதற்கு போலீசாரும் விதிவிலக்கல்ல.பாதிக்கப்படும் பெண்களுக்கு நியாயமான தீர்வுகளைக் கொடுக்கும் அதே நேரத்தில் பெண்களின் குற்றச்சாட்டு உண்மையா?அல்லது பொய்யா என்பதை விசாரிக்கிற கடமையும் போலீசுக்கு உண்டு.

குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் கணவன் மீதான குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்துக்குப் போன பெண்ணின் தீர்ப்பை முன்னிட்டு கேரள கோர்ட் சொன்ன தீர்ப்பின் சாரம் தமிழகத்துக்கும் ஏன் ஒட்டு மொத்த இந்தியாவுக்குமே பொறுந்தும்.

‘‘குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ கொடுக்கப்பட்ட புகார் போலியானது என்பதை கோர்ட் ஏற்றுக் கொள்கிறது.தனது முறை தவறிய உறவை மறைப்பதற்காக மனைவி இது போல் செய்திருக்கிறார்.குடும்ப வன்முறைச் சட்டத்தால் கணவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.கணவர் மீது போலிப் புகார் கொடுக்கப்படுகிறது.இந்தப் போக்கினால் இந்தச் சட்டமே கேலிக்கூத்தாகி விடுகிறது.இந்த வழக்கில் கணவர்தான் பாதிக்கப்பட்டுள்ளார் ஆனால் அவருக்கு உரிய நிவாரணம் வழங்க சட்டத்தில் இடமில்லை.ஆகவே குடும்ப வன்முறை சட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் பெண்கள் மீதும் நடவடிக்கை எடுக்க சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும்’’என்று தன் தீர்ப்பில் கூறினார் நீதிபது.

குடும்பம் என்கிற நிறுவனத்தில் சிதைக்கப்படும் பெண்வாழ்வின் வேதனைகள் களையப்பட வேண்டும் என்றுதான் பெண்களுக்கு ஆதரவான சட்டங்கள் கொண்டு வரப்பட்டு கரிசனமான விசாரணையும் பாரபட்சமில்லாமல் நீதியும் கிடைக்கும் என்றுதான் மகளிர் காவல் நிலையங்கள் கொண்டு வரப்பட்டது.காவல்துறையில் அதுவரை ஆண்களை மட்டுமே பார்த்துப் பழகிப்போன பொது சனங்களுக்கு பெண் போலீசாரை பார்த்த போது நம்பிக்கை துளிர் விட்டது.ஆனால் வழக்குகளை விசாரிக்கிற விதத்திலும் காவல் நிலைய அணுகுமுறைகளிலும் ஆண் போலீசுக்கும் பெண் போலீசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பது இப்போது நீரூபிக்கப்பட்டிருக்கிறது.உண்மையில் மகளிர் காவல் நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டதன் உண்மைத் தத்துவங்கள் இனி வரும் காலத்திலாவது நடைமுறையாக வேண்டும் என்பதே அனைவரின் ஆசையும்.

உண்மை கண்டறியும் சோதனை பொய்யா?உண்மையா?ரௌடிகள் என்கவுண்டருக்கு பயப்படுவதைப் போல குற்றவாளிகள் என சந்தேகப்படுவோர்.அஞ்சி நடுங்குவது உண்மை கண்டறியும் சோதனைக்கு.தமிழகத்தில் அதியாமான் கோட்டை காவல் நிலையத்தில் காணாமல் போன துப்பாக்கிகளுக்கு காரணமானவர்கள் என்று போலீஸ் கஸ்டடியில் சிக்கியிருக்கும் எட்டு காவலர்கள் உட்பட வட இந்தியாவையே உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கும் ஆருஷி தல்வார் கொலை வரை இன்றைய ஹாட் டாப்பிக் நார்கோ அனாலிசைஸ் எனப்படும் உண்மை கண்டறியும் சோதனைதான்.

இந்த சோதனைகளுக்கு எதிராக மனித உரிமை அமைப்புகள் கொடி பிடிக்கத் துவங்கியிருக்கிறன.‘‘அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத இந்த சோதனைகள் மனித உரிமைகளுக்கு எதிரானது’’ என்ற குரல்கள் இந்தியாவில் எழத் துவங்க.இந்த சோதனைகளை தடை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கிறது.பெங்களூர் ஹைதராபாத் நகரங்களில் மட்டுமே உண்மை கண்டறியும் சோதனைகள் நடத்தப்பட்டு வந்தது.இப்போது தமிழக அரசும் உண்மை கண்டறியும் சோதனை மையம் ஒன்றை சென்னையில் அமைக்க நிதி ஒதுக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

உண்மை கண்டறியும் சோதனை என்றழைக்கப்படும் Narco Analysis சோதனையில் குற்றம் சாட்டப் பட்டுள்ளவரின் உடலுக்குள் மயக்க மருந்தை செலுத்துவதன் மூலம் அவரின் கற்பனைத் திறனை மட்டுப் படுத்தி மனதை அறை மயக்க நிலைக்கு கொண்டு சென்று அவரிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்காகவோ அல்லது வழக்கின் கண்டு பிடிக்கப்படாத ரகசியங்களை அறிந்து கொள்ளவோ மேற்கொள்ளப்படும் முயர்ச்சிதான் இந்த உண்மை கண்டறியும் சோதனை.உலகம் முழுக்க பல்வேறு மயக்க மருந்துகள் இந்த சோதனைக்கு பயன் படுத்தப்பட்டாலும் இந்தியாவில் சோடியம் பென்டத்தால்,சோடியம் அமிட்டால் போன்ற மயக்க மருந்துகளே உண்மை கண்டறியும் சோதனைக்கு பயன் படுத்தப்படுகின்றன.இந்த மருந்துகள் செலுத்தப்பட்ட சில நொடிகளிலேயே சம்பந்தப்பட்டவர் அறை மயக்க நிலைக்கு சென்றுவிடுவார்.அதிலும் சோடியம் பென்டத்தால் அதி வேகமாக செயல்படும்.நம் கனவுகள்,கற்பனைகள்,புனைவுகள் என மூளையோடு தொடர்புடைய அனைத்துமே நமது கற்பனைத்திறனால் உருவாவை.சோடியம் பென்டத்தால் செலுத்தப்பட்ட சில நொடிகளிலேயே மருந்து செலுத்தப்பட்டவரின் கற்பனைத்திறன் மட்டுப்படுத்தப் படுகிறது.இப்போது அவர் அறை மயக்க நிலைக்கு சென்று விடுகிறார்.அவரால் தானாக முன் வந்து எதுவும் பேச முடியாது.பெயர் என்ன என்று கேட்டால் பெயரைச் சொல்வார்.ஆருஷியை நீ கொன்றாயா? என்று கேட்டால் ஆம்...அல்லது இல்லை என்று ஒரு வரியிலேயே பதில் சொல்ல முடியும்.ஆமாம் அதனால்தான் மனித உரிமை ஆர்வலர்கள் இதை ஒரு விசாரணை முறையாகக் கூட ஏற்றுக் கொள்ள வில்லை காரணம்.ஆம்..அல்லது இல்லை என்று ஆழ்ந்த நித்திரையில் அல்லது மயக்கத்தில் இருக்கும் ஒருவர் சொல்வதை எப்படி அவருக்கு எதிராகவே பயன் படுத்த முடியும் என்று கேட்கிறார்கள்.அது மட்டுமல்லாமல் செலுத்தப்படும் இந்த மருந்து இதயத்துடிப்பின் வேகத்தை,ரத்த நாளங்களின் ஓட்டத்தை,முதுகெலும்பின் வலுவை,இவை எல்லாவற்றையும் விட மூளையின் செயல்பாட்டை சோர்வடையச் செய்கிறது அது மட்டுமல்லாமல் இந்த மருந்துகள் கொடுக்கப்படும் போது பரிசோதனைக்கு உள்ளாபவரின் வயது,உடல் நிலை,ரத்த அழுத்தம் என எதிலொன்றிலும் கவனக்குறைவாக இருந்தால் மயக்க நிலைக்கு சென்றவர் மீண்டும் நினைவு திரும்பாமலேயே மரணத்தை தழுவும் ஆபத்தும் உண்டு.அப்படியே நினைவு திரும்பினாலும் மருந்தின் பின் விளைவுகளை அவர் காலா காலத்துக்கும் அனுபவிக்க நேரிடும்.இயல்பாக இருக்கும் ஒருவரை சோர்வடையச் செய்வதன் மூலம் வாக்குமூலம் பெற நினைப்பதே நமது காவல்துறையின் திறமைக் குறைவுதானே?என்கிறார்கள்.

பொதுவாக உண்மை கண்டறியும் சோதனைகளின் போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்துகளை ‘‘உண்மை திரவங்கள்’’என்று அழைக்கிறார்கள்.ஒரு வேளை போலீசார் விரும்பும் வகையில் சந்தேகப் படுபவரிடமிருந்து சாதகமான பதில் கிடைக்காவிட்டால் இந்த இயந்திரம் பொய் பேசுகிறது என்று அர்த்தமா?இந்தியாவில் இது வரை எந்த வழக்கிலாவது இந்தச் சோதனை வெற்றிகரமாக பயன் பட்டிருக்கிறதா என்றால் இல்லை என்றே தோன்றுகிறது.ஏனென்றால் தந்திரமாக நடித்து இந்த இயந்திரத்தைக் கூட சிலர் ஏமாற்றிவிட முடியும் என்கிற பார்வையும் உண்டு.

