எகிப்தில் நடந்தது புரட்சியா? தெரியலையே?

எகிப்தில் புரட்சி நடந்ததா? என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. அதற்குள் ஒரே வாழ்த்துக்களும், கொண்டாட்டங்களும் நடக்கின்றன. ஓரளவுக்கு ஆங்கிலத்தை எழுத்துக் கூட்டி கூட்டி வாசித்தாலும் தெரிய வருவது பரிதாபகரமான இருள் ஒன்று எகிப்தை சூழந்திருக்கிறது என்பதுதான். துனீஷியாவின் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து எகிப்தில் மக்கள் கிளர்ந்து பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி எகிப்தின் சர்வாதிகார அரசின் நிர்வாகத்தை முடக்கியதோடு முழுமையான கெய்ரோவையும் முற்றுகையிட்டிருந்தார்கள். வழக்கமாக மக்களைக் கொன்றொழிக்க அரசுகளால் பயன்படுத்தப்படும் பீரங்கிகளின் வாய்கள் பிளாஸ்டிக் துணிகளால் கட்டப்பட்டு போராடிய மக்கள் ஓய்வெடுக்கும் ஒரு கனரக வாகனம் போல பயன்பட்ட்டது. இதற்கப்பால் எகிப்தில் பல இடங்களிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நூற்றுக் கணக்கில் கொல்லப்பட்டதெல்லாம் தனிக் கதை. ஆனாலும் இந்த பீராங்கிகள் ஏன் அமைதியாக இருக்கின்றன. ஆர்ப்பாட்டக்காரர்கள் கைகளில் இருக்கும் கொடிகள் ஏன் செங்கொடிகளாக இல்லை? துனிஷியாவில் செங்கொடி தூக்கித்தானே போராடினார்கள். என்றெல்லாம் கேள்விகள். தமிழில் கலையரசன் ப்ளாக் படித்தே நான் இந்த மாதிரி விஷயங்களைத் தெரிந்து கொள்கிறேன். ஆனாலும் முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை. அவரோ முஸ்லீம் சகோதரத்துவக் கட்சியே எகிப்தில் போராட்டங்களை தலைமை தாங்குவதாகவும் பெரும்பாலான எகிப்தியர்களின் ஆதரவு அக்கட்சிக்கு இருப்பதாகவும் எழுதியிருந்தார்.
மக்களின் போராட்டங்களின் இறுதி இலக்கு என்ன? போராட்டங்களை எப்படி அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துவாகள் என்றெல்லாம் யோசித்த போது ''என்ன ஆனாலும் சரி நான் எகிப்தை விட்டு வெளியேற மாட்டேன். உங்களுக்கு என்னதான் பிரச்சனை சொல்லுங்கள் பேசி சரி செய்யலாம்" என்று பேசினார். ஆனால் மக்கள் ஏமாறத் தயாராக இல்லை. வெளியே போ.... என்றார்கள். ஒரு வழியாக அவர் நாட்டிலிருந்து வெளியேறி ஒரு தீவுக்குள் சென்று விட்டாராம். இப்போது ஆட்சி? அது இராணுவ ஜெனரல் கைகளில். அடப்பாவிகளா? இதுக்கா போராடினீங்க?

கடைசி வரை போக மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்த ஒரு சர்வாதிகாரி இன்னொரு சர்வாதிகாரியிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு சத்தமில்லாமல் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றிருக்கிறார். எகிபதிய மக்கள் முபாரக்கிடம் தோற்று விட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. என்னைப் பொறுத்தவரை எகிப்தில் மக்கள் ஜனநாயகத்திற்காகப் போராடுகிறார்கள். முஸ்லீம் சகோதரத்துவக் கட்சி அதை முன்னெடுக்கிறது அல்லது பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறது. ஆனால் நோக்கம் நிறைவேறாமலேயே மக்கள் கலைந்து சென்று விட்டார்கள். இராணுவக் கவுன்சிலோ ''நடைமுறையில் உள்ள அரசியல் சட்டம் மக்களை திருப்திப்படுத்த வில்லை. ஆகவே அதை செயல்படுத்தாமல் விலக்கி வைக்கும். மெலும் பாராளுமன்ற அதிபர் ஆட்சிமுறையைக் இன்னும் ஆறு மாதங்களில் கொண்டு வருவோம். அதற்கு இப்போது நாட்டில் அமைதி நிலவ வேண்டும்"" என்று உயர் மட்ட கவுன்சில் அறிவித்திருக்கிறது. கவுன்சில் கூட்டத்தில் முபாரக்கில் ஆளுயரப் படத்தை அகற்றிச் செல்வதையும் வீடியோவாக எடுத்து வெளியிட மக்கள் சந்தோசக் கூச்சலிடுகிறார்கள்.
எகிப்தில் இனி என்ன நடக்கும் எனத் தெரியவில்லை.

இன்றைய நிமிடம் வரை எகிப்தில் எந்த மாற்றமும் நடைபெற வில்லை. ஒரு கொடிய சர்வாதிகாரியிடம் இருந்து ஆட்சி மாறி இராணுவக் கவுன்சிலிடம் ஆட்சி மாறியிருக்கிறது. பெரும்பாலான மக்கள் கலைந்து சென்று விட்டார்கள். ஆனால் இன்னமும் தாஹிர் சதுக்கத்தில் ஒரு குழுவினர் போராடுகிறார்கள். பெரும் மக்கள் வெள்ளம் திரண்டிருந்த சதுக்கத்தில் இப்போது இராணுவத் தலைகள். ஒரு இஸ்லாமியப் புரட்சி என்றாலும் அது அமெரிக்காவுக்கு எதிராக இருந்தால் நல்ல விஷயம்தானே என்ற ஆவலில் இருந்தேன் எல்லாம் சப்பையாக முடிந்து விட்டதோ என்று தோன்றுகிறது. இதை எல்லாம் நினைக்கும் போது ஏனோ முத்துக்குமார் நினைவுக்கு வருகிறார். வெகு வேகமாக அவரைக் கொண்டு போய் புதைத்த புண்ணியவான்கள் தமிழீழ ஆதரவாளர்களும், தேர்தல் அரசியல்வாதிகளும். நாம் அன்றைக்கு சில அரசியல்வாதிகளிடம் அடிவாங்கிய மாதிரி எகிப்திலும் எவனோ ஒரு உணர்வாளன் ஒரு அல்லக்கையிடமோ, கைக்கூலியிடமோ அடிவாங்குவான் இல்லையா?

0 comments: