பரளிப்புதூர் தலித்துக்கள் மீதான் தாக்குதல்- உண்மையறியும் குழு அறிக்கை.



திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம் பரளிப்புதூர் என்னும் கிராமம் மதுரை மாவட்டம் எல்லையை ஒட்டி அமைந்து இருக்கும் திண்டுக்கல் மாவட்ட கிராமம். இங்கு தலித் பிரிவினைச் சேர்ந்த பறையர்கள் 84 வீடுகளும் முத்தரையர் சமூகத்தினர் 600 வீடுகளும் உள்ளனர். இங்கு முத்தரையர் சமுதத்தினரே பெரும்பான்மை ஆதிக்க வகுப்பினர். இங்கு சாதி தொடர்பான பெரும்மோதல்களும், வெளிப்படையான பிரச்சனைகளும் இதுவரையிலும் நடந்திராத நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சிறு சிறு புகைச்சல்கள் எழுந்து அடங்கி வந்துள்ளன. இக்கிராமம் மதுரையிலிருந்து நத்தம் செல்லும் நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து செல்லும் சாலைவழியாக ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளே அமைந்துள்ளது. அவ்வாறு செல்லும் சாலையில் முதலில் தலித் குடியிருப்பும், அதிலிருந்து பிரிந்து செல்லும் சாலை வழியாக அரைகிலோ மீட்டர் தூரத்தில் முத்தரையர் வசிக்கும் குடியிருப்பும் அடுத்ததாக அமைந்துள்ளது.

இங்கு கடந்த 2011 பிப்ரவரி 6ம் நாள் தலித் பகுதியில் நடந்த திருமண நிகழ்சிக்காக தலித் மக்கள் சார்ந்திருக்கும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கொடியும், தி மு க கொடியும் அம்மக்கள் வசிக்கும் பகுதியிலேயே அமைந்துள்ள காலனி நீர் தேக்கத்தொட்டி மீது அம்மக்களால் கட்டப்பட்டுள்ளது. கட்டப்பட்ட இக்கொடிகள் நீர்த்தேக்கத் தொட்டி மீதே மூன்று நாட்கள் வரையிலும் இருந்துள்ளது. இந்நிலையில் முத்தரையர் சிங்கச்சின்னம் பொறித்த முத்தரையர் சாதிச்சங்க கொடியினை கொணர்ந்து தலித் மக்கள் பகுதியிலிருக்கும் நீர்த்தேக்க தொட்டி மீது கட்டினர். ஊரின் முகப்பிலேயே தலித் தரப்பு அடையாளம் ஒன்று தான் எல்லோரையும் வரவேற்பது போல் அமைந்திருக்கிறது என்ற சாதிசார்ந்த பொறாமையினால் அது கட்டப்பட்டது என்பதே தலித்மக்களின் குற்றச்சாட்டு. சாதி சமுகத்தின் அத்தகைய உளவியல் புரிந்துக்கொள்ளக்கூடியதே. இச்சிக்கலான நிலையை புரிந்து கொண்ட தலித் பகுதி அடங்கியுள்ள பகுதியின் ஒரேயொரு பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பஞ்சு என்பவர் கிராம பஞ்சாயத்து தலைவரான முத்தரையர் சமூகத்தினை சேர்ந்த நல்லியப்பன் என்பவரிடம் நிலைமையை சொன்னார்.



"உங்கள் கொடியை கழற்றிவிடுங்கள், எங்கள் சமூகத்தினரிடம் சொல்லி எங்கள் கொடியை அவிழ்க்க கூறுகிறேன்" என்று சொல்லி அனுப்பிவிடுகிறார்.இதற்கு மறுநாள் மாலை பஞ்சு தலித்தரப்பு கொடியை அவிழ்க்க சென்ற போது முத்தரையர் சாதிசங்கக்கொடி மீது செருப்பு ஒன்று கட்டப்பட்டிருந்தது. இதன் விளைவை உணர்ந்த பஞ்சு தலித் தரப்பு கொடியோடு அச்செருப்பையும் அகற்ற முயற்சித்தார். அப்போது அங்கு வந்த முத்தரையர் தரப்பினர் செருப்பை அகற்றக்கூடாது என்று தடுத்தனர். அதற்கு முன்பே பரளிப்புதூரை சுற்றியிருந்த முத்தரையர் கிராமங்களுக்கு சாதிசங்கக்கொடி அவமதிக்கப்பட்டதாக தகவல்களை அனுப்பியிருந்தனர். சுற்றுவட்டாரத்திலிருந்த 15 கிராமங்களிலிருந்த முத்தரையர்கள் 15 க்கும் மேற்ப்பட்ட வாகனங்களில் பரளிப்புதூரை இணைக்கும் நத்தம் நெடுஞ்சாலைகளில் வந்திறங்கினர். அதனாலேயே அந்த செருப்பை அகற்றக் கூடாது என்று முத்தரையர் தரப்பு கூறியிருந்ததாக தெரிகிறது.தலித்துகள் செருப்பைகட்டி அவமதித்தனர் என்று குற்றம் சாட்டி முத்தரையர் மறியலில் ஈடுபட "எங்களின் தனித்துவ அடையாளத்தை முடக்குவதற்ககான தருணத்தை உருவாக்க முத்தரையர்களே செய்து கொண்ட ஏற்பாடு அது" என்று அதனை தலித்தரப்பு மறுக்கிறது. நத்தம் நெடுஞ்சாலையில் இரவு 7 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்ட முத்தரையர்கள் சுமார் 300 பேரோடு 15 வாகனங்களில் பரளிப்புதூர் தலித் குடியிருப்பை நோக்கி 11 மணியளவில் வந்தனர். அப்போது அங்கு பத்துக்கும் குறைந்த காவல்துறை அதிகாரிகளே பாதுகாப்புக்கு இருந்தனர். அது தாங்கள் சற்றும் எதிர்ப்பாராத ஒன்று என்று தலித் மக்கள் கூறுகின்றனர். பெட்ரோல்,கம்பு, கடப்பாரை, ஆகிய ஆயுதங்களோடு குடியிருப்புக்குள் 300 பேர் பெரும் ஆரவாரத்தோடு நுழைந்து வீடுகளை தாக்கினர். ஓட்டு வீடுகளின் ஓடுகள் உடைக்கப்பட்டன, ஓட்டு வீடுகளின் முன்புறமாகவும் பின்புறமாகவும் வேயப்படிருந்த கீற்று கொட்டகைகள் கொளுத்தப்பட்டன. வீடுகளில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்பைக்குகளும்,சைக்கிள்களும் கொளுத்தப்பட்டன. வீடுதோறும் பாத்திரங்கள் டிவி பீரோ ஆகியவை உடைக்கப்பட்டன. வைக்கோல் படப்பு கொழுத்தப்பட்டது, கான்கீரிட் வீடுகள் கடப்பாரைகளைக் கொண்டு சேதப்படுத்தப்பட்டன. மெத்தை வீடுகளின் கண்ணாடி ஜன்னல்களும் கதவுகளும் உடைக்கப்பட்டன. அங்கிருந்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் கொடிகம்பம் இரண்டாக உடைக்கப்பட்டு சாய்க்கப்பட்டது. திருமாவளவன் படம் வரையைப்பட்டிருந்த முகாம் பலகை கொளுத்தப்பட்டுள்ளது. ஏறக்குறைய அரைமணிநேரம் வரை இத்தாக்குதல் நீடித்தது. ஆண்கள் எல்லோரும் இரவு நேரமென்றும் பாராமல் ஊரைவிட்டு வெளியேறும் நிலை உருவானது. பெண்கள் மட்டுமே இருந்தனர். குழந்தைகளின் ஆடைகளை விலக்கி ஆணா பெண்ணா என்று பார்த்து விட்டு சென்றுள்ளனர். தலித் பெண்களுக்கு முன்பு அக்கும்பலில் இருந்த ஆண்கள் நிர்வாணமாக நடந்து அப்பெண்களை ஏசியுள்ளனர்.