இது போலத்தான் p-300 என்றழைக்கபப்டும் பிரெய்ன் மாப்பிங் (Brain Mapping) அல்லது பாலிகிராப் (Poly Graph test) சோதனைகள்.உண்மை கண்டறியும் சோதனையின் தவிர்க்க முடியாத இன்னொரு சோதனையாக மூளையையும் இதயத்தையும் பகுத்தறியும் இந்த சோதனையும் இன்று நடைபெறுகிறது.குற்றம்சாட்டப்பட்டவரின் இதயப்பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும் வயர்கள் மூளையின் அதிர்வலைகளை உணரும் தன்மை கொண்டவை இது கணிப்பொறியோடு இணைக்கப்பட்டிருக்கும் கொலையுண்ட நபரின் குரலையோ புகைப்படத்தையோ குற்றம் சாட்டப்பட்டவரிடம் காட்டினால் அவரது மூளையில் அது p-300 என்னும் அதிர்வலைகளை வெளிப்படுத்தும்.உதாரணத்திற்கு நாம் வசிக்கும் வீட்டின் அருகே ஒரு கொலை நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.அந்தக் கொலையை நாம் கண்ணால் பார்க்கிறோம் ஆனால் அந்தக் கொலையில் நமக்கு எந்த தொடர்பும் இல்லை.ஆனால் போலீஸ் நம்மை சந்தேகிக்கிறது நம்மை அழைத்துப்போய் பிரெய்ன் மாப்பிங் டெஸ்டில் அமர்த்தி கொலையான நபரின் புகைப்படத்தையோ குரலையோ நமக்கு காட்டினால் நமது மூளைp-300 அதிர்வலைகளை வெளிப்படுத்தாமல் என்ன செய்யும்.அப்படி அதிர்வலைகளை வெளிப்படுத்துவதாலேயே அந்தக் கொலையில் நமக்கும் தொடர்புண்டு என்கிற முடிவுக்கு வர முடியுமா?அப்படி வந்தால் இந்த உண்மை கண்டு பிடிப்பு இயந்திரங்களின் நம்பகத்தன்மைதான் என்ன?
இம்மாதிரி சோதனைகளை குற்ற வழக்குகளில் ஆவணமாகவோ சாட்சியமாகவோ சேர்க்க முடியுமா?என்றால் உலகின் பல்வேறு நாடுகளும் இந்த உண்மை கண்டறியும் சோதனைகளை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாதவை என ஒதுக்கி வைத்திருக்கின்றன. நீதி மன்றங்களோ இதை ஏற்றுக் கொள்ள முடியாது என மறுதலித்திருக்கின்றன.ஆனால் இந்தியாவில் நீதிமன்றங்கள் இம்மாதிரி சோதனைகளை பிரதான சாட்சியங்களாக எடுத்துக் கொள்ளாவிடினும் இதனடிப்படையில் குற்றவாளிகள் யாரையும் தண்டித்ததில்லை.ஆனால் இம்மாதிரி சோதனைகளுக்கு இந்திய நீதிமன்றங்கள் தடை விதித்ததில்லை மாறாக அனுமதியளிக்கின்றன.

மும்பையில் தன் வீட்டுக்குள்ளேயே கொலை செய்யப்பட்டுக் கிடந்த ஆருஷியின் கொலையில் சில நாட்கள் வரை எந்த துப்பும் கிடைக்க வில்லை.கடைசியில் ஆருஷியின் தந்தை டாக்டர் தல்வாரை கைது செய்தது போலீஸ்.முறை தவறிய உறவு,வேலைக்காரருடன் பழக்கம் என பல கதைகள் ஆருஷியைச் சுற்றி பின்னப்பட்டாலும் இது எதுவும் நீரூபிக்கப்பட வில்லை.தல்வார் உண்மை கண்டறியும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார்.ஒரு பயனும் இல்லை வழக்கு சி.பி.ஐ&க்கு மாற்றப்பட்ட பிறகு தல்வாரின் மருத்துவமனை உதவியாளர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டு அவரும் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.அநத சோதனையின் முடிவும் ரகசியமாக வைக்கப்பட்ட பிறகு கிருஷ்ணாவும் அவரது நண்பர் ராஜ்குமாரும் சேர்ந்து செய்த கொலைகள்தான் ஆருஷியும் அவரது வீட்டு வேலைக்காரர் ஹெம்ராஜ் என்பரின் கொலையும் என்றும் போலீஸ் இப்போது கூறுகிறது.ராஜ்குமாரின் ரத்தக் கறைபடிந்த சட்டையை கைப்பற்றியதாக சொல்லப்படுகிறது.இந்தியாவையே உலுக்கிய ஆருஷி கொலை வழக்கில் நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனையை விட சி.பி.சி அதிகாரிகளின் விசாரணை திறமையே கொலையின் முடிச்சுகள் அவிழ காரணமாக இருந்திருக்கிறது.

உலக அளவில் இம்மாதிரி சோதனைகளை மனித உரிமைகளுக்கு எதிரானது என்று பல் வேறு மனித உரிமை அமைப்புகளும் சொல்கிறது. 1987& ஜூன் மாதம் வெளியிடப்பட்ட ஐ.நா சபையின் சித்திரவைக்கு எதிரான உடன்படிக்கையில் சித்திரவதை என்ற சொல்லுக்கான பொருள் வரையறை செய்யப்பட்டது.‘‘ஒரு நபரிடமிருந்தோ அல்லது மூன்றாவது நபரிடமிருந்தோ ஒரு தகவலையோ ஒப்புதல் வாக்குமூலத்தையோ பெற உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் கடும் வலியை கொடுந் துன்பத்தை உண்டாக்கும் நடவடிக்கையே சித்திரவதையாகும்’’என்கிறது ஐநாவின் மனித உரிமை விளக்கம்.சட்ட ரீதியாக உண்மை கண்டறியும் சோதனைகளுக்கு எதிராக இதை வைத்தே வாதாட முடியும்.இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 20(3) குற்றம் சாட்டப்பட்டுள்ள எவரையும் அவருக்கு எதிராகவே சாட்சியமளுக்கும் படி நிர்பந்திக்கக் கூடாது என்கிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால் உண்மை கண்டறியும் சோதனைகள் நடத்தப்படும் போது மயக்கமருந்து செலுத்துகிற ஒருவர்,மனநல மருத்துவர்,க்ளினிக்கல் சைக்காலஜிஸ்ட்,ஆடியோ வீடியோ கிராபர்,நர்ஸ் என ஐந்து அல்லது ஆறு பேர் இருக்க மனநல நிபுணர் சம்பந்தப்பட்டவரின் முனகலை வாக்குமூலமாகவோ விசாரணை அறிக்கையாகவோ பதிவு செய்வார்.எக்காரணம் கொண்டும் காவல்துறையினர் பரிசோதனை நடக்கும் பகுதிக்குள் நுழைய அனுமதி கிடையாது.ஆனால் இந்தியாவில் காவல்துறையினரே உண்மை கண்டறியும் போது சுற்றி அமர்ந்து கொண்டு கேள்விகளைக் கேட்பது வேடிக்கையான வேதனை.அதிலும் சில மருத்துவர்களும் உண்மை கண்டறியும் சோதனைகளில் கலந்து கொண்டு பின்னர் அதை பெரும் வீரமாக பத்திரிகைகளில் எழுதுகிறார்கள்.ஆனால் மருத்துவர்களை அங்கீகரிக்கும் இந்திய மருத்துவ கவுன்சில் என்ன சொல்கிறது தெரியுமா?‘‘மனித உரிமைகளுக்கு எதிரான வகையில் ஒரு நபரை சித்ரவதை செய்வதற்கு உதவியாகவோ,உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு மருத்துவர்கள் உடந்தையாக இருக்கக் கூடாது என்கிறது’’

ஸ்காட்லாந்த் யார்டுக்கு நிகராக ஒப்பிடப்படும் தமிழக போலீஸ் கூட பல வழக்கு விசாரணையில் தங்களின் பலவீனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.விசாரணை அதிகாரியின் திறமை மட்டுமே குற்ற ரகசியங்களை வெளியில் கொண்டுவரப் பட்டு விசாரணை முறைகள் ஜனநாயகப்படுத்தப்பட வேண்டுமே தவிற இயந்திரமயமாக்கப்படக் கூடாது.அது அரசியல்வாதிகள் உடபட அத்தனை பேருக்குமே ஆபத்துதான்.

இந்தியாவின் கொல்லைப்புறமும் காலைக்கடன் கழிக்கும் விமானங்களும்....யுத்தம் மனிதகுலத்தை மரணப் படுகுழிக்குள் தள்ளி விடுகிறது.கால் நூற்றாண்டைக் கடந்து இலங்கையில் நடக்கும் யுத்தமோ ஈழத்தமிழர்களை பதுங்கு குழிகளுக்குள் புதைத்துக் கொண்டிருக்கிறது.தினம் தோறும் பொழியப்படும் குண்டுகளோடு கூடவே இப்போது வறுமையும் அவர்களுக்கு பரிசளிக்கப்படுகிறது.இதை ஈழ மக்களின் மீது திணிக்கப்பட்ட இன்னொரு போர் என்கிறார்கள்.ஒரு வேளை உணவோடு ஒரு நாள் பொழுதைக் கழிக்கும் ஈழத்தமிழர்கள் இனி அன்றாடம் அமெரிக்காவில் இருந்து உணவு வராதா இந்தியாவிலிருந்து கப்பல் வராதா என்று எதிர் பார்த்திருக்கும் பரிதாபச் சூழலில் சிக்கியிருக்கிறார்கள்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணைய் விலை உயர்வின் பெயரால் உலக நாடுகள் பலவற்றின் பொருளாதாரம் ஆட்டம் கண்டிருக்கிறது.இலங்கையிலோ அது இன்னும் மோசம்.கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு விலைவாசி மக்களை பட்டினியின் விழிம்பில் தள்ள இலங்கை அரசோ தனது இராணுவச் செலவுகளை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.2003&ல் வெறும் 4,700 கோடியாக இருந்த அதன் இராணுவச் செலவு இன்று 11,700 கோடியாக அதிகரித்திருக்கிறது.இலங்கையின் தேசிய வருமானத்தில் பெரும் பங்கை ஈட்டிக் கொடுத்தது தேயிலையும் சுற்றுலாவும்தான்.மேற்குலகின் அந்தபுரமாக இருந்த கடற்கரை நகரான கொழும்பின் சுற்றுலாத் தொழிலை சுத்தமாக யுத்தம் துடைத்தழித்து விட எதிர் பார்த்த அளவுக்கு தேயிலை உற்பத்தியில் இலக்கை எட்ட முடியவில்லை.அமெரிக்காவின் பொருளாதார ஏற்ற இரக்கம் இன்று உலக நாடுகளை பாதிப்பது போல இலங்கையையும் பாதிக்கிறது.இலங்கையில் இப்போது 21.6% பணவீக்கம் ஏற்பட்டிருக்கிறது.இது வேறு எந்த தென்கிழக்காசிய நாடுகளிலும் இல்லாத மிக மோசமான நிலை.வாழத் தகுதியான தமிழகத்திலேயே பண வீக்கம் மத்தியதரவர்க்கத்தையும் ஏழைகளையும் பதம் பார்க்கும் போது யுத்த பூமியில் சொல்லவா வேண்டும்.

உலக உணவுத் திட்டத்தின் அறிக்கை உலகின் பட்டினி கிடப்பவர்களின் பகுதிகளாக(Hunger's Global Hot Spots) சில பகுதிகளை சுட்டிக்காட்டியது.அதில் பிரதான இடங்களுள் ஒன்றாக சுட்டிக்காட்டப்பட்டது இலங்கை.93%குடும்பத்தினர் உணவைக் கைவிடும் சூழலில் இருப்பதாகவும் நிரந்தரக் கடனாளியாகி நிலங்களையும் விற்று விட்டு பட்டினிக்கு முகம் கொடுக்கும் சூழலில் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது.இன்றைய இயந்திர உலகில் தவிர்க்க முடியாத அத்தியாவசிய பொருட்களான காஸ் சிலிண்டர்,பிரிட்ஜ்,மோட்டார் சைக்கிள்,பெட்ரோல் இவைகளை எல்லாம் இலங்கையில் கொழும்பு நகரில் வாழும் குறிப்பிட்ட குறைந்த மக்களுக்கு மட்டும்தான் ஈழத்தமிழர்கள் இவைகளை எல்லாம் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது.
ஒரு கிலோ அரிசியை யாழ்ப்பாணத் தமிழர்கள் வாங்க வேண்டும் என்றால் இன்று அவர்கள் அதற்காக 150 ரூபாய் செலவிட வேண்டும்.ஒரு கிலோ சர்க்கரை எண்பது ரூபாய்க்கும்.ஒரு தேங்காய் அறுபது ரூபாய்க்கும்.குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய அத்தியாவசிய பால்பவுடரை ஐநூறு ரூபாய் விலை கொடுத்தும் வாங்க வேண்டிய சூழல்.யுத்த நெருக்கடிளுக்கு மத்தியில் பல நூறு ரூபாய் செலவு செய்து சமையல் பொருட்கள் வாங்கி சமைக்க மண்ணெண்ணைய் அடுப்பை பற்ற வைக்க ஒரு தேவைப்படும் ஒரு தீப்பெட்டியில் விலையைக் கேட்டால் தலை சுற்றுகிறது.இருபது ரூபாய்.ஆனால் புலிகளின் ஆளுகைக் குட்பட்ட வன்னியிலோ ஒரு கிலோ அரிசி முப்பதைந்து ரூபாய் ஆனால் சமையல் எரிவாயு பயன்படுத்துவதை பாதுகாப்பு கருதி தடை செய்திருக்கிறார்கள் புலிகள்.

இலங்கை ராணுவத்தின் திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் வாழும் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகளின் தலையாயது மின்சாரம் ஆனால் ஏதோ ஒரு வகையில் மின்சாரமற்ற ஒரு வாழ்க்கைக்கு சாமாதானப் பேச்சு வார்த்தை முறிந்த பிறகு வாழப் பழகிக் கொண்டார்கள்.ஆனால் கொழும்பையும் யாழ்பாணத்தையும் இணைக்கும் ஏ&9 சாலை மூடப்பட்ட பிறகு உணவுப் பொருட்கள் அத்தியாவசியப் பொருட்கள் என இயல்பு வாழ்க்கைக்கே தள்ளாட வேண்டிய சூழலில் மண்ணில் வாழும் உரிமையும் மறுக்கப்பட்டு உழைக்கும் உரிமையும் மறுக்கப்பட்டு சிதறியிருக்கிறது ஈழத்தமிழர் வாழ்வு.ஈழத்தமிழர்களுக்கு பெரும் ஆதரவான ஒன்றாக இருந்தது கடல் தொழில் மட்டும்தான்.ஆனால் கடல்புலிகளை ஒழிக்கிறோம் என்று ஈழத்தமிழ் பாரம்பரீய மீனவர்கள் வாழ்கிற கடலோர பகுதிகளின் கடல்களுக்குள் கண்ணி வெடிகளை புதைத்திருக்கிறது இலங்கை அரசு. ஈழத்தமிழர்களையும் தாண்டி இந்திய மீனவர்களையும் பாதிக்கிறது இந்த கடல் கண்ணி வெடிகள்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த உணவு நெருக்கடியை புரிந்து கொண்ட உலக வங்கி இலங்கை அரசுக்கு நூறு கோடிரூபாய் வரை வட்டியில்லாக் கடன் வழங்க முன் வந்திருக்கிறது.அகதி முகாம்களிலும் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளிலும் உலக அளவிலான தன்னார்வ அமைப்புகள்.மக்களுக்கு கொஞ்சம் பொருளாதார உதவிகளையும் உணவுப் பொருட்களையும் வழங்குகிறார்கள்.தங்கள் குழந்தைகளுக்கான பள்ளிச் சீருடைகள் பாட நூலகள் என்று தன்னார்வ அமைப்புகள் வழங்கினாலும் அது ஈழத்தமிழரின் வாழ்வில் வசந்த காலம் எதையும் கொண்டு வந்துவிட வில்லை.

உலகம் முழுக்க ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ஈழத்தமிழர்களை மேலும் பாதிக்கும் ஆகவே இலங்கைத் தீவில் உடனடியாக போர் நிறுத்த ஒப்பந்தம் தேவை.பொருளாதார நிலைகள் சீரடையும் வரையாவது புலிகளும் அரசும் போர் நிறுத்தம் செய்து கொள்ள வேண்டும் என சர்வதேச நாடுகள் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருகின்றன.இந்நிலையில்தான் சமீபத்தில் இந்திய வெளியுரவுச் செயலர் சிவசங்கரமேனனுன் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனும் பாதுகாப்புச் செயலர் விஜய்சிங்கும் இலங்கை தலைநகர் கெழும்புக்கு பயணம் செய்து இலங்கை பிரதமர் ராஜபக்ஷேவையும் சில ராணுவ தளபதிகளையும் சில தமிழ் தலைவர்களையும் சந்தித்து விட்டு வந்திருக்கிறார்கள்.இலங்கை சீனாவிடமும் பாகிஸ்தானிடமும் ஆயுதங்ளை வாங்கிக் குவிக்கிற சூழலில் இந்திய பிரதிநிதிகளின் இலங்கைப் பயணம் மீண்டும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

