தையல் நாயகியின் இல்லம்...


குடியிருப்புவாசிகளுக்கு அந்த மொட்டை மாடி வீட்டை பார்ப்பதே வினோத பொழுது போக்காக இருந்தது. அனேக நேரங்களில் குடியிருப்பு வாசிகளின் உரையாடலில் பெரும்பாலான நேரத்தை மெலீனாவின் வீட்டு சங்கதிகள் ஆக்ரமித்திருந்தது. ஒரே மாதிரி குருவிக் கூட்டை ஒத்த வீடுகளாக இருந்தாலும் மெலீனாவின் வீடு விநோதமான ஒரு வீடாகவே காட்சியளித்தது. அந்த வீட்டில் தான் அழகான மெலீனா வசிந்து வந்தாள் . அவளது ஒளிபடர்ந்த கண்களோ அழகான கூந்தலோ மேனியோ யாரையும் கிரங்கடித்து வீழ்த்திவிடுகிற ஒன்றல்ல. ஆனாலும் அவளது பார்வையில் விழவும் அவள் கவனிக்கத்தக்க செயல்களைச் செய்து விடுவதிலும் பலர் பிரயத்தனமாக இருந்தனர் . இப்படியான சூழலில் அவளது குருவி வீட்டிற்கு எதிரே இன்னொரு குருவி வீட்டில் நானும் வாழ்ந்து வந்தேன். எப்படியேனும் அவளை வசீகரித்துவிடும் எண்ணம் எனக்குள்ளும் இருந்தது .

மேல் மாடியில் இருக்கும் அவளது கூட்டை பார்த்தால் அசைந்தாடிய படி கிடக்கும் ஜன்னல் திரைகளின் ஒரங்கள் வழியே எப்போதேனும் அவள் தென்படுவாள். அவளது அறை இரவு பிரகாசமாக இருக்கும் . மெலீனாவின் அன்றாடப்பணிகளை நான் கண்காணிக்கத் தவறுவதில்லை. எப்போதும் நிர்ச்சலனமான அமைதி அந்த கூட்டில் பரவியிருக்கும் . அவளது இரண்டு குழந்தைகளின் சிரிப்பொலிகளை எப்போதும் கேடக முடிவதில்லை. எப்போதும் அவள் தையல் இயந்திரத்தில் இருப்பாள் . சில நேரங்களில் கிழிந்த துணிகளை தைத்துக் கொண்டிருப்பாள். குடியிருப்பு பெண்களின் உடைகளையும் தலை குனிந்தபடி வேகமாக தைத்துக் கொண்டிருப்பாள் . சில நேரம் அவளது மகன் சட்டையில் அறுந்து போன பொத்தானை கையால் தைத்துக் கொடுப்பாள். நான் பார்க்கும் பெரும்பாலான நேரங்களில் அவள் தைத்துக் கொண்டிருப்பதால் அவளுக்கு நான் ''சரியான தையல் நாயகி'' என்று பெயர் வைத்திருந்தேன் . வெகு சில நேரங்களில் பாத்திரம் கழுவுவதும் துவைத்த துணிகளை பால்கனியில் உலர்த்தவும் அவள் பால்கனிக்கு வருவதுண்டு. அப்போது அவளது முகத்தை முழுமையாக நான் பார்த்துவிட முடியும். ஆனால் இது அரிதான விஷயம் சில நேரம் குளித்து ஈரமான தன் கூந்தலை வெயிலில் உலர்த்துவாள் . அழகான அவளது கூந்தல் இடுப்பு வரை ஆடும். இம்மாதிரி நேரங்களில் நான் அவளை பார்ப்பது போக அவள் என்னை பார்க்கிறாளா ? எப்போதேனும் பார்த்திருக்கிறாளா? என்பதை எல்லாம் அருதியிட்டு சொல்ல முடியாது. அந்த குடியிருப்பில் உள்ள எல்லா அழகிகளையும் விட மெலீனா பேரழியாக திகழ்ந்தாள் . பழைய காங்கிரீட் அடுக்குமாடி குடியிருப்பில் நான் நிறைய பெண்களை பார்த்திருக்கிறேன். நான் அடிக்கடி சொல்வேன் ''மாப்ளே நமக்கெல்லாம் பெண்களை சைட் அடிக்கிற திராணி கிடையாது.'' ஆனால் மெலீனாவிடம் நான் அப்படி உணாந்ததில்லை. இரண்டு குழந்தைகளுக்கு தாயானா மெலீனாவை நான் ரசிப்பதை மிகவும் ரகசியமாக என் அறை நண்பர்களிடம் நான் மறைத்திருந்தேன் . ஒரு ரகசியத்தை பேணுவதைப் போல மேலீனா மீதான காதலை நீண்ட நாட்கள் என்னால் மறைக்க முடியவில்லை. ''மச்சான் நீயெல்லாம் கேடி ..