ஹே....ராம் தேவ்...உனது கோபத்தின் விலை என்ன?


மத்யமரின் கைப்புள்ள அன்னா அசாரே ஊழலுக்கு எதிராகப் போராடியதை அடுத்து பாபா ராம்தேவ் கருப்புப்பணத்தை மீட்க சத்தியாகிரகப் போராட்டம் என்று சொல்லப்படுகிற உண்ணாவிரத்தை டில்லி ராமலீலா மைதானத்தில் துவங்கினார். கருப்புப் பணத்தை மீட்க வழக்கம் போல வல்லுநர் குழு அமைக்கப்படும் என்ற உத்திரவாதத்தை எழுத்து மூலமாக பெற்றுக் கொண்டால் உண்ணாவிரத்தை கைவிடுவேன் என்ற ராம்தேவின் கோரிக்கையை ஏற்று அப்படியான ஒரு கடித்தத்தை மத்திய அரசு கொடுத்த பின்னரும் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்த ராம்தாவ் கூட்டத்தை அதிகாலை ஒரு மணிக்கு கலைத்து விரட்டியிருக்கிறது. டில்லி போலீஸ் இப்போது டில்லியில் கலவர அபாயம் காரணமாக 144 தடை உத்தரவு. ராம்தேவ் 15 நாட்களுக்கு டில்லிக்குள் நுழையத் தடை. அவரைக் கொண்டு போய் ஹரித்துவாரில் உள்ள அவரது ஆஸ்ரமத்தில் விட அங்கேயே தனது இந்துப் பரிவாரங்களோடு உண்ணாவிரதம் இருக்கிறார் ராம்தேவ். பாபர் மசூதி இடிப்புக்கு முன்னர் நாடு முழுக்க பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டது போன்று இப்போது இந்து பரிவாரங்கள் டில்லிச் சம்பவங்களை இந்திய வரலாற்றில் கருப்பு நாள் என்றும், அந்நிய பெண்ணான சோனியாவுக்கு இந்தியாவின் மீது அன்பு இல்லை என்றும் அறைகூவல் விடுகிறார்கள்.

ஒரு சாராசரியான யோகா ஆசாமியால் கூட சுமார் பதினைந்து நாட்கள் வரை உண்ணாவிரதம் இருக்க முடியும். ராம் தேவால் ஒரு மாதம் கூட இருக்க முடியும் என்னும் நிலையில் அன்னா அசாரே போன்ற காங்கிரசின் கைப்புள்ளைகளை சமாளிக்க பிஜேபி கண்டு பிடித்த யோகா குருதான் இந்த ராம்தேவ். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை இந்த ராம்தேவ் என்பவரை இந்தியச் சமூகங்கள் அறிந்திருக்க வில்லை. இந்த திடீர் சாமியாரை சீனுக்கு கொண்டு வந்து பாப்புலராக்கியது அன்புமணி ராம்தாஸ்தான். அவர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போதுதான் ராம்தேவை ஒரு இந்திய சமூகங்களில் ரோல் மாடலாகவும், தனது உடல் தூய்மை குடும்ப பாரம்பரீய கோட்பாட்டு அறிப்புகளுக்கான வடிகாலாகவும் வரித்துக் கொண்டார். அதிலிருந்தே ராம்தேவ் இந்தியா முழுக்க பிரபலமானார். ராம்தேவின் உண்ணாவிரத்தை ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி. பஜ்ரங்தள், பிஜேபி போன்ற இந்துத்துவக் குழுக்களும் தூய்மைவாத பார்ப்பன அமைப்பான பிரம்மகுமாரிகள்,இராமகிருஷ்ணா மடம் போன்ற பார்ப்பன இந்துமத அமைப்புகளும் ஆதரிக்கின்றன, இது போக கரசேவை என்னும் பெயரில் காவி ரௌடிப் படையை அயோத்தி நோக்கித் திரட்டி பாபர் மசூதியை இடிக்க கூட்டம் சேர்த்த சாத்வி ரிதம்பரா என்னும் கிரிமினல் குற்றவாளியான பெண் சாமியார் உள்ளிட்ட சில கரசேவை கிரிமனல்களும் ராம்தேவோடு மேடையைப் பாகிர்ந்திருக்கிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை மேற்படி இந்துத்துவ அமைப்புகளோடு இந்து முன்னணி, ஆதி பராசக்தி சக்தி பீடம், அம்ம பகவான் பக்தி சபை உள்ளிட்ட அமைப்புகள் ஆதரிக்கின்றன என்பதிலிருந்தே இது பிஜேபியின் திட்டமிடப்பட்ட உண்ணாவிரதம் என்பதை ஊகிக்க முடிகிறது. ஊழலை ஒழித்து கருப்புப் பணத்தை மீட்டு தேசிய சொத்தாக அதை அறிவிக்க வேண்டும் என்பதே பொதுவான இவர்களின் கோரிக்கை.