1983 - ஜூலையில் தமிழர்களுக்கு எதிரான கலவரத்தில் ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட கொதித்துப் போன அன்றைய பிரதமர் இந்திராகாந்தி.‘‘எங்களின் கொல்லைப்புறத்தில் இப்படியான கொடுமைகள் நடப்பதை இந்தியா கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது’’என்று அன்றைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தானாவிடம் தன் கடுமையான கண்டனங்களைச் சொன்னது இந்தியாவின் தலையீடு இலங்கையில் துவங்கியது.ராஜீவ்காந்தி காலத்தில் அமைதிப்படையின் இலங்கை பயணம் விடுதலைப்புலிகளுடனான போர் என வரலாற்றில் பல காயங்களை அது ஏற்படுத்திச் சென்றது அது.ராஜீவ் கொலையில் கொண்டு போய் விட்டது. பின்னர் இலங்கை பிரச்சனையில் நேரடியாக தலையிடாத இந்தியா இப்போது மீண்டும் இலங்கை பிரச்சனையில் ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது.காரணம் ஆசிய பிராந்தியத்தில் இலங்கை தங்களை நம்பியிருக்காமல் பாகிஸ்தானிடமும் சீனாவிடமும் ஆயுதம் வாங்குகிறது என்பதால் இந்தியா இலங்கையை தன் கட்டுக்குள் வைக்க நினைக்கிறது என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் மாதம் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெறும் சார்க் மாநாட்டிற்கு இந்திய பிரதமர் மன்மோகன்சிங் செல்ல விருக்கிறார்.இந்தியப்பிரதமர் இலங்கைக்கு செல்லும் போது இலங்கையில் போர் நடைபெறுவது தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கலாம்.ஆகவே இலங்கை அரசும் புலிகளும் அதற்கு முன்னர் ஒரு போர் நிறுத்த உடன்படிக்கை செய்து கொண்டால் நல்லது என இந்தியா கருதுவதாகவும் இந்திய அதிகாரிகளின் பயணம் அதை ஒட்டியே என்றும் சொல்லப்படுகிறது.இன்னொரு பக்கம் இலங்கை செல்லும் இந்தியப் பிரதமருக்கு பாதுகாப்பு கொடுப்பது யார் என்ற கேள்விக்கு இந்தியாவே தன் கருப்புப் பூனை படைகளோடு ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களையும் சில யுத்தக் கப்பல்களையும் கொழும்புக்கு கொண்டு சென்று ஒட்டு மொத்தமாக கொழும்பு நகரை மாநாடு நடக்கும் சில நாட்களுக்கு தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர இந்தியா விரும்புகிறது என்றும் செய்திகள் கசிய,இலங்கையின் பாதுகாப்பு அமைச்சரோ இந்திய பிரதமர் உட்பட அனைவருக்கும் எமது படையினரே பாதுகாப்பு வழங்குவார்கள் என்று சொன்ன மறு நாள் அம்பாறை மாவட்டத்தில் அரசு விழாவிற்கு வந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் விமானத்தை குண்டு வீசி சிதைத்திருக்கிறார்கள் புலிகள்.அவசர அவசரமாக நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பத்திரமாக கொழும்பு அழைத்துச் செல்லப்பட்டார் இலங்கை அதிபர் ராஜபக்ஷே.சொந்த நாட்டின் பிரதமருக்கே பாதுகாப்பு கொடுக்க முடியாத இராணுவம் எப்படி ஏனைய ஆசிய நாடுகளின் தலைவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதாக உத்திரவாதம் கொடுக்கிறது என தலையைப் பிய்த்து கொள்கிறார்கள் அரசியக் விமர்சகர்கள்.

ராஜீவ்காந்தியும் ஜெயவர்த்தானாவும் செய்து கொண்ட ஒப்பந்தம் தமிழர்களின் தாயகப்பகுதியாக வடக்கு கிழக்கு இணைப்பை வலியுறுத்தியது.ஆனால் தற்போது வடக்கையும் கிழக்கையும் இரண்டாக பிரித்து அதில் கிழக்கில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் சிவநேசதுறை சந்திரகாந்தன் என்கிற பிள்ளையானை முதல்வராக்கியிருக்கிறார் மகிந்தா ராஜபக்ஷே.எப்படி கிழக்கில் ஒரு பிள்ளையானை ராஜபக்ஷேவால் உருவாக்க முடிந்ததோ அது போல வடக்கிலும் ஒரு பிள்ளையானை உருவாக்கி தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்க வேண்டும் என்றும் இதற்கு புலிகளை தவிர்த்து விட்டு ஏனைய இலங்கை அரசின் ஆதரவு பெற்ற குழுக்களை ஒருங்கிணைத்து தமிழர்களுக்கான அதிகார அமைப்பை ஏற்படுத்த இந்தியா உதவக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.எப்படியிருந்தாலும் இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு இந்திய பிரதமர் செல்லும் போது பாதுகாப்புகள் கடுமையாக இருக்கும்.ஏனென்றால் ஏற்கனவே ராஜீவ்காந்தி இலங்கைக்கு சென்றிருந்த போது இலங்கை கடற்படையின் சிப்பாய் ஒருவரால் துப்பாக்கி பேனட்டால் தாக்கப்பட்ட சம்பவமே அந்த எச்சரிக்கையை நமக்குக் கொடுக்கும்.
வெளியுறவுக் கொள்கைகள்,தேச எல்லைகள் சார்ந்த நலன்கள்,ராஜதந்திரங்கள்,காய்நகர்த்தல்கள் இது எல்லாவற்றையும் தாண்டி தினம் தோறும் இலங்கைத் தீவில் தமிழன் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறான்.இந்தியாவின் கொல்லைப்புறத்தில் எண்பதுகளில் துவங்கிய மரண ஓலம் இன்னும் தீர்ந்த பாடில்லை.ஈழத்துக் கவிஞர் புதுவை இரத்தினதுறையின் வரிகளில் சொன்னால்.‘‘காலைக் கடனை கழிப்பதற்கு வருவதைப் போல தினம் தோறும் வந்து போகிறது இலங்கை விமானப்படை’’ஆமாம் நாள் தோறும் அது மனித குலத்தின் மீது ஒரு குண்டை வீசுகிறது.இப்போது பட்டினியையும்....

அழகர் சாமியின் கடிதங்கள்....அன்புள்ள என் அருமை மனைவிக்கு
உன் அன்புக்கணவன் எழுதிக் கொண்டது நான் இங்கு நலம்.இது போல் நீயும் என் மகனும் மற்றும் நம் பந்துக்கள் அனைவரும் நலமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்!
சில வாரங்களுக்கு முன்னர் சரவணக்குமார் லெட்டர் போட்டான்.அதை படித்துப் பார்த்த உடன் என் மனம் மிகவும் வேதனையடைந்தது.யாரோ ஒருத்தி வந்து என்னைக் கேட்டாள் என் மீது சந்தேகப்பட்டு இப்படி லெட்டர் எழுதலாமா?எழுதக் கூடாது மகன் சிறுபயல் அவனுக்கு விபரம் தெரியாது.நீ சந்தேகப்பட வேண்டாம்.நான் எந்தப் பெண்ணையும் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை.வீண் சந்தேகம் வேண்டாம்.அப்படி யாராவது வந்து கேட்டால் திட்டி அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.நான் லீவு எடுத்துப் போட்டு லீவு வந்து விட்டது.உசிலம்பட்டிக்கு சென்று பி.ஓ வைப் பார்த்து லீவுக்கு ஏற்பாடு செய்யவும்.நான் வந்து விபரம் சொல்கிறேன்.
இப்படிக்கு,
உன் அன்புக்கணவன்,
நீஜீ/3782 ராஜா என்ற அழகர்சாமி.


நாம் சேமித்து வைத்திருக்கிற பணம்,நகைகளையும் தாண்டி ஏதேனும் ஒருவரின் வாழ்வைப் போற்றும் வகையில் எதையாவது ஒன்றை நமது இதயத்தில் பூட்டி பத்திரப்படுத்தியிருக்கிறோமா?நமது அசையும் அசையாச் சொத்துக்களையும் தாண்டி நமக்கு யாரோ எழுதிய கடிதங்களை அவர்களின் நினைவாக சேமித்திருக்கிறோமா?எத்தனை மஞ்சள் பாரித்த பழைய கடிதங்கள் உங்களின் அந்தரங்க அலமாறிகளில் பூட்டி வைத்திருக்கிறீர்கள்.உள்ளங்கைக்குள் உலகம் வந்த பிறகு ஒரு இன்லாண்ட் லெட்ட்ரை வாங்கி யாருக்காவது ஒரு கடிதம் எழுதியிருப்போமா?நாம்
ஆனால், இரண்டு இதயங்களை பல முறை கீறிக்கிழித்த கடிதங்களானாலும் இந்த சிறைக்கடிதங்கள் சேமிக்கப்படுகின்றன லஷ்மி சரவணக்குமாரால்,
‘‘மதுரை மத்திய சிறையில் இருந்து என்னோட அப்பா எனது அம்மா லெட்சுமிக்கு எழுதிய எவளவோ கடிதங்களில் இதுவும் ஒன்று.எங்கப்பா பண்ணின தப்பு என்ன தெரியுமா?எங்கம்மாவை கல்யாணம் பண்ணினதுதான்.அப்புறம் என்னை பெத்தெடுத்தது.