இந்த விஷயத்துல மட்டும் நீ நல்லவனாக முடியாதுடீ. உன்னோட கடந்த கால பெண் வரலாற்றை திரும்பி பாப்பியாம்மா அடுத்த வீடு ஆண்டிலேர்ந்து பக்கத்து வீட்டு பாட்டி வரைக்கும் நீ வறுத்த கடலையை வரலாறு மறந்திடுமா?'' என்ற படி தனது மூன்றாவது லார்ஜ்ஜை அள்ளிப் பருகினான். நான் சொன்னேன் ''நான் யாரையும் காதலிக்கவில்லை எனக்கு இந்த ஹவுசிங் போர்டில் எல்லாம் காதலிக்க வேண்டிய அவசியமில்லை. பிரமாதமான அப்பார்ட்மெண்டில் உள்ள பணக்கார பெண்கள் என்னை காதலிக்கிராங்கடா. அவங்களோட அன்பு மட்டுமல்ல. காசும் கொடுப்பாங்க. ஒரு குழந்தை மாதிரி பார்த்துப்பாங்க, இனி மேல் என் மீது சேற்றை வீசாதடா'' என்று எச்சரித்து ஒய்ந்தேன். ஒரு வேளை இது உண்மையாக இருக்குமோ என்று பரந்தாமன் என்னுடன் எச்சரிக்கையாகவே பழகினான் . சில நேரம் எச்சரித்தான்.

மெலீனாவுக்கு ஒரு கணவன் உண்டு். ஊதிப்பெருத்த உடம்போடு அவன் அசைந்தாடிய படி வருவான். உப்பிப்பெருத்த அவனது வயிறு ஊறுகாய் பானை மாதிரி இருக்கும். மிகவும் அசிங்கமானவனாக மெலீனாவின் கணவன் இருந்தான். அவன் வீட்டிற்கு வருகிற நேரத்தை யாராலும் அவதானிக்க முடியாது. பெரும் பாலும் அவன் தள்ளாடிய படி வந்து போவதாக தெரியும். நகரின் பிரதான கடை வீதியொன்றில் அவன் ஆபரணப் பொருட்கள் விற்கும் கடையொன்று வைத்திருப்பதாகவும், அதில் அவனுக்கு நாளொன்றுக்கு சில நூறு ரூபாய்கள் கிடைப்பதாகவும், எப்போதாவது அவன் கடையிலிருந்து அழகான கொண்டை ஊசிகளையும் ரப்பர் வளையலகளையும் மெலீனாவிற்கு பரிசளிப்பான் என்று குடியிருப்பு வாசிகளின் பேச்சில் இருந்து தெரிந்து கொள்ள முடிந்தது . மெலீனாவின் மகள் ஏஞ்சல் பள்ளிக்குச் செல்லும் போது போடப்படும் இரட்டை ஜடையில் ரப்பர் வளையங்களை தன் செல்ல மகளுக்கு போட்டு விடுவாள். அது மெலீனாவின் கணவன் கொடுத்ததாகவும் இருக்கலாம். பின்னிரவில் தள்ளாடிய படி படியேறி போகும் போது இறுக்க அடைக்கப்பட்ட கதவுகள் வழியே அவன் மீதான போதை வாசனையும் கடந்து போகும் யாருக்கும் அது தொந்தரவான ஒன்றாக இருக்காது. ஏனென்றால் அவன் யாருடைய மனைவியையும் கெட்டவார்த்தைகளால் திட்ட மாட்டான் . போதை அதிகமாகிவிடும் நாட்களில் மெலீனாவைப் பற்றி முனங்கியபடி வருவான். யாராவது எதிர்பட்டால் மிகவும் அமைதியாக கடந்து போவான். பின்னர் திட்ட துவங்குவான். மெலீனாவை துரோகி என்பான். நடத்தை கெட்ட நன்றி கெட்ட ஒழுக்கம் கெட்ட இரக்கம் இல்லாத பிடாறி என்றும் வசவுவான் . தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட ஒரு சோம்பேறி என்றும் இந்த குழந்தைகளை மெலீனாவால் ஒழுங்கான