தாக்குதல் நடந்து இரண்டு நாளாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்படவில்லை. சேதங்கள் மதிப்பீடு செய்யப்படவில்லை. கலெக்டர் சம்பவ இடத்திற்கு வரவில்லை.காவல்துறையின் நடவடிக்கை திருப்திதரக்கூடியதாக இல்லை. உரிய பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்படவில்லை. SC/ST (ACT)1989 - ஆம் சட்டத்தின்படி வழக்கு பதியப்படவில்லை.தாக்குதலில் காயம்பட்ட தலித் சமூகத்தினைச் சேர்ந்த நைனார் என்பவரையும் அய்யாவு என்பவரையும் முத்தரையர் கொடியை அவமதித்த வழக்கில் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். இச்சம்பவம் இப்போதுவரையிலும் பரளிப்புதூர் தலித்மக்களுக்கு தெரியாது. இது நியாயமற்ற கைது. உண்மை அறியும் குழு நேரடியாக பார்வையிட்டதன் அடிப்படையில் சேதங்களின் அளவானது. தலித் காலனியில் 98 சதவிகித வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கூடமும்,கோயிலும் மட்டுமே விடப்பட்டுள்ளன. தாக்கப்பட்டுள்ள வீடுகளில் ஓடுகள் சேதம் என்ற அளவில் 25 சதவிகிதமும், பொருட்கள் சேதம் தீவைப்பு எனும்- அளவில் 75 சதவிகித வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 15 க்கும் மேற்பட்ட மோட்டார்பைக்குகள், 10 - க்கும் மேற்பட்ட சைக்கிள்கள், வைக்கோல்படப்பு,பாத்திரங்கள்,டிவிகள் ஆகியவை சேதப்பட்டுள்ளன. குழந்தை பிறந்து 4 நாட்களே ஆகி வீட்டுக்குள் இருந்த அழகுமீனா என்ற பெண்ணும் கூட வீட்டிலிருந்து ஓட முடியாமல் ஓடியிருக்கிறார்.கர்ப்பம் இருந்த மாரிதேவி என்ற பெண்ணுக்கு அபார்ஷன் ஆகியுள்ளது. பெண்கள் அச்சத்தினால் வீடு ஒன்றில் மறைந்த பின்பும் கடப்பாறையை கொண்டு வீட்டை இடித்து மிரட்டியுள்ளனர். பழநி என்பவரின் டீக்கடையோடு கூடிய சிறு மளிகைகடையும் தீவைக்கப்பட்டுள்ளது. இரண்டு கோழிகள், ஒரு டஜன் ஆடுகள் எரிக்கப்பட்டன. காயம் என்றளவில் நைனா என்பவரும் செல்லம்மாள் என்பவரும் சிறுகாயம் அடைந்துள்ளனர். அங்கிருந்த மின்மாற்றியை (ட்ரான்ஸ்பர்ம் ) தாக்கி மின்சாரத்தை நிறுத்திவிட்டே தாக்குதலை தொடங்கியுள்ளனர்.தாக்குதலை முடித்துவிட்டு நத்தம் சென்ற அக்கும்பல் செல்லும் சாலையிலிருந்த தலித் குடியிருப்புகளை எல்லாம் தாக்கிக்கொண்டே சென்றுள்ளனர். குறிப்பாக வத்திப்பட்டி என்றும் கிராமத்திலிருந்த திருமாவளவன் படம் போட்ட பேனரும், மூன்று குடிசைகளும் தாக்கப்பட்டுள்ளன. தாக்குதல் நடந்த பரளிபுதுரை நோக்கி போலீசார் திசை திரும்பியிருந்த நேரத்தில் நேராக நத்தம் சென்ற கும்பல் இரவு 1 மணியளவில் அங்கிருந்த ரவுண்டானாவில் முத்தரையர் பெரும்பிடுகு சிலையை சட்டவிரோதமாக நிறுவ முயற்சித்தது. போலீசார் தடுத்து கும்பலை விரட்டிய காரணத்தால் அம்முயற்சி நின்று போனது.
இப்பிரச்சனை தொடர்பாக பரளிபுதூர் தலித் குடியிருப்பினை பார்வையிட்டு ஊரில் இருந்த பெண்கள், ஊரை விட்டு வெளியேறியிருந்த ஆண்களை சந்தித்த நம் உண்மையறியும் குழு முத்தரையர் குடியிருப்பில் யாரும் இல்லாததால் ஊரில் கடைக்கோடியிருந்த சில வீடுகளின் சில பெண்களை மட்டுமே பார்க்க முடிந்தது. ஊராட்சி மன்றத்தலைவரும் இல்லாததால் அவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட பொது அதுவும் அணைத்து வைக்கப்பட்டுயிருந்தது. இது தவிர காவல்துறை டி எஸ் பி ராஜராமனை சந்தித்து தகவல் திரட்ட முடிந்தது.

மேற்கண்ட யாவரின் வாதங்களாவன.



