சட்டம் ஒழுங்கு பிரச்சனை அல்ல.....சமூகப் பிரச்சனை...



கன்னியாகுமரியில் தொடங்கி சென்னை வரை வாழும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ரௌடிகள் கலங்கிப் போய் கிடக்கிறார்கள்.எந்த நேரத்தில் யார் மீது இடி விழுமோ என்ற பயத்தில் பாதிபேர் ஊரை காலி செய்திருக்கிறார்கள்.விடாது துரத்தும் போலீஸ்.எப்படியாது தப்பிப் பிழைத்தால் போதும் என உயிர் வாழ்தலுக்கான ஓட்டம் என ஒரு க்ரைம் ரிலே ரேஸ் போலீசுக்கும் ரௌடிகளுக்குமாக நடந்து கொண்டிருக்கிறது தமிழகத்தில்.முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தொடர் ரௌடி வேட்டையால் தமிழகமே அதிர்ந்திருக்கிறது.
"சில வழக்கறிஞர்கள்,காவல்துறையினர் அரசியல்வாதிகள் இவர்களின் அனுசரணையோ ஆதரவோ இல்லாமல் ரௌடிக் குழுக்களால் இயங்கவே முடியாது.பல நேரங்களில் ரௌடிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு அலோசனை வழங்கும் சேவையை சில வழக்கறிஞர்களும் காவல்துறை அதிகாரிகளும் செய்திருக்கிறார்கள்"
இப்படிச் சொன்னது என்கவுண்டர்களுக்கு எதிராக செயல் படும் மனித உரிமை அமைப்பினரோ என்கவுண்டர்களால் பாதிக்கப்பட்ட யாரோ ஒருவர் சொன்ன வரிகளில்லை.தனது டாக்டர் பட்ட ஆய்வுக்காக "Organized Crime" என்கிற தலைப்பில் ஐ.பி.எஸ் அதிகாரியான காந்திராஜன் சமர்ப்பித்த ஆய்வில் உள்ள வரிகளின் தொனிதான் இது.

ஆனால் இப்போது போலீஸ் ரௌடிகள் மொதல் புதிய சாவாலக உருவாகியிருக்கிறது தமிழகத்தில்.கடந்த பத்தாண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 66-பேர் போலீஸ் மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.நகசல்பாரிகள்,தமிழ்த் தேசிய போராளிகள்,ரௌடிகள் என இந்த மோதல் கொலைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.இப்போது கடைசியாக பாம் பாலாஜி கொல்லப்பட பல நூறு ரௌடிகள் தமிழகத்தை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்.அண்டை மாநிலங்களுக்குப் போனாலும் உயிருக்கு உத்திரவாத மில்லை என பதறிப் போய் இருக்கிறார்கள் அந்த ரௌடிகளை நம்பி வாழும் குடும்பத்தினர்.
என்கவுண்டர் எனப்படும் மோதல் கொலைகள் இந்தியாவுக்கு அறிமுகமானது அறுபதுகளில்தான் மேற்குவங்கத்தில் வேர் விட்டுக் கிளம்பிய நக்சல்பாரிகளை வேட்டையாட என்கவுண்டரை ஒரு கருவியாக பயன் படுத்தியது காவல்துறை.மேற்குவங்கம்,ஆந்திரம்,கேரளம் பின்னர் தமிழகம் என என்கவுண்டர் கொலைகள் பரந்து விரிந்திருந்தது.அதிரடியாக கிராமங்களைத் தாக்கி கொள்ளையிடும் சம்பல் பள்ளத்தாக்கின் கொள்ளையர்களையும்,காஷ்மீரில் தீவீரவாத பாதையில் காலடி வைக்கும் இளைஞர்களையும்,பஞ்சாபில் காலிஸ்தான் தீவீரவாதிகளை வேட்டையாடவும் என்கவுண்டரை போலீஸ் ஒரு கருவியாக பயன் படுத்திக் கொண்டது.


எழுபதுகளில் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் நெருக்கடி நிலை கொண்டு வரப்பட்ட போது நாடு முழுக்க கட்டவிழ்த்து விடப்பட்ட போலீஸ் வன்முறை வெறியில் பலியான உயிர்களும் உண்டு.தமிழகத்தைப் பொறுத்த வரையில் நெருக்கடி நிலையை எதிர்த்த காரணத்தால் திமுக தலைவர் கலைஞரின் குடும்பமும் கட்சியும் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளானதும்.சென்னை சிட்டிபாபுவும் சாத்தூர் பாலகிருஷ்ணனும் சிறைக்குள்ளேயே அடித்துக் கொலை செய்யப்பட்டது.சோகமான கருப்பு என்கவுண்டர் வரலாறுதான்.1975&ல் நெருக்கடி நிலை காலத்தில் திமுக தன் ஆட்சியையே இழந்தது.ஆனால் ஐந்தாவது முறையாக பதவியேற்றிருக்கும் கலைஞரின் ஆட்சியில் இந்த இரண்டாண்டு காலத்தில் தமிழகம் முழுக்க என்கவுண்டரில் கிட்டத்தட்ட 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

உலகமயச் சூழலில் வெடித்தெழும் மக்கள் போராட்டங்களை ஒடுக்க அரசும் போலீசும் கையாளும் ஒரு வழிமுறைதான் இத்தகைய என்கவுண்டர்கள்.சத்தீஸ்கர் மாதிரியான மாநிலங்களில் அரசே "சல்வார்ஜுடூம்"மாதிரியான குண்டர் படையை உருவாக்கி அரசுக்கு விரோதமாக போராடுபவ்ர்களை அழித்தொழிக்கும் பொறுப்பை இம்மாதிரி அடியாள் படைகளுக்கு வழங்கிவிடுகிறது.ஆனால் தமிழகத்தில் அம்மாதிரி சூழல் இல்லை எல்லா காலத்திலும் நகச்ல்பாரிகளை வேட்டையாடவும் அடங்க மறுக்கும் ரௌடிகளை மட்டுமே வேட்டையாடவும் என்கவுண்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.ஆனால் இந்த நீண்ட கொலைகளுக்கு பிறகும் ஒரு ரௌடி உருவாகி வருவதையோ தீவிர சோஷலிச எண்ணமுள்ள இளைஞர் ஒருவர் ஆயுதம் தூக்குவதையோ அரசாலோ போலீசாலோ தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதுதான் உண்மை.இந்த காவல்துறை ரௌடிகள் மோதல் தொடரத் தொடர இன்னொரு பக்கம் சேரிகளில் இருந்தும் கூவம் நதியின் கரையோரங்களில் இருந்தும் ரௌடிகள் உருவாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள்,என்றாவது ஒரு நாள் நாம் போலீசால் வேட்டையாடப் படுவோம் என்பது தெரிந்திருந்தும் அவர்கள் புதிய ரௌடிகளாக உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.
பொதுவாக இன்று நடந்து கொண்டிருக்கும் என்கவுண்டர்கள் தொடர்பாக இரண்டு கேள்விகள் மக்கள் மனதில் தோன்றுகிறது.

ஒன்று இம்மாதிரி கொலைகளை செய்யும் அதிகாரம் சட்டபூர்வமாக போலீசுக்கு வழங்கப்பட்டிருக்கிறதா?

போலீஸ் மோதலின் போது நிகழும் இம்மாதிரி கொலைகளை சட்டம் அனுமதிக்கிறதா?எனக் கேட்டால் தற்காப்புக்காக போலீசார் இம்மாதிரி கொலைகளை செய்யலாம் என்கிறது இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 46&வது பிரிவு.மரணதண்டனையோ ஆயுள் தண்டனையோ பெறக் கூடிய அளவுக்கு குற்றம் புரிந்த ஒரு நபரைக் கைது செய்ய முயலும் போது தற்காப்புக்காக தேவைப்பட்டால் குற்றவாளி என கருதும் நபருக்கு மரணத்தை விளைவித்தால் கூட குற்றமில்லை என்கிறது.ஆனால் சட்டம் எப்படி காவலர்களுக்கு சட்டப் பாதுகாப்பை வழங்கியிருக்கிறதோ அதே பாதுகாப்பை குற்றவாளிகளுக்கும் வழங்கியிருக்கிறது.என்கவுண்டரில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டால் அந்தக் கொலையில் தொடர்புடைய காவலர் அல்லது அதிகாரி மீது இந்திய தண்டனைச் சட்டம் 307&வது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட வேண்டும்.
அந்த அதிகாரி சான்றுச் சட்டத்தின் கீழ் தான் செய்த கொலையானது தற்காப்பின் நிமித்தமே நிகழ்த்தப்பட்டது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.இம்மாதிரி மோதல் சாவுகளை நிகழ்த்தும் காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகளோ அன்பளிப்பு பரிசுகளோ கொடுத்து ஊக்குவிக்கக் கூடாது என தேசீய மனித உரிமைகள் ஆணையம் அனைத்து மாநில அரசுகளுக்கும் வழிகாட்டும் நெறிமுறைகளையும் வழங்கியுள்ளது.

ஆனால் இம்மாதிரி வாழ்வுரிமை ரீதியிலான வழிகாட்டுதலகள் எதையும் என்கவுண்டரின் போதும் அதற்குப் பின்னரும் காவல்துறை பின்பற்றுவதில்லை என்பதுதான் குற்றச்சாட்டு.என்கவுண்டரின் தொட்டில் என்றால் அது மும்பை நகரம்தான்.அதற்கு கொஞ்சம் சளைத்ததாக இருந்தாலும் டில்லி நகரிலும் என்கவுண்டர்களுக்கு பஞ்சமில்லை.சமீபத்தில் டில்லியில் இரு வியாபாரிகளை தீவீரவாதிகள் எனச் சொல்லி சுட்டுக் கொன்ற காவல் உதவி ஆணையர் ரதி உட்பட பத்து போலீசாருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.பல மாநிலங்களிலும் சில காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள்.மும்பை நகரத்தின் காவலதிகாரியாக இருந்த பிரதீப் வர்மாவுக்கு காவல் வட்டாரத்திலும் ரௌடிகள் மத்தியிலும் வைக்கப்பட்ட செல்லப் பெயர் ‘அப்தக் 100’அதாவது நூறு என்கவுண்டர் செய்தார் என்பதால் அப்படி செல்லப் பெயர் வந்ததாம்.பிரதீப் வர்மாவின் காவல் வாழ்வை சித்தரித்து எடுக்கப்பட்டதுதான் நானாபடேகரின் ‘அப்தக் 56’ இந்தப் படத்தில் நடித்த நானா படேகருக்கு பிரதீப் வர்மா எபபடி என்கவுண்டர் செய்வது,நடந்த மோதலை எப்படி தந்திரமாக கையாள்வது என்றெல்லாம் வகுப்பெடுத்தாராம்.அப்பேர்ப்பட்ட பிரதீப் வர்மாவின் வாரிசுதான் தயாநாயக் இவர் செய்த என்கவுண்டர்களோ 83.மாதம் எட்டாயிரம் ரூபாய் ஊதியம் வாங்கும் தயாநாயக்கின் சொத்து மதிப்போ நூறு கோடி.ரௌடிக் கும்பலிடம் பணம் வாங்கிக் கொண்டு எதிர் கோஷ்டிகளை அழித்தொழிப்பதுதான் இருவரின் வேலையும் இன்று இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

2007-ல் தெஹல்கா இதழ் இந்தியா முழுக்க உள்ள என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் காவல்துறை அதிகாரிகளின் பட்டியலை வெளியிட்டிருந்தது.அதில் தமிழக காவல்துறை அதிகாரிகளின் பெயர் எதுவும் இல்லை.ஆனாலும் பெயர் சொல்லக் கூடிய என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டுகள் தமிழக காவல்துறையிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.சட்ட ரீதியாக இவர்கள் தாங்கள் செய்த மோதல் கொலைகளை நீதிமன்றத்தில் சட்டப்படி நீரூபித்திருக்க வேண்டும்.தேசீய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதல்களோ உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களோ தமிழகத்தில் பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை.
சமூகத்துக்கு ஒரு ரௌடி இடையூராக இருக்கிறார் என்று தெரிந்தால் அவரை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிப்பதுதான் நீதிமன்ற ஜனநாயகம்.உண்மையில் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன் படுத்தி ஒரு குற்றவாளி தப்பிவிடுகிறார் என்றால் ஒன்று காவல்துறையின் புலனாய்வு நியாயமாக இல்லை அல்லது காவல்துறையை விட குற்றவாளிகள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.

சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட வெள்ளைரவி மீதான வழக்குகளை விசாரிக்க தனிநீதிமன்றம் அமைக்கச் சொல்லி 1999&ல் உத்தரவிட்டது அரசு.அப்போது அவரது மீதிருந்த வழக்குகளின் எண்ணிக்கை 24.ஆனால் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டதோ 2003&ல் அதற்குள் பல வழக்குகளில் இருந்து நிரபராதி என விடுதலை ஆனார் வெள்ளைரவி.மேலும் பல வழக்குகள் அவர் மீது போடப்பட்டது.கடைசியில் எந்த ஒரு வழக்கிலும் தண்டிக்காப்படாமல் போலீஸ் மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மணல் மேடு சங்கரின் கதையோ வித்தியாசமானது.அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் போதே தான் என்கவுண்டர் செய்யப்படுவோம் என பயந்தார்.அவரது தாய் மனித உரிமை அமைப்புகளிடம் போய் முறையிட்டார் மனித உரிமை அமைப்பினர் நீதிமன்றம் சென்றனர்.மணல் மேடு சங்கரின் தாய் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.நீதிமன்றம் தமிழக அரசிடம் இது குறித்து விளக்கம் கேட்ட போது அப்படி மணல் மேடு சங்கரைக் கொல்லும் திட்டம் எதுவும் தமிழக காவல்துறைக்கு இல்லை என நீதிமன்றத்தில் சொன்னது அரசு ஆனால் அடுத்த சில வாரங்களிலேயே நீதிமன்றத்திலிருந்து சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் மணல் மேடு சங்கர் மோதலில் கொல்லப்பட்டார்.
அடுத்து எழும் கேள்வி ரௌடிகள் எந்த மாதிரி பின்னணியில் உருவாகிறர்கள்?

1993-ஆம் ஆண்டு நடந்த மும்பை குண்டு வெடிப்பில் மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராஹிம் மெமன் சகோதரர்கள் ஆகியோருக்கும் உள்ளூர் அரசியல்வாதிகளுக்கும் தொடர்புருப்பதாக சர்ச்சை எழுந்த போது.அதை விசாரிக்க முன்னாள் உள்துறை செயலாளர் என்.என்.வோரா தலைமையில் ஒரு விசாரணைக்குழுவை அமைத்தது காங்கிரஸ் அரசு.1995-ல் அந்த கமிட்டியின் அறிக்கை நாடாளுமன்றத்தில் வைத்த போது அந்த அறிக்கையின் விபரங்களைப் பார்த்து நாடே அதிர்ந்து நின்றது.உள்ளூர் அளவிலும் துறைமுக நகரங்களிலும் மிகப்பெரிய நகரங்களிலும் கள்ளச்சாரயம் சூதாட்டம் பாலியல் புரோக்கர் என வளரும் சிறு குற்றவாளிகள் பின்னர் போதைபொருள் கடத்தல் ரியல் எஸ்டேட் கந்து வட்டி என வளர்ந்து போலீஸ் அரசியல்வாதிகளின் கூட்டோடு எப்படி கோலோச்சுகிறார்க்காள்.என என வோரா கமிட்டி சுட்டிக்காட்டியது.ரௌடிகளுக்கு அரசியல்வாதிகளுக்கும் உருவாகியிருக்கும் கூட்டணியை ஒழிக்க வோரா கமிட்டி NODAL AGENCY என்கிற உயர் அதிகாரம் படைத்த அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என பரிந்துரைத்தது.ஆனால் காங்கிரஸ் பிஜேபி உடபட அனைத்து கட்சிகளுமே வோரா கமிட்டியின் பரிந்துரைகளை எதிர்த்தார்கள்.காரணம் கட்சி வேறு பாடில்லாமல் அனைத்து கட்சிகளிலும் சமூக விரோதிகள் கலந்திருந்தார்கள்.கடந்த பதினைந்து ஆண்டுகளில் தமிழகத்திலும் இந்த தாதா அரசியல் கூட்டு அனைத்து கட்சிகளிலும் வளர்ந்திருப்பது துரதிருஷ்டமான ஒன்றுதான்.தேவைக்கு ரௌடிகளை வளர்ப்பதும் அரசியல் வாதிகள்தான் வளர்த்த கடா வேண்டாத கடா ஆகி மார்பில் பாயும் போது போலீசை ஏவி அவர்களை அழித்தொழிப்பதும் அரசியல்வாதிகள்தான்.கடந்த காலங்களில் போலீஸ் மோதல்களில் கொல்லப்பட்ட நக்சல்பாரிகளைத் தவிர ரௌடிகள் அனைவருமே ஏதோ ஒரு அரசியல் கட்சியால் பாலூற்றி வளர்க்கப்பட்டவர்கள்தான்.தேர்தல் காலங்களில் தங்களின் அராஜக அரசியலுக்கு தொண்டர்களைக் காட்டிலும் இம்மாதிரி ரௌடிகளை நம்பியே இருக்கிறது பெரும்பாலான அரசியல் கட்சிகள்.பிரமுகர்கள்,அரசியல்வாதிகள்,காவல்துறை உயரதிகாரிகள்,கல்வி நிறுவன அதிபர்கள் என அனைவ்ருமே ஏதோ ஒரு ரௌடியை தங்களின் தொழிலுக்கு துணையாக வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.ஏனென்றால் ரௌடிகள் இல்லாமல் இந்த தொழில்களை இவர்களால் செய்ய முடியாத அளவுக்கு சூழல் மாசுபடுத்தப்பட்டிருக்கிறது.கிராம கூட்டுறவு வங்கிகள்,ரேஷன் கடைகள் என சிறு ராஜ்ஜியமாக உருவாகும் இம்மாதிரி அரசியல் ரௌடிகள் அரசியல் வாதிகளின் ஆசியோடும் போலீசின் துணையோடும்தான் வளருகிறார்கள் என்பதற்கு கடந்த காலங்களில் சுட்டுக் கொல்லப்பட்ட ரௌடிகளின் இறந்த கால அரசியல் தொடர்புகளை கிளரினாலே தெரியும்.
இறுதியாக அதிகார மையங்களான போலீஸ்,அரசியல்வாதிகள்,ரௌடிகள் கூட்டை ஒழிக்காமல் ரௌடியிசத்தை ஒழிக்கவே முடியாது.பல நேரங்களில் அரசியல் பழிவாங்கல் கொலைகள் கூட இந்த ரௌடிகளால் நடத்தப் பட்டதன் உச்சமாகத்தான் தமிழக அரசு அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் பாதுகாப்பை அதிகரித்திருக்கிறது.ஆனால் பிரச்சனை அதுவல்ல.ரௌடிகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதை விட அவர்கள் கிரிமினல் தாதாக்களாக உருவாகாமல் தடுப்பது எப்படி என்பதில் இனிமேலாவது நாம் கவனம் செலுத்தியாக வேண்டும்.ஏனென்றால் இந்த என்கவுண்டர்கள் தியாகங்களாக மாற்றப்பட்டதால்தான் ராதிகா செல்வி என்கிற ஒரு எம்பி தமிழகத்து கிடைத்தார்.ஆனால் சாதிச் செல்வாக்கற்ற ரௌடிகள் மரணங்கள் இவ்விதமாய் மாற வாய்ப்பில்லை.அம்மாதிரி அதிகாரமாய் மாற வாய்ப்பற்ற என்கவுண்டர்களை அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்வதுமில்லை.இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இம்மாதிரி என்கவுண்டர் கொலைகளின் எண்ணிகையை வைத்தே மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சிகள் பிரச்சனை கிளப்பக் கூடும்.தமிழக அரசு இந்த மோதல் கொலைகளுக்கு எதிராக ஏதாவது செய்தாக வேண்டும்.

மெலுஞ்சி

(புதுவிசை இதழில் வந்திருக்கும் எனது கட்டுரை)