பிள்ளைகளாக வளர்க்க முடியாதென்றும் குற்றம் சுமத்துவான் . ஒரு காட்டு மிருகத்தைப்போல உறுமுவான். அவன் திட்டுவது குறித்தும் உறுமுவது குறித்தும் மெலீனா சில நேரம் உதட்டின் ஒரமாக வீசக்கூடிய ஏளனப் புன்னகையை வீசுகிறாளா என்பதை நான் இன்றுவரை கவனிக்க முடியவில்லை . காரணம் இம்மாதிரி நேரங்களில் தன் வீட்டில் எரியும் மஞ்சள் விளக்குகளை அணைத்து விடுவாள். வீட்டிற்கு வெளியிலும் சரி வீட்டிற்குள்ளும் சரி அவளது உறவுகள் நீண்ட துன்பமான இரவுகளாக இருக்கும் . பெரும்பாலான நேரங்களில் அவளுக்கு விழுகிற அடிகளையும் உதைகளையும் தாங்க முடியாமல் தன் குழந்தைகளை எடுத்து வந்து தானும் பால்கனியில் படுத்துக் கொள்வாள் . அவனின் உளரல்களும் ஊழைச்சத்தங்களும் அடங்கிய பிறகு வலியும் வேதனையும் நிறைந்த நீண்ட இரவில் எப்போது வீட்டுக்குள் சென்று உறங்கிப்போவாள் என்பதையும் அறிய முடியாது. விசும்பல்களுடன் கூடிய இரவாக அவளது எல்லா இரவுகளும் கழிந்தது. இவ்விதமாய் அவள் வாழ நேர்ந்தது. ''பொம்பளண்ணா குடியானவங்கிட்ட அடிவாங்குனா?அழ மாட்டாளா? இவ என்ன ஜென்மமோ?'' என்று கிழவி ஒருத்தி தண்ணீர் குழாயில் வைத்து மெலீனாவின் கல்நெஞ்சம் குறித்து கதைத்தாள் . ஒவ்வொரு நாளும் அவள் அடிவாங்கும் போதும் மெலீனா பற்றிய கதைகள் உலவின. ஆனால் அவள் இப்படி அப்படி ஒன்றும் நடக்காதது போல மெல்லிய புன்னகையை சிந்தியபடி வாழ்ந்தாள் . அந்த காங்கிரீட் கட்டிடங்களிடையே பலரது கண்கள் அவளை பார்த்துக் கொண்டிருந்தன.

அன்று இரவும் குடியின் நிமித்தம் நாங்கள் கூடியிருந்தோம். போதையின் போக்கிலும் வழமையான யதார்த்தமான பேச்சின் போக்கிலும் பெண்களும் அரசியலும் எங்கள் பேச்சில் பெரும் பங்கை ஆகரமித்திருந்தார்கள். நான் மெலீனாவின் வாழ்க்கையை பற்றி சொன்னேன். ''எனக்கு அவங்களை பிடிக்கும். அவங்க கிட்ட பழக முடிஞ்சா ஆறுதலா இருக்கலாம் இல்லியா மச்சான்'' தீர்ந்து போயிருந்த ஒட்கா பாட்டிலை உருட்டிக் கொண்டிருந்த முருகன் அதை தன் சுண்டு விரலை கொண்டு அதன் வாயை குத்தி நிறுத்தி விட்டு என்னை பார்த்து கேட்டான். ''நீ அந்தம்மாவுக்கு ஆறுதலா இருக்கப் போறீயா இல்லாட்டி அந்தம்மாவை உனக்கு ஆறுதலா மாத்தப்போறீயா? முதல்ல இன்னொரு ஒட்கா வாங்கு. மத்ததை அப்புறம் பேசலாம்'' என அடம் பிடித்தான். பன்னிரெண்டு மணிக்கு மேல் டாஸ்மார்க் கடை மூடிவிடுவார்கள் என்பதை சொல்லி பாட்டில் சாத்தியப் படாது என தடுத்து மறித்தேன். ''நீ ஒரு கள்ளக்காதலன். ஏற்கனவே உன்னோட இரண்டு காதலிகளும் உன்னை விட்டுட்டு ஒடிப்போயிட்டாங்க. அதை நீ மறக்கக்கூடாது'' என இம்முறையும் எச்சரித்தான். ''இதுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. நிரந்தரமா ஒரு பொண்ணு என்னை லவ் பண்ணணும்ணோ நான் ஒரு பொண்ணை காதலிக்கணும்ணோ ஒரு கண்டிஷனும் கிடையாது. எனக்கு மெலீனா மீது ஒரு ஈர்ப்பு இருக்கிறது நான் அவளை கவனித்துக் கொண்டிருக்கிறேன்'' என்றபடி பேசி அந்த இரவை கழித்தோம். துர் தேவதைகள் அந்த இரவை சூழ்ந்திருந்தார்கள். காலையில் எழுந்த போது எனக்கும் முருகனுக்கும் ஒரே தலைவலி. அன்று பகல் முழுக்க முருகன் என் அறையிலேயே இருக்க நேர்ந்ததால் அவன் மெலீனாவை பார்க்க வாய்த்தது. மச்சான் சூப்பர்டா....