எனக்கு நினைவு தெரிந்து அப்பா என்றொரு மனிதர் எனக்கு இருந்ததாகவே நினைவில் இல்லை.இவர்தான் அப்பா எனத் தெரிந்த போது அவர் ஜெயிலுக்குப் போய் விட்டார்.சிறைச்சாலையில் சில முறை சந்தித்த போது பேசிக் கொணடதை விட அவர் கடிதங்களில் எழுதியவை அதிகம்.அம்மாதான் என்னை வளர்த்தாங்க.ராஜா என்கிற அழகர் சாமி என்றழைக்கப்பட்ட எனது தகப்பனார் ஒரு ப்ளேபாய்.என் அம்மாவின் உறவைத்தாண்டி அவருக்கு பல பெண்களுடன் தொடுப்பு இருந்திருக்கக் கூடும்.சில பேர் என்னிடம் கேட்டார்கள் ஏன் உங்க அப்பாவுக்கு அம்மாவை பிடிக்காமல் போனது.இதே கேள்வியை அம்மா என்னிடம் திருப்பிக்கேட்டார்.‘‘ஏண்டா உங்கப்பாவுக்கு என்னை பிடிக்காமல் போனதென்று?ஒருவரை பிடிப்பதற்கும் பிடிக்காமல் போவதற்கும் என்ன காரணங்கள் இருக்க முடியும்.அவர் அம்மாவை,என்னை, எங்களது வீட்டை என எல்லாவற்றையுமே புறக்கணித்தார் எப்போதாவது வருபவர் எப்போது வீட்டிலிருந்து செல்வார் எனத்தெரியாது.ஆரமபகாலத்தில் அப்பாவிடம் கொட்ட அமமவிடம் இருந்தது கண்ணீர் மட்டுமே!பின்னர் அதுவும் தீர்ந்து போக அம்மா வேலைக்கு போனார்.அம்மா நாலு வீடுகளுக்குப் போய் பாத்திரம் தேய்த்து அதில் கிடைக்கும் வருமானத்தில் என்னை படிக்க வைத்தார்.ஒரு நாள் ஸ்கூலில் நான்காம் வகுப்பு பாஸாகி ஐந்தாம் வகுப்புக்கு போனேன்.புது வகுப்பறை புது ஆசிரியர்கள் வந்ததும் எல்லா மாணவர்களும் வணக்கம் சொன்ன பிறகு வாத்தியார் கேட்டார்.‘‘நீங்களெல்லாம் எதிர்காலத்தில் என்னவாக ஆசைப்படுகிறீர்கள் ஒவ்வொருவராக சொல்லுங்கள்’’என்று கேட்ட போது.டாக்டர்,என்ஜினியர்,போலீஸ்,ஐ.ஏ.எஸ் என எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்க வரிசை ஊர்ந்து என்னிடம் வருகிறது என் மனதில் அம்மா வீடு வீடாகப் போய் பாத்திரம் தேய்ப்பதும்,துணிதுவைப்பதும் ஞாபகத்துக்கு வந்தது.நான் எழுந்து சொன்னேன்.‘‘நான் திருடன் ஆவேன்’’என்று எல்லா மாணர்வர்களும் கொல்லெனச் சிரித்தார்கள்.‘‘ஏம்பா இப்படி’’ என வாத்தியார் கேட்ட போது‘‘ஆமா சார் எங்கம்மா வீடு வீடா போய் பாத்திரம் தேய்ச்சு நான் டாக்டர் ஆவதற்கு திருடன் ஆகி பணக்காரங்களை எல்லாம் கொள்ளையடிச்சு எங்கம்மாவை சந்தோசமா பாத்துப்பேன் சார்’’என்றேன்.ஒரு விதமான போதாமையை அந்த வயதிலேயே உணர்ந்தேன்.அடாவடியான குணம் வந்த போது அமம என்னைக் கொண்டு போய் திருமங்கலத்தில் இருக்கும் ஒரு அநாதை ஆஸ்ரமத்தில் கொண்டு போய் விட்டாங்க,அங்குதான் நான் வளர்ந்தேன்.அம்மா அப்பப்போ எனக்கு ஏதாவாது வாங்கிட்டு வந்து பாத்துக்கிட்டுப் போகும்.பின்னர் அதுவும் சரிவாராமல் திருமங்கலத்துகே அம்மாவுடன் சென்று விட்டேன்.’’என்று சொல்கிற லஷ்மி சரவணக்குமார் திருடனாகவில்லை எழுத்தாளராகி இருக்கிறார்.தாயின் தனிமை,எழுதப்படிக்கத்தெரியாத தன் தகப்பானிரின் சிறைவாசம்,என சரவணக்குமார் எழுத்தின் மையம் இவைகள்தான்.

‘‘நாங்கள் திருமங்கலத்தில் இருந்த போதுதான் அந்த பரிதாபகரமான சம்பவம் நடந்தது.அப்பாவின் தொடுப்பாக இருந்த ஒரு பெண் எங்கள் வீட்டுக்கு வந்தார்.எங்கள் வீட்டின் மொட்டை மாடியில் போய் மண்ணெண்ணையை விட்டு தனக்குத்தானே தீவைத்துக் கொண்டார்.மூன்றாம் நாள் அந்த பெண் மரித்துப் போவதற்கு முன் திருமங்கலம் நீதிபதியிடம் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் என் தந்தைக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனையை அளித்தது,அதே தண்டனையை உயர்நீதிமன்றமும் உறுதி செய்ய அவரது ஜீவிதம் இப்போது மதுரைச் சிறையில் கழிகிறது.தீவைத்துக் கொண்ட அந்தப் பெண் இறந்து போனார்.அப்பா ஜெயிலுக்குப் போய் விட்டார் என் அம்மா தினம் தினம் வறுமைத் தீயில் வெந்து கொண்டு இருக்கிறார்.அப்பா ஜெயிலுக்குப் போன காலத்தில் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு என்பதே பெருங்கனவாய் இருந்தது.ஒரு திருடனாக மாறும் எல்லா சாத்தியங்களுடனும்தான் நான் வளர்ந்தேன்.அம்மா வீட்டு வேலைக்கு போவாங்க நான் பகலில் பள்ளிக்கூடம் போவேன்.இரவில் பிளாஸ்டிக் கம்பெனியில் வேலைக்குப் போவேன்.அப்புறம் அந்த வேலையை விட்டு விட்டு ஒயின்ஷாப்பில் ஏவல் பையனாக சில காலமிருந்தேன்.பின்னர் இரவு நேர இட்லிக் கடைகள் என பதினாறு இடங்களுக்கு மாறி மாறி வேலை பார்த்தேன்.இது எதுவும் பிடிக்காமால் பாலியல் தொழிலில் ஒரு புரோக்கராகவும் இருந்திருக்கிறேன்.எத்தனை வேலைகள் எந்த வேலையிலும் நிரந்தரமாக ஒட்ட முடியவில்லை ஏன் தெரியுமா?வேலை செய்யும் இடத்தில் என்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியாத காரணம்தான்.நான் ஒரு ஆயுள்தண்டனை கைதியின் மகன் என்பதைக் கூட என்னால் வெளிப்படுத்திக் கொள்ள முடியவில்லை.மதுரையில் ஷாஜகான் என்கிற எழுத்தாளர் வீட்டில் அம்மா வீட்டு வேலைக்குப் போனாங்க.அம்மா அங்க வேலை பார்த்ததால் நானும் அங்கே போவேன்.அப்போதான் இலக்கியமும் எழுத்தும் பரிச்சயமானது.அம்மாவைப் பற்றி.அப்பாவைப் பற்றி, சிறைவாசிகள் பற்றி,பெண்கள் பற்றி எழுத வேண்டும் எனத் தோன்றியது.ஆனால் இது எதுவும் வாழ்க்கைக்கு பயன் படவில்லை.ஏனென்றால் என்னால் பதினொன்றாம் வகுப்பை தாண்ட முடியவில்லை.அம்மா சித்தாள் வேலைக்குப் போனார்.நானும் படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்குப் போனேன்.இருவருக்கும் மிகக் குறைவான வருமானமே வந்த போதும் அபபாவின் செலவுகளுக்கு குறை ஒன்றும் வைத்ததில்லை.’’

‘‘சிறையில் இருக்கிற அப்பாவுக்கு என்ன செலவு என்றுதான் நான் முதலில் அம்மாவிடம் கேட்டேன்.அந்தக் கதையையும் சொல்கிறேன்.அப்பாவைப் பார்க்கப் சிறைக்குப் போவோம் பிரதான வாசலைத் தாண்டி உள்ளே போனால் ஒவ்வொரு வாசலிலும் நிற்கும் காவலருக்கும் பத்து ரூபாயிலிருந்து இருபது ரூபாய் வரை தட்சணை வைத்து முன்னேறிப் போய்தான் கைதிகளை சந்திக்க முடியும்.கைதிகளும் அவர்களை பார்க்க வருபவர்களும் சிறைக்குள் சந்திக்கிற இடத்துக்குப் பெயர் கச்சேரி.ஏன் இந்த இடத்துக்குப் பெயர் கச்சேரி என்று பெயர் வந்தது என்று பல முறை யோசித்த பிறகு அனுபவமே அதன் பொருளையும் கற்றுக் கொடுத்தது கம்பி வலைகளுக்கு மத்தியில் மொத்த பார்வையாளர்களும் ஒரே நேரத்தில் கைதிகளோடு பேசும் போது நானும் அப்பவிடம் பேசுவேன்.இல்லை கத்துவேன் கச்சேரி முடிந்து வெளியில் வந்தால் இரண்டு நாட்களுக்கு குரல் உடைந்து தொண்டை கம்மியிருக்கும்.நீண்ட கனமான கம்பி வலை ஒன்று சில அடி தூரத்தில் சிறைவாசிகளையும் சந்திக்க வருபவர்களையும் பிரித்திருக்கும்.இவர்களுக்கு நடுவில் கண்காணிக்கவும் காவல் காக்கவும் ஒரு கான்ஸ்டபிள் இருப்பார்.சிறைவாசிகளுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்றால் நடுவில் நிற்கும் காவலர் மூலம்தான் கொடுக்க முடியும்.நூறு ரூபாய் கொடுத்தால் இருபது ரூபாய் அவருக்கு இரண்டு பழம் கொடுத்தால் ஒன்று அவருக்கு.எவளவு பணம் கொடுக்கிறோமோ அதில் இருபது சதம் காவல் தெய்வங்களுக்குப் போய் விடும்.குற்றவாளிகளை அடைத்து வைத்திருக்கும் சிறையாக நமக்கெல்லாம் அது தோன்றினாலும் அதற்குள்ளும் ஒரு தனி சந்தை நடந்து கொண்டுதான் இருக்கிறது.ஒரு தீப்பெட்டியின் விலை ஐந்து ரூபாய்,ஒரு துண்டு பீடி மூன்று ரூபாய் கணேஷ் புகையிலை ஒரு பாக்கெட் முப்பது ரூபாய்.தேவைகளைப் பொறுத்து இங்கிருக்கிற வசதியான கைதிகளும் சில காவல் தெய்வங்களும் ஜெட் வட்டி,மீட்டர்வட்டி என கந்து வட்டித் தொழிலிலும் ஈடு படுகிறார்கள்.அப்பா எங்களுக்கு எழுதும் கடிதங்கள் கூட இலவசமாய் வழங்கப்படுபவை அல்ல.ஒரு இன்லேண்ட் கவர் ஆறு ரூபாய் போஸ்ட் கார்ட் நான்கு ரூபாய் என எல்லாம் வியாபாரம்தான்.இதை எல்லாம் விடக் கொடுமை என்ன வென்றால் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறைத்துறையோடு தொடர்புடைய நன்னடத்தை அதிகாரி என்றொருவர் இருப்பார்.சிறைவாசிகளுக்கு இவர்தான் நிஜமான கடவுள் .இவர் பார்த்து நன்னடத்தை சான்றிதழ் கொடுத்தால்தான் சிறையில் இருந்து வெளியில் வரமுடியும்.தவிறவும் கைதி பரோலில் வெளியில் வருவதும்.சிக்கலிம்மாமல் சிறை வாழ்க்கையை கழிப்பதும் இந்த அதிகாரியின் கையில்தான் இருக்கிறது.அதனால் சிறைவாசிகள் மட்டுமல்ல வெளியிலிருக்கும் அவர்களின் உறவினர்கள் கூட இவர்களிடம் பதமாக நடந்து கொள்ள வேண்டும்.அதனால் இவர்கள் எப்போதுமே கொஞ்சம் தலைதெரிக்க ஆடுவார்கள்.ஆண் குற்றவாளிகள் சிறையில் இருந்தால் அந்த கைதியின் வீட்டுக்கு இரவு பதினோரு மணிக்கு மேல் சென்று விசாரணை என்ற பெயரில் நோட்டம் விடுவது.தேவைப்பட்டால் பாலியல் சில்மிஷம் என இவர்களால் தொல்லைகள் அதிகம்.என அப்பாவைப் பார்க்கப் போய் நான் சிறைவாசிகளிடம் கற்றுக் கொண்டவைகள் ஏராளம்.திருடர்கள்,கொலைகாரர்கள்,பெண்மோகிகள்,சாராயவியாபாரிகள் என சிறை அனைவரையும் உள்வாங்கி செரித்துக் கொண்டே இருக்கிறது.என்னிடம் இப்போது இருக்கும் கேள்விகள் எல்லாம் எனது அப்பா உட்பட இவர்கள் அனைவரையும் சிறைச்சாலை மாற்றுகிறதா என்பதுதான்.வெளியில் வந்த பிறகு மீண்டும் இந்த சமூகத்தை என் அம்மாவை என்னை என் தகப்பனாரால் காதலிக்கப்பட்ட ஏதோ ஒரு பெண்ணை இவர்களை எல்லாம் அவர் எப்படி எதிர் கொள்வார் என்பது மட்டுமே.’’என்று பேசுகிற லஷ்மிசரவணக்குமார் ‘‘சொற்களிலிருந்து ஒலிக்கும் குரல்’’என்கிற தன்வரலாற்றுத் தொடரை ‘‘புதுவிசை’’இதழில் எழுதிக் கொண்டிருக்கிறார்.

‘‘துயரமான நாட்களை பெருங் கடலை நீந்திக் கடப்பதைப் போல நான் துன்பங்களை தாண்டி வந்திருக்கிறேன்.ஒரு வேளை உயர்நீதிமன்றத்தில் என் தகப்பனார் மீதான தண்டனை உறுதி செய்யப்படாமல் இருந்து அவர் விடுதலையாகியிருந்தால் அவர் எங்களுடன் இருந்திருப்பாரா என்பது சந்தேகம்தான்.நிரூபிக்கப்பட்ட தண்டனை அவரை எங்களோடு கடிதங்களில் வாழ வைத்திருப்பது குறித்து மகிழ்ச்சிதான்.அப்பா சிறைக்குப்போன இந்த ஏழு வருடத்தில் ஒரு பெண்ணின் தனிமையை என் தாயின் வேதனைகளை நான் அருகிருந்து பார்த்திருக்கிறேன்.இரண்டு வருடங்களுக்கு முன்னால் அப்பா எழுதிய கடிதத்தில் என்னை சிறுபயல் விபரம் போதாது என எழுதினார்.ஆனால் நான் இப்போது சிறுபயல் இல்லை.கொஞ்சம் உலக ஞானமும் புத்தியும் பெற்றிருக்கிறேன்.அந்த அனுபவங்கள்தான் அப்பா மீதான பார்வையைக் கூட மாற்றியிருக்கிறது எல்லா மனிதர்களைப் போல அப்பாவும் ஒரு சராசரி பலவீனமுள்ள ஆள் அவளவுதான்.வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் அருகில் வருகிற போது முக்கால் வாசி மனிதன் மிருகமாகத்தான் முயர்ச்சிக்கிறான் என்பதை என் சொந்த அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.அப்பாவால் இந்த சமூகத்தின் முன்னால் நானும் அம்மாவும் பரீகசிக்கப்பட்ட போது அப்பா மீது கோபம் இருந்தது.ஆனால் எத்தனையோ அழகர்சாமிகளுள் அப்பாவும் ஒருவர் என்பதை காலம் நிரூபித்திருக்கிறது’’என்கிறார் லஷ்மி சரவணக்குமார்.

ஆமாம்! சிறைகளில் வாழும் ஏதோ ஒரு அழகர்சாமி தன் மனைவிக்கோ,மகளுக்கோ,மகனுக்கோ கடிதம் எழுதிக் கொண்டுதானே இருப்பார்கள்.அழகர்சாமிகள் இந்த கடிதங்களில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

உள்ளுக்குள்ளேயே வெடிக்கும் குண்டு....உலகின் தற்போதைய யுத்தங்கள் எண்ணெய்க்கானது.எதிர்கால யுத்தம் அணுசக்திக்கானது என்கிறர்கள் அறிஞர்கள்.அமெரிக்கா ஈராக்கில் நடத்தி வரும் போரும் சரி அரபு நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராக அணிதிரள நினைப்பதும் சரி எண்ணெய் அரசியல்தான்.எதிர்காலத்தில் எரிவாய்வுக்கான,அணுசக்திக்கான போர் துவங்கப்பட்டால் அதை துவக்கிவைபது அமெரிக்காவாகத்தான் இருக்கும்.அப்போது இந்தியா யார் பக்கம் இருக்கும்...தன் ராணுவ் சிப்பாய்களை அமெரிக்காவின் பக்கம் நிறுத்துமா? என்பதான கேள்விகளுக்கு பதில்தான் அணுசக்தி ஒப்பந்தத்தில் ஒளிந்திருக்கிறது.

ஓட்டு மொத்த உலகையும் குறிப்பாக தென் ஆசியாவையும் பதட்டத்திற்குள்ளாக்கியிருக்கும் அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக தலைநகர் டில்லியில் நடந்தேறும் நாடகத்தின் க்ளைமாக்ஸை பார்க்க ஆர்வமாக இருக்கிறது பல நாடுகளும்.
உலகெங்கிலும் தன் அடியாட்களை உருவாக்கும் அமெரிக்காவிற்கு ஆசியாவில் அப்படி ஒரு சண்டியர் கிடைக்கவில்லை.புவியியல் ரீதியிலும் அரசியல் ரீதியிலும் அதற்கு தோதாக வந்து அமெரிக்காவிடம் சிக்கிய நாடுதான் இந்தியா.ஆசியாவின் இந்த புதிய அடியாள் மேல் அமெரிக்காவுக்கு திடீர் பாசம்.அதனால்தான் பாசக்கார தம்பியை வளைக்க அணு சக்தி ஒப்பந்த வடிவில் வலை வீசுகிறது அமெரிக்கா.தம்பிக்கு மட்டும் தனிப்பெரும்பான்மை இருந்திருந்தால் இன்று இந்தியா அமெரிக்காவின் ஆசிய அடியாளாக மாறியிருக்கும்.இவளவு தாமதிக்க வேண்டியதில்லை.திமிரும் தம்பியையும் அடக்க முடியாமல் ஆட்சியையும் கலைக்க முடியாமல் தடுமாறுகிறார்கள் இடது சாரிகள்.

அப்படி என்னதான் இருக்கிறது இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில்?
இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டும் என ஏன் அமெரிக்கா நிர்பந்திக்கிறது எனப் பார்த்தால் இடது சாரிகளின் புலம்பலில் உள்ள நியாயம் புரியும்.அணுசக்தி மூலம் இந்தியாவின் எரிவாயு தேவையை பூர்த்தி செய்வதும்.மின்சாரத் தேவையை பூர்த்தி செய்வதும்தான் அமெரிக்காவின் ஆசை.பொதுவாக அணு ஆயுதச் சோதனைகளை நடத்தும் நாடுகளிடம் அமெரிக்காவின் சர்வதேச அணு சக்தி முகமை ஒப்பந்தம் போடச் ªசொல்லி இப்படி நிர்பந்தமாக நடந்து கொள்வதில்லை.1998&ல் வாஜ்பாய் ஆட்சியில் பொக்கரானில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்ட பிறகு இந்தியாவின் மீது பல பொருளாதாரத் தடைகளை கொண்டு வந்தது அமெரிக்கா.ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் அவைகளையும் தளர்த்தி அணு சக்தி ஒப்பந்தத்தில் உள்ள விதிகளையும் தளர்த்தி இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு கொடுத்து அணு சக்தி ஒப்பந்தத்துக்குள் கொண்டு வர நினைக்கிறது அமெரிககா.இத்தனைக்கும் அணு ஆயுத சோதனைச் தடைச் சட்டத்தில் கூட இந்தியா இதுவரை கெயெழுத்திடவில்லை.ஆனாலும் பரவாயில்லை இருக்கவே இருக்கிறது அணு சக்தி ஒப்பந்தம் இந்த ஒன்றில் நீங்கள் கையெழுத்திடுவதே எல்லாவாற்றிர்க்கும் சேர்த்துத்தான் என்கிறது அமரிக்கா.‘‘இந்தியா உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடு.எதிர்காலத்தில் தன் வளர்ச்சிக்கு அது பெட்ரோலிய தேவைகளை மட்டுமே நம்பியிருக்காமல் அணுசக்தியை தன் வளர்ச்சிக்கு உரமாக்கி வளரவேண்டும்.அதிகரித்து வரும் மின்தேவைகளையும் எரிவாய்வு தேவையையும் ஈடு கட்ட இப்போதுள்ள உற்பத்தி இந்தியாவுக்கு போதுமானதாக இல்லை ஆகவேதான் அதன் வளார்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்த அணு சக்தி ஒப்பந்தம்’’என்கிறது அமெரிக்கா.

ஆனால் இடது சாரிகளும் இந்தியா விஞ்ஞானிகளுமோ இது தூரோகத்தனமான ஒப்பந்தம்.ஒட்டு மொத்தமாக நாட்டின் இறையாண்மையை அமெரிக்காவிற்கு அடகு வைக்கிற செயல் இதை அனுமதிக்கவே மாட்டோம் என்று தடை போடுகிறார்கள்.பேச்சு வார்த்தைகள் நீண்டு கொண்டே இருக்கிறது சமரச முயர்ச்சிகள் தோல்வியை தழுவுகிறது.பிரதமர் மன்மோகன்சிங்கோ ‘‘அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாவிட்டால் நான் பதவியை விட்டுப்போகிறேன் நிலமையை நீங்கள் சமாளித்துக் கொள்ளுங்கள்’’ என்கிறார்.இடது சாரிகளோ ‘‘இப்படி ஒரு ஒப்பந்தம் போடுவதற்கு நீங்கள் வீட்டுக்குப் போவதே மேல் நாங்களே உங்களை வழியனுப்பி வைக்கிறோம்’’என்கிறார்கள் ஆக மொத்தத்தில் திண்ணை எப்போது கலியாகும் என பிஜேபி காத்திருக்கிறது.

இன்று உலகை ஆட்டிப்படைக்கும் ஒரு சக்தியாக உருவாகியிருப்பது பெட்ரோல்தான்.அள்ளக் அள்ளக் குறையாத அமுத சுரபியல்ல பெட்ரோல் அது வெகு வேகமாக குறைந்து கொண்டு வருகிறது.இன்று எப்படி பெட்ரோல் சர்வத்தையும் தீர்மனிக்கும் சக்தியாக இருக்கிறதோ அப்படி எதிர்காலத்தில் அணுசக்தி இருக்கும்.அப்படி ஒரு சூழல் ஏற்படும் போது இன்று எப்படி பெட்ரோலுக்காக அரபு நாடுகளை உலக நாடுகள் சார்ந்திருக்கிறதோ அப்படி அணு சக்திக்காக உலக நாடுகள் அமெரிக்காவைச் சார்ந்திருக்க வேண்டும் என அமெரிக்கா நினைக்கிறது.
நினைத்த மாதிரி எல்லாம் இப்போது அமெரிக்காவுக்கு கைகூடி வரவில்லை.ஏற்கனவே 25 நாடுகளுடன் இந்த ஒப்பந்தத்தை செய்து கொண்ட அமெரிக்கா ஆசியாவில் அதற்காக தேர்ந்தெடுத்ததுதான் இந்தியா.ஒப்பந்தம் போடப்பட்ட நாடுகள் பலவும் விழிபிதுங்கி இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறத் துடிப்பது ஒரு பக்கம் இன்னொரு பக்கம் பல எண்ணைய் வழ நாடுகள் டாலரில் இது அவரை செய்து வந்த சர்வதேச வணிகத்தை யூரோவிலும் செய்யத் துவங்கியிருப்பது அமெரிககவுக்கு இன்னொரு பேரிடியாக இறங்கியுள்ளது.டாலரின் மதிப்பு அதல பாதாளம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது.இந்நிலையில்தான் ஆசியாவில் மற்றெல்லா நாடுகளை விடவும் இந்தியாவை அமெரிகக தனது ராணுவ நலன்களுக்கு தோதான நண்பனாக பார்க்கிறது.

அணு சக்தியின் பயனை அறியாத ஒரு நாட்டுக்கு அமெரிக்காவின் இந்த ஒப்பந்தம் பயன்படக்கூடும் எழுபதுகளிலேயே அணு வல்லமையை பெற்றுள்ள இந்தியா எதற்காக அணு சக்தி விஷயத்தில் அமெரிக்காவை சார்ந்திருக்க வேண்டும்.இந்த அணு சகதி ஒப்பந்தம் அமெரிக்காவின் ஹைட் சட்டத்தின் கீழ்தான் செயல்படுத்தப்படும்.ஒரு வேளை இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமானால் இனி மேல் அணு ஆயுதச் சோதனையை நாம் நடத்த முடியாது.அணு ஆயுதம் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்யவோ அமரிக்க கொள்கைக்கு உடன்பாடில்லாத நாடொன்றிலிருந்து இறக்குமதி செய்வதையோ இந்த ஹைட் சட்டம் தடை செய்கிறது.இதை எல்லாம் விட அமெரிககாவின் வெளியுறவு கொள்கைகளே இந்தியாவின் கொள்கையாக மாறிப்போகும் ஆபத்தும் இதில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அணு சக்திக்கு தேவையான மூலப்பொருட்களுக்கு நாம் அமெரிக்காவைச் சார்ந்தே இருக்க வேண்டும்.இதிலெல்லாம் நமது விஞ்ஞானிகள் புதிய புதிய சாதனைகளை எல்லாம் நிகழ்த்தி விட்டார்கள் என்பது ஒட்டு மொத்த உலகுக்கே தெரியும்.ஆனாலும் நாம் மூலப் பொருட்களை அமெரிக்காவிடம் இருந்தே வாங்கிக் கொள்ள வேண்டும்.அணு ஆயுதம் தாயாரிப்பதற்கான மூலக்கூறுகளான யுரேனியம்,புளூட்டோனியம் போன்றவற்றின் கையிறுப்புகளை அமெரிக்காவின் சர்வதேச அணு சக்தி ஏஜென்சி சோதனையிட நாம் அனுமதிக்க வேண்டும்.அந்த சோதனையில் ஏஜென்சிக்கு திருப்தி இல்லாமல் போனால் அமெரிக்காவே நேரடியாக நமது ஆராய்ச்சி மையங்கள்.அணு உலைகளில் புகுந்து ஆராயும்.சோதனைகளை நடத்தும்.

இந்தியாவின் மின் உற்பத்தியில் அணு சக்தி மூலம் இப்போது நாம் பெற்றுக் கொண்டிருப்பது வெறும் 3% மின்சாரம் மட்டும்தான்.மூன்று லட்சம் கோடி ரூபாய் செலவிட்டு அமெரிக்காவிடமிருந்து அணு உலைகளை வாங்கி நிறுவி அவை செயல்படத்துவங்கிய 15 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் பெறப்போகிற மின்சாரம் வெறும் 7 சதவீதம்தான்.அது போல அமெரிக்காவின் வழிகாட்டுதலில் அமையப் போகும் அனல் மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் விலையை நிர்ணயிக்கிற உரிமை இந்தியாவுக்கு கிடையாது அதுவும் அமெரிக்காவுக்குத்தான்.நெய்வேலி அனல் மின் நிலையத்தின் தயாரிக்கப்படும் மின்சாரம் யூனிட் இரண்டரை ரூபாய்க்கு விற்கப்படுகிறது.நீரிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தைப் பொறுத்த வரையில் அரசு தயாரிப்பாக இருந்தால் யூனிட் ஐம்பது காசுக்கும்.தனியாராக இருந்தால் மூன்று ரூபாய்க்கும் விற்கப்படுகிறது காற்றாலைகள் மூலம் தயாரிக்கப்படுகிற மின்சாரத்தில் முழுக்க முழுக்க தனியார்கள் மட்டும்தான்.இம்மாதிரி காற்றாலைகள் அமைக்கும் தனியார் முதலாளிகளுக்கு ஏராளமான வரிச்சலுகைகள் எல்லாம் வழங்கப்பட்டு ஒரு யூனிட் மின்சாரத்தை ஏழு ரூபாய்க்கு வாங்கிக் கொள்கிறது மத்திய அரசு.

நிலக்கரியில்,காற்றில்,நீரில்,சூரிய ஒளியில் என பல வழிகளில் நாம் மின்சாரம் தயாரிப்பதில் உலக நாடுகளுக்கு இணையாக இருந்தாலும் தோரியத்திலிருந்து மின்சாரம் தயாரிக்கும் வித்தையைக் கண்டுபிடித்தார்கள் நம் விஞ்ஞானிகள்.பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநரும், வியன்னாவில் இருக்கிற சர்வதேச அணு சக்தி முகமையின் ஆலோசகருமான அணு விஞ்ஞானி ஏ.என்.பிரசாத் இப்படிச் சொல்கிறார்.‘‘நமது நாட்டில் உள்ள தோரியம் இருப்பைக் கொண்டு ஆண்டொன்றுக்கு 3,50,000 மெகாவாட் மின்சாரத்தை நாம் உற்பத்தி செய்ய முடியும்(தற்போது நாம் ஒரு இலட்சம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறோம்)நமது எதிர்கால எரி சக்தி தேவைக்கு உத்திரவாதம் வழங்க முடியும்.இதை நீண்ட காலத்துக்கு முன்பே நாம் மதிப்பிட்டுள்ளோம்.தோரியத்தை அடிப்படையாகக் கொண்ட 500 மெகாவாட் அதிவேக ஈனுலையின் முன்னேற்றத்தைக் கண்டு பல வளர்ந்த நாடுகள் புழுங்கிக் கொண்டிருக்கின்றன.இது நமது விஞ்ஞானிகளின் நாற்பதாண்டுகால உழைப்பு இது அமெரிக்காவிற்கும் தெரியும்.தோரியத்தை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் நமது திட்டத்துக்கு முட்டுக் கட்டை போடுவதுதான் அமரிக்காவின் நோக்கம் என்பது வெளிப்படையாக தெரியவில்லையா? எனக் கேள்வி எழுப்பியிருந்தார் ஏ.என்.பிரசாத்.
தோரியம் வளத்தில் உலக அளவில் எண்பது சதவீதம் தோரியம் இந்தியாவில் இருக்கிறது.அதிலும் பெருமளவில் தோரியம் கிடைப்பது தமிழகத்திலும் கேரள கரையோரங்களிலும்தான்.தோரியத்திலிருந்து எரிசக்தி,மின்சாரம் தயாரிக்கும் திறமை நமக்கிருந்தும் நம்மிடம் இருக்கும் தோரியத்தை விட்டு விட்டு அமெரிக்காவிடம் இருந்து அணு மின்சாரம் வாங்குவதிலெயே ஆர்வம் காட்டுகிறோம்.என்று கவலை கொள்கிறார்கள் விஞ்ஞானிகள்.