சுவிஸ் வங்கி உண்மை நிலை என்ன?


சுவிஸ் வங்கியில் மட்டுமேதான் இந்திய பெருமுதலைகளின் கருப்புப் பணம் இருக்கிறதென்றும். அதை மத்திய அரசால் மீட்டு விட முடியும் என்றும் இவர்கள் மக்களை நம்ப வைக்கிறார்கள். சரி அது என்ன சுவிஸ் வங்கி ? நம்மூரில் உள்ள இந்தியன் வங்கி, மெர்க்கண்டைல் வங்கி மாதிரியா என்றால் இல்லை. உலகெங்கிலும் உள்ள பெரும் பண்ணைகள் தேவைக்கதிகமான பணங்களை என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்த போது, சுவிட்சர்லாந்து அரசோ ஒரு குறிப்பிட்டத் தொகைக்கு மேல் கருப்புப் பணத்தை தங்கள் நாட்டு வங்கிகளில் முதலிடுபவர்கள் எங்களுக்கு வரி செலுத்த வேண்டியதில்லை என்பதோடு அவர்கள் குறித்த ரகசியங்களும் பேணப்படும் என்று அதற்கான சட்ட உத்திரவாதத்தையும் வழங்கி தங்கள் நாட்டு வங்கிகளில் பணம் முதலிட உலகெங்கிலும் உள்ள கருப்புப் பண முதலைகளை அழைத்தது. உலகெங்கிலும் உள்ள கோடீஸ்வரர்கள் தங்களின் கருப்புப் பணங்களைக் கொண்டு போய் சுவிஸ் நாட்டு வங்கிகளில் பதுக்கினார்கள். சுவிஸ் நாட்டிலுள்ள வங்கிகளில் மட்டுமல்ல உலெகெங்கிலும் உள்ள குட்டிக் குட்டி தீவுகளில் கூட இம்மாதிரி வங்கிகள் இருக்கிறது. நரசிம்மராவின் ஆட்சிக்காலத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கிய செயின்ட் கிட்ஸ் வழக்குக் கூட இம்மாதிரியான ஒன்றுதான் செயின்ட் கிட்ஸ் என்பது மத்திய அமெரிக்காவில் உள்ள கரீபியன் தீவுக் கூட்டங்களில் ஒன்று. செயிண்ட் கிட்ஸ் மாதிரி செயின்ட் நேவீஸ், கிறிஸ்டோபர், லூசியா, டிரினிடாட் என பல பெயர்களால் இத் தீவுகள் அழைக்கப்படுகின்றன. பெரும்பாலான ரஷ்ய, இந்திய முதலாளிகள் கருப்புப் பணத்துக்கு பாதுகாப்பு கருதி இத்தீவுகளில் உள்ள வங்கிகளில் ரகசிய கணக்கு துவங்குவதைக் காட்டிலும் சுவிட்சர்லாந்து வங்கிகளே கருப்புப் பணத்துக்கு பாதுகாப்பு என நினைத்து அங்கு கொண்டு போய் பத்திரமாகப் பதுக்கி வைத்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது. அந்த வகையில் சுவிஸ் நாட்டில் உள்ள முக்கியமான வங்கியான் யூ,பி,எஸ் வங்கியில் மட்டும் சுமார் 72 லட்சம் கோடி அளவிலான தொகை இந்திய விஐபி க்களால் வைக்கப்பட்டுள்ளது என அந்த வங்கியே அமெரிக்காவுக்கு வழங்கிய ஆவணம் ஒன்றில் தெரிவிக்க அதுதான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபியின் ஒரு கோஷமாக மாற்றப்பட்டது.பின்னர் காங்கிரஸ் வென்று நிதியமைச்சராக பிரணாப்முகர்ஜி பொறுப்பேற்ற பின்னர் கண் துடைப்புக்காக சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் வைத்துள்ள கருப்புப் பணம் குறித்த விபரங்களை சுவிட்சர்லாந்து அரசிடம் கேட்ட போது, சுவிஸ் அரசு. ‘‘இந்திய அரசு தனது நாட்டு டெலிபோன் டைரக்டரியை எங்களிடம் தந்து, அதில் உள்ளவர்களின் பெயரில் ரகசிய கணக்கு இருக்கிறதா என்று கேட்கலாம் என்று நினைத்தால், அது நடக்காது. அதை சுவிஸ் நாட்டு சட்டமும் அனுமதிக்காது.எனவே, ரகசிய கணக்கு வைத்துள்ளவர்களின் பட்டியலை கேட்டு இந்தியா எங்களை அணுக வேண்டாம்” என்று நெத்தியடியாகக் கூறியது சுவிஸ் அரசு.




