அப்சலைத் தூக்கிலிடாதே...


தூக்கில் தொங்கினான் ஒரு பாவி
சட்டம் அவனுக்கென ஒதுக்கிய
நரகத்துக்குக் கூட தகுதியற்ற பாவ ஜென்மம்
இயர்க்கையின் திரைச்சீலை விழ அவனை பெற்றவள்
தடுமாறி ஓடி வந்தாள்
ஏனெனில் அவன் ஒரு பெண்ணின் மகன்
"எனக்கென இருந்தது அவன் மட்டும்தானே"
மூச்சுத்திணர அழுகின்றாள் அவள்.
என்ன ஒரு கொடூரமான வரம்.

எமிலி டிக்கின்சன்

அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட மூன்று மாதங்கள் கழித்து.டிசம்பர் 13,2001-இந்திய பாராளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த போது.பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.இந்த பாராளுமன்ற தாக்குதலில் எட்டு படைவீரர்களும் ஒரு தோட்டக்காரரும் கொல்லப்பட கிளர்ச்சியாளர்கள் முழுக்க சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.இந்த பாராளுமன்ற தாக்குதல் சதியில் ஈடுபட்டதாக பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற தீவீரவாதிகளை இந்தியா சுட்டிக்காட்டினாலும் அவர்கள் யாரையும் இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரிக்க முடியாமல் போன சூழலில்.காஷ்மீரைச் சேர்ந்த பேராசிரியர் கிலானி,ஷவுகத் ஹுசைன் குரு,ஷவுகத்தின் மனைவி அப்சான் குரு,முகம்மது அப்சல் குரு என மூவரை கைது செய்தது இந்திய அரசு.கிட்டத்தட்ட 18 மாதங்களை சிறையில் கழித்த பிறகு அப்சான்குருவையும்,கிலானியையும் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்தது நீதிமன்றம்.சிறையில் இருந்த காலத்தில் அப்சான் குருவுக்கு சிறையிலேயே குழந்தை பிறந்தது.மறுக்கப்பட்ட நீதிகளையும் தாண்டி கிலானி வெளியில் வந்தாலும்."கூட்டு மனச்சாட்சிக்கு" பலியாக்கப்பட்டார் அப்சல்குரு.பாராளுமன்ற தாக்குதலுக்கு காரணம் எனக் குற்றம் சுமத்தி அவருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.நீதிமன்றம்.அப்சலின் தண்டனையை நிறைவேற்றக் கோரி நாடு முழுக்க பிரச்சாரம் செய்தது பாரதீய ஜனதா பார்ட்டி....
மென்மை இந்துத்துவவாதிகளான காங்கிரஸாரோ அப்சல் விஷயத்தில் அமைதி காக்கின்றனர்.ஒரு வேளை இந்தியாவில் தேர்தல் கூடி வரும் போது அப்சல் தூக்கிலடப்படக் கூடும்.
1990-ஆம் ஆண்டு பாகிஸ்தானின் லாகூரில் நடந்த குண்டுவெடிப்பிற்கு காரணமாக பாஞ்சாபைச் சேர்ந்த சரப்ஜித் சிங் என்பவரை கைது செய்தது பாகிஸ்தான் அரசு.வழக்கின் முடிவில் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.இரண்டு பெண் குழந்தைகளுக்கு தகப்பனாரான சரப்ஜித்தை ஏப்ரல் ஒன்றாம் தேதி தூக்கிடுவதாக தீர்மானித்திருக்கிறார்கள் என நினைக்கிறேன்.
இந்த விஷயத்தில் பிஜேபி"சரப்ஜித்த்தை தூக்கிலிருந்து காப்பாற்ற வேண்டும்.காங்கிரஸ் அரசு இதில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது"என்று பிஜேபி கதறுகிறது.வெளியுறவுத்துறையோ''பாகிஸ்தான் சரப்ஜித்துக்கு குறைந்த பட்ச கருணையாவது காட்ட வேண்டும்" என்று சொல்கிறது.
