பெண் போலீசும் கட்டப் பஞ்சாயத்துக்களும்‘‘வயதானவர்களையும்,கைக்குழந்தையுடன் வரும் பெண்களையும்,சிறுவர்களையும்,கர்ப்பிணிப் பெண்களையும்,அவர்களது வயது,உடல் நலம்,என எந்த வித்தியாசமும் பார்க்காமல் விசாரணை என்ற பெயரில் கொடுமைப் படுத்துவதாகவும்,தாக்குவதாகவும்,அவசியமே இல்லாமல் கைது நடவடிக்கைகளில் இறங்குவதன் மூலம் குடும்ப வன்முறைச் சட்டம்,வரதட்சணை கொடுமை சட்டம் போன்ற சட்டங்கள் கொண்டு வந்ததன் நோக்கமே பாதிக்கப்பட்டு விட்டது.கணவன் மனைவி பிரச்சனைகளை போலீஸ் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.அதனால் அவர்கள் மீண்டும் ஒன்று சேர வழி பிறக்கும் இத்தகைய வழக்குகளை பெண் போலீசார்தான் திறமையாக கையாள்வர் என்று கருதியதால்தான் தமிழகம் முழுக்க மகளிர் காவல் நிலையங்கள் துவங்கப்பட்டன.இந்த மகளிர் காவல் நிலையங்கள் எல்லாம் கணவன் மனைவி ஒன்று சேர்வதற்கான சமரச மையங்களாக இருக்கும் என்று ஒவ்வொருவரும் எதிர் பார்த்தனர்.ஆனால் நடைமுறை அனுபவத்தைப் பார்த்தால் சிறிய சிறிய பிரசனைகளுக்குக்கூட பெரிய அளவிலான குற்றம் என்ற வர்ணம் பூசப்படுகிறது.கணவனுக்கும் அவர் குடும்பத்துக்கும் எதிராக குற்றச்சாட்டுகளை கூறுமாறு பெண்கள் உற்சாகப்படுத்தப் படுகின்றனர்.இதனால் வரதட்சணைத் தடுப்புச் சட்டத்தின் நோக்கமே பாழடிக்கப்படுகிறது’’
தமிழக மகளிர் காவல் நிலையங்களில் நடக்கும் அத்து மீரலுக்கு எதிராக கொட்டப்பட்ட இந்த வார்த்தைகள் மனித உரிமை அமைப்பினுடையதோ அல்லது சமூகப்பணியாளர்களின் வார்த்தைகளோ அல்ல...முன் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி ரோசைய்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் சிந்தாதிரிப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் கையே உடைந்து போகும் அளவுக்கு அடித்ததாக குறிப்பிட அதை விசாரித்த நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவுத் தீர்ப்பில் சொன்ன வார்த்தைகள்தான் மேற்கண்டவை.

மகளிர் காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது,சாதாரண குடும்ப பிரச்சனைகளில் காவல் நிலையங்களுக்கு செல்வோரை அடித்து துன்புறுத்தி இரண்டு பக்கமும் வசூலைப் போடுபவர்களாக உருமாறி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் தொடர்ந்து மகளிர் காவல் நிலையங்கள் மீது உயர் நீதிமன்றம் கணடனக் கணைகளை தொடுத்த படியிருக்கிறது.
150 ஆண்டுகால வரலாறுள்ள தமிழக காவல்துறையில் பெண் போலீஸ் சேர்த்துக் கொள்ளப்பட்டது 1973&ல் இப்படிச் சேர்த்துக் கொள்ளப்பட்ட பெண் போலீசார் ஆண் காவலர்கள் பணிபுரியும் காவல் நிலையங்களிலேயே பணியாற்றினர்.இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் ‘‘பெண்கள் தொடர்பான வழக்குகளில் போலீசாரின் அணுகுமுறை மாற வேண்டும்’’என்ற நோக்கில் 1992&ல் சென்னையில் முதன் முதலாக துவக்கி வைக்கப்பட்டது மகளிர் காவல் நிலையம்.இந்தியாவிலேயே முதன் முறையாக என்றெல்லாம் பெருமையாக பேசப்பட்ட மகளிர் காவல் நிலையங்களின் எண்ணிக்கை இன்று இருநூறைத் தொடுகிறது.ஆனால் தமிழகம் முழுக்க ஆண் காவலர்களுக்கு நாங்களும் சற்றும் சளைத்தவர்களல்ல என்பதை பல வழக்குகளிலும் நீரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் மகளிர் காவலர்கள்.

சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர்கள் சதீஷ்குமார்,சியாமளா தம்பதிகள் ஐந்து வயது பெண் குழந்தைக்கு பெற்றோர்களான சதீஷ-க்கும் சியாமளாவுக்கும் குடும்ப வாழ்வில் மனஸ்தாபம்.‘‘சதீஷ§க்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு,வரதட்சணை கேட்டு துன்புறுத்துகிறார்’’என்று அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் சியாமளா.சதீஷ் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடப்பட்டு தினமும் அண்ணாநகர் காவல் நிலையத்தில் கையெழுத்து இட்டு வந்தார் .இந்நிலையில்தான் அண்ணாநகர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணி புரியும் ராஜலட்சுமி சியாமளாவை பிரித்து வைப்பதாக சதீஷிடமும் சதீஷை சேர்த்து வைப்பதாக சியமாளாவிடமும் பேரம் பேசி கடைசியில் சியாமளா பத்தாயிரம் ரூபாய் தருவதாக ஒப்புக் கொண்டதோடு லஞ்ச ஒழிப்பு போலீசாரிடமும் முறையிட இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இது ஒரு சாம்பிள் சம்பவம்தான்....தமிழகம் முழுக்க குடும்ப பிரச்சனைகளை கையாளும் விதத்தில் பெண் போலீசாரும் ஆண் போலீசைப் போலவே தடித்தனமாக நடந்து கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு தமிழகம் முழுக்க ஒலிக்கிறது.போலீசின் தொல்லைகளுக்கு ஆளாகும் பல குடும்ப ஆண்களும் பெண்களும் பயந்து போய் இதை வெளியில் சொல்லப் பயப்படுவதோடு போலீசார் கேட்கும் தொகையையும் கொடுத்து விட்டு வசூலுக்கு துணையாக ஆண்களுக்கு எதிரான வாக்குமூலங்களையும் கொடுக்கிறார்கள்.

பொதுவாக,கணவர் என்னை ஏமாற்றுகிறார் வேறு பெண்ணோடு தொடர்பு வைத்திருக்கிறார்.மாமனார் மாமியாரோடு சேர்ந்து கொண்டு தனிக்குடித்தனம் வர மறுக்கிறார்.இப்படி குடும்பத்துக்குள் எழும் நடைமுறை சிக்கல்களைத் தீர்த்து வைக்க வேண்டும் என மகளிர் காவல் நிலையங்களுக்கு பெண்கள் சென்றால் உடனே வரதட்சணை கொடுமை சட்டத்தின் படியே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது.இந்த வறையறைக்குள் இப்போது வந்திருப்பது குடும்ப வன்முறைச் சட்டம்.உண்மையில் குடும்பத்தில் நடக்கும் வன் கொடுமைகளை சந்திக்கும் பெண்களில் பெரும்பாலானோர் வெளியில் வருவதில்லை.அவர்கள் தங்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளுக்கு நீதி வேண்டி காவல் நிலையங்களுக்கும் செல்வதில்லை.


குடும்பங்களில் கணவன் மீதோ மாமனார் மாமியார் மீதோ ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டி அதாவது பிரச்சனையை சுமூகமாக தீர்க்க மகளிர் காவல் நிலையங்களை அணுகினால் கூட அதை தீர்த்து வைக்கும் சமரச மையங்களாக மகளிர் காவல் நிலையங்கள் செயல்படுவதில்லை.எடுத்த எடுப்பிலேயே வரதட்சணை வழக்காக அதை பதிவு செய்யும் படி அறிவுறுத்தி அதன் மூலம் கணவன் குடும்பத்தை மிரட்டி பணிய வைக்கும் ஒரு தவறான போக்கை பெண் போலீசார் கையாளுகின்றனர்.மகளிர் காவல் நிலையத்துக்குப் போன சியாமளா கூட தன் கணவரை தன்னுடன் இணைத்து வைக்க வேண்டும் என்று போனவர்தான்.ஆனால் இவரிடம் இணைத்து வைப்பதாகவும் சதீஷிடம் பிரித்து வைப்பதாகவும் வசூலைப் போட்டது போலதான் பெரும்பாலான வழக்குகளில் நடவடிக்கை உள்ளதாகச் சொல்லப்படுகிறது.தனிக்குடித்தனப் பிரச்சனை இன்னும் மோசம் கணவனின் உடன் பிறந்த சகோதரிகள் அவர்கள் வேறு எங்காவது வசித்தால் கூட அவர்களையும் தொலைபேசியில் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக சேர்த்து விடுகிறது பெண் போலீஸ்.இப்படி ஒரு முறை கணவனுடன் தனிக்குடித்தனம் நடத்த விரும்பிய ஒரு பெண் வழக்கறிஞரின் அறிவுரைப்படி மாமனார் மாமியார் கணவனை தனிக்குடித்தனம் செல்ல விடாமல் தடுப்பதாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சொன்னார்.அந்தப் பெண்ணும் அப்படியே கொடுத்தார்.போலீசார் நம்மை விசாரிக்க வருகிறார்கள் என்பதை அறிந்த மாமனாரும் மாமியாடும் வீட்டிலேயே தூக்கு மாட்டிக் தற்கொலை செய்து கொண்ட கொடுமையும் நடந்திருக்கிறது.