டி.அருள் எழிலன்
ஓவியம்:கிருஷ்ணபிரியா

தலையையும் சேர்த்து இழுத்துப் போர்த்தியிருந்த சாக்கை விலக்கிவிட்டு வந்து எழுப்பியவனைப் பார்த்தான் மெலுஞ்சி.உறக்கத்தின் முனகலும் எரிச்சலும் அவனது பேச்சில் தெரிந்தது.உச்சி வெயில் ஏறியிருந்தால் அந்த சாக்கைத்தான் மெலுஞ்சி குடையாக பிடித்துப் போவான்.அதுவே குளிர்காலம் என்றால் போர்த்திக் கொண்டு ஊதக் காற்றில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவும் இரவு நேரங்களில் அதை போர்வையாகவும் பயன் படுத்தினான்.வந்து எழுப்பியவன் ஊர்க்கிழவன் சேத்தி இறந்து போன செய்தியைச் சொல்லி துக்க மனியடிக்கச் சொன்னான்.துட்டிச் செய்தியைச் சொல்ல ஊரெங்கும் போய் உறவுக்காரர்களுக்கு சொல்லிவர மெலுஞ்சி வந்திருந்தவனால் நிர்பந்திக்கப்பட்டான்.
அப்படியே எழுந்து தேவாலயத்தை நோக்கி நடந்தவனுக்கு நடைக் கொருதரம் இருமல் நெஞ்சைப் பிழந்த படி வந்தது.இனி சேத்தியின் மரணத்துக்காக மணிக்கொருதரம் மணியடிக்க வேண்டும்.சாயங்காலம் துட்டி(மரணச் செய்தி)சொல்ல இந்த கடல்புறத்து கிராமங்கள் எங்கும் கால்நடையாய் செல்ல வேண்டும்.புனித ஜெபமாலை மாதா தேவாலயத்தின் வெண்கல மணியை இழுத்து அடித்து மூச்சை நிறுத்தியவன், மணிக்கயிற்றை இலகுவாக விட்டான் அது மூன்று முறை அடித்து சேத்தி என்னும் தொண்ணூறூ வயது வரை வாழ்ந்த கிழவனின் மரணத்தை அந்த கிராமத்துக்குச் சொன்னது.அப்படியே மணிக்கயிற்றுக்குக் கீழே குந்தி தரையோடு பதிந்து அமர்ந்தான்.இனி அவன் அந்த மணிக் கயிற்றை விட்டு சேத்தியின் அடக்கம் முடிகிறவரை அகல முடியாது.
ஒரு மார்கழி மாத இரவில் மெலுஞ்சி வயதான தன் தாயோடும் தகப்பானாரோடும் அந்த கடலோர மீனவ கிராமத்துக்கு வந்து சேர்ந்தான்.
பெரீய வசதி என்று இல்லாவிட்டாலும் இரண்டு தறிபோட்டு வயிற்றைக் கழுவிய வாழ்க்கையும் கிழிந்து போனது.பஞ்சம் சனமெல்லாம் ஊரைக் காலி செய்தது.பிழைப்புக்கு வழியில்லாமல் தறிகெட்டுப் போனது நெசவும் வாழ்க்கையும்.அடிவானம் தொட்டு கண்ணுக்கெட்டிய தூரம் நெருஞ்சிக்காடு வளர்ந்து கிடக்கும் வள்ளியூர்தான் மெலுஞ்சியின் பூர்வீகம்.அவர்கள் தன் ஒரு மகனோடு வள்ளியூரில் இருந்து இடம் பெயர்ந்த காலத்தில் நெடுஞ்சாலையோரம் முழுக்க பூத்திருக்கும் ஆவாரம் பூக்கள் மஞ்சளை இழந்து வாடிக்கிடந்தது.வயிற்றுக்கில்லாமல் போன ஒரு பஞ்ச காலத்தில் அவன் இவ்விதமாய் அந்த கடலோர கிராமத்துக்கு தன் தாய் தந்தையோடு வந்து சேர்ந்தான்.
அவர்கள் மீனவர்கள் கடலைப்போல ஆவேசமானதும் அமைதியால் ஆனதும் அவர்களின் வாழ்க்கை.ஒரு அரயன் அந்த கடல்புறத்தில் பிறக்கும் போது கடல் மட்டுமே பின்னாளில் அவனது வாழ்வை தீர்மானிக்கும் சக்தி.கடல் கொட்டிக் கொடுப்பதை வைத்து பிழைத்துக் கொள்வது அரயத்தியின் கையில் இருக்கிறது.மூன்றாம் சாமத்தில் கட்டுமரத்தோடு கடலுக்கு இறங்கும் ஒரு கடலோடி நல்லபடியாய் கடலாடினால் அவனது வாழ்க்கைப் பாடுகள் நன்றாய் இருக்கும்.அதுதான் கொண்டாட்டமான ஆர்ப்பாட்டமான அவர்களது வாழ்வை தீர்மானிக்கும்.
ஒரு அரயன் கடலோரத்தில் பிறக்கும் போது அவனுக்கென்று ஒரு கட்டுமரம் கூட இருப்பதில்லை.பங்குக்கு அடுத்தவருடன் சேர்ந்து கடலுக்கு செல்வான்.பின்னர் கொஞ்சம் பணம் கிடைத்தால் மரம் இறக்குவான்.குடிப்பான் வருமானத்தில் பெரும் பங்கை தேவாலயத்துக்கு கொடுப்பான் பின்னர் ஒரு நாள் மரித்துப் போவான்.
மெலுஞ்சியும் அவனது தாய் வள்ளியூர்க்காரியும் அவனது தந்தை ஜோசப்பும் இந்த கடலோர கிராமத்துக்கு வந்த போது அவர்கள் அந்த கிராமத்தின் தேவாலயத்தில் தங்கிக் கொண்டார்கள்.பாவப்பட்டு வந்தவர்களுக்கு சோறு போட்ட மக்களை பிடித்துப் போக அவர்கள் அந்த ஊரில் தங்கி விடுவதென்று முடிவெடுத்தார்கள்.
வள்ளியூர்க்காரிக்கு ஊர்த்தேரியில் குடிசை போட்டுக் கொள்ள பாத்தியம் கொடுக்கப்பட்டது.மெலுஞ்சிக்கு சந்தோசம் நிம்மதியாக படுத்துத் தூங்க ஒரு இடம் கிடைத்து விட்டது.மெலுஞ்சியின் தகப்பனும் கோவில் பிள்ளையாகிவிட்டர்.அந்த தேவாலயத்தில் சரியான நேரங்களில் மணியடிக்கவும் ஊர்ச்சேதி சொல்லவும் துட்டி சொல்லவும் அந்த கடல்புறத்துக்கு ஒரு ஆள் கிடைத்துவிட்டான்.
விவசாயிக்கு கால்காணி நிலம்!தையல்காரனுக்கு ஒரு தையல் இயந்திரம் என்றால் மீனவனுக்கு கட்டு மரம் தானே?மொத்த கட்டுமரமும் அலைகிழித்து கரை வந்து சேர்ந்தால் ஒமல் ஒமலாக(பனை ஓலைக் கூடை) மீன் வந்து இறங்கும்.ஓற்றையாக எண்ணுகிற பழக்கமெல்லாம் கிடையாது நூறு நூறு£க குவித்து மொத்தமாக ஏலம் விடுவார்கள்.மீன் குட்டை வண்டிகள் சாரை சாரையாக வந்து குவியும் ஏலம் எடுப்பதிலும் ஏலம் கூறுவதிலும் நடக்கும் போட்டி கள்ளுக்க்டை வரை சண்டையாய் விரிந்து பரவும்.உச்சி வெயில் தாண்டி வெயில் தாளும் நேரத்தில் கிராமத்தின் அத்தனை வீடுகளிலும் ஒரு சேர மீன் குழம்பு வாசம் வீசும்.அந்த கிராமத்துக்கு வந்த பிறகு வள்ளியூர்க்காரியின் வீட்டிலும் மீன் குழம்பின் வாசம் வருகிறது.வள்ளியூர்க்காரி ஒவ்வொரு கட்டுமரமாய் போவாள் ஒவ்வொரு மரத்திலும் ஒரு வெள மீனோ பாறை மீனோ அவளுக்கு கிடைக்கும்.மீன்பாடில்லாத நாட்களில் மரத்துக்குப் பக்கத்தில் நெருங்க முடியாது.சில நாட்களில் கறிக்கு போக மீதம் மீன் இருந்தால் அதை உப்பு போட்டு கடல் மணலில் காய வைத்தாள்.காய்ந்த கருவாடுகளை வள்ளியூர்க்காரி விற்கலாம் என தீர்மானித்தாள்.தலைச்சுமட்டில் கருவாடு விற்க அவள் வடக்கு ஊர்களுக்கு போனாள்.ஆனாலும் வள்ளியூர்க்காரிக்கு மீன் விற்பதியில் அரயத்தியின் லாவகமோ நம்பகத்தன்மையோ இல்லை.ஆனாலும் கடந்த காலத்தின் துன்பச் சூழலிலிருந்து வெளியேரும் புதிய நம்பிக்கையை வள்ளியூர்க்காரிக்கும் அவளது கணவன் ஜோசப்புக்கும் மெலுஞ்சிக்கும் அந்த கடற்கரை வழங்கியிருந்தது.
அதிகாலை ஐந்து மணியாகியும் மதாக்கோவிலில் மணியடிக்காது போனதால் கட்டுமரங்கள் கடலுக்குள் போகும் நேரம் தப்பிப்போனது.மீன் பிடி தளவாடங்களோடு கடற்கரைக்கு வந்தவர்கள் அவனை திட்டினார்கள்.‘‘எளவுடுப்பான் குடிச்சிப் போட்டு தூங்கியிருப்பான்’’என்று வைதனர்.குடிசைக்குள் எரிந்த சிம்னி விளக்கை தூண்டி விட்டு வள்ளியூர்க்காரி திரிகால மணியடிக்க கணவன் ஜோசப்பை எழுப்பினாள்.சிறிது நேரத்தில் அந்த குடிசைக்குளிருந்து கிழவியின் அழுகுரல் கேட்டது.மெலுஞ்சியின் தந்தை மரித்துப் போனான்.

