இந்தியாவின் கொல்லைப்புறமும் காலைக்கடன் கழிக்கும் விமானங்களும்....



யுத்தம் மனிதகுலத்தை மரணப் படுகுழிக்குள் தள்ளி விடுகிறது.கால் நூற்றாண்டைக் கடந்து இலங்கையில் நடக்கும் யுத்தமோ ஈழத்தமிழர்களை பதுங்கு குழிகளுக்குள் புதைத்துக் கொண்டிருக்கிறது.தினம் தோறும் பொழியப்படும் குண்டுகளோடு கூடவே இப்போது வறுமையும் அவர்களுக்கு பரிசளிக்கப்படுகிறது.இதை ஈழ மக்களின் மீது திணிக்கப்பட்ட இன்னொரு போர் என்கிறார்கள்.ஒரு வேளை உணவோடு ஒரு நாள் பொழுதைக் கழிக்கும் ஈழத்தமிழர்கள் இனி அன்றாடம் அமெரிக்காவில் இருந்து உணவு வராதா இந்தியாவிலிருந்து கப்பல் வராதா என்று எதிர் பார்த்திருக்கும் பரிதாபச் சூழலில் சிக்கியிருக்கிறார்கள்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணைய் விலை உயர்வின் பெயரால் உலக நாடுகள் பலவற்றின் பொருளாதாரம் ஆட்டம் கண்டிருக்கிறது.இலங்கையிலோ அது இன்னும் மோசம்.கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு விலைவாசி மக்களை பட்டினியின் விழிம்பில் தள்ள இலங்கை அரசோ தனது இராணுவச் செலவுகளை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.2003&ல் வெறும் 4,700 கோடியாக இருந்த அதன் இராணுவச் செலவு இன்று 11,700 கோடியாக அதிகரித்திருக்கிறது.இலங்கையின் தேசிய வருமானத்தில் பெரும் பங்கை ஈட்டிக் கொடுத்தது தேயிலையும் சுற்றுலாவும்தான்.மேற்குலகின் அந்தபுரமாக இருந்த கடற்கரை நகரான கொழும்பின் சுற்றுலாத் தொழிலை சுத்தமாக யுத்தம் துடைத்தழித்து விட எதிர் பார்த்த அளவுக்கு தேயிலை உற்பத்தியில் இலக்கை எட்ட முடியவில்லை.அமெரிக்காவின் பொருளாதார ஏற்ற இரக்கம் இன்று உலக நாடுகளை பாதிப்பது போல இலங்கையையும் பாதிக்கிறது.இலங்கையில் இப்போது 21.6% பணவீக்கம் ஏற்பட்டிருக்கிறது.இது வேறு எந்த தென்கிழக்காசிய நாடுகளிலும் இல்லாத மிக மோசமான நிலை.வாழத் தகுதியான தமிழகத்திலேயே பண வீக்கம் மத்தியதரவர்க்கத்தையும் ஏழைகளையும் பதம் பார்க்கும் போது யுத்த பூமியில் சொல்லவா வேண்டும்.

உலக உணவுத் திட்டத்தின் அறிக்கை உலகின் பட்டினி கிடப்பவர்களின் பகுதிகளாக(Hunger's Global Hot Spots) சில பகுதிகளை சுட்டிக்காட்டியது.அதில் பிரதான இடங்களுள் ஒன்றாக சுட்டிக்காட்டப்பட்டது இலங்கை.93%குடும்பத்தினர் உணவைக் கைவிடும் சூழலில் இருப்பதாகவும் நிரந்தரக் கடனாளியாகி நிலங்களையும் விற்று விட்டு பட்டினிக்கு முகம் கொடுக்கும் சூழலில் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது.இன்றைய இயந்திர உலகில் தவிர்க்க முடியாத அத்தியாவசிய பொருட்களான காஸ் சிலிண்டர்,பிரிட்ஜ்,மோட்டார் சைக்கிள்,பெட்ரோல் இவைகளை எல்லாம் இலங்கையில் கொழும்பு நகரில் வாழும் குறிப்பிட்ட குறைந்த மக்களுக்கு மட்டும்தான் ஈழத்தமிழர்கள் இவைகளை எல்லாம் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது.
ஒரு கிலோ அரிசியை யாழ்ப்பாணத் தமிழர்கள் வாங்க வேண்டும் என்றால் இன்று அவர்கள் அதற்காக 150 ரூபாய் செலவிட வேண்டும்.ஒரு கிலோ சர்க்கரை எண்பது ரூபாய்க்கும்.ஒரு தேங்காய் அறுபது ரூபாய்க்கும்.குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய அத்தியாவசிய பால்பவுடரை ஐநூறு ரூபாய் விலை கொடுத்தும் வாங்க வேண்டிய சூழல்.யுத்த நெருக்கடிளுக்கு மத்தியில் பல நூறு ரூபாய் செலவு செய்து சமையல் பொருட்கள் வாங்கி சமைக்க மண்ணெண்ணைய் அடுப்பை பற்ற வைக்க ஒரு தேவைப்படும் ஒரு தீப்பெட்டியில் விலையைக் கேட்டால் தலை சுற்றுகிறது.இருபது ரூபாய்.ஆனால் புலிகளின் ஆளுகைக் குட்பட்ட வன்னியிலோ ஒரு கிலோ அரிசி முப்பதைந்து ரூபாய் ஆனால் சமையல் எரிவாயு பயன்படுத்துவதை பாதுகாப்பு கருதி தடை செய்திருக்கிறார்கள் புலிகள்.