இந்த இரண்டு கட்சிகளுமே அப்ச்லகுருவின் உயிரையும் சரி சரப்ஜித் சிங்கின் உயிரையும் சரி இரண்டை வைத்தும் தங்களின் இந்து தேசீய வெறிக்கு விளம்பரம் தேட முயல்கிறது.
மரணதண்டைனைக்கு எதிராக குரல் கொடுக்கும் மனித உரிமை போராளிகளின் கருத்துக்களை இந்த இரண்டு கட்சிகளுமே அதிலும் பார்ப்பன பிஜேபி சுத்தமாக எப்போதும் சட்டை செய்ததில்லை.
அமெரிக்காவின் அடிமை தேசமாக மானமற்ற இந்தியர்களை படைப்பதில்தான் இந்த கூட்டத்தின் வெற்றி இருக்கிறது.அநீதியும் பொல்லாப்புகளும் நிறைந்த இந்த சமூகத்தில் இன்று எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் வாழ விரும்புகிற ஒருவனுக்கு இந்த அமைப்பு பசியையும் வேலையின்மையையும் ஏன் தூக்குத்தண்டனையையும் கூட வழங்கும்.
ஒரு முறை எர்ணாகுளத்தில் முன்னாள் நீதிபதியும் பெரியவருமான மதிப்பிற்குரிய வி.ஆர்.கிருஷ்ணையர்ரை சந்தித்த போது.அவர்
1957-ல் முதல் கம்யுனிஸ்ட் சர்க்கார் கேரளத்தில் அமைக்கப்பட்ட போது கிருஷ்ணைய்யர் உள்துறை அமைச்சராக இருந்த போது தூக்குக் கயிற்றுக்குக் கீழே தொங்கிக் கொண்டிருந்த பாலன் என்பவரை குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்னர் போராடி விடுவித்ததையும்.1974-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது எடிகா அன்னம்மா வழக்கில்"கடவுள் தந்த உயிரைப் பறிக்க மனிதனுக்கு உரிமை இல்லை.உயிரை பறிக்கும் உரிமை அரசுக்கும் கிடையாது" எனச் சொல்லி எடிகா அன்னாம்மாவை தூக்கிலிருந்து காப்பாற்றியதையும் நினைவு கூர்ந்தார்.நினைவு தப்பி மூப்பின் காரணமாக தள்ளாடி வாழும் கிருஷ்ணைய்யர் இந்தியாவின் சுதந்திர காலத்திலிருந்து இன்றைய தலைமுறை வரை பார்த்தவர்.பயங்கரவாத ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்த்யா இணைந்து விட்ட இந்த காலத்தில் கூட பயங்கரவாதத்தில் இருந்து மீள அயலுறவு கொள்கையை, அணிசேராக் கொள்கையை மீட்டெடுப்பது ஒன்றுதான் நம்மை பீடித்துள்ள ஆபத்திலிருந்து நம்மை விடுவிக்கும் வழியே தவிற சட்டங்களாலும்,துப்பாக்கிகளாலும்.தூக்குத்தண்டனையாலும் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியது என்பதில் உறுதியாக இருக்கிறார்.
இறுதியாக,
சரப்ஜித்சிங்கானாலும்.அப்சல்குருவானாலும்,ராஜீவ் வழக்கின் பேரில் சாத்தப்பட்டிருக்கும் நால்வரானாலும்,தருமபுரி பேருந்து எரிப்பு குற்றவாளிகளானாலும் யாரானாலும் தூக்கிடாதே...சட்டம் குற்றவாளிகளை திருத்த வேண்டுமே தவிற பதிலுக்கு ஒரு குற்றத்தை செய்யக் கூடாது....
"உலகத்தின் கொடிய குற்றங்களை நீதிபதிகள் ஆதரித்துள்ளனர்.ஆகவே இருதரப்பு வழக்கையும் நீதிபதிகள் விசாரித்தறிகிறார்கள் என்பதால் உண்மைதான் வெளிப்படும் என்று எண்ணி விடாதீர்கள்"என்றூ சொன்ன லெனினின் வரிகள்தான் இந்த இரண்டு அமெரிக்க அடிமைகளுக்கும் பொறுந்தும் இல்லையா?