தலித்மக்கள்:-

எங்களுக்குள் பெரிய மோதல்கள் இருந்தது இல்லை. எங்களின் இரண்டு பகுதியிலும் தி.மு.க கட்சி சமமாக காலூன்றி இருந்தது. அண்மைக்காலமாக தலித் இளைஞர்கள் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் முகாமை தொடங்கி கொடிகட்டுதல், திருமாவளவன் படம் போட்ட சுவரொட்டி ஒட்டுதல், பாடல்களை ஒலிப்பரப்புதல் என்று செயற்பட்டு வருகின்றனர். இது தவிர வெளிப்படையான அரசியில் முரண்கள் இல்லை. ஆனால் கடந்த கிராமபஞ்சயத்து தேர்தலின் பொது தொடர்ந்து பொது பஞ்சயத்தாக இருந்து வரும் பரளிபுதுரை ரீசெர்வ் பஞ்சயத்தாக மாற்றவேண்டுமென்று தலித் தரப்பில் சிறு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மற்றபடி 6 மாதத்திற்கொரு முறை சிறு சிறு மோதல்கள் எழுந்து உடனே சரியாகிவிடும் நிலைமையே இருந்து வந்தது.தாக்குதல் நன்கு திட்டமிடப்பட்டது என்று தலித் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தாக்குதலுக்கு காரணமான கொடிகட்டுதல் சார்ந்த பிரச்சனையில் ஆரம்பத்திலிருந்தே முத்தரையர்கள் பிரச்னை செய்து வந்தனர். எங்கள் பகுதியிலிருக்கும் தண்ணீர் தொட்டி மீது கொடியை கட்டும் போதே முத்தரையர் பகுதியிலிருந்து முன்னாள் வார்டு உறுப்பினர் ஆர். கருப்பணன், அபர்ணா-வேன் உரிமையாளர் பாலமுருகன், கண்ணன், கணேசன், சின்னழகு, தேங்காய்வெட்டு - முருகன் ஆகியோர் கட்டக்கூடாது என்று தடுத்தனர். நீங்கள் கட்டினால் நாங்களும் கட்டுவோம் என்றனர். ஆதே போல கட்டவும் செய்தனர். எங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான சாக்கு ஒன்றை தேடுவதற்காக செருப்பையும் அவர்களே கட்டியிருக்க வேண்டும்.அவ்வாறு கட்டிவிட்டு மறியல் செய்தனர். மறியல் செய்து விட்டு பரளிபுதூர் காலனிக்கு முன்பாகவே நெடுஞ்சாலையை ஒட்டியிருக்கும் மற்றொரு தலித் குடியிருப்பான அம்பேத்கர் நகரில் 3 வீடுகளை தாக்கினர். அடுத்துதான் பரளிபுதூர் காலனிக்கு ஒரு கும்பல்வந்து பெரும்சத்தம் போட்டு கொண்டிருந்தனர். இது ஒரு வழக்கமான சத்தம் என்றே நாங்கள் நினைத்தோம். ஆனால் அங்கிருந்த மாமரத்தில் நின்றுகொண்டு நெடுஞ்சலையிருந்த மற்றவர்களை போன்போட்டு அழைத்தனர். அப்போது சில போலிஸ்காரர்கள் இருந்தனர். சிறிது நேரத்தில் மின்சாரம் நின்றது. பிறகுதான் பெரும்கும்பல் தாக்குதலில் இறங்கியது.15-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த முத்துரையர்கள் வலசை , வெள்ளியன்குன்றம் புதூர், கடவூர், புதுகோட்டை, விளாம்பட்டி,புதூர், லிங்கவாடி, பெருமாபட்டி, ஆணையூர், ஆகிய ஊர்களை சேர்ந்தவர்களாவர்.எங்கள் மீது தாக்குதல் நடத்தி காவல்துறையினரை திசை திருப்பிவிட்டு நத்தம் ரவுண்டானாவில் முத்துரையர் சிலை வைப்பதே அவர்களின் நோக்கம் என்பது தலித் மக்களில் ஒருதரப்பார் குற்றச்சாட்டு.இத்தாக்குதலில் உள்ளூர்மக்கள் மட்டுமல்லாது முத்தரையர் சமூக பிரமுகர்களும் பங்கொண்டு உதவினர் என்பது தலித் மக்களின் கூற்று. வத்திப்பட்டி அம்சா - ஸ்டியோ உரிமையாளர் அம்சராசாவின் சுமோ, வத்திப்பட்டி - அழகு என்ற குட்டையன் தந்த பெட்ரோல், தேமுதிக ஒன்றிய பொறுப்பாளர் பாபு, சரந்தாங்கி ஊராட்சித்தலைவர் முத்தையன், காசம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் ரமேஷ் ஆகியோர் பங்கு கொண்டனர்,அரசாங்கத்தின் உதவி இல்லை. எங்கள் உறவினர்களும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினரும் தந்த அரிசியில் சமைத்து வருகிறோம். அதிகாரிகளில் தவிர கலக்டர் உள்ளிட்ட யாரும் வரவில்லை. அரசியல் அமைப்புகளும் வரவில்லை.



முத்தரையர் தரப்பு:-


நாங்கள் தாயாய் பிள்ளையாய் தான் பழகினோம். எங்கள் சாதி பெண்கள் இருவரை தலித் தரப்பு திருமணமே கூட செய்திருக்கிறது. இப்போது வெளியூர்காரர்கள் தான் அவர்கள் மீது தாக்குதல் நடத்திருக்கிறார்கள். (ஊரில் ஒரு ஆணை கூட பார்க்க முடியாத நிலையில் இரு பெண்கள் மட்டும் தயக்கத்துடன் பதிவு செய்தது.)



காவல்துறை:-
டி எஸ் பி அவர்களை குழு சந்தித்து, எடுத்த நடவடிக்கை குறித்து கேட்ட போது. இரு தரப்பும் நடந்துகொண்டது சகிக்க முடியாதது என்றும் இரு தரப்பின் மீதும் வழக்குகள் போடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். தாக்குதல் நடந்தது தெள்ள தெளிவாக இருக்கும் போது ஏன் வெறும் சாதியை சொல்லி திட்டிய பிரிவில் வழக்கு தொடுத்துள்ளீர்கள் என கேட்ட போது, அவசரத்தில் நடந்ததாகவும் சார்ஜ் சீட்டில் சரி செய்வதாகவும் சொன்னார். எப் ஐ ஆர் இல் திருத்தலாமே, என சொன்னதற்கு இனி சாத்தியமில்லை என்றார். அவரை பொறுத்தவரை இரு தரப்பும் தவறு என்ற மனநிலையில் மொத்த பிரச்சனையையும் கருதி நடவடிக்கை எடுத்துள்ளார்.



உண்மையறியும் குழுவின் பார்வை:-



சமூகத்தளத்தில் தனித்தனி சாதிகளின் அடையாள உருவாக்கம் வலுப்பெற்று வரும் சமகாலச் சூழலில் முத்தரையர்களும் அத்தகு முயற்சிகளில் இறங்கி முத்தரையர் பெரும்பிடுகு சிலை போன்றவற்றை சாதித்துள்ளனர். இந்நிலையில் இப்பகுதியில் தீண்டாத சாதியாக அடங்கி வாழ்ந்த சமூகத்தினரின் அரசியல் எழுச்சி முத்தரையர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி அவர்களை அடக்கிவைக்கவும் , தங்கள் சாதி அடையாளத்தை உறுதியாக்கிக்கொள்ளவும் முத்தரையர்களை உந்தியது. இது நாள் வரையில் சிறு சிறு கோபங்களாக இருந்த இப்போக்கு இப்போது இத்தாக்குதல் மூலம் முழுவடிவம் பெற்றுளளது. இத்தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கு முன்புதாம் பரளிப்புதூருக்கு அருகிலுள்ள வத்திப்பட்டி என்னும் ஊரில் முத்தரையர் பெண்ணை திருமணம் செய்து கொண்ட தலித் ஒருவர் ஊரை விட்டு வெளியேறி உள்ளார். இந்த ஊரைச் சேர்ந்தவர்களும் இத்தாக்குதலில் மும்முரமாய் இருந்துள்ளனர். பரளிப்புதூரில் விடுதலைச்சிறுத்தைகள் கொடிக்கம்பமும், பெயர்பலகையும் தாக்கப்பட்டமை தலித்துகளின் அரசியல் அடையாளம் மீதான கோபத்தையே காட்டுகிறது.தலித்குடியிருப்பு மீதான இத்தாக்குதல் மற்றுமொரு கொடியங்குளம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அமைந்துள்ளது. மேலும் இது போன்ற தாக்குதல் தொடர்ந்து இருந்து வருவதோடு, மிகச் சாதரணமாகி சமூக ஒப்புதலை பெற்றும் விட்டன. தாக்குதல் நடந்த பின்னால் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரச்சனையை முன்னெடுத்துள்ளது. அழுத்தம் தரக்கூடிய அளவிற்கு தலித் கட்சிகளும் முன் வரவில்லை. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரும் , மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் சம்பவம் நடந்து 3 நாள் ஆகியும் வராத நிலையில் எந்த சலுகையும் வாங்க மாட்டோம் என்று தலித் பெண்கள் எதிர்த்த போது விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் , அரசுடன் மோதல் போக்கு வேண்டாம் என்று வலியுருத்திதாக இளைஞர்கள் பதிவு செய்தனர்.பரளிபுதுரில் முத்துரையர்களே பெரும்பான்மை. தலித்துகள் சிறுபான்மையினர். பரளிபுதூரை சுற்றியுள்ள கிராமங்களில் பெரும்பான்மையும் முத்தரையர் கிராமங்களே. குறிப்பாக பரளிபுதூர் பஞ்சாயத்து என்பதே புதூர், பரளி, எம் ஜி ஆர் நகர், அழகாபுரி ,தேத்தாம்பட்டி, வேம்பரளி,பொடுகம்பட்டி,அம்பேத்கர் நகர், ஆகிய ஏழு கிராமங்களை உள்ளடக்கியதேயாகும். அங்கு ஊராட்சிதலைவர், ஊராட்சி துணைத்தலைவர் ஆகியோர் முத்தரையர்களே. மொத்தமுள்ள 9 வார்டுகளில் ஓரயொரு வார்டு மட்டுமே தலித் உறுப்பினரைகொண்டது.இங்கு பெரும் மோதல்கள் நடைபெறவில்லை என்பது உண்மையே.முத்தரையர்கள் மட்டுமே நிலம் உள்ளவர்கள். ஆனால் அவை பெரும் நிலக்கிலாரிய பண்பு கொண்டவை அல்ல. தலித்துகளில் பலரும் அவர்களிடம் வேலை செய்து வருபவர்களே . ஆனால் பல்வேறு மாற்றங்களின் வழியாக தலித்துகள் விவசாயக் கூலி வேலைக்கு செல்வது குறைந்து வருகிறது. தலித்துகளில் படிப்போர் எண்ணிக்கையும் முத்தரையர்களை ஒப்பிடும் போது கூடி வருகிறது.
கடந்த சில வருடங்களில் பரளிப்புதூர் தலித்துகள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாமை தொடங்கியுள்ளனர். அது முதல் பொதுவான விழாக்கள் தொடங்கி குடும்ப விழாக்கள் வரையிலும் அக்கட்சி அடையாளம் தாங்கியே தங்களை வெளிப்படுத்தி வந்துள்ளனர். திருமாவளவனின் படம் தாங்கிய சுவரொட்டியும் பேச்சு அடங்கிய ஒலிநாடா ஆகியனவும் ஒலிபரப்பப்படுவதுண்டு. 20 ஆண்டுகளுக்கு முன் இதே ஊரை சேர்ந்த முத்தரையர் சாதி பெண்ணை தலித் ஒருவர் திருமணம் செய்திருந்தாலும் அவரின் குடும்பத்தோடு உறவு இல்லையே தவிர தாக்குதல் ஏதும் முத்தரையர் தரப்பில் நடத்தப்பட வில்லை. அதே போல மற்றொரு திருமணமும் சில ஆண்டுகளுக்கு முன் நடந்திருக்கிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தலித்துகளின் தனித்த அரசியல் முயற்சிகள் முத்தரையர்களை தொந்தரவு செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.கடந்த பஞ்சாயத்து தேர்தலின் போதுதான் அக்கிரமத்தை ரிசெர்வ் பஞ்சயதாக மாற்ற வேண்டும் என்ற பேச்சும் தலித்துகள் மத்தியில் எழுந்து அடங்கியிருக்கிறது. இக்கிராமம் மட்டுமல்லாது சுற்று வட்டார கிராமங்கள் தோறும் தலித்துகளிடையே தனித்த அரசியல் முயற்சிகள் எழுந்துள்ளன.