சமீப காலத்தில் குடும்ப வன்முறைச் சட்டத்தை தவறாக கணவனுக்கு எதிராக மாற்றும் போக்கு அதிகரித்து வருவதை உச்ச நீதிமன்றமே கண்டித்திருக்கிறது.விருப்பமில்லாத இருவரை கட்டாயமாக திருமணம் செய்து வைப்பதும்.சின்ன பிரச்சனைகளோடு காவல் நிலையம் செல்பவர்களை நிரந்தரமாக பிரித்து வைப்பதற்கும் பல இடங்களில் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. தீர்க்கமாக சொல்லப்படுகிற பொய்கள் நியாயங்களாக மாற்றப்படுவதும்.ஒரு சாராரின் கருத்தே எடுபடாமல் போவதும் அதன் மூலம் பாதிக்கப்படுகிற ஆண்களுக்கு எவ்வித தீர்வும் கிடைக்காமல் போவதும் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது.

இன்னொரு பக்கம் பழைய தாலி செண்டிமெண்டுகளையும் கெடுத்தவனுக்கே பெண்ணை திருமணம் செய்து வைக்கும் கொடுமையான பழமரபிலும்தான் நம் கலாசாரம் கட்டமைக்கப் பட்டிருக்கிறது.அதற்கு போலீசாரும் விதிவிலக்கல்ல.பாதிக்கப்படும் பெண்களுக்கு நியாயமான தீர்வுகளைக் கொடுக்கும் அதே நேரத்தில் பெண்களின் குற்றச்சாட்டு உண்மையா?அல்லது பொய்யா என்பதை விசாரிக்கிற கடமையும் போலீசுக்கு உண்டு.

குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் கணவன் மீதான குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்துக்குப் போன பெண்ணின் தீர்ப்பை முன்னிட்டு கேரள கோர்ட் சொன்ன தீர்ப்பின் சாரம் தமிழகத்துக்கும் ஏன் ஒட்டு மொத்த இந்தியாவுக்குமே பொறுந்தும்.

‘‘குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ கொடுக்கப்பட்ட புகார் போலியானது என்பதை கோர்ட் ஏற்றுக் கொள்கிறது.தனது முறை தவறிய உறவை மறைப்பதற்காக மனைவி இது போல் செய்திருக்கிறார்.குடும்ப வன்முறைச் சட்டத்தால் கணவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.கணவர் மீது போலிப் புகார் கொடுக்கப்படுகிறது.இந்தப் போக்கினால் இந்தச் சட்டமே கேலிக்கூத்தாகி விடுகிறது.இந்த வழக்கில் கணவர்தான் பாதிக்கப்பட்டுள்ளார் ஆனால் அவருக்கு உரிய நிவாரணம் வழங்க சட்டத்தில் இடமில்லை.ஆகவே குடும்ப வன்முறை சட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் பெண்கள் மீதும் நடவடிக்கை எடுக்க சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும்’’என்று தன் தீர்ப்பில் கூறினார் நீதிபது.

குடும்பம் என்கிற நிறுவனத்தில் சிதைக்கப்படும் பெண்வாழ்வின் வேதனைகள் களையப்பட வேண்டும் என்றுதான் பெண்களுக்கு ஆதரவான சட்டங்கள் கொண்டு வரப்பட்டு கரிசனமான விசாரணையும் பாரபட்சமில்லாமல் நீதியும் கிடைக்கும் என்றுதான் மகளிர் காவல் நிலையங்கள் கொண்டு வரப்பட்டது.காவல்துறையில் அதுவரை ஆண்களை மட்டுமே பார்த்துப் பழகிப்போன பொது சனங்களுக்கு பெண் போலீசாரை பார்த்த போது நம்பிக்கை துளிர் விட்டது.ஆனால் வழக்குகளை விசாரிக்கிற விதத்திலும் காவல் நிலைய அணுகுமுறைகளிலும் ஆண் போலீசுக்கும் பெண் போலீசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பது இப்போது நீரூபிக்கப்பட்டிருக்கிறது.உண்மையில் மகளிர் காவல் நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டதன் உண்மைத் தத்துவங்கள் இனி வரும் காலத்திலாவது நடைமுறையாக வேண்டும் என்பதே அனைவரின் ஆசையும்.

4 comments:

Unknown said...

thanks for posting this blog ..

reg vivek.j

சீமாச்சு.. said...

நல்ல பதிவு. எல்லோரும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு..

Voice on Wings said...
This comment has been removed by the author.
காலம் said...

வளையல் அணிந்த கரத்தின்
விரல்களிலும் அதிகாரம் சொட்டும் என்பது ஆச்சரியப்படக்கூடியது அல்லவே எழில்
அதிகாரம் எல்லாவற்றையும் தாண்டி ஓடிக்கொண்டே இருக்கும் அதன் பாதையில்
குழந்தைகளின் பொம்மைகளும் நொறுங்கும்