இந்துக்களுக்காக அழுகிறவர்கள் இவர்களா?


சரி ஏழு கடல் தாண்டி ஏழெட்டு மலைதாண்டி சுவிஸ் நாட்டில் இருக்கும் பணத்தை மீட்பது இருக்கட்டும் உள்ளூரில் ஆஸ்ரமங்கள், மடாலயங்கள், அறக்கட்டளைகள் என்ற பெயரில் சுவிஸ் வங்கியில் முடங்கியிருக்கும் கருப்புப் பணத்திற்கு நிகரான பணத்தை காங்கிரசோ, பிஜேபியோ மீட்டு விடலாமே? அதைச் செய்ய பிளைட் ஏறிப் போக வேண்டிய அவசியமே இல்லையே? சுவிஸ் வங்கியில் உள்ள கருப்புப் பணம் குறித்துப் பேசும் ராம்தேவுக்குச் சொந்தமான அறக்கட்டளையின் சொத்து மதிப்பு சுமார் 20,000 கோடிக்கு மேல் என்கிறார்கள். சாய்பாபாவில் தொடங்கி வேதாந்தி உள்ளிட்ட பெரும்பலான இந்துச் சாமியார்களின் ஆஸ்ரமங்கள் உள்ளூரின் சுவிஸ் வங்கிகளாகவே செயல்படுகின்றன, கருப்புப் பணத்தை முடக்குவதற்காகவே இவர்கள் அறக்கட்டளை என்ற போர்வையில் சாமியார்களாக உலாவருகிறார்கள். பெரும் நிலப்பிரபுக்களாகவும் இந்திய பெரு முதலாளிகளாகவும் இருக்கும் பிஜேபி, காங்கிரஸ் பிரமுகர்களின் பெருமளவு கள்ளப் பணங்கள் இந்த அறக்கட்டைகளில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. இப்படி பெரும் பண முதலைகளின் கருப்புப் பண முதலைகள்தான் இன்றைய இந்தியாவின் போராட்ட நாயகர்கள். முன்னர் இவர்கள் மிலேச்ச கிறிஸ்தவர்களாலும், வந்தேறி முஸ்லீம்களாலும் இந்தியாவுக்கு ஆபத்து என்று இந்துக்களை ஒன்று திரட்டினார்கள். மசூதியை இடித்தார்கள். குஜராத்தில் இனப்படுகொலை புரிந்தார்கள். இன்று இவர்களே ஊழலுக்கு எதிராகப் போராடுகிறார்கள்.

ஆனால் இவர்களின் காதுகளுக்கு கோடிக்கணக்கான பெரும்பான்மை இந்து மக்களின் ஓலங்கள் கேட்பதில்லை. குஜராத்திலும், ஒரிசாவிலும்,மத்திய பிரதேசத்திலும் எரித்துக் கொல்லப்பட்ட முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள்,தலித்துக்களின் பிணங்களை வைத்து பெரும்பான்மை நெருப்பை எரிய விட்ட கும்பலால் அதை ஒரு கட்டத்திற்கு மேல் நீடித்துச் செல்ல முடியவில்லை. தனியார், தாராளமயக் கொள்கையின் விளைவாய் விளை நிலங்களை இழந்த பெரும்பான்மை இந்து ஏழை மக்களின் ஓலமும், பன்னாட்டு நிறுவனங்களுக்காய் பருத்தி விளைவித்து பின்னர் விவசாயம் செய்த போது விளை பொருளுக்கு விலை இல்லாமல் தற்கொலை செய்து கொண்ட ஆயிராமாயிரம் ஏழை இந்துக்களின் ஓலங்கள் இந்த காவிச் சாமியர்களுக்கோ, இந்துப் பாசிசக் கும்பலுக்கோ கேட்பதில்லை. நாடெங்கிலும் துறைமுகங்கள், அணு உலைகள், சுரங்கங்கள், மேலாண்மை பொருளாதார மண்டலங்கள், கனிமக் கொள்ளை என்னும் பெயரில் மக்களிடமிருந்து அக்கிரமான முறையில் பறிக்கப்பட்ட நிலங்கள் பற்றியோ, ஆக்ரமிப்பை அகற்றுகிறோம் என்ற பெயரில் நடைபாதை இந்து வியாபாரிகள், வீடற்ற இந்து ஏழைகள் கோடிக்கணக்கில் தூக்கி வீசப்பட்டது குறித்தோ ராம்தேவ் உள்ளிட்ட இந்துத்துவக் கும்பலுக்கு அக்கறை இல்லை.சமீபத்தில் அமெரிக்காவில் பிடிபட்ட தீவீரவாதி ஹெட்லியில் வாக்குமூலத்தையும் நாம் நினைவுபடுத்துவது நல்லது. அவர் இந்தியாவில் உள்ள இந்துச் சாமியார்களுக்கும் தனக்கும் உள்ள தொடர்பை அம்பலப்படுத்துகிறார். அதில் சிவசேனாவைச் சாந்த ஒரு இரண்டாம் மட்டத் தலைவருடன் பன்னாட்டு நிறுவனங்களின் ஏஜெண்டாக அறிமுகமாகிறார் தீவிரவாதி ஹெட்லி. இந்தியாவில் மக்கள் விளைநிலங்கள் உள்ளிட்ட வளங்களை பன்னாட்டு நிறுவங்களுக்கு தன்னால் விலைபேசித் தர முடியும், முதலீடுகளைப் பெற்றுத்தர முடியும் என்று ஹெட்லிக்கு உறுதியளிக்கிறார் அந்த சிவசேனா பிரமுகர். ஹெட்லியின் நோக்கம் பால்தாக்கரேயைக் கொல்வது அல்லது இங்குள்ள இந்துத் தலைவர்களைக் கொல்வது அதற்காகத்தான் அவர் பன்னாட்டு ஏஜெண்ட் என்று சிவசேனா தலைவருடன் பழகுகிறார். ஆனால் இந்த தேசப்பற்றாளார்களான சிவசேனா கும்பலோ இந்து மக்களின் நிலங்களை அடிமாட்டு விலைக்குப் பேசியும் அடியாள் பலத்தை பயன்படுத்தி பிடுங்கி பன்னாட்டு நிறுவங்களுக்குக் கொடுக்கவும் பேரம் பேசுகிறார். இதுதான் இந்த கும்பலின் தேச பக்தி. இந்து மக்களிடம் இவர்கள் காட்டும் அன்பும் இதுதான்.