பரிந்துரைகள்:

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு:

1 . இரண்டு தரப்பும் தவறுகள் செய்துள்ளதாக வழக்கினை பதிவு செய்வது பாதிக்கப்பட்ட தரப்பை மீண்டும் தண்டிப்பதாகவும் ஆதிக்க சாதியினர் மீதான குற்றத்தை காப்பாற்றுவதாகவும் இருக்கும். உண்மையை திசை திருப்பும் அணுகுமுறையாகவும் இருக்கும்.

2 . தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் 3(10)(x) என்ற பிரிவின் கீழ் சாதியை சொல்லி திட்டியதாக மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இங்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.எனவே பின்வரும் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும்.

sc/st வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ்

3(1)(ii) - காயம் ஏற்படுத்தல்

3(1)(iii ) - ஆடைகளை களைதல்

3(1) (ix ) - அரசு அதிகாரிகளுக்கு தவறான தகவலை அளித்தல்

3(1) (x) - சாதிபெயரை சொல்லி திட்டுதல்

3(1) (xi ) - பெண்களை மானபங்கப்படுத்துதல்

3(1)( xiv) - பொது வழிகளை பயன்படுத்த தடை விதித்தல்

3(1) ( xv) - குடியிருப்பிலிருந்து அகற்றுதல்

3(2) ( iii) - சொத்துக்களை தீயிட்டு அழித்தல்

3(2) (iv) - குடியிருப்பில் தீவைத்தல்

3(2)( v) - 10 வருடத்திற்கு குறையாத தண்டனை

ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் .



திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு :

1 . பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும். நிவாரண சேதங்களை மதிப்பிட்டு அவர்களுக்கு நீண்ட கால நோக்கில் பயன்தரவல்ல நிவாரணமாக அவை அமைய வேண்டும்.

2 . தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டம்(1989) இன் கீழ் மாவட்ட ஆட்சியரை சிறப்பு அதிகாரியாக நியமித்து சேதங்களை பார்வையிட்டு நிவாரணத்தை மதிப்பிட வேண்டும்.

4 . தலித் மக்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து பொய் வழக்குகளையும் ரத்து செய்து மீண்டும் குடியமர்த்துவதொடு அச்சமற்ற முறையில் விசாரணையில் கலந்து கொண்டு சாட்சியம் அளிக்க வகை செய்ய வேண்டும். மேலும் தலித் மக்களை கைது செய்வதற்கு தோதாக வழக்கை பதிவு செய்துவிட்டு காத்திருப்பதையும் காவல் துறை கைவிட வேண்டும்.

தமிழக அரசுக்கு :

1 . அரசு சார்பாக தலித்துகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களையும் முத்தரையர் தரப்பு ஆக்கிரமிதுக்கொண்டதாக ஏற்கனவே புகார்கள் உள்ளன . தலித்துகளுக்கு நில உரிமை, அரசு சொத்துக்களில் உரிய பங்களித்தல் { குளம், கோவில் , கிராம சொத்து ஏலம் } .

2 . தலித்துகள் தாங்கள் விரும்பும் அரசியல் அடையாளத்தை மேற்கொள்வதற்கான சுதந்திர உரிமையை காப்பாற்றுதல்.

3 . சேதங்களை மதிப்பிடவும் சிக்கலை ஆராய்ந்து நிவாரணம் வழங்கவும் தனியான கமிஷன் ஒன்றை நிறுவ வேண்டும்.

4 . ஊரை விட்டு வெளியேறி அல்லல்படும் தலித் இளைஞர்களை உடனடியாக ஊர் திரும்ப ஏற்பாடு செய்யவும் குற்றம் சாட்டப்பட்ட முத்தரையர்களை தவிர மற்ற முத்தரையர் ஆண்கள் ஊர் திரும்பும் வகையில் காவல் துறை செயல்பட உத்தரவிட்டு அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கவும், வலியுருத்துகிறோம்.


உண்மை அறியும் குழுவினர்

1.பகத்சிங் வழக்குரைஞர்

 2 . விஜயபாரதி வழக்குரைஞர்

 3 . ஸ்டாலின் ராஜாங்கம் பேராசிரியர்

4 . முரளி ஆய்வாளர்

5 . கண்ணம்மா ஆசிரியர்

6 . திவ்யா சட்ட மாணவர்

7. விஜயலட்சுமி சட்ட மாணவர்

8 . விஜயன் சட்ட மாணவர்

9. கிருஷ்ணா சட்ட மாணவர்

10. பகவன் தாஸ் சட்ட மாணவர்

11. பெரியசாமி சட்ட மாணவர்

12. பாண்டியன் சமூக ஆர்வலர்

13. தங்கப்பாண்டியன் சமூக ஆர்வலர்


புகைப்படங்கள் உதவி : திரு.பாரிச்செழியன்

பௌத்தம் - பெரும்பான்மை வாதம் எங்கும் எப்போதும் பாசிசமே - டி.அருள் எழிலன்.