உலகின் அனைத்து நாடுகளுக்கும் ஒரு தொழில் இருக்கிறது.ஆசியாவிற்கு பிரதான தொழிலாக விவசாயமும் விஞ்ஞானமும் மத்திய கிழக்கிற்கு பெட்ரோல் இருப்பது போல லத்தீன் அமெரிக்காவுக்கு விவசாயமும் கூட்டுப் பண்ணை சாகுபடியும் இருப்பது போல அமெரிக்காவிற்கு என்ன இருக்கிறது என்றால் அதர்கான ஒற்றைப்பதில் ஆயுதங்கள்தான்..உலக அளவில் ஆயுதங்களை விற்பனை செயவதன் மூலமே தன் பொருளாதாரத்தை நிலை நிறுத்திக் கொள்கிறது அமெரிக்கா.உலகத்தில் எங்குமே போர் பதட்டமோ யுத்தமோ ஏற்படாவிட்டால் ஆயுதங்களுக்கு என்ன தேவை.அதனாலதான் உலகை நிரந்தரமான பத்தட்டத்தில் வைத்திருக்கிறது அமெரிக்கா.
ஈராக்கில் சதாம்ஹ§சைன் பேரழிவு ஆயுதங்கள் வைத்திருக்கிறார் என்றுதான் ஐநா சபையின் அனுமதி இல்லாமலேயே ஈராக்கின் மேல் படை எடுத்தது அமெரிக்கா.சதாமை தூக்கிலிட்டு ஈராக்கில் நிரந்தரமாக தன் படைகளை நிறுத்தி வைத்திருக்கிறது அமெரிக்கா.ஆனாலும் ஈராக் விஷயத்தில் நினைத்த மாதிரி காரியங்களை சாதித்துக் கொள்ள முடியவில்லை.ஏராளமான அமெரிக்க ராணுவ சிப்பாய்களின் உயிரிழப்பு ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் ஈராக்கில் அமெரிக்க படைகளுக்கு எதிரான தற்கொலை படைத்தாக்குதல்கள் தீவீரமடைந்து வருகிறது. ஈராக் இன்று இன்னொரு வியட்நாமாக அமெரிககவை பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது.இன்று வரை ஒரு பேரழிவு ஆயுதங்கள் கூட ஈராக்கில் இருந்து கண்டு பிடிக்கப்படவில்லை.மாறாக ஆப்கானிலும் ஈராக்கிலும் போருக்கு பயன் பட்டது அமெரிக்காவின் ஆயுதங்கள்.இரு நாடுகளையும் ஒரு ஆயுதப் பரிசோதனைக் கூடமாக மாற்றிக் கொண்டது அமெரிக்கா.இப்போது இதே பேரழிவு ஆயுத பூதத்தைத்தான் ஈரான் மீதும் வட கொரியா,வெனின்சூலா மீதும் சுமத்துகிறது அமெரிக்கா.ஒரு வேளை அணுசக்தி ஒப்பந்தத்தின் மீது நாம் கையப்பம் இடாமல் போனால் இதே பேரழிவு பூதம் இந்தியாவையும் மிரட்டலாம்.

அமெரிக்காவுக்கு எதிராக உலகின் பல நாடுகள் அணி சேர்ந்து வருகிறது.அமெரிக்காவுக்கு எதிரான வலுவான கூட்டமைப்பு ஒன்றை கட்டுவதில் ஆசியாவில் சீனாவும்,மத்திய கிழக்கில் ஈரானும்,லத்தீன் அமெரிக்காவில் க்யூபாவும்,வெனின்சூலாவும் கட்டமைக்கிறது.நேரு உருவாக்கிக் கொடுத்த அண்சேரா கொள்கையை கொண்டு நடு நிலை வகிக்க வேண்டிய இந்தியாவோ அமெரிககவின் பக்கம் சாய ஆசியாவில் இந்தியா தனிமைப்படுத்தப்படும் அபாயம் எழுதுள்ளது.அமெரிக்கா எதிர்பார்த்ததும் இதைத்தான்.பெயரளவிற்கு மட்டுமே கம்யூனிசத்தை வைத்து முதலாளித்துவ நாடாக வளர்ந்து வரும் சீனாவின் பொருட்கள் அமெரிக்க சந்தைகளை ஆட்டம் காண வைக்கிறது.புதிய சாவாலாக எழும் சீனாவை அடக்கி வைக்க ஆசியாவில் இந்தியாவை உருவாக்குகிறது.இந்த நிலையில்தான்

ஈரானுடம் நாம் 2,000 கோடி டாலர் முதலீட்டில் பைப் லைன் மூலம் எரிவாய்வு கொண்டு வரும் ஒப்பந்தம் ஒன்று போடபட்டது பைப் லைனை பாகிஸ்தான் வழியாக கொண்டு வருவதற்கு பாகிஸ்தானும் சம்மதித்து விட்டது.ஆனாலும் இந்த திட்டம் நிறைவேற வில்லை.காரணம் அமெரிக்கா.1994& ஆம் ஆண்டு காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச மன்றத்துக்கு கொண்டு போகும் முயர்ச்சியை பாகிஸ்தான் எடுத்தது அப்போது இந்தியாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட அந்த சர்வதேச கவன ஈர்ப்பை முளையிலேயே கிள்ளி எரிந்தது ஈரான்.அந்த முயர்ச்சியே பாகிஸ்தான் அரசால் கைவிடப்பட்டது.அதற்கு பரிகாரமாக இந்தியா இரண்டு முறை ஈரானுக்கு எதிராக சர்வதேச அணு சகதி முகமையில் வாக்களித்தது.அமெரிக்காவின் நிர்பந்தத்தின் பேரில் ஈரானுக்கு எதிராக வாக்களிக்க இந்தியாவுக்கு கொடுத்த நெருக்கடிக்கு அமெரிக்கா வைத்த பெயர் " கிசிமிஞி ஜிணிஷிஜி" .நேரு உருவாக்கிக் கொடுத்த அணிசேரா கொள்கையை இந்தியா கைவிட்டு விட்டு அமெரிக்க ஆதரவு கொள்கையை பின்பற்றுவதைத்தான் பிரதமர் துணிச்சலான தத்துவ மாற்றம் என்கிறார்.


அமெரிக்காவில் ஒரு ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டுமானால் செனட் சபையைக் கூட்டி பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றால் மட்டுமே அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியும். ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை.அமைச்சரவையின் ஒப்புதல் இருந்தாலே போதுமானது.1994&ஆம் ஆண்டு காட் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டதும் அமைச்சரவை ஓப்புதலின் பேரில்தான்.மக்களுக்கு பயன் படும் பல மசோதாக்களை பாராளுமன்ற ஒப்புதல் இருந்தால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்று வைத்து விட்டு இம்மாதிரி நாட்டின் அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்களை மட்டும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமலேயே ரகசியமாக செய்து விட முடியும் என்பது எவளவு வேடிக்கையானது.இடது சாரிகள் நாளை ஒரு வேளை அரசியல் ரீதியிலாக செல்வாக்கிழந்து போனால் இந்த ஒப்பந்தங்களை கேள்வி எதுவும் இல்லாமல் நிறைவேற்றி விட முடியும் என்பது எவளவு வேதனையானது.அதனால் இப்போது இம்மாதிரி ஒப்பந்தங்களை நிறைவேற்றவும் பாராளுமன்ற ஒப்புதல் பெற வேண்ணும் படி அரசியல் சாசனத்தை திருத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழத் துவங்கியிருக்கிறது.

அணு சக்தி ஒப்பந்தம் தேவை என்றால் அதற்கு ஒரு காரணம்தான் அது இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி தொடர்பானது.ஆனால் இந்த ஒப்பந்தம் வேண்டாம் என்று சொல்ல கடந்த கால அனுபவங்களில் இருந்து எத்தனையோ உதாரணஙளைச் சொல்ல முடியும்.உலகில் மற்றெல்லா பகுதிகளைக் காட்டிலும் அமைதியாக வாழச் சூழலுள்ள ஒரு நாட்காவே இந்தியா இது வரை இருந்து வருகிறது.நாளை இந்த நாடு பயங்கரவாத ஆபத்து உள்ள நாடாக மாற்றப்பட்டு விடக்கூடாது என்பதே நம் அனைவரின் கவலையும்.