தனியார் தாராளமயக் கொள்ளைக்காக திறந்து விடப்பட்டுள்ள தாராளச் சந்தையின் ஒரு அங்கமாகவும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு தரகு வேலை பார்க்கும் அரசியல் தரகர்களின் கூட்டுக் கொள்ளையுமே ஊழல். ஒட்டு மொத்த நாடும் பன்னாட்டு நிறுவனங்களின் நவீன மறுகாலனியாக மாற்றப்படும் சூழலில் அதன் ஒரு அங்கமாக மட்டுமே ஊழலை நாம் காண முடியும். அந்த ஊழலில் காங்கிரசும், பிஜேபியும் கூட்டுக்களவாணிகள் என்பதை மறைத்து விட்டு சாமியார்களை வைத்து ஊழல்தான் இந்தியாவின் தனித்த பிரச்சனை, ஊழலை ஒழித்து விட்டால் நாடும் மக்களும் முன்னேறி விடுவார்கள் என்றும் ஊதிப் பெருக்குகிறார்கள். தொண்ணூறுகளில் இந்துக் கும்பல் முன் வைத்த ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே மதம் என்ற கோஷத்தை இன்று இந்தியாவில் முன் வைக்க முடியாது.

ஏனென்றால் பெரும் கோடீஸ்வர மேல் வர்க்கம், பணக்கார வர்க்கம், மேல் மத்திய தரவர்க்கம், கீழ் மத்தியதரவர்க்கம், மத்தியதரவர்க்கம், என்று மக்கள் பிளவுண்டிருக்கிறார்கள். பட்டினியின் விளிம்பில் பெரும்பலான இந்து மக்கள் தள்ளப்பட்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் கோடீஸ்வரக் கும்பலோ நாடு தங்களால் முன்னேறுகிறது என்ற மாயையை கட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறது. இந்த முரணை அரசியல் தளத்தில் எதிர்கொள்ள முடியாத இந்து மதக் கும்பல் இப்போது ஒரே நாடு ஒரே மக்கள் ஒரே மதம் என்ற கோஷத்தை முன் வைத்தால் ஆமாடா நானும் இந்து நீயும் இந்து அப்படியென்றால் நான் மட்டும் ஏனப்பா சோத்துக்கில்லாமல் கஷ்டப்படுகிறேன் என்று கேட்கும் நிலையில் விழுந்து விட்ட இந்து ஒற்றுமையை தூக்கி நிறுத்த இவர்கள் கண்டு பிடித்ததுதான் ஊழலுக்கு எதிரான இயக்கம். இதையே மீண்டும் நாட்டைச் சூழும் காவிமேகமாக கட்டி எழுப்பும் வல்லமை பார்ப்பனர்களுக்கும் அதன் ஊடகங்களுக்கும் உண்டு. நாம் ஏமாந்தால் நொடியில் இந்தச் சமியார்கள் ஒரு கெரோசின் பாட்டிலையும், சூலாயுதத்தையும் கையில் கொடுத்து சிறுபான்மை மக்கள்தான் இந்த ஊழலுக்குக் காரணம் அவர்களைக் கொல்லுங்கள் என்று சொல்வார்கள்.

டில்லிச் சம்பங்களை இந்திய வரலாற்றின் கருப்பு தினம் என்கிறார் அத்வானி. தன் வாழ்நாளின் மோச்மான நாள் என்கிறார் ராம்தேவ். இந்திய ஜனநாயகத்தின் மோசமான படுகொலை என்கிறார் அன்னா அசாரே.... பாபா ராம்தேவ் கூட்டத்தின் மீது நடத்தப்பட்ட மென்மையான தடியடியே ஜனநாயகப்படுகொலை என்றால் பாபர் மசூதியை இடித்தது, குஜராத்தில் ஆயிரக்கணக்கில் அழித்தொழித்தது, டில்லியில் வீதி வீதியாக சீக்கிய மக்களைக் கொலை செய்தது, ஸ்ரீக்காகுளத்தில் அணுஉலைக்கு எதிராக போராடிய மக்களைச் சுட்டுக் கொன்றது, தண்டகாரண்யாவில் பழங்குடி மக்கள் மீது போர் தொடுப்பது. காடுகளிலும் நிலங்களிலும் கடலோரங்களிருந்தும் மக்களை வெளியேற்றுவது இதெல்லாம் என்ன ராம்? இந்திய ஜனநாயகத்தின் பொன்னெழுத்துக்களால் பதிய வேண்டியவைகளா?

டி.அருள் எழிலன்.