சென்னை எழும்பூரில் இருக்கிற பௌத்த மகா போதி சங்கத்திற்குச் சென்றிருந்தேன். மடத்தில் நிலவிய ஒழுக்கமும், தூலமான பேரமைதியும் எங்கோ ஒரு சனாதனக் கோட்டைக்குள் நுழைந்து விட்ட அருவறுப்பைக் கொடுத்தது. மயிலாப்பூரில் இருக்கிற பார்ப்பன மடமான இராமகிருஷ்ணா மடத்திலும் மகா போதி மடத்திலும் உரையும் அமைதியில் எந்த வித்தியாசங்களும் இல்லை. புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமம், மகாபோதி சங்கம், மயிலாப்பூர் மடம் என்று அவர்களின் தோற்றத்திலும் நடை உடை பாவனையிலும் வித்தியாசங்களில்லை. ஒரே ஒரு வித்தியாசத்தைத் தவிற அவர்களிடம் பூணூல் உண்டு. இவர்களிடம் பூணூல் இல்லை அவளவுதான். மற்றபடி மடத்தில் இருக்கும் பிக்குகள் மிகவும் இளைய வயதுள்ளவர்கள். இலங்கை அரசுக்கும் மகா போதி சங்கத்திற்கும் நேரடி உறவு உண்டு. இலங்கைத் தூதரகத்தின் ஒரு உளவு அமைப்பாக பௌத்த முகமூடியோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆரிய சிங்கள அமைப்புதான் மகா போதி சங்கம்.

இடது வலது பக்கங்களில் அலங்கரித்துக் கொண்டிருக்கும் பொருட்களுக்கு மேலே நடு வாசலில் ஒரு மீசை மழித்த ஆசாமி படத்தில் இருக்கிறார். எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று நினைத்தால்......ஆஹா அது அனகாரிக தர்மபாலா ஆரிய இனமான சிங்கள இனத்தின் மேன்மைகளைப் பேசி சிறுபான்மை முஸ்லீம் மக்களுக்கு எதிராகவும், தமிழ் மக்களுக்கு எதிராகவும், மலையாளிகளுக்கு எதிராகவும் இலங்கையில் இயக்கம் கட்டியவர். உலகம் எதிர்கொண்ட கிரேட் டிப்பரஷன் பொருளாதார நெருக்கடியும் இலங்கையின் தேயிலை வீழ்ச்சியும் திண்டாடிய தொழிலாளிவர்க்கத்தின் பிரச்சனைகளுக்கும் காரணமாக சிறுபான்மை மக்களினங்களைக் கைசுட்டி சிங்கள மேனையை நிறுவியவர். இந்திய எதிர்ப்பு (இந்து எதிர்ப்பு) என்பது அனகாரிகாவின் அடிப்படையாக இருந்தாலும். அவருக்கு பார்ப்பனர்கள் மீது பாசம் அதிகம் இருந்திருக்க இயல்பான ஒன்றுமையும் இருந்திருக்க வேண்டும். இங்கிருந்து கடல் வழியாக வர்த்தகங்களுக்காக சென்று வரும் இந்திய தொழிலாளர்களை மிலேச்சர்களாகச் சித்தரித்த அனகாரிகா , பௌத்த மறுமலர்ச்சி என்னும் பெயரில் சிங்கள பேரினவாதத்தை கட்டி எழுப்பியதில் பெரும் பங்காற்றியவர். ஒரு நன்றிக்கடனுக்காக அந்த பாசிஸ்ட் கருத்தியலாளரின் படத்தை இங்குள்ள போதி சங்க பிக்குகள் வைத்திருக்கக் கூடும்.

பெரும்பான்மை வாதம்.
பாபர் மசூதி இந்து வெறியர்களால் இடித்துத் தரை மட்டம் ஆக்கப்பட்டது. நாடு முழுக்க சிறுபான்மை முஸ்லீம் மக்களுக்கு எதிரான கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. நூற்றுக்கணக்கான அப்பாவி இந்துக்களும், முஸ்லீம்களும் அந்தக் கலவரங்களில் கொல்லப்பட்டார்கள்.இந்தியா மட்டுமல்லாது பாபர் மசூதி இடிப்பு ஆசிய நாடுகள் முழுக்க சிறுபான்மை பெரும்பான்மை கருத்தியலை கட்டவிழ்த்து விட்டது. வங்கதேசத்தில் முஸ்லீம்கள் பெரும்பான்மையினர் இந்துக்கள் சிறுபான்மையினர். அங்கே சிறுபான்மை இந்துக்கள் துன்புறுத்தப்பட்டனர். அப்படி ஒரு சிறுபான்மை இந்துக் குடும்பத்தின் மன உணர்வை வெளிப்படுத்தி தனது சொந்த சமூகத்திற்குள் ஜனநாயகக் குரலாக ஒலித்தார் தஸ்லிமா நஸ் ரீன் தனது "லஜ்ஜா" நாவல் மூலம். இந்தியாவில் இந்துப்பாசிசம்..... ஏன் இந்து மதம் கூட உழைக்கும் மக்களுக்கு எதிரான மதம்தான். ஏனைய மதங்கள் ஏதோ உழைக்கும் மக்களுக்காகவே உருவாக்கப்பட்டிருப்பதாக நான் சொல்லவில்லை. மனிதனை மனிதனாகக் கூட ஏற்றுக் கொள்ளத் தயங்குகிற மதம் இந்து மதம். அது பெரும்பான்மை மதமாக இங்கு இருப்பதால் இங்குள்ள சிறுபான்மை இனங்களை நசுக்கி அழிக்கிறது. கொலை செய்கிறது, தேசப்பற்றை இந்து மதப் பற்றாக்கி, இந்து மதப் பற்றை தேசப்பற்றாக்கி பர்தா அணிந்த பெண்களை எல்லாம் பாலியல் வன்முறை செய்யத் தூண்டுகிறது. பாவம் வங்கதேசத்தில் வாழும் இந்து அங்கே அவன் எதிர்கொள்கிற தேசிய வெறியும் மத வெறியும் வேறு. எது எப்படி என்றாலும் வங்கதேசம்,பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இந்தியா மாதிரி பெரும்பான்மை வெறி இல்லை என்று நிச்சயமாகக் கூறலாம். சொந்தச் சகோதரன் அவன் இன்னொரு மதத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும் இந்தியாவில் இந்துப் பாசிஸ்டுகள் போல கொலை செய்வதில்லை இஸ்லாமிய மக்கள். ஆனால் இந்த கலாசாரப் பாசிசத்தை முஸ்லீம் அடிப்படைவாத அமைப்புகள் கையெடுத்துக் கொள்கின்றன. தலிபான்கள், முஜாகிதீன்கள், அல்கொய்தா, லக்‌ஷர் ஈ தொய்பா போன்ற அமைப்புகளோ அல்லது அவர்களின் ஆதரவாளர்களோ கலாசாரப் பாசிஸ்டுகளாக திகழ்கிறார்கள்.