ஊர் கமிட்டியின் கூட்டத்திற்கு மெலுஞ்சி அழைக்கப்பட்டான்.‘‘கோயில்ல மணியடிக்க ஆளில்லை.உனக்க தகப்பனார் இருந்த வரை அவர் அடிச்சார்.இப்போ நீ அடிக்கணும் என்ன சொல்றே?ஊர்த்தலைவர் கேட்டு விட்டு அவனது சம்மதத்துக்காக காத்திருந்தனர்.ஒரு முறை அவனது அப்பாவுக்கு உடம்பு முடியாமல் போனது ‘‘எல மக்கா இண்னைக்கு மட்டும் போய் மணி அடில’’என வள்ளியூர்க்காரி மகனிடம் கெஞ்சிய போதும்‘‘பொன்னத் தந்தாலும் போ மாட்டேன்’’என்று மறுத்தவன் இன்றூ ஊரார் முன் நிலையில் தலை கவிழ்ந்து நின்றான். அவன் சம்மதம் சொல்லவும் இல்லை அவனது சம்மதத்தை வேண்டி ஊரார் காத்திருக்கவும் இல்லை.மெலுஞ்சி செய்ய வேண்டிய கோவில் கடமைகள் அவனுக்குச் சொல்லப்பட்டது.காலையில் ஐந்து மணி,மதியம் பன்னியிரண்டு மணி,இரவு எட்டு மணி& என திரிகாலமும் மணியடிக்க வேண்டும்.காலையிலும் மாலையிலும் தேவனை நினைத்து பிரார்த்தனை இரவு எட்டு மணிக்கு குடும்ப ஜெபமாலை என திருச்சபை அவர்களின் பிராத்தனை நேரத்தை ஒழுங்கு செய்து கொடுத்திருந்தது.ஆனால் அவர்கள் அதை பின்பற்றியதாக தெரியவில்லை.அந்த மக்கள் காலை மதியம் இரவு என மூன்று வேளை குடும்ப ஆராதனையில் ஈடு பட்டாலும் படாவிட்டாலும் மெலுஞ்சி மணியடிக்க வேண்டும்.அது அந்த கடற்கரையில் அவன் வாழும் காலம் முழுக்க அவன் செய்ய வேண்டிய கடமை.
கிட்டத்தட்ட நூறூ வருட பழமையான மாதாகோவிலின் மணியும் பழமையானதுதான்.மயிலாடியில் இருந்த அந்த காலத்தில் செம்பு கொடுத்து செய்து வந்தாக சொல்வார்கள் அலை அலையாக அது தவழ்ந்து மணியோசை ஊர் மக்கள் மனதில் இனபம் சேர்க்க மெலுஞ்சி அந்த மணிக்கயிற்றோடு போராடினான்.ஒரு முறை இழுத்து விட அவன் மூச்சு ஒவ்வொரு முறையும் திணறியது.ஆனாலும் இது மாதாவுக்கு செய்கிற சேவை அல்லவா?
அடிக்கடி ஊர் கூடும் கமிட்டியின் முடிவுகள்தான் ஊர் முடிவு.ஊரில் செல்வாக்கான பணக்காரரின் முடிவுதான் கமிட்டியின் முடிவும்.அன்றும் அப்படித்தான் ஊர் கூடியது ஊரார் முன் நிலையில் சேசடியான் நிறுத்தப்பட்டிருந்தான்.தீர்ப்புச் சொல்லுகிற பட்டங்கட்டிக்கு மட்டும் ஒரு நாற்காலி போடப்பட்டிருந்தது.சேசடியான் எவ்விதமான பதட்டமோ பயமோ ஊராரிடம் அவனுக்கு இல்லாதது போலவே இருந்தான்.அவன் கைகட்டி கூனி தன்னை பயந்த ஸ்பாவம் உள்ளவனைப்போல பாவனைப் படுத்திக் கொண்டான்.ஊராருக்கு தக்க மரியாதையை கொடுத்தாக வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ள ஒரு சிறந்த அரயன் அவன்.சேசடியான் மீதான குற்றப்பத்திரிகையை வாய்மொழியாக கொழும்பான் சொன்னான்.‘‘யவே ஜெஸிந்தா இருக்காள்லியா அவ மூத்த மொவ மெல்கி மோளுறத இந்த கூதிவுள்ள ஒளிஞ்சி நிண்ணு பாத்திரிக்கான்.இந்த இறப்பாளி நாய என்ன செய்யணும்ணு சொல்லுங்க’’என்று கொழும்பான் குற்றப்பத்திரிகையை வாசித்த போதே தண்டனையும் கடுமையாக இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தான்.
‘‘ஏ அந்த கள்ளக் கூதிவுள்ளக்கி ஆயிரம் ரூவா தெண்டம் போடுங்கவே....தெண்டம் கட்ட முடியாட்டி கரும்புள்ளி செம்புள்ளி குத்தி ஊரச் சுத்தணும்’’என்று தீர்ப்பு சொல்லப்பட்டது.சேசடியான் பணம் கட்டுவதில்லை என்ற முடிவோடு வந்திருந்ததால் கரும்புள்ளி செம்புள்ளி குத்தப்பட்டு ஊர் சுத்த தயாரானான்.
ஊர்க் கமிட்டிக்காரர்களால் சேசடியானுக்கு வழங்கப்பட்ட தண்டனையை பறை போட்டு சொல்ல மெலுஞ்சிக்கு சொல்லப்பட்டது.அவன் பல பறைகளைச் சொல்லியிருக்கிறான் தாசன் வாத்தியார் வீட்டில் செல்லம் கோழி திருடிய தண்டனைப் பறை,ஊர்த்தோப்பில் அந்தோனி தேங்காய் திருடியது தொடர்பான தண்டனைப் பறை,மெனக்கெடு நாளான ஞாயிற்றுக்கிழமை மத்தியாஸ் தாத்து வலையைக் கொண்டு மீன்பிடித்தது தொடர்பான தண்டனைப் பறை,சம்படி குளத்தில் குளித்த லீனாவை மறைந்திருந்து பார்த்தது தொடர்பான தண்டனைப் பறை,பங்குப்பாதிரியை கனகம் கல்லெடுத்து அடித்தது தொடர்பான தண்டனைப் பறை என தந்தையின் மரணத்துக்குப் பிறகு அவனும் ஏராளமான பறைகளை சொல்லியிருக்கிறான்.சேசடியானுக்கும் அவன் சொன்னான்.
‘‘ஜெசிந்தா மொவ மெல்கி மோளுரத பாத்ததுக்காக சேசடியானுக்கு கரும்புள்ளி செம்புள்ளி குத்தேய்.இது ஊர்க்கமிட்டியின் முடிவு’’என வீதிக்கு வீதி சொன்னான்.‘‘எல இவஞ் சொல்றது சரியா காதுல உளல சத்தமா கூவச் சொல்லி இவன மொதல்ல ஊர் சுத்த சொல்லணும்’’என நக்கலாய் கேளிக்கையாய் சில வார்த்தைகள்.ஒரு தெருவில் மூன்று முறை சொல்வதற்குள் முப்பது முறை இருமித் தீர்த்தான் மெலுஞ்சி.அவனுக்கு சளித்தொல்லை இருந்தது இடைவிடாது இருமிக்கொண்டிருந்தான் மார்கழியில் கடலின் மீதிருந்து வீசும் ஈரப்பதமான காற்று அவனை வாட்டி எடுத்துவிடும்.இவ்விதம் உடல் உபாதைகளுடன் அவன் வாழ வேண்டிய சூழலாயிற்று.
கணவனின் மரணத்துக்குப் பிறகு மெலுஞ்சி என்றழைக்கப்பட்ட தனது மகன் ஜோசப்புக்காக வாழ்ந்தாள் வள்ளியூர்க்காரி.தலைச் சுமட்டில் மீன் விற்று வந்தவளுக்கு தனது மகன் திருமண வயதை கடந்து விட்ட நினைவுகள் அவளை கொஞ்சம் துன்புறுத்தத் தொடங்கியது மகனுக்காக வள்ளியூர்க்காரி பெண் பார்த்தாள் திட்டுவிளையிலிருந்து லூசியம்மாவை பிடித்து வந்தாள்.தான் இது வரை எந்த தேவாலயத்தில் மணியடித்து வாழ்ந்து வந்தானோ அந்த தேவாலயத்தில் அவனுக்கும் லூஸியம்மாளுக்கும் திருமணம் நடந்தது.‘‘இன்பத்திலும் துன்பத்திலும் நோயிலும் நொடியிலும் வாழ்விலும் சாவிலும் ஒருவர் ஒருவரை விட்டு பிரியாதிருக்க உறுதியளிக்கிறோம் என திருச்சபைக்கு உத்திரவாதம் கொடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.‘‘கடவுள் இணைத்தைதை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்’’எனச் சொல்லி மெலுஞ்சிக்கும் லூஸியம்மாளுக்கும் பங்குத்தந்தை திருமணம் செய்து வைத்தார்.அன்றைய மெலுஞ்சியின் திருமணத்துக்கு யாரும் மணியடிக்கவில்லை கேஸியோவில் எலக்ட்ரானிக் மியூசிக்கை கசிய விட்டனர் பாடல் குழுவினர்.
லீனாவும் மெலுஞ்சியும் சகாய மாதா கோவிலுக்குப் போனார்கள்.உப்பும் மிளகும் காணிக்கையாக போட்டு விட்டு வந்தார்கள்.மெலுஞ்சிக்கு மாதாவிடமும் சரி லூஸியிடமும் சரி எதுவிதமான வேண்டுதலும் இருக்க வில்லை.கடல்புறத்தில் மீன் அதிகமாக படுகிற போது வள்ளியூர்க்காரிக்கு மீன் அதிகமாக கிடைத்தது. விற்றது போக மீதியை அன்றே கீறிக் கிழித்து உப்புக்கண்டம் போட்டு கடல் மணலில் காயவைத்து கருவாடாக்கினாள்.தொழிலை விஸ்தாரமாக்கினால் நாமும் கொஞ்சம் பணம் சேர்த்தால் ஒரு அரயனைப் போலவும் அரயத்தியைப் போலவும் வாழலாம் என நினைத்தாள்.வள்ளியூர்க்காரி லூஸியம்மாவை மீன் பெட்டி தூக்கச் சொன்னாள்.லூஸி மறுத்து விட்டாள்.
‘‘எந்த சொத்தக் கொண்டு இங்க சோறு உண்டாக்குகது.என்ன இருக்கு உண்டாக்குகதுக்கு இந்த சவத்த மீன் பொட்டி தூக்கச் சொன்னா.அவளுக்கு கேவலமாவுல்லா இருக்கு.வவுத்துக்கு கேவலம் தெரியுமா..இல்ல வாய்தான் கேவலம் பாக்குமா?இவளுவளுக்கு குண்டி காயணும்’’என்றவள் லூஸியை ‘‘சரியான மினுக்கி’’என்றாள் ஆமாம் வள்ளியூர்க்காரி லூஸிக்கு மினுக்கி என்றே பெயர் வைத்துவிட்டாள்.
இப்படியாய் ஊர்த்தேரி மேட்டில் இருந்த அந்த ஒற்றைக் குடிசைக்குள் நாள் தோறும் சிக்கலும் சிணுங்கலுமாய் மூன்று ஜீவன்களின் வாழ்க்கை கழிந்து வந்தது.
இரண்டு மாதம் கழிந்த ஒரு மாலையில் லூஸியமமவுக்கும் வள்ளியூர்க்காரிக்கும் வந்த சண்டையில் லூஸி மெலுஞ்சியை‘‘பொட்டப் பயல உங்கோத்தாள வெச்சுக்கல தருமக்காரிக்க மொவன’’என மெலுஞ்சியை திட்டி விட்டு ஓடிப்போனாள்.மெலுஞ்சி எழுந்து எதுவும் பேசாமல் கடற்கரைக்கு கடன் கழிக்கப்போனான்.
ஊர்ச்சனமெல்லாம் மெலுஞ்சியை கிண்டல் செய்தது.‘‘எல மெலுஞ்சி இன்னொரு கல்யாணம் பண்ணு’’அதனாலென்ன இன்னொரு திருமணம் செய்து விட்டால் போகிறது வள்ளியூர்க்காரி இரணியலில் இருந்து விக்டோரியாவை அழைத்து வந்தாள்.‘‘சாமி இவள எம் மொவனுக்கு கல்யாணம் பண்ணி வைப்பியளா? என பங்குப் பாதிரியாரிடம் கேட்டாள் வள்ளியூர்க்காரி."அதெல்லாம் முடியாதம்மா அதுக் கெல்லாம் ஒரு முறை இருக்கு ஒரு தடவை திருச்சபையில் கல்யாணம் ஆனா அந்த தீர்ப்பை மாற்றி எழுத முடியாது கல்யாணம் செய்து கொண்ட இருவர் உயிரோடு இருந்து பிரிந்து வாழ்வதை திருச்சபை ஏற்றுக் கொள்வதில்லை.கோர்ட்டுக்கு போய் சட்டப்படி நீங்க பிரிஞ்சி வந்தாலும் அதை திருச்சபை ஏற்றுக்கொள்ளாது ஆகவே உங்க மகனுக்கு இப்போ ஆலயத்தில் திருமணம் சாத்தியமில்லை"என திருச்சபையின் ஷரத்துக்கள் படி பங்குத் தந்தை பேசி வள்ளியூர்க்காரியை அனுப்பி வைத்தார்.
வள்ளியூர்க்காரி தன் மகனுக்கு தனக்குப் பிறகு ஒரு துணை வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தாள்.அது ஒரு தாயின் கடமையுமல்லவா?இணைந்து வாழ்தல் குறித்த எவ்வித ஒப்பந்தமும் இல்லாமல் விக்டோரியாவுடன் தேரி மேட்டின் குடிசையில் இன்னொரு முறை வாழத் துவங்கினான் மெலுஞ்சி.