இலங்கை ராணுவத்தின் திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் வாழும் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகளின் தலையாயது மின்சாரம் ஆனால் ஏதோ ஒரு வகையில் மின்சாரமற்ற ஒரு வாழ்க்கைக்கு சாமாதானப் பேச்சு வார்த்தை முறிந்த பிறகு வாழப் பழகிக் கொண்டார்கள்.ஆனால் கொழும்பையும் யாழ்பாணத்தையும் இணைக்கும் ஏ&9 சாலை மூடப்பட்ட பிறகு உணவுப் பொருட்கள் அத்தியாவசியப் பொருட்கள் என இயல்பு வாழ்க்கைக்கே தள்ளாட வேண்டிய சூழலில் மண்ணில் வாழும் உரிமையும் மறுக்கப்பட்டு உழைக்கும் உரிமையும் மறுக்கப்பட்டு சிதறியிருக்கிறது ஈழத்தமிழர் வாழ்வு.ஈழத்தமிழர்களுக்கு பெரும் ஆதரவான ஒன்றாக இருந்தது கடல் தொழில் மட்டும்தான்.ஆனால் கடல்புலிகளை ஒழிக்கிறோம் என்று ஈழத்தமிழ் பாரம்பரீய மீனவர்கள் வாழ்கிற கடலோர பகுதிகளின் கடல்களுக்குள் கண்ணி வெடிகளை புதைத்திருக்கிறது இலங்கை அரசு. ஈழத்தமிழர்களையும் தாண்டி இந்திய மீனவர்களையும் பாதிக்கிறது இந்த கடல் கண்ணி வெடிகள்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த உணவு நெருக்கடியை புரிந்து கொண்ட உலக வங்கி இலங்கை அரசுக்கு நூறு கோடிரூபாய் வரை வட்டியில்லாக் கடன் வழங்க முன் வந்திருக்கிறது.அகதி முகாம்களிலும் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளிலும் உலக அளவிலான தன்னார்வ அமைப்புகள்.மக்களுக்கு கொஞ்சம் பொருளாதார உதவிகளையும் உணவுப் பொருட்களையும் வழங்குகிறார்கள்.தங்கள் குழந்தைகளுக்கான பள்ளிச் சீருடைகள் பாட நூலகள் என்று தன்னார்வ அமைப்புகள் வழங்கினாலும் அது ஈழத்தமிழரின் வாழ்வில் வசந்த காலம் எதையும் கொண்டு வந்துவிட வில்லை.

உலகம் முழுக்க ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ஈழத்தமிழர்களை மேலும் பாதிக்கும் ஆகவே இலங்கைத் தீவில் உடனடியாக போர் நிறுத்த ஒப்பந்தம் தேவை.பொருளாதார நிலைகள் சீரடையும் வரையாவது புலிகளும் அரசும் போர் நிறுத்தம் செய்து கொள்ள வேண்டும் என சர்வதேச நாடுகள் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருகின்றன.இந்நிலையில்தான் சமீபத்தில் இந்திய வெளியுரவுச் செயலர் சிவசங்கரமேனனுன் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனும் பாதுகாப்புச் செயலர் விஜய்சிங்கும் இலங்கை தலைநகர் கெழும்புக்கு பயணம் செய்து இலங்கை பிரதமர் ராஜபக்ஷேவையும் சில ராணுவ தளபதிகளையும் சில தமிழ் தலைவர்களையும் சந்தித்து விட்டு வந்திருக்கிறார்கள்.இலங்கை சீனாவிடமும் பாகிஸ்தானிடமும் ஆயுதங்ளை வாங்கிக் குவிக்கிற சூழலில் இந்திய பிரதிநிதிகளின் இலங்கைப் பயணம் மீண்டும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