என்றான். அழகான அந்த பெண்ணின் கணவன் ஒரு குடிகாரன் என்றும் அவனால் துன்பமான ஒரு வாழ்க்கை அவளுக்கு வாய்த்ததால் அவளும் அவளுடைய குழந்தைகளான மகளும் மகனும் துன்பச் சூழலில் வாழ்வதாகவும் கலகலப்பில்லாமல் அந்த வீடு ஒரு சூனியகாரியின் வீட்டைப் போல இருப்பதாகவும் அவளுக்கு எவ்விதமான சந்தோசமும் வாழ்க்கையில் இல்லை என்றும் . ஒரு சந்தர்ப்பத்தில் நான் அவளுக்கு உறுதுணையாக இருக்க ப்ரியப்படுவதாகவும் நான் முருகனிடம் சொன்னேன்.

மெலீனா கடைத்தெருவுக்கு போய் வந்தாள். கொஞ்சம் கிழங்குகளையும் காய்கரிகளையும் வாங்கி வந்தாள். நீல நிறத்தில் இரவு ஆடையை அவள் அணிந்திருந்தாள். கடந்த சில நாட்களாகவே எந்நேரமும் அவளது வீட்டுக்குள்ளிருந்து திட்டும் ஊளைச் சத்தமும் வசவுகளும் கேட்டுக் கொண்டிருந்தது. மெலீனாவின் கணவனின் தொல்லைகள் அவளுக்கு நாட்பட நாட்பட அதிகரித்து வந்தது. அவளது இரண்டு குழந்தைகளும் எந்நேரமும் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்கள். கோடை விடுமுறை அந்த குழந்தைகளுக்கு அதிகமான உஷ்ணத்தையும் புழுக்கத்தையும் கொடுத்தது. பரிதாபமாக ஆடிக் களைத்துப் போய் வரும் தன் குழந்தைகளை அவள் மார்போடு அணைத்துக் கொள்வாள். பின்னர் தன் மடியில் அமர்த்தி அவர்களுக்கு தான் வாங்கி வந்த பண்டங்களை உண்ணக் கொடுப்பாள். பின்னர் மகளை நினைத்து விசும்பிக் கொண்டிருப்பாள். தங்கையை எப்போதும் சந்தோசமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என தன் மகனின் முடியைக் கோதிய படி சொல்வாள். பின்னர் இரு குழந்தைகளையும் சேலைக்குள் பொதிந்து பால்கனியில் கிடத்திவிட்டு அவளும் படுத்துக்கொள்வாள். இப்போது கொஞ்ச நாட்களாகவே இது தான் நடக்கிறது. குடியிருப்போர் சங்கத்தின் தலைவன் வந்து மெலீனாவிடம் அந்த வீட்டை காலி செய்துவிட்டு வேறு எங்காவது போய் விட வேண்டும் என்றும், அப்படி போகும் போது தனது குடிகார கணவனையும் தவறாமல் கூடவே அழைத்து சென்றுவிட வேண்டும் என்றும் சொல்லிவிட்டுப் போனான். எக்காரணம் கொண்டும் அந்த வீட்டை விட்டு மெலீனா செல்லக்கூடாதென்றும் இந்த வீட்டிலேயே அவளும் குழந்தைகளும் வசிக்க வேண்டும் என்றும், குடிகார கணவனை வேண்டுமென்றால் குடியிருப்பு சங்க தலைவர் வெளியேற்றிக் கொள்ளலாம் என்பதாகவும் என் கருத்து இருந்தது. இப்படியே சில இரவுகளும் சில பகல்களும் கழிந்து மீண்டும் இரவு வந்திருந்தது.