இலங்கை பௌத்த பாசிசம்

இந்தியாவின் இந்து மாத வெறிக்கு சற்றும் குறையாத அல்லது அதை விட அகோரமான ஒரு பாசிச வெறி கொண்ட அரசு மதமாக பௌத்தம் இலங்கையில் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. நிறுவனமயப்பட்ட பௌத்த மதத்தையும், இலங்கை அரசையும், அதன் மேன்மை மிக்க பௌத்த தலதா மாளிகையும், ஏனைய பௌத்த பீடங்களான மல்வத்த, அஸ்கரிய பீடங்களையும் தனித் தனியானவை, அரசுக்கும் இந்த மத நிறுவனங்களுக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை, என்றெல்லாம் வேறுபடுத்தியோ தனித் தனியாகவோ பிரித்துக் காண முடியாது. இந்த மத நிறுவனங்கள் தவிற ஜாதிக ஹெல உருமய வேறு. எப்படி இந்தியாவில் பஜ்ரங்தள், ஆர்.எஸ். எஸ். விஷ்வ ஹிந்து பரிசத் போன்ற அமைப்புகள் வன்முறை அமைப்புகளாக தீர்மானிக்கும் சக்திகளாக செயல்படும் போது பிஜெபி, சிவசேனா போன்றவை வாக்கு வங்கி அரசியல் தளத்தில் வெகு சன அமைப்பாக செயல்படுகிறதோ அப்படித்தான் ஹெல உறுமயவும். பொதுவாக மல்வத்தை, அஸ்கரிய பீடங்கள் ஏதோ ஒரு பிரதான அரசியல் கட்சியின் ஆதரவு அமைப்பாக செயல்பட்டாலும் . போரின் முடிவுக்குப் பின்னர் இவர்கள் அனைவருமே இணைந்து செயல்படுகிற போக்கு காணப்படுகிறது. 2009- ஜனவரியில் கிளிநொச்சி, முல்லைத் தீவு போன்ற இடங்கள் படையினரிடம் விழுந்த போது, ஜாதிக ஜெல உறுமய அமைப்பின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர்.... மல்வத்தை பீட மகாநாயக்கத் தேரரையும் ,திப்பெட்டுவாவே ஸ்ரீசுமங்கல தேரரைசயும், அஸ்கரிய, பீட தேரரையும் சந்தித்து விட்டு உற்சாகப் பெருக்குடன் ஊடகவியளார்களுக்கு வழங்கிய நேர்காணலில் ஜனவரி 29- ல் வாழங்கிய நேர்காணல் // , ஜனாதிபதியின் சரியான வழிகாட்டலின் கீழும் முப்படைத்தளபதிகளின் தலைமையிலும் எமது இராணுவத்தினர் வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போரிட்டு அனைத்துப் பிரதேசங்களையும் மீட்டு வருகின்றனர். அடுத்த மாத இறுதிக்குள் வடக்கின் அனைத்தும் பகுதிகளும் எமது படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிடும்.பராம்பரிய கலாசார பௌத்த தொல்பொருட்களைப் பாதுகாப்பதற்கான பல வேலைத் திட்டங்களை நாம் தயாரிக்க வேண்டியுள்ளது. மகாநாயக்க தேரருடனும் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்// தொடர்ந்தும் கிளிநொச்சி புரதான பௌத்த நகராக இருந்தது என்றார்.

பூம்புகாரும், கொற்கையும், மாமல்லபுரமும், தொண்டியும், மதுரை உள்ளிட்ட தமிழகமே ஒரு காலத்தில் சமணக்காடாக இருந்ததாக வரலாறு சொல்கிறது. சைவமும், வைணவும் சமணர்களைக் கொன்று மாபெரும் இனக்கொலை புரிந்த வரலாறுகள் உண்டு. இங்குள்ளதைப் போல கிளிநொச்சியும் ஒரு சமணக்காடாக இருந்திருக்கலாம். இங்குள்ள பண்டைத் தமிழர்கள் பௌத்தர்களாக இருக்கும் போது ஈழத் தமிழர்களிலும் ஒரு பிரிவினர் பௌத்தர்களாக இருக்கும் நியாயங்களை கிளிநொச்சி, முல்லைத் தீவு போன்ற பகுதிகளில் கிடைக்கும் பௌத்த எச்சங்கள் நமக்கு நிரூபிக்கும். வரலாற்றை மீள கட்டு எழுப்புவதும், தூய்மைப்படுத்தி அதை மேன்மையாக்க நினைப்பதும்தான் பாசிசத்தின் முதல் செயல்பாடு. அது இந்தியாவின் இந்துப்பாசிசத்திற்கும் பொறுந்தும், இலங்கையின் பௌத்த பாசிசத்திற்கும் பொறுந்தும். முஸ்லீம் மன்னர்களால் இடிக்கப்பட்ட இந்து ஆலயங்களை மீண்டும் கட்டு எழுப்பவதினூடாக இந்து மறுமலர்ச்சியை ஏற்படுத்த இங்குள்ள இந்துப் பாசிஸ்டுகள் விரும்புபது போல, ஈழத் தமிழர்களின் தாயகமான வடக்குக் கிழக்கில் உள்ள இந்து, முஸ்லீம் ஆலயங்களையும் தொழுகைத் தலங்களையும் அகற்றி விட்டு அங்கு சந்திக்கு சந்தி விஹாரைகளை நிறுவுவதினூடாக பௌத்த மறுமலர்ச்சியை ஏற்படுத்த நினைக்கிறது பௌத்த பாசிசம். அய்யா அறிவுஜீவிகளே இந்து மதம் பாசிச மதம்தான். ஆனால் அதை பின் பற்றும் மக்கள்? அவர்களின் மரபில் சிறு தெய்வவழிபாடும் தமிழ் மரபுதானே? இந்துக்கள் என்பதாலேயே அவர்கள் கொல்லப்படுவதையும் அவர்களின் வழிபாட்டு தலங்கள் அழிக்கப்படுவதையும் ஆதரிப்பீர்களா?


கடவுள் மறுப்பு என்கிற தத்துவத்தின் கட்டப்பட்ட திராவிட இயக்கம் என்னும் சீர்திருத்த இயக்கம் கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் அது வழிபாட்டு உரிமையை ஆதரித்தே வந்திருக்கிறது. சீர்திருத்த வாதியான ஈ.வே.ரா பெரியாரின் தீண்டாமைக் கெதிரான போராட்டம் என்பதே வழிபாட்டு வாழ்வுரிமையின் ஒரு பகுதிதான். அதே வாழ்வுரிமை இந்துக்களான பார்ப்பரல்லாத ஈழத் தமிழர்களுக்கு உண்டா? இல்லையா? ஆனால் இன்று தமிழகத்தின் திராவிட இயக்க அறிவு ஜீவித் தளத்தில் ஒரு விதமான பௌத்த மேன்மை நினைவுறுத்தப்படுகிறது. அதாவது மாபெரும் இனக்கொலை ஒன்று பௌத்த மேலாதிக்க சிங்கள அரசுப் பாசிசத்தால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கிறது. நேரடியாக சிங்கள அரசையோ அதன் ஒடுக்குமுறையையோ ஆதரிக்க முடியாமல் மிக வசதியாக பௌத்த மரபிற்குள் இவர்கள் ஒழிந்து கொள்கிறார்கள். சரி பௌத்த மரபே இலங்கையின் அரசு பயங்கரவாதத்தின் ஒரு அங்கம்தான் என்றால் அதை ஏன் ஆதரிக்கிறீர்கள் என்றால் அமைதி காக்கிறார்கள். பெரியார், திராவிட இயக்கம் போன்றவைகளின் கடவுள் மறுப்புக் கொள்கையையும் இந்து மத எதிர்ப்பையும் தங்களின் சுயலாப பௌத்த முகமூடிக்காக ஒரு பிராண்டாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த இடத்தில்தான் மகா போதி சங்கத்தையும் தாக்கியவர்களும் பெரியார் இயக்கத் தோழர்கள்தான் என்பதை அறியும் போது இன்னமும் மக்களுக்கான அறம் செத்துப் போகவில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது.
ஒரு இடத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்கள் இன்னொரு இடத்தில் சிறுபான்மையாக வாழும் போது நமது ஆதரவு எப்போதும் சிறுபான்மை மக்களுக்கே அவர்கள் பௌத்தர்களா? தமிழர்களா? இந்துக்களா? என்பதல்ல பிரச்சனை. வரலாறுகளை தகர்த்தெறிந்தவர்கள் தங்களுக்கு வசதியான ஒரு இடத்திற்கு வந்தவுடன் அதை நிறுத்திக் கொண்டதுடன் தோதான ஒன்றையும் போர்த்திக் கொள்கிறார்கள். ஈழப் படுகொலைகளுக்கு பின்னர் எல்லா விதமான வரலாறுகளையும் நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டியிருக்கிறது. சிறுபான்மை மக்கள் ஆதரவு என்பது மனித நேயத்தின்பால் இருக்க வேண்டும். நமக்கு வேண்டாத மதம் என்பதால் அவர்கள் சாகட்டும் என்பதை ஆதரித்து மௌனமாக இருப்பது போல மனித குலத்திற்கு எதிரானது வேறொன்றும் இல்லை. இலங்கையில் பௌத்த பாசிசம். இந்தியாவில் இந்துப் பாசிசம். மதங்கள் மனிதனுக்கு விடிவைத் தராது என்பதற்கு இது இன்னுமொரு சான்று. தந்திரங்களால் இனி அடுத்த தலைமுறையை ஏமாற்ற முடியாது. கனவான்களே.