1983 - ஜூலையில் தமிழர்களுக்கு எதிரான கலவரத்தில் ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட கொதித்துப் போன அன்றைய பிரதமர் இந்திராகாந்தி.‘‘எங்களின் கொல்லைப்புறத்தில் இப்படியான கொடுமைகள் நடப்பதை இந்தியா கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது’’என்று அன்றைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தானாவிடம் தன் கடுமையான கண்டனங்களைச் சொன்னது இந்தியாவின் தலையீடு இலங்கையில் துவங்கியது.ராஜீவ்காந்தி காலத்தில் அமைதிப்படையின் இலங்கை பயணம் விடுதலைப்புலிகளுடனான போர் என வரலாற்றில் பல காயங்களை அது ஏற்படுத்திச் சென்றது அது.ராஜீவ் கொலையில் கொண்டு போய் விட்டது. பின்னர் இலங்கை பிரச்சனையில் நேரடியாக தலையிடாத இந்தியா இப்போது மீண்டும் இலங்கை பிரச்சனையில் ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது.காரணம் ஆசிய பிராந்தியத்தில் இலங்கை தங்களை நம்பியிருக்காமல் பாகிஸ்தானிடமும் சீனாவிடமும் ஆயுதம் வாங்குகிறது என்பதால் இந்தியா இலங்கையை தன் கட்டுக்குள் வைக்க நினைக்கிறது என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் மாதம் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெறும் சார்க் மாநாட்டிற்கு இந்திய பிரதமர் மன்மோகன்சிங் செல்ல விருக்கிறார்.இந்தியப்பிரதமர் இலங்கைக்கு செல்லும் போது இலங்கையில் போர் நடைபெறுவது தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கலாம்.ஆகவே இலங்கை அரசும் புலிகளும் அதற்கு முன்னர் ஒரு போர் நிறுத்த உடன்படிக்கை செய்து கொண்டால் நல்லது என இந்தியா கருதுவதாகவும் இந்திய அதிகாரிகளின் பயணம் அதை ஒட்டியே என்றும் சொல்லப்படுகிறது.இன்னொரு பக்கம் இலங்கை செல்லும் இந்தியப் பிரதமருக்கு பாதுகாப்பு கொடுப்பது யார் என்ற கேள்விக்கு இந்தியாவே தன் கருப்புப் பூனை படைகளோடு ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களையும் சில யுத்தக் கப்பல்களையும் கொழும்புக்கு கொண்டு சென்று ஒட்டு மொத்தமாக கொழும்பு நகரை மாநாடு நடக்கும் சில நாட்களுக்கு தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர இந்தியா விரும்புகிறது என்றும் செய்திகள் கசிய,இலங்கையின் பாதுகாப்பு அமைச்சரோ இந்திய பிரதமர் உட்பட அனைவருக்கும் எமது படையினரே பாதுகாப்பு வழங்குவார்கள் என்று சொன்ன மறு நாள் அம்பாறை மாவட்டத்தில் அரசு விழாவிற்கு வந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் விமானத்தை குண்டு வீசி சிதைத்திருக்கிறார்கள் புலிகள்.அவசர அவசரமாக நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பத்திரமாக கொழும்பு அழைத்துச் செல்லப்பட்டார் இலங்கை அதிபர் ராஜபக்ஷே.சொந்த நாட்டின் பிரதமருக்கே பாதுகாப்பு கொடுக்க முடியாத இராணுவம் எப்படி ஏனைய ஆசிய நாடுகளின் தலைவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதாக உத்திரவாதம் கொடுக்கிறது என தலையைப் பிய்த்து கொள்கிறார்கள் அரசியக் விமர்சகர்கள்.