அன்று மாலையே மெலீனாவின் வீட்டுக் கதவுகள் மூடப்பட்டு விட்டன. பால்கனியின் ஒரத்து ஜன்னல்களும் அடைக்கப்பட்டு இருந்தன. பால்கனியின் கொடியில் நீல நிற இரவு ஆடை ஒன்று காய்ந்து கொண்டிருந்தது. அன்றைக்கு குடிப்பதற்கு காசு இல்லாததால் நாங்கள் அன்று குடிக்கவில்லை. அனத்தவும் எதுவும் விஷயங்கள் இல்லாதிருந்ததால் நாங்களும் தூங்கி விட்டிருந்தோம். அகாலமான அந்த இரவில் மெலீனாவின் அலரல் குடியிருப்பு வாசிகளை பீதியாய் விழிப்படைய செய்தது. வழக்கம் போல அவளது குடிகார கணவன் அவளை அடிக்கிறான் எனறு பார்த்தால் இது நாள் வரை பட்ட அடிகளுக்காக மெலீனா அலறி அழுததில்லையே... இது வேறு மாதிரியான அலறலாக இருந்த படியால் எழுந்து விளக்கை போட்ட போது அதிகாலை இரண்டு மணியாக இருந்தது. அவளது வீட்டில் சில மனிதர்களின் நடமாட்டம் இருந்தது, அவசரமும் பீதியுமாக சிலர் இங்குமங்கும் ஒட குறுகலான மாடியேறி நான் அங்கு நுழைந்தேன். அந்த வீட்டில் நடுப்பகுதியில் மெலீனாவின் கணவன் கிடத்தி வைக்கப்பட்டிருந்த மலைபோல கிடந்தான். ஆழ்ந்த நித்திரையில் இருந்த அவளது இரண்டு குழந்தைகளையும் எடுத்துப் போய் பக்கத்து வீட்டில் படுக்க வைத்தனர். மெலீனா வீட்டின் இரண்டு மூலைகளிலும் ஒடி ஒடி அழுது கொண்டிருந்தாள். சிலர் அவனை மருத்துவமனைக்கு கொண்டு போன போது ஏற்கனவே அவன் மரித்துப்போனதாக மருத்துவமனையில் பரிசோதித்துவிட்டு சொன்னார்கள். ஒரு பிணத்துக்குண்டான அலங்காரங்கள் எதுவும் இன்றி அவன் கீழே கிடத்தப்பட்டிருந்தான். கணவன் என இது நாள் வரை வாழ்ந்த அதன் அருகே மெலீனாவுக்கு ஒரு இருக்கை அமைத்துக் கொடுத்தார்கள். அதில் அவள் அமர்ந்து கொண்டாள். வருகிறவர்கள் அவளது கைகளை பிடித்து ஆறுதல் சொல்லி சென்றனர். குடியிருப்பு வாசிகளுக்கு பேசுவதற்கான விஷயம் கிடைத்துவிட்டது. குடிகாரக்கணவன் மர்மம் ஆன முறையில் இறந்து போனதாக குடியிருப்பில் பேசிக்கொண்டார்கள். அவள் தன் கணவனுக்காக அழவில்லை என்றும் இம்மாதிரி நேரங்களில் எப்படி பெண்களால் இறுக்கமாக நடந்து கொள்ள முடிகிறது என்றும் சிலர் கேள்விகளை தங்களுக்குள் கேட்டுக்கொண்டனர். தன் கணவனின் இறுதிச் சடங்குகளை மெலீனா நடத்தி முடித்தாள். அவளது குழந்தைகள் அங்கு பாதி எரிந்து அணைந்திருந்த மெழுகுவர்த்திகளையும் சாம்பிராணி ஊது பத்திகளையும் எடுத்து வந்து விளையாடிக்கொண்டிருந்தனர். இப்போது அந்த மொட்டை மாடி வீடு காலியாக இருந்தது. இருக்க அடைக்கப்பட்ட அந்த ஜன்னலையும் பால்கனியையும் எவ்வளவு பார்த்தாலும் அங்கு மெலீனா தென்படுவதே இல்லை. துணி காயாத கொடி காற்றில் ஆடிய படி கிடக்கிறது. அவள் ஊருக்கு போய் விட்டாள். இன்னும் அவளைப் பற்றிய கதைகள் அந்த குடியிருப்பில் உலவிய படிதான் இருக்கிறது. பூட்டப்பட்ட மெலீனாவின் வீட்டில் எப்போதும் ஒரு மஞ்சள் விளக்கு எரிந்து கொண்டே இருக்கிறது. இன்னொரு மெலீனா அந்த வீட்டிற்கு வரும் வரை நீத்தார் நினைவாக அந்த மஞ்சள் விளக்கு எரிந்து கொண்டே இருக்கும் எரியாமல் கூட....