எகிப்தில் நடந்தது புரட்சியா? தெரியலையே?

எகிப்தில் புரட்சி நடந்ததா? என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. அதற்குள் ஒரே வாழ்த்துக்களும், கொண்டாட்டங்களும் நடக்கின்றன. ஓரளவுக்கு ஆங்கிலத்தை எழுத்துக் கூட்டி கூட்டி வாசித்தாலும் தெரிய வருவது பரிதாபகரமான இருள் ஒன்று எகிப்தை சூழந்திருக்கிறது என்பதுதான். துனீஷியாவின் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து எகிப்தில் மக்கள் கிளர்ந்து பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி எகிப்தின் சர்வாதிகார அரசின் நிர்வாகத்தை முடக்கியதோடு முழுமையான கெய்ரோவையும் முற்றுகையிட்டிருந்தார்கள். வழக்கமாக மக்களைக் கொன்றொழிக்க அரசுகளால் பயன்படுத்தப்படும் பீரங்கிகளின் வாய்கள் பிளாஸ்டிக் துணிகளால் கட்டப்பட்டு போராடிய மக்கள் ஓய்வெடுக்கும் ஒரு கனரக வாகனம் போல பயன்பட்ட்டது. இதற்கப்பால் எகிப்தில் பல இடங்களிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நூற்றுக் கணக்கில் கொல்லப்பட்டதெல்லாம் தனிக் கதை. ஆனாலும் இந்த பீராங்கிகள் ஏன் அமைதியாக இருக்கின்றன. ஆர்ப்பாட்டக்காரர்கள் கைகளில் இருக்கும் கொடிகள் ஏன் செங்கொடிகளாக இல்லை? துனிஷியாவில் செங்கொடி தூக்கித்தானே போராடினார்கள். என்றெல்லாம் கேள்விகள். தமிழில் கலையரசன் ப்ளாக் படித்தே நான் இந்த மாதிரி விஷயங்களைத் தெரிந்து கொள்கிறேன். ஆனாலும் முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை. அவரோ முஸ்லீம் சகோதரத்துவக் கட்சியே எகிப்தில் போராட்டங்களை தலைமை தாங்குவதாகவும் பெரும்பாலான எகிப்தியர்களின் ஆதரவு அக்கட்சிக்கு இருப்பதாகவும் எழுதியிருந்தார்.
மக்களின் போராட்டங்களின் இறுதி இலக்கு என்ன? போராட்டங்களை எப்படி அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துவாகள் என்றெல்லாம் யோசித்த போது ''என்ன ஆனாலும் சரி நான் எகிப்தை விட்டு வெளியேற மாட்டேன். உங்களுக்கு என்னதான் பிரச்சனை சொல்லுங்கள் பேசி சரி செய்யலாம்" என்று பேசினார். ஆனால் மக்கள் ஏமாறத் தயாராக இல்லை. வெளியே போ.... என்றார்கள். ஒரு வழியாக அவர் நாட்டிலிருந்து வெளியேறி ஒரு தீவுக்குள் சென்று விட்டாராம். இப்போது ஆட்சி? அது இராணுவ ஜெனரல் கைகளில். அடப்பாவிகளா? இதுக்கா போராடினீங்க?

கடைசி வரை போக மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்த ஒரு சர்வாதிகாரி இன்னொரு சர்வாதிகாரியிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு சத்தமில்லாமல் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றிருக்கிறார். எகிபதிய மக்கள் முபாரக்கிடம் தோற்று விட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. என்னைப் பொறுத்தவரை எகிப்தில் மக்கள் ஜனநாயகத்திற்காகப் போராடுகிறார்கள். முஸ்லீம் சகோதரத்துவக் கட்சி அதை முன்னெடுக்கிறது அல்லது பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறது. ஆனால் நோக்கம் நிறைவேறாமலேயே மக்கள் கலைந்து சென்று விட்டார்கள். இராணுவக் கவுன்சிலோ ''நடைமுறையில் உள்ள அரசியல் சட்டம் மக்களை திருப்திப்படுத்த வில்லை. ஆகவே அதை செயல்படுத்தாமல் விலக்கி வைக்கும். மெலும் பாராளுமன்ற அதிபர் ஆட்சிமுறையைக் இன்னும் ஆறு மாதங்களில் கொண்டு வருவோம். அதற்கு இப்போது நாட்டில் அமைதி நிலவ வேண்டும்"" என்று உயர் மட்ட கவுன்சில் அறிவித்திருக்கிறது. கவுன்சில் கூட்டத்தில் முபாரக்கில் ஆளுயரப் படத்தை அகற்றிச் செல்வதையும் வீடியோவாக எடுத்து வெளியிட மக்கள் சந்தோசக் கூச்சலிடுகிறார்கள்.
எகிப்தில் இனி என்ன நடக்கும் எனத் தெரியவில்லை.

இன்றைய நிமிடம் வரை எகிப்தில் எந்த மாற்றமும் நடைபெற வில்லை. ஒரு கொடிய சர்வாதிகாரியிடம் இருந்து ஆட்சி மாறி இராணுவக் கவுன்சிலிடம் ஆட்சி மாறியிருக்கிறது. பெரும்பாலான மக்கள் கலைந்து சென்று விட்டார்கள். ஆனால் இன்னமும் தாஹிர் சதுக்கத்தில் ஒரு குழுவினர் போராடுகிறார்கள். பெரும் மக்கள் வெள்ளம் திரண்டிருந்த சதுக்கத்தில் இப்போது இராணுவத் தலைகள். ஒரு இஸ்லாமியப் புரட்சி என்றாலும் அது அமெரிக்காவுக்கு எதிராக இருந்தால் நல்ல விஷயம்தானே என்ற ஆவலில் இருந்தேன் எல்லாம் சப்பையாக முடிந்து விட்டதோ என்று தோன்றுகிறது. இதை எல்லாம் நினைக்கும் போது ஏனோ முத்துக்குமார் நினைவுக்கு வருகிறார். வெகு வேகமாக அவரைக் கொண்டு போய் புதைத்த புண்ணியவான்கள் தமிழீழ ஆதரவாளர்களும், தேர்தல் அரசியல்வாதிகளும். நாம் அன்றைக்கு சில அரசியல்வாதிகளிடம் அடிவாங்கிய மாதிரி எகிப்திலும் எவனோ ஒரு உணர்வாளன் ஒரு அல்லக்கையிடமோ, கைக்கூலியிடமோ அடிவாங்குவான் இல்லையா?

இரோம் ஷர்மிளா கவிதைகள்.


மணிப்பூரில் ஆயுதப் படை சிறப்பதிகாரச் சட்டத்தை விலக்கக் கோரி கடந்த பத்து ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார் இரோம் ஷர்மிளா. தமிழில் முதன் முதலாக அவரது சில கவிதைகளையும் நேர்காணல்களையும் அம்பையின் மொழியாக்கத்தில் “அமைதியின் நறுமணம் “ என்ற பெயரில் நூலாக வெளியிட்டிருக்கிறது காலச்சுவடு பதிப்பகம். போராடும் ஒரு பெண்ணின் தனிமையை, காதலை, துயரைப் பேசுகிறது இந்த நூல்.

காதல்

என் அன்பு என்று நான் குறிப்பிடும் நீ
தாங்க முடியாத சுமையாய்
என் தசைநார்களில் புகுந்துகொண்டிருக்கிறாய்
இனிமேல் என்னால்
வேறு யார் தரும் அன்பையும்
ஏற்க முடியாது
கனமில்லாத இந்தப் பாத்திரம்
அதன் விளிம்புவரை
நிரம்பியாகிவிட்டது.

என்னிடமிருந்து வெகுதூரம் போய்விடு
என் நலன் பற்றி இனி விசாரிக்க வேண்டாம்
எனக்காகக் கவலைப்பட வேண்டாம்
காலப் புயல் என்னை அடித்துச் சென்றால்
அனலில் இடப்பட்ட வாழ்க்கை என்னுடையது
காலமெல்லாம் உடனிருக்கும் நண்பனுக்காக
என் மனம் ஏங்குகிறது
யார் ஏற்றாலும் சரி
ஏற்காவிட்டாலும் சரி
அவன்தான் என் வாழ்க்கையின் சாரம்.

என் விழிகள் நிரந்தரமாக மூடும்போது
என் ஆத்மா வானத்தில் சிறகடிக்கும்போது
எனக்காகக் காத்திரு
என் அன்பே.

பாக்கியவதி

இனிமேல் என்றும் எனக்குச் சொந்தமில்லாத
என் அன்பு
கழிவிரக்கத்துடன் என்முன் வரும்போது
காதல் என் உணர்வுகளைச் சீண்டுகிறது
என் விழிகளால் அவன் விழிகளைச் சந்திக்கும்
ஏக்கம் மூஷீமீகிறது
கட்டுப்பாடுகளின் சுவர்களுக்குஷீமீ நான்
அதனால்தான் மனமே இல்லாமல்
பின்வாங்கல்
என்னை மறந்துவிடு என் அன்பே
இன்று நான் வேறு ஒருவனுக்கு
உரிமையானவளாக இருக்கலாம்
அன்று நீ பச்சோந்தியானாளிணி
இப்படித்தான்
நாம் பிரிந்தோம், அன்புடன்
உன்னை நான் ஆராதித்தேன் மனமார
ஆனால் இன்று நீ
பாக்கியம் செளிணித இன்னொருத்திக்கு
உரியவன்.

அமைதியின் நறுமணம்.

வாழ்க்கை முடிந்துபோனதும்
உயிரற்ற கூடான என் உடலை
தயவுசெளிணிது தூக்கிச் சென்று
தந்தை கூப்ரூவின் மலை உச்சியில்
வைத்துவிடுங்கள்.

என் செத்த உடல்
கோடரியாலும் மண்வெட்டியாலும்
சிதைக்கப்பட்டு
நெருப்பில் சாம்பலாவதை
நினைத்தால்
மனத்தில் அசூயை பொங்குகிறது
வதங்கப்போகும் சருமம்
பூமியினடியே அழுகட்டும்
வரும் தலைமுறையினருக்கு அது உபயோகப்படட்டும்
உலோகக்கருவாக அது மாறட்டும்
இனி வரும் காலங்களில்
நான் பிறந்த காங்லேயின் வேர்களிலிருந்து
நான் அமைதியின் நறுமணத்தைப் பரப்புவேன்
உலகின் ஒவ்வொரு மூலைக்கும்.

வெற்றிபெற்ற புழு

கடவுளுக்கும் புழுவுக்கும் இடையே நடந்த போரில்
புழு கடவுளைக் கொன்றுவிட்டது
நேர்மையான மனிதன்
கடவுளாகப் போற்றப்படுவான்
கடவுளை எதிர்த்து வெற்றிகண்ட பாவிகளை
அசுத்தமான புழுவான நான் வெறுக்கிறேன்
அவர்களுக்கு இருளைத் தவிர
வேறொரு முடிவில்லை.

சிறை உலகை

என்னால் மறக்க முடியவில்லை
பறவைகள் சிறகடிக்கும்போது
விழிகளில் நீர் பொங்கும்
நடக்க முடியாத இந்தக் கால்கள் எதற்கு
என்னும் கேள்வி எழும்
பார்க்க முடியாத விழிகள் பயனற்றவை
எனக் கூவத் தோன்றும்
என்னைப் போன்றவர்கள்
கண்ணில்படாமல் மறைந்துவிடு ஓ சிறையே!
உன் வலிமையான சங்கிலிகளின் கொடுமையில்
வாழ்க்கைகள் சிதறுண்டன
உன்னால்தான் கடவுளுக்குச் சாபம்
உன்னால்தான் அதிகாரத்தை
நாங்கள் வெறுக்கிறோம்.

சாவை எதிர்கொள்வது பற்றிய கேள்விக்கு சர்மிளா இப்படி பதில் சொல்கிறார். “ நான் இருப்பேனா வாழ்வேனா என்பது பற்றி எனக்கு எந்தப் பயமும் இல்லை. நாம் எல்லோரும் சாகத்தான் பிறந்திருக்கிறோம் என்பது உண்மை. என் ஆத்மா கடவுளின் பாதுகாப்பில் இருக்கிறது. நாம் நினைத்தபடி நாம் வாழ முடியாது... நினைத்தபடி சாகவும் முடியாது. எல்லாம் கடவுளின் கையில் இருக்கிறது. வாழ்வும் சாவும் அவன் கையில் இருக்கிறது. சாவு குறித்து எனக்கு எந்த அச்சமும்
இல்லை. இப்போது நான் செளிணிவதெல்லாம் கடவுளின் விருப்பமும் என் மக்களின் விருப்பமும்தான். ஒரு மனித உயிர் வாழும்போது அவனோ அவளோ பல தவறுகளைச் செளிணியலாம். நம் பெற்றோர் நமக்குப் பிறப்பளித்தாலும் அவர்கள் குணங்கள் எல்லாம் நமக்குண்டு என்று சொல்லிக்கொள்ள முடியாது. எனது தாய் தந்தையிடம் வேண்டாத குணங்கள் உண்டு. அவர்கள் என்னை வளர்த்த போது அவர்கள் சரி என்று கருதிய முறையில் வளர்த்தார்கள். ஆனால் நான் வளர்ந்து பெரியவளாகி எது சரி எது தவறு என்பதை உணர்ந்தபோது அவர்கள் செய்ததில் எது சரி எது தவறு என்பது எனக்குத் தெரிந்தது. அவற்றைத் திருத்தும் ஆசை ஏற்பட்டது. அதுபோலவே என் தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் ஆசைப்படுகிறேன்.

நூல் கிடைக்குமிடம்.
அமைதியில் நறுமணம்.
வெளியீடு- காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி.சாலை,
நாகர்கோவில்,
629001.

நன்றி- குங்குமம்