ராஜீவ்காந்தியும் ஜெயவர்த்தானாவும் செய்து கொண்ட ஒப்பந்தம் தமிழர்களின் தாயகப்பகுதியாக வடக்கு கிழக்கு இணைப்பை வலியுறுத்தியது.ஆனால் தற்போது வடக்கையும் கிழக்கையும் இரண்டாக பிரித்து அதில் கிழக்கில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் சிவநேசதுறை சந்திரகாந்தன் என்கிற பிள்ளையானை முதல்வராக்கியிருக்கிறார் மகிந்தா ராஜபக்ஷே.எப்படி கிழக்கில் ஒரு பிள்ளையானை ராஜபக்ஷேவால் உருவாக்க முடிந்ததோ அது போல வடக்கிலும் ஒரு பிள்ளையானை உருவாக்கி தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்க வேண்டும் என்றும் இதற்கு புலிகளை தவிர்த்து விட்டு ஏனைய இலங்கை அரசின் ஆதரவு பெற்ற குழுக்களை ஒருங்கிணைத்து தமிழர்களுக்கான அதிகார அமைப்பை ஏற்படுத்த இந்தியா உதவக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.எப்படியிருந்தாலும் இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு இந்திய பிரதமர் செல்லும் போது பாதுகாப்புகள் கடுமையாக இருக்கும்.ஏனென்றால் ஏற்கனவே ராஜீவ்காந்தி இலங்கைக்கு சென்றிருந்த போது இலங்கை கடற்படையின் சிப்பாய் ஒருவரால் துப்பாக்கி பேனட்டால் தாக்கப்பட்ட சம்பவமே அந்த எச்சரிக்கையை நமக்குக் கொடுக்கும்.
வெளியுறவுக் கொள்கைகள்,தேச எல்லைகள் சார்ந்த நலன்கள்,ராஜதந்திரங்கள்,காய்நகர்த்தல்கள் இது எல்லாவற்றையும் தாண்டி தினம் தோறும் இலங்கைத் தீவில் தமிழன் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறான்.இந்தியாவின் கொல்லைப்புறத்தில் எண்பதுகளில் துவங்கிய மரண ஓலம் இன்னும் தீர்ந்த பாடில்லை.ஈழத்துக் கவிஞர் புதுவை இரத்தினதுறையின் வரிகளில் சொன்னால்.‘‘காலைக் கடனை கழிப்பதற்கு வருவதைப் போல தினம் தோறும் வந்து போகிறது இலங்கை விமானப்படை’’ஆமாம் நாள் தோறும் அது மனித குலத்தின் மீது ஒரு குண்டை வீசுகிறது.இப்போது பட்டினியையும்....

4 comments:

Unknown said...

மிக கொடுமை தோழரே!!!
மனிதனின் அத்தியாவசிய பொருட்கள் இப்படி கொள்ளை விலையில் விற்கப்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்....
ஆனால் 150 ரூபாய்க்கு விற்கப்படும் அரிசி புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் மட்டும் எப்படி 35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது...
ஒரு வேளை அது தமிழகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கடத்தல் சரக்காக இருக்குமோ??? என் சந்தேகத்தை தீர்த்து வைக்கவும்..
நன்றியுடன்
கமல்காந்த்

கொழுவி said...

புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் மட்டும் எப்படி 35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது...//

வன்னி நெல் விளையும் பூமி.. ஒருகாலத்தில் வன்னியில் விளையும் நெல் முழு இலங்கைக்குமான அரிசித் தேவையை பூர்த்தி செய்வதாக இருந்ததாம்.

புலிகள் முடிந்தவரை தம் சுய தேவையை தாமாகவே பூர்த்தி செய்யும் திட்டமிடலை மேற்கொள்கிறார்கள்.

அதேநேரம்.. தமிழகத்திலிருந்து சில மருந்து அத்தியாவசிய பொருட்கள் வருகின்றனதான். மக்களின் பயன்பாட்டுக்கும் அவை கொடுக்கப்படுகின்றன.

ஆனால்.. தமிழகத்தில் களவெடுத்துக் கொண்டு வரவில்லையே.. காசு கொடுத்துதானே வாங்கி வருகிறார்கள். ஏன் கடத்தல் என்கிறீர்கள்.. ஒரு உதவி என்று வைத்துக் கொள்ளுங்கள்..

டி.அருள் எழிலன் said...

கமல் இனவிடுதலைப் போராட்டம் நடைபெறும் நாடுகளில் அந்த போராட்டத்தை முன்னெடுக்கும் அமைப்புகள் உள்நாட்டில் தடை செய்யப்படுவது.இயல்பானதுதான் அப்படி தடை செய்யப்படும் போதும் அது அண்டை நாடுகளை அல்லது எல்லையோர நாடுகளை சார்ந்திருப்பது தவிர்க்க முடியாதது.

Unknown said...

//ஆனால்.. தமிழகத்தில் களவெடுத்துக் கொண்டு வரவில்லையே.. காசு கொடுத்துதானே வாங்கி வருகிறார்கள். ஏன் கடத்தல் என்கிறீர்கள்.. ஒரு உதவி என்று வைத்துக் கொள்ளுங்கள்//

காசு கொடுத்து வாங்கவேண்டும் என்றால் அதை செய்ய வேண்டியது இலங்கை அரசுதான் புலிகள் செய்தால் அது கடத்தல் தான் தோழரே!!! மேலும் அந்த உதவியை தமிழர்கள் அவர்களுக்கு செய்தது அவர்கள் இந்திய பிரதமரை கொல்லும் வரை....