மெலுஞ்சி மணியடித்தான்,பறை சொன்னான்,அந்த கடலோரத்தில் வாழ்ந்து இறந்து போகும் ஒவ்வொரு உயிர்களுக்காவும் துக்கச் செய்திகளை சுமந்து அந்த கடலோர பட்டினங்கள் முழுக்க அலைந்தான்.மீதி நேரம் தன் தாயாரோடு மீனெடுக்க கடற்கரைக்குப் போனான்.தன் வயதான தாயாரைப் போல அவனால் நடக்க முடியவில்லை.முதுகு கூன் விழுவதற்கு முன்னால் கன்னம் கூன் விழுந்தது.ஆஸ்துமா தொல்லை அவனை துன்புறுத்தியது.விக்டோரியா வள்ளியூர்க்காரிக்கு ஒத்த துணையாக இருந்தாள் மீன்களை பதப் படுத்தி சேமிப்பதில் அவள் திடமான பெண்ணாக விளங்கினாள்.வள்ளியூர்க்காரியை விட மீன் பெட்டி எடுத்து அதை விற்பதில் கெட்டிககரி என பெயரெடுத்தாள்.ஆனால் சௌகரியமாக வாழ குடும்ப வாழ்க்கையில் இது மட்டுமே போதுமானதாக இல்லை.அவள் மெலுஞ்சியின் மீது இரக்கமும் கரிசனமும் கொண்டிருந்தாள்.தகித்துக் கிடக்கும் உடம்பை என்ன செய்ய.....மூன்று மாதம் கழித்து அவளும் போய் விட்டாள் தனக்கான இன்னொரு வாழ்க்கையை தேடி அவள் சென்றிருக்கக் கூடும்.
காலம் தன் மீது நிகழ்த்தும் கோராமான தாகுதல்களைப் பற்றி கலங்காதவன் அவன்.மெலுஞ்சி.தனக்கு ஒரு வாழ்க்கைத் துணை வேண்டும் என எப்போதும் அவன் வள்ளியூர்க்காரியை கேட்டதில்லை.கொடுங்காற்றில் இருந்தும் கடல் அறிப்பில் இருந்தும் தனது குடிசையை காப்பாற்றிக் கொள்வதும் உணவும் போர்த்திக் கொள்ள ஒரு போர்வையுமே அவனுக்கு அத்தியாவசியமான தேடுதலாக இருந்தது.
வள்ளியூர்க்காரிக்கு தலைச்சுமடு மீன் குறைந்து விட்டது.ஐநூறாக இருந்த கட்டுமரம் நூறாக அந்த கடற்கரையில் குறைந்தது.கடலை நம்பி வாழ்ந்த மீனவர்கள் கடன் வாங்கி அரபு நாடுகளுக்கு வேலைக்குப் போக பலகட்டுமரங்கள் பனியத்துக்குள் சென்று பதுங்கிக் கொண்டது.கட்டுமரங்கள் கரை நோக்கி வரும் காலை வேளையில் அவள் கூடையோடு போய் கடற்கரையில் காத்திருந்தாள்.இடது கையால் அவள் தலையைத் தாங்கி குந்தி அமர்ந்திருந்தாள் எழுந்து சென்று ஒவ்வொரு கட்டுமரமாக ‘‘நான் உங்க சேவைக்காரி வந்திருக்கேன்’’எனச் சொல்லி மீன் கேட்க நினைக்கிறாள் முடியவில்லை.காத்திருந்தவளுக்கு அன்றும் மீன் எதுவும் கிடைக்கவில்லை.வெறுங்கூடையோடு அவள் தேரிமேட்டை நோக்கி நடந்தாள் அந்த நடையில் ஏமாற்றம்,தள்ளாட்டம்,பரிதவிப்பு எல்லாம் இருந்தது துக்கமும் இருந்தது அந்த துக்கம் மறைந்து போன தன் கணவன் ஜோசப் பற்றியதாகவோ தன் மகன் மெலுஞ்சி பற்றியதாகவோ இருந்திருக்கலாம்.
துட்டி சொல்ல வள்ளவிளைக்கு போய் வந்த மெலுஞ்சி குடிசைக்கு வெளியில் இருந்து கம்மிய குரலில் தன் வயாதான தாயை அழைத்தான்.‘‘யாதே’’பதிலேதும் இல்லாமல் போனதால்,‘‘இந்நேரத்துக்கு எங்க போயிருக்கும்’’என்ற யோசனையில் குடிசைக்குள் போனவன் சுருண்டு கிடந்த வள்ளியூர்க்காரியை எழுப்பினான்.பதிலேதும் இல்லை அசைவில்லை முனகல் ஏதுமில்லை.அவளை தொட்டுப் பார்த்தவன் அண்டி வாழ்ந்த மனிதரை அழைத்தான் அவர்கள் வந்து பார்த்து விட்டு ‘‘வள்ளியூர்க்காரி இறந்து போனதாக சொன்னார்கள்’’தனது தாயாரின் பிணத்துக்குப் பக்கத்தில் தலையில் கைவைத்தபடி அமர்ந்திருந்தான்.குடிசையின் மேல் கூறை கிழிசல் வழியே ஊடுறுவிய சூரிய ஒளி கிடத்தப்பட்டிருந்த வள்ளியூர்க்காரியின் முகத்தில் விழுந்தது.அவன் அந்த முகத்தை வெறித்துப் பார்த்த படி அமர்ந்திருந்தான்.
அவனுக்காக வாழ்ந்த அந்த ஒரு ஜீவனும் தன்னை உலகத்திலிருந்து விடுவித்துக் கொண்டது.ஒரு மாட்டு வண்டியின் பின்னால் தொங்க விடப்பட்ட அசைந்தாடிய லாந்தர் ஒளியைப் பின் பற்றி அவன் தன் தாயோடு அந்த ஊருக்கு வந்ததையும் அவளது எந்த ஒரு நடவடிக்கையும் மகனின் நன்மையின் பேராலே நடத்தப் பட்டது என்பதையும் அவன் நினைத்துப் பார்த்தான்.அவனுக்கு இப்போது அழுகை வரவில்லை.அவன் அழுது யாரும் பார்த்ததும் இல்லை.அவன் தனது துன்பமான இந்த வாழ்வு குறித்தும் யாரிடமும் புலம்பியதில்லை.மனைவியாக வந்தவர்கள் சில மாதங்களில் ஓடிப்போன போது கூட அவன் கலங்கவில்லை.‘‘உனக்கு நா இருக்கமுல மக்கா.நா கண்ண மூடுறதுக்கு முன்னால் உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணிப் பாத்துட்டுத்தான் நான் போவேன்’’என்று சொன்னவள் இப்போது கட்டையாக கிடந்தாள்.கிழவி உயிரோடு இருந்தவரை மெலுஞ்சிக்கு பெரிதாக ஒன்றும் பிரச்சனை இருக்கவில்லை.தலைச் சுமட்டில் மீன் பெட்டி சுமந்தவள்.அவனுக்காக மூன்று வேளையும் சமைத்துப் போட்டாள்.எப்போதாவது டவுணுக்கு போனால் அவனுக்கு காரச்சேவும் பூந்தியும் வாங்கி வருவாள்.ஒரு குழந்தை மாதிரி தின்பவனை கண்களை இடுக்கிய படி பார்த்திருப்பாள்.அவனது இரண்டு கால்களையும் யாரோ வெட்டி எடுத்துச் சென்றது மாதிரி இருந்தது அவனுக்கு.தேரிக்குடிசையின் வாசல் வழியே தேரி மேட்டைப் பார்த்தான் நீண்ட கடற்கரை ஏராளமான மனித தடங்கள் இந்த வெறும் கடல் மணலில் நடக்கப்பழகுவதே சிரமம்.இந்த கடல்புறத்தில் பிறந்தவர்களைத் தவிற புதிய மனிதர்கள் மண் பழக வேண்டும்.மண்ணில் புதையும் கால்களை எடுத்துப் போட்டு வேகமாக நடக்க வேண்டும்.உதிரியான சொறி மணல் தணலைக் கொண்டு வந்து காலில்கொட்டிய மாதிரி இருக்கும் அனைத்துக்கும் பழக வேண்டும் அவனுக்கு அந்த கடல் மணலில் நடக்கப் பழகும் நம்பிக்கை கொடுத்தது அவனது தாயதான். தன் தாயில்லாத அந்த மணல் வெளியில் இனி நடக்கப்போவதை நினைத்தான்.
வள்ளியூர்க்காரியின் பிணம் கல்லறைத்தோட்டத்தில் புதைக்கப்பட்டது பிறப்பு இறப்பு பற்றிய எந்த குறிப்புகளும் இல்லாமல் நித்திரை அடைந்த்தை நினைவுறுத்தும் சிலுவைக் குறி மட்டும் அவளின் கல்லறை மீது சாத்தப் பட்டிருந்தது.அந்த கல்லறைக்குப் பக்கத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தான்.பின்னர் தன் குடிசையை நோக்கி நடந்தான்.மணல் மேட்டில் தெரிந்த குடிசையை தூரத்தில் இருந்து பார்த்தவனுக்கு முதன் முதலாக கண்ணீர் வந்தது.விபரமறிந்து தன் தாய்க்கு தான் உழைத்து ஒரு பருக்கை சோறு கூட போட முடியாத வக்கத்தத் தனம் அந்த கண்ணீரில் இருந்தது.
இரண்டு நாட்களாக மெலுஞ்சி கோவிலுக்கு மணியடிக்க செல்ல வில்லை.குடிசைக்குள் முடங்கிக் கிடந்தவனுக்கு பக்கத்து வீட்டு சில்வி சோறு கொண்டு கொடுத்தாள்.அதை ஓதுக்கி வைத்து விட்டு தூங்கினான்.பின்னர் அதை எடுத்து உண்டான்.கோவிலில் மண் சேர்ந்து விட்டதால் மெலுஞ்சியை வந்து வேலையை பார்க்க சொன்னார்கள்.அவனும் போய் தன் கடமையை அந்த ஊரருக்கு செய்தான்.
அவனுக்கு இப்பொழுதெல்லாம் ஒரு வேளை உணவு கிடைப்பதே அரிதான கடினமான ஒன்றாக இருக்கிறது.கிடைத்த போது உண்டான் கிடைக்காத போது தாயின் சவக் குழியிலோ குடிசையிலோ கோவிலிலோ போய் படுத்துக் கொண்டான்.
ஊரில் யாருக்காவது திருமணம் என்றால் அவனுக்கு உணவு கிடைக்கும் பந்தி போடும் இடத்தின் வாசலில் போய் நின்று கொள்வான்.அனைவரும் உண்டபின் கடைசி பந்தியில் அவனுக்கு ஒரு இருக்கை கிடைக்கும் அப்படி கிடைத்தாலும் யாரும் அவனருகே போய் அமர்ந்து உண்ண பயப்படுவார்கள்.ஏனென்றால் காசநோய்க்காரனான அவனுக்கு அருகில் அமர்ந்து யார்தான் உணவருந்துவார்கள்? முன்பெல்லாம் யாருக்காவது திருமணம் என்றால் கோடி கொடுபபர்கள் கோடி என்றால் புதிதாக் சட்டையும் வேட்டியும் கிடைக்கும்.மெலுஞ்சியின் தகப்பானார் இருந்தவரை அவருக்கு கிடைக்கிற கோடிகள் எல்லாம் அவனுக்குத்தான்.ஆனால் அவரின் மரணத்துப் பிறகு அப்படி கோடிகள் எதுவும் அவனுக்கு கொடுக்கப்படுவதில்லை அவனும் கோடிகளுக்காக யாரிடம் போய் நின்றதில்லை.பசிக்கிற காரணத்தால் மட்டுமே பந்தியில் போய் காத்திருக்கிறான்.
அவன் அந்த கடலோரத்துக்கு வந்து நாற்பதாண்டுகள் ஆகிவிட்டது.இந்த நாற்பது வருடத்தில் அவன் வேறு அந்த கிராம மக்கள் வேறல்ல.ஊருக்கெல்லாம் சேதி சொன்னான்.இழப்பின் வலியை மணிகொருதரம் மணியடித்து ஊருக்குச் சொன்னவனுக்கு ஒரு மீன் தர இப்போது நாதியில்லை.அவன் கையேந்தாமல் அவர்களிடம் இறந்து வாழ்கிறான்.
நினைவுகளெல்லாம் கரைந்து போயின....ஆலய மணிக்குக் கீழே குந்தியிருந்தவனுக்கு ஊர்க்கிழவன் சேத்தியின் மரணத்துக்கு அடுத்த மணியடிக்க வேண்டியது நினைவுக்கு வர விட்டு விட்டு அவன் முறையாக அடித்தான் சேத்திக்கான துக்க மணியை, பின்னர் சேத்தியின் உடல் கல்லறைத்தோட்டத்தில் புதைக்க்பட்டு சிலுவைக் குறி நடப்பட்டது.‘‘முடிவில்லாத தேவனின் ஒளி சேத்தியின் மீது ஒளிர சேத்தி மண்ணுக்குள் புதைக்கப்பட்டான்’’கல்லறைக்கு வெளியே கையேந்தி நின்றவனுக்கு.இறக்கமுள்ள மனசுக்காரமார் ஐம்பது காசு ஒரு ரூபாய் நாணங்களை கொடுத்து விட்டுப் போனார்கள்.அதை மிக்க பணிவோடு அவன் பெற்றுக் கொண்டான்.
வாடைக்காற்று வீசும் போது ஒரு திசையிலும் சோழக்காற்று வீசும் போது ஒரு திசையிலும் இழுத்துச் செல்லும் கடல் அலையைப் போல அவன் இன்னும் அந்த கடலோரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.அந்த மக்களுக்கும் மாதாவுக்கும் செய்ய வேண்டிய பணிவிடைகளை அவன் தவறாமல் செய்து கொண்டிருந்தான்.ஒரு நாள் ஏதாவது ஒரு மீனவன் வந்து சொல்வான்."எல மெலுஞ்சி தேறிப் பெறக்குள்ள மெலுஞ்சி செத்துக் கிடெக்கானாம்."என்று,அவனது மரணத்தை ஊருக்குச் சொல்ல தேவாலயத்தின் மணி அடிக்கப்படலாம் அல்லது அடிக்கப்படாமலும் போகலாம்.ஊரின் கல்லறைத் தோட்டத்தில் அவன் அடக்கம் செய்யப்படலாம்.அப்பனின் வாரிசாக கோவில் பிள்ளை ஆனவன் தனக்கொரு வாரிசு இல்லையே என ஒரு போதும் வருந்தியதில்லை.அந்த திருப்தியோடு அவன் நாளை மரித்துப் போவான்.இவைகள் எதையும் அறியாதது போல பேரிரைச்சலையும் கொந்தளிப்பையும் தன்னுள் செரித்துக் கொண்டு மிகச் சாதுவாய் நுரைத்துக் கொண்டிருக்கும் அவர்களது அரபிக்கடல்.
ஆனால்,
அந்த ஊர் மக்களுக்கு விடை தெரியாத கேள்விதான் இன்றூம் அவர்களை உறுத்திக் கொண்டிருக்கிறது.அது,
‘‘மெலுஞ்சி செத்துப் போயிட்டாம்ணா இனி யாரு நம்ம கோவில்ல மணியடிப்பா?என்கிற கேள்விதான்.

இடிக்கப்பட்ட உத்தபுரம் சுவரும்.இடிக்கப்பட வேண்டிய உத்தபுரங்களின் சுவர்களும்.....

டி.அருள் எழிலன்



1994 ஆகஸ்ட் மாதம் என்று நினைக்கிறேன்.நாகர்கோவிலில் இருந்து எங்களது மீனவ கிராமமான புத்தன்துறைக்கு செல்லும் 38பி பேருந்தில் அமர்ந்திருந்தேன்.வண்டி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பி பீச் ரோடு ஜங்சனில் நின்றிருந்தது.அந்த நிறுத்தத்தின் எதிரில் பீச் ஒயின்ஸ் என்ற மதுக்கடை இருந்தது.இப்போது அது டாஸ்மார்க் ஆகியிருக்கும்.போதை உச்சிக்கு ஏறியிருந்தது அவருடைய பேச்சு வழக்கிலிருந்து அவரை ஒரு நாடாராக நான் புரிந்திருந்தேன்.
எங்களுடைய பேருந்து வந்து நிறுத்தத்தில் நின்றதும் அந்த பேருந்தில் இருந்த பெண்களை பார்த்து கெட்ட வார்த்தை போட்டு திட்டினார்.அதை கேட்ட பெண்கள் முகத்தை திருப்பிக்கொண்டனர் அவர் திட்டியது பெண்களைத்தான்.‘‘இந்த மினுக்கு மினுக்கிக் கிட்டு எங்க போயிட்டு வாராளுவொ தேவுடியாமாருக்கு வீட்டுல கெடப்புவராதா?’’என்கிற ரீதியில் அவர் திட்டிக்கொண்டிருந்தார்.வண்டியில் இருந்த சில இளைஞர்களால் அந்த குடிகாரரின் வசவுகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.வண்டியிலிருந்தபடியே அந்த குடிகாரரை அடிக்க பாய்கிற வேகத்தில் திட்டினார்கள் அந்த இளைஞர்கள்.போதையில் இருந்தவர் உண்மையில் பயந்து விட்டார்...அவர் உட்னே,
"ஐய்யே புள்ளே நாஞ் நம்ம நாடாக்கமார சொல்லல்ல கடப்புறத்துகாரியளயில்லா சொன்னேன்"என்ற உடன் பேருந்து கிளம்பியது.ஒரு வேளை நின்றிருந்தாலும் என்னால் அவனை ஒன்றும் செய்திருக்க இயலாது..அவனல்ல அந்த வண்டிக்குள் நிலவிய ஒரு விதமான திருப்தியும் ‘‘அவன் நம்ம பொம்பளையள சொல்லவில்லை கடற்கரை பெண்களைத்தான் சொல்லியிருக்கிறான்’’என்கிற ரீதியில் அமைதியும் நிலவியது.அந்த குடிகாரர் சார்ந்த சாதி எழுப்பியிருந்த சுவர் ஒழுக்கப்பட்ட மீனவ மக்களுக்கு எதிரானதோடு.
இன்று அதிகாலை மதுரை உத்தபுரத்தில் தலித் மக்களின் முகத்தில் முழிக்கக் கூடாது என்கிற நினைப்பில் வெள்ளாளர் இன மக்களால் தொண்ணூருகளில் கட்டப்பட்ட உத்தபுரம் சுவரின் பொதுப்பாதைகள் மூன்றை காவல்துறையினர் இடித்துத் தள்ளியிருக்கிறார்கள்.ஆனால் இரண்டு பக்கமும் தலா இருபது பேர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது காவல்துறை நிர்வாகம்.என்ன வழக்கு எந்த செக்ஷனில் போடப்பட்டது என்கிற எந்த விபரமும் தெரியவில்லை.ஒரு வேளை வெள்ளாளர்கள் மீது வன்கொடுமை வழக்கும்.தலித்துக்கள் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது என பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்கிற பாணியை பின்பற்றி விட்டார்களோ என்னவோ.
ஆனாலும் பட்டா நிலத்தில் கட்டப்பட்ட உத்தபுரம் தீண்டாமைச் சுவர் மட்டும் இனி தொடரக்கூடும்.சட்டம் பட்டா ரூபத்தில் அந்த பாதுகாப்பை வெள்ளாள இன மக்களுக்கு வழங்கியிருக்கிறது.சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட உத்தபுரம் சுவரின் பொதுப்பாதையை ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் இனி பயன் படுத்தக் கூடும்.அல்லது திறந்து விடப்பட்ட வழி வழியே அவர்களின் சுவாசமும் கவிச்சி வாசனையும் மட்டுமே சென்று வரக்கூடும்.
மதிற்சுவரை இடித்து சாதித் திமிரை தகர்த்தாலும் இடியாத மனச்சுவர் நம் ஒவ்வொருவருக்குள் பல்லாயிரம் அடி உயரமாய் எழுந்து நிற்கிறதே அதை எப்போது இடிக்கப்போகிறோம்.
கண்ணுக்குத் தெரியாத அபப்டி ஒரு சுவர் எங்களின் மீனவ கிரமங்களை மொத்தமாக மூடி எழுப்பப் பட்டுள்ளது.இந்திய வரைபடத்தில் கொண்டை ஊசியை ஒத்த வடிவம் கொண்ட குமரி மாவட்ட கடற்கரை ஓரங்களில்தான் நாங்கள் நீண்டு வாழ்கிறோம்.அரபிக்கடலோரத்தின் அலைவாய்க்கரையில் பரதவர்களான நாங்களும்,எங்களைப் போலவே ஒரே மதத்தையும் தொழிலையும் கொண்டிருக்கும் முக்குவ மக்களும் கரைகளில் வாழ்கிறார்கள்.
இரட்டை டமளர் முறையோ,தடுப்புச் சுவர்களோ,கோவிலில் நுழையும் உரிமை என சாதி இந்துக்களாலோ கிறிஸ்தவ நாடார்களாலோ அல்லது வெள்ளாளர்களாலோ எங்களுக்கு எந்த தொல்லையும் கிடையாது...ஏனென்றல் நாங்கள் தனித்து வாழ்கிறோம்.எங்கள் கிராமங்களில் ஒரு சாதி இந்துவை பார்க்க முடியாது.கன்னியாகுமரியில் தொடங்கி கேரளத்தின் எல்லையான நீரோடி வரை நீளாமாய் நீட்டிப் படுத்திருக்கும் இந்த மீனம மக்கள் பல நூறூ ஆண்டுகளாய் புறம் போக்கு நிலங்களில் வாழ்கிறார்கள்.
கடலில் வேட்டையாடுவதும் கரைகளில் கூடிக்கழிப்பதும் மீதி நேரத்தில் தேவாலயங்களுக்கு மண் சுமப்பதும்தான் இவர்களின் வாழ்க்கை.சுனாமி அனர்த்தனம் தாண்டவமாடிய போது உள்ளூர் பணணைகள் எங்களுக்கு அவர்களது வீட்டின் பழைய துணிகளையும் கெட்டுப் போன சாதங்களையும் கொண்டு வந்து கொட்டி உதவினார்கள்.
எங்களுக்கு கொஞ்சம் மீன குழம்பு கிடைக்குமா?என கேட்டபோது....‘‘கொழுப்பப் பாத்தியாலே அய்யோ பாவம்ணு நாம சோறு கொண்டு கொடுத்தா மீன் குழம்பு கேக்குறத?போய் பிடிச்சி குளம்பாக்கி தின்ன வேண்ணியதுதானே’’
இது மட்டுமல்ல சுனாமியின் போது சடலங்களிலிருந்து நகைகளை திருடியவர்கள்.கிடைக்கும் பொருட்களை திருடிச் சென்றவர்கள் என்கிற மாதிரி குத்தப்பட்ட பொதுப்புத்திகள்.
தமிழகம் முழுக்க கண்ணுக்குத் தெரியாத உத்தபுரம் சுவர் எழுப்பட்டிருக்கிறது அந்தச் சுவர் எங்கள் கிராமங்களையும் மூடியிருக்கிறது என்பதை எண்பதுகளில் இந்து முன்னணியால் நிகழ்த்தப்பட்ட மண்டைக்காடு தாக்குதல் மூலம் தெரிந்து கொண்டோம்.கிறீஸ்தவ மீனவர்களுக்கும் இந்து நாடார் விவசாயிகளுக்குமான மோதலாக மட்டுமே அதை பார்க்க முடியாது கிறிஸ்தவம் மீனவ மக்களிடம் கொண்டு வந்த சிறிதளவு மாற்றத்தைக் கூட சகிக்க முடியாத கொடூர மனதில் வெளிப்பாடுதான் அந்த மாண்டைக்காடு தாக்குதல் அப்போது நாங்கள் மொத்தமாக இந்தியாவின் நிலப்பரப்பிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்தோம்.
அன்றைக்கு கண்ணுக்குத் தெரிந்த சுவர் இன்று கொஞ்சம் வளர்ந்த சுவராக மாறியிருக்கிறது.இடிக்க முடியாத மனச்சுவராக வளர்ந்திருக்கிறது.சுனாமிக்கு பிறகு மீனவ மக்களை கடற்கரையிலிருந்து வெளியேறச் சொல்கிறது அரசு அங்கிருந்து வெளியேறி நாங்கள் சாதி இந்துக்களின் குடியிருப்புகளுக்குள் வாழச் செல்லும் போது அங்கும் ஒரு உத்தபுரம் சுவர் வெளிப்படையாக எழுப்பப் படலாம்.
மூன்று விதமான சுவர்கள் எங்கள் கிராமங்களின் உள்ளது.

ஒன்று...சாதி இந்துக்கள் மீனவ மக்களுக்கு எதிரான எழுப்பியிருக்கும் மனச் சுவர்.

இரண்டு...கிறிஸ்த மீனவ மக்களுக்கு எதிராக கிறிஸ்தவ நாடார்களும் கிறிஸ்தவ பாதிரிமார்களும் எழுப்பியிருக்கும் சுவர்.

மூன்று...எங்கள் இன மக்களான பரதவர்கள் அவர்களைப் போலவே ஒடுக்கப்படுகிற முக்குவ இன மக்களுக்கு எதிராக எழுப்பியிருக்கும் சுவர்.
வெளியில் தெரியாத இம்மாதிரி சாதிச் சுவர்களைத்தான் இன்றைய தலைமுறை தன் மூளைக்குள் ஏற்றி வைத்திருக்கிறது.படித்த ஆங்கிலம் தெரிந்த தலைமுறை கட்டப்பட்ட இந்த சுவர்களில் மின்சாரக் கம்பிகளை விஞ்ஞான அணுகுமுறையோடு நட்டு வைக்க நினைக்கிறது.கலகத்தை கொண்டு வர வேண்டிய காலமிது.

நக்சல்பாரிகளை ஓழிக்க முடியுமா?


டி.அருள் எழிலன்
"வர்க்கப் பகைவர்களைக் கொன்றொழித்து அவர்களின் இரத்தத்தில் கை நனைப்பவர்களே இறுதியில் புரட்சியாளர்களாக ஏற்றுக் கொள்ளப்படுவார்கள்.ஆகவே நீங்கள் கிராமங்களுக்குச் செல்லுங்கள் கிராமங்களில் ரகசிய குழுக்களை அமைத்து ஏழை எளிய மக்களிடம் அதிக வட்டிக்கு பணம் கொடுத்து சொத்தைப் பறிப்பவர்கள்,மோசமான நிலப்பிரபுக்கள்,பள்ளி,கோவில் நிலம் உள்ளிட்ட பொதுச் சொத்துக்களை அபகரிப்பவர்களை அழித்தொழிக்க வேண்டும்.அழித்தொழிப்பு நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்."
1969-ல் இரண்டாவது முறையாக தமிழகத்துக்கு வந்த நக்சல்பாரிகளின் நாயகன் சாருமஜூம்தார் தமிழகத்துக்கு வந்த போது தங்கள் தோழர்களிடம் ஆற்றிய உரையின் சாரம்தான் இது.சாருமஜூம்தாரின் வருகைக்குப் பிறகு தமிழகம் முழுக்க பண்ணை முதலாளிகள்,கந்து வட்டிக்காரர்கள்,பெண் கொடுமை செய்யும் மைனர்கள் என பலரும் அழித்தொழிக்கப் பட்டார்கள்.ஒடுக்கப்பட்ட விவாசாயக் கூலிகளோடு நக்சல்பாரிகள் இணைந்து நிகழ்த்திய இந்த கொலைகள் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்த போலீஸ்சுக்கும் நக்சல்பாரிகளுக்குமான மோதல் தொடங்கியது.எழுபதுகளில் தொடங்கிய நக்சல்பாரிகளின் போராட்டத்தை ஒடுக்க போலீஸ் அதன் பிரதான தலைவர்களை வேட்டையாடியது.தமிழகத்தில் எல்.அப்பு,ஏ.எம்.கோதண்டராமன்,புலவர் கலியபெருமாள் போன்றோரின் தலைமையில் துவங்கிய நக்சல்பாரிகளின் புதிய ஜனநாயக் புரட்சி போலீசால் ஒடுக்கப்பட்டு கால் நூற்றாண்டு காலம் கழிந்து விட்டது.எண்பதுகளோடு முடிந்து போனதாக சொல்லப்பட்ட நக்சல்பாரிகள் தேனி மாவட்டத்தின் முருகமலை வனப்பகுதிகளிலும் வருசநாட்டு மலைப் பகுதிகளிலும் வேர் விட்டிருக்கிறார்கள்.என பதறிப்போய் அவர்களை மீண்டும் வேட்டையாட கிளம்பியிருக்கிறது தமிழக போலீஸ்.
இது தொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய முதல்வர்‘‘இயர்க்கைப் பேரிடர்களின் போது எல்லா கட்சிகளும் இணைந்து ஒன்றாக செயல்படும்.அதைப் போலவே தீவீரவாதம் தலையெடுக்கும் போது அதைத் தவிர்க்கவும் தடுக்கவும் எல்லாக் கட்சிகளும் முன் வரவேண்டும்’’என்ற முதல்வர்.அவர்கள் ஏன் இந்த நிலைக்கு ஆளானார்கள்? அவர்கள் படிப்பறிவு இல்லாமல் இருப்பதற்கு இருப்பதற்கு என்ன காரணம்?வசதி இல்லை.வசதி இல்லாததற்கு என்ன காரணம் அதை ஆழமாக அந்த ஆணி வேரை தோண்டிப் பார்த்து அறிய வேண்டும்.அது அகற்றப்பட்டால் வருங்கால சமுதாயம் புரட்சிகர இளைஞர்களாக மாறாமல்.புதிய நாட்டை உருவாக்குகிற இளைஞர்களாக மாறுவார்கள்"என்றிருக்கிறார் முதல்வர்.
நக்சல்பாரி புரட்சியாளர்கள் பொதுவாக கம்யூனிஸ்டுகளாலும்.அரசதிகார மட்டங்களால் நக்சலைட்டுகள் என்றும் அழைக்கப்படும் ஆயுதமேந்திய இந்த இளைஞர்கள் யார்? இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்றால் அது இந்திய பொது உடமைக் கட்சியின் நீண்ட வரலாறு.இரத்தத்தாலும் தியாகத்தாலும் தோய்த்தெடுக்கப்பட்ட வீர வரலாறு என்றுதான் ஒரு தரப்பு மக்களால் இன்றும் நம்பப்படுகிறது.
1968-ல் மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் ஐக்கிய முன்னணியின் கூட்டணி அரசில் கம்யூனிஸ்டுகளும் இடம் பெற்றிருந்த போது டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நக்சல்பாரி என்னும் கிராமத்திலிருந்து வெடித்த அந்தக் குரல் சாருமஜூம்தாருடையது.கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாம் மட்ட தலைவராக இருந்த சாருவின் குரலை அவரது கட்சியே எதிர்பார்க்கவில்லை.பணக்காரர்களிடம் இருக்கும் நிலங்களைப் பிடுங்கி ஏழைகளுக்கு பங்கிட்டுக் கொடுக்க வேண்டும்.விவாசாயிகளே நேரடி நடவடிக்கையில் ஈடு பட்டு தங்களின் நிலத்தை பணக்காரர்களிடம் இருந்து எடுத்துக் கொள்வார்கள்.என அதிரடியாக அறிவிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்டது.சாருவின் இந்த அறிவிப்பு ஆயிரமாயிரம் இளைஞர்களை உரமேற்ற அவர்கள் கல்லூரிகளை விட்டு வெளியேறி மார்க்சிய லெனினிய கட்சியான நக்சல்பாரி இயக்கத்தில் இணைந்தார்கள்.பல இளைஞர்கள் குடும்பங்களைத் துறந்து வெளியேறினார்கள்.சாருமஜூம்தாரின் இந்த அதிரடி அறிவிப்பை அப்போது கொண்டாடியது சீன கம்யூனிஸ்ட் கட்சி.சாரு மஜூம்தாரின் இந்த அறிவிப்பை "வசந்தத்தின் இடி முழக்கம்"என பெயரிட்டு கௌரவப்படுத்தியது சீன கம்யூனிஸ்ட் கட்சி.வரலாறும் சாருமஜூம்தாரின் அந்த நக்சல்பாரி எழுச்சியை "வசந்தத்தின் இடி முழக்கம்"என்றே இன்று வரை பதிவு செய்கிறது.
ரஷ்யப் புரட்சியாளர் லெனினின் பிறந்த நாளான ஏப்ரல் இருபத்தி இரண்டாம் தேதி கல்கத்தவில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் நீண்ட கால மக்கள் யுத்தத்தை பிரகடனப்படுத்தி மார்க்ஸ்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியை சாருமஜூம்தார் துவக்கி வைத்து இன்று நாற்பதாண்டுகளுக்கு மேலாகி விட்டது.தமிழகத்தில் நக்சல்பாரி இயக்கத்தைப் பொறுத்த வரையில் அது எவளவு வேகமாக எழுந்து வந்ததோ அதே வேகத்தில் ஒரு பக்கம் பிளவைச் சந்தித்தது.இன்னொரு பக்கம் ஈரமிக்க அந்த தோழர்கள் போலீசால் வேட்டையாடப்பட்டார்கள்.சாருமஜூம்தார் தமிழகத்துக்கு வந்து அழித்தொழிப்பு நடவடிக்கையில் துரிதம் தேவை என அறிவித்த பிறகு பரவலாக பலர் அழிதொழிக்கப்பட கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக இருந்த தோழர் அப்பு காவல்துறையினரால் வேட்டையாடப்பட்டார்.நகச்ல்பாரிகள் சந்தித்த முதல் இழப்பும் இட்டு நிரப்ப முடியாத பேரிழப்பும் அதுதான்.கோதண்டராமன் போன்ற பக்குவம் மிக்க தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட சீராளன்,பாலன்,கோவிந்தன்,கண்ணாமணி போன்றோர் அடுத்தடுத்து போலீஸ் மோதலில் பலியாகி விழுந்தார்கள்.நக்சல்பாரிகளின் மூர்க்கமும் போலீசின் மூர்க்கமும் மோதிக் கொண்டது நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தமிழகம் முழுக்க எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் வேட்டையாடப்பட்டார்கள் அந்த வேட்டைக்கு தலைமை தாங்கியது முன்னாள் போலீஸ் அதிகாரியான தேவாரம்.இந்நிலையில் நக்சல்பாரி இயக்கத்தைத் தொடங்கிய சாருமஜூம்தார் 1972&ல் காவல்துறை மோதலில் கொல்லப்பட கட்சி உடைந்தது.தமிழகத்தில் நக்சலைட்டுகளை ஒழித்து விட்டதாக நிம்மதி பெருமூச்சு விட்டது தமிழக காவல்துறை.
அழித்தொழிப்பு கொள்கைக்கும் கட்சியின் சித்தாந்தத்துக்கும் போர் தொடங்கியது.நீங்கள் கிராமங்களுக்கு செல்கிறீர்கள் விவசாயக் கூலிகளோடு இணைந்து பணி செய்து ரகசியக் குழு அமைத்து விவசாயக் கூலிகளின் உதவியோடு பண்ணையாகளை கொல்கிறீர்கள்.பின்னர் அந்த கூலி விவசாயிகளை கட்சியில் இணைந்து கொண்டு தலைமறைவாகி விடுகிறீர்கள்.நீங்கள் எப்படி உங்கள் குடும்பங்களைத் துறந்து புரட்சிக்காக கிராமங்களுக்கு வந்தீர்களோ அப்படியே அந்த விவாசயக்கூலிகளும் குடும்பங்களை நிராதரவாக விட்டு விட்டு உங்களுடன் வந்து விடுகிறார்கள்.முன்னணி தோழர்கள் கொல்லப்படுகிறார்கள்.இது புரட்சிக்கு ஏற்பட்ட மிக மோசமான பின்னடைவு.ஆயுதங்களிலிருந்து அதிகாரம்தான் பிறக்கிறது சித்தாந்தமல்ல.மக்களை திரட்டி அவர்களின் ஒத்துழைப்போடு நடத்தப்படுவதுதான் புதிய ஜனநாயக் புரட்சியாக் இருக்கும் என முரண்பட்டு நின்றவர்கள்.நக்சல்பாரி அமைப்பின் அனுபவங்களோடு s.ஷீ.நீ என்றழைக்கப்படும் மார்க்ஸிய லெனினிய சித்தாந்த அடிப்படையிலான மாநில அமைப்புக் கமிட்டியை நிறுவினார்கள்.ஆயுதங்களை சுமந்து திரியும் சாகசவாதங்களை நம்பாமல் இவர்கள் கிராமங்களுக்குப் போய் மக்களை புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணி திரட்டுகிறார்கள்.
இந்தியா முழுக்க நக்சல்பாரி இயக்கம் பின்னடைவைச் சந்தித்த காலமது.கேரளாவில் அது முழுக்க தோல்வியைத் தளுவியது.இந்நிலையில்தான் ஆந்திராவில் கொண்டப்பள்ளி சீத்தாராமைய்யாவின் தலைமையில் இயங்கிய மக்கள் யுத்தக்குழுவும் பீஹாரைத் தலைமையிடமாக கொண்ட மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டரும் இணைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவோயிஸ்ட் என்கிற இந்தியா முழுமைக்குமான பரந்து பட்ட அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள்.முன்னர் நக்சல்பாரிகள் என்றழைக்கப்பட்டவர்கள் இன்று மாவோயிஸ்டுகள் என்று அறியப்படுகிறார்கள்.
"இந்தியாவின் 16 மாநிலங்களில் 172 மாவட்டங்களில் மாவோயிஸ்டுகளின் தாக்கம் உள்ளது.இது ஒட்டு மொத்த இந்தியப் பரப்பளவில் 48 சதவீதமாகும்" என தெஹல்கா இதழ் தெரிவிக்கிறது.அதிரடியாக கடந்த பத்தாண்டுகளில் மவோயிஸ்டுகள் வளர என்ன காரணம் என்றால்.எழுத்தாளர் அருந்ததிராய் இப்படிச் சொல்கிறார்."சாத்வீக அஹிம்சா அமைப்புகள் நமது ஜனநாயக அமைப்பின் கதவுகளை ஆண்டுக் கணக்கில் தட்டிக்கொண்டிருக்கிறார்கள்.அவ்வாறு தட்டித் தட்டி அவர்கள் கண்டது என்ன?போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான போராட்டமும் நர்மதை பாதுகாப்பு பிரச்சனையையும் எடுத்துக் கொள்ளுங்கள் வேறு எந்த பிரச்சனையையும் விட இந்த இரண்டுக்கும் ஊடகங்களின் ஆதரவும் பிரபலமான தலைமையும் இருந்தும் என்ன பிரயோஜனம் போராடியவர்களால் வெற்றிபெற முடியவில்லையே.அந்த மக்கள் போராட்ட வழிமுறைகளை மறுபரிசீலனை செய்ய விரும்புகிறார்கள்.மற்ற எல்லா வழிகளையும் முயன்று விரக்திதான் மிச்சம் என்ற நிலையில் மக்கள் இந்த வழியைத் தேர்ந்தெடுக்கும் போது நாம் அவர்களை கண்டிக்க முடியுமா?நந்திகிராம் மக்கள் தர்ணா நடத்திக் கொண்டு பாட்டுப்பாடிக் கொண்டு இருப்பார்களேயானால் மேற்கு வங்க அரசுதான் பணிந்திருக்குமா?"என்று கேட்கிறார் எழுத்தாளர் அருந்ததிராய்.
நாடு முழுக்க ஒரு இலட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட பிறகு மத்திய அரசு 60,000 கோடி பெருமான முள்ள விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்திருக்கிறது.நாடெங்கிலும் விவசாயிகளின் முதுகெலும்பு உடைக்கப்பட்டுக் கிடக்க தமிழகத்தில் தருமபுரி,சேலம்,மதுரை என எல்லா இடங்களிலும் வாழும் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளின் வாழ்க்கையையே குலைக்கும் கோர அரக்கனாக கந்து வட்டிக் கும்பல் கிராமங்கள் தோறும் முளைத்திருக்கிறது.சாதா வட்டியில் துவங்கிய இவர்களின் இந்த வட்டித் தொழில் மீட்டர் வட்டியாக வளர்ந்து இன்று ஆம்புலன்ஸ் வட்டியாக விவசாயிகளின் கழுத்தை நெறிக்கிறது.இவர்கள் வெறும் கந்து வட்டிக் கும்பல் அல்ல ரியல் எஸ்டேட் தொழில்தான் இவர்களுக்கு பிரதானம் வட்டிக்கு கொடுப்பது போல் கொடுத்து அதை ஆம்புலன்ஸ் வேகத்தில் எகிற வைத்து விவசாயியால் வாங்கிய கடனுக்கு வட்டி கூட செலுத்த முடியாத நிலை வரும் போது அவர்களிடம் இருந்து இருக்கிற நிலங்களையும் பிடுங்கிக் கொள்வதுதான் இந்த கந்துவட்டிக் கும்பலின் நோக்கம்.கந்துவட்டிக் கும்பலுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக இருந்தும் இவர்கள் சர்வசாதாரணமாக கிராமங்களில் ஏழை விவசாயிகளின் கழுத்தை நெறிக்கிறார்கள்.விளைவு நஷ்டப்பட்ட விவசாயம் கைமீறிப்போன கடன் என குடும்பத்தோடு தங்களின் பூர்வீக நிலத்திலிருந்து வெளியேறும் சூழல் இன்று தமிழக கிராமங்கள் முழுக்க நடக்கின்றன.
நிலரீதியிலான பிளவு மட்டுமல்ல சாதியால் பிளவு பட்ட தமிழ்ச் சமூகத்தின் நோய் கொஞ்சம் கூட சரியாக வில்லையோ என்றுதான் இன்றும் தோன்றுகிறது மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள உத்தப்புரத்தில் தலித்துக்களையும் சாதி இந்துக்களையும் பிரிக்கும் பத்தடிக்கும் மேலன உயரமுள்ள தடுப்புச் சுவர் மனித குலத்தின் அவமானச் சின்னமாக உயர்ந்து நிற்கிறது.1990 களில் எழுப்பப்பட்ட அந்தச் சுவருக்கு மேலே இப்போது இப்போது மின்சார வேலி அமைத்திருக்கிறார்கள்.தீண்டாமை புதிய புதிய முறையில் காலவளர்ச்சிக்கேற்ப நாவீனப்படுத்தப்பட்டு வருவதற்கு உத்தப்புரம் சாட்சி.
ஒரு காலத்தில் சாதி ஒடுக்குமுறையாலும் பொருளாதாரத்தாலும் பின்தங்கிய மாவட்டம் என அடையாளம் காணப்பட்ட தருமபுரிதான் நக்சல்பாரிகளின் கூடாரமாக இருந்தது.இன்று தமிழகம் முழுக்க மவோயிஸ்டுகள் பரவியிருக்கிறார்கள் என்றால் வறுமையும் ஏழ்மையும் எல்லா மாவட்டங்களையும் பின் தங்கிய மாவட்டங்களாக மாற்றியிருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.அதிமுக ஆட்சியில்தான் இந்நிலை அல்லது திமுக ஆட்சியில்தான் இந்நிலை என்றில்லை. உலகமயச் சூழலுக்குள் எப்போது இந்தியா அடியெடுத்து வைத்ததோ அப்போதே இந்தியச் சமூகம் சமுகம் பிளவுபடத் துவங்கிவிட்டது எனக் கருதுகிற சமூக ஆர்வலர்களும் உண்டு.
நிலம்,சாதிஆதிக்கம்,மறுக்கப்படும் நீதி,பாரபட்சமான கல்வி,வறுமை என எத்தனையோ சமூகக் காரணங்கள் மவோயிஸ்டுகளின் பெருக்கத்துக்கு பின்னணிக் காரணமாக அறியப்பட்டாலும் இவைகளை சரி செய்து விட்டால் நக்சல்பாரிகளோ,மாவோயிஸ்டுகளோ அழிந்து விடுவார்கள் என்கிற அரசின் கருத்துக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.ஏனென்றால் சாருமஜூம்தார் சோற்றுக்கிலாமல் பட்டினி கிடந்ததில்லை.மக்களின் பட்டினியைப் பார்த்துத்தான் அவரும் அவரை பின்பற்றிய இளைஞர்களும் விவாசாயிகளிடம் போனார்கள்.இது மாவோயிஸ்டுகளுக்கும் பொருந்தும்.தங்களின் சிகப்புச் சிந்தனையை உலகம் முழுக்க ஒரே குரலில்தான் பாடுகிறார்கள் இப்படி,
"பட்டினிக் கொடுஞ்சிறைக்குள்
பதறுகின்ற மனிதர்காள்
பாரில் கடையரே எழுங்கள்
வீறு கொண்ட தோழர்காள்!
கொட்டு முரசு கண்ட நம்
முழக்கம் எங்கும் முழங்கிட
பாடுவீர் சுயேட்சை கீதம் விடுதலைப் பிறந்தது"
பிரெஞ்ச் கவிஞன் யூஜின் பட்டியரின் இந்த பாடல் உலகத்தில் ஏழ்மையும் பாரபட்சமும் இருக்கும் வரை இந்தப் பாடல் பாட்டாளிகளால் அதன் நிறம் மாறாமல் பாடப்பட்டுக் கொண்டுதானே இருக்கும்.