சந்திராவின் அழகம்மா சிறுகதை தொகுப்பு குறித்து.........


பூமியோடு வானம் தொடுவது போன்ற தோற்றத்திலிருந்தாலும் அது எங்குமே ஒன்றை ஒன்று தொடுவதில்லை. எல்லா மூலைகளிலும் அது தொடாத வானம்தான். மனிதர்களும் அப்படித்தான் மேன்மையான உறவுகள் என்று சொல்லப்படும் எல்லா உறவுகளுமே ஒரு கட்டத்தில் தன் சமூகத்திலிரிந்து தன்னை தற்காத்துக் கொள்ளப் போராடுகின்றன. மோதி மடிகின்றன. பின்னர் பழி வாங்குகின்றன, ஆற்றாமையில் வாழ்வை சபித்துச் செல்கின்றன, எளிதாக காதல் வயப்படுகின்றன, ஒருவர் மீதான கோபத்தை இன்னொரு வலிமையற்றவர் மீது ஏவுகின்றன. இப்படித்தான் வாழ்வை நாம் கடந்து கொண்டிருக்கின்றோம்.

சமீபத்தில் வெளிவந்த சந்திராவின் அழகம்மா சிறுகதைத் தொகுப்பை வாசித்து முடித்த போது எனக்கு ஏற்பட்ட உணர்வுகள் இவைகள்தான் . சந்திராவை எனக்கு ஏற்கனவே அறிமுகம் உண்டு. நண்பராக அல்ல சக ஊழியராக. நான் விகடன் ஆசிரியர் குழுவில் இருந்த போது அவர் அவள் விகடன் ஆசிரியர் குழுவில் இருந்தார் . இதைத்தாண்டி அவரைப் பற்றிய அறிமுகம் எதுவுமே எனக்கு இல்லை.ஆனால் அவர் ஒரு சிறந்த எழுத்தாள என்பதை அழகம்மாவை வாசித்து முடித்த போது தோன்றியது.

ஒரு கதையோடு என்னை நான் ஈடுபடுத்திக் கொள்வதென்பது. வாசிக்கிற கதையில் நான் என்னவாக இருக்கிறேன். அது எப்படி என்னை உள்வாங்கிக் கொள்கிறது என்பதைப் பொறுத்த விஷயம்தான்.எதிர்காலம் என்ற ஒன்றை இட்டுக் கட்டி கடந்த காலத்தில் கொலை செய்யப்பட்டவர்கள் நாம் . ஆகவே இறந்து போன அந்தக் காலத்தை நினைவில் மீட்டிக் கொண்டிருப்பதன் மூலமே நமது உலகை நாம் வசீகரப்படுத்திக் கொள்கிறோம். சிறந்த எதிர்காலம் என்ற ஒன்றுக்காகவே நமது குழந்தைகளின் பால்யத்தை நாமே இன்று பலியிடுகிறோம். இந்தக் கதைகளில் வரும் மனிதர்களும் எதிர்காலம் பற்றிய கனவுகளில் வாழ்வை தொலைத்தவர்களாக இருக்கிறார்கள். அல்லது தொலைந்து போன ஒன்றை தேடிக் கொண்டிருப்பவர்களாக இருக்கிறார்கள்.

அவரது அழகம்மா சிறுகதைத் தொகுப்பில் மொத்தமாக எட்டு கதைகள் உள்ளன. அதென்ன எட்டே எட்டு கதைகள் ஒன்பதாகவோ, பத்தாகவோ எழுதினால் வேண்டாம் என்றா சொல்லப் போகிறார்கள். இதிலுள்ள எட்டு கதைகளில் அறைக்குள் புகுந்த தனிமை, தொலைவதுதான் புனிதம், கட் சொன்ன பிறகும் கேமிரா ஓடிக்கொண்டிருக்கிறது என்ற மூன்று கதைகளைத் தவிற ஏனைய ஐந்து கதைகளும் நமக்குள் ஒரு நிலப்பரப்பை மனதில் நிறுத்துகிறது. அது மலையடிவார நிலப்பகுதியாக என்னுள் விரிந்து செல்கிறது. நிலத்தை விட கொஞ்சம் மேடான பகுதியாக அது ஒரு சித்திரத்தை நமக்குள் உருவாக்குகிறது. பொதுவாக தஞ்சை , மதுரை போன்ற பகுதிகளில் விவசாய நிலங்களை காடு, காட்டு வேலை என்பார்கள். எங்கள் ஊரில் கன்னியாகுமரி பகுதியில் வயலை வயல் என்பார்கள், கடலை கடல் என்பார்கள், சில இடங்களில் வயக்காடு என்பார்கள். ஆனால் எனக்கு காடு என்பது காடுதான்..... ஒன்றிலோ மரங்கள் அடர்ந்த காடு அல்லது கருவேலமரங்கள் வளர்ந்த காடு இதுதான் என் மனதின் சித்திரம். ஆனால் சந்திராவின் சிறுகதைகளிலும் வரும் நிலம் வெறும் காடல்ல, அதுவே அப்பகுதி விவசாயிகளுக்கு வாழ்வு தரும் நஞ்சை, புஞ்சை நிலமாகவும் இருக்கிறது. அதானால்தான் ஒரே நேரத்தில் காடாகவும், விவசாயக நிலமாகவும் இருக்கும் அந்த பாரம்பரீய வதிவிடத்தை காடு என்று அழைக்கிறார்கள் போல. இக்கதைகளைப் படிக்கும் போது மலையடிவார கிராமங்கள் , படுகை போன்ற வீட்டு அமைப்புகள், நினைவுக்கு வந்து போகிறது. ஒரு கதைக்கு அதன் நிலப்பரப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக நான் நினைக்கிறேன். ஏனெனில் எழுத்து என்பது சித்திரத்தை உருவாக்கினால் மட்டுமே அது முழுமையான ஒன்றாக நான் நினைகிறேன்.

இனி கதைகளைப் பார்ப்போம்,

வெகு நாட்களுக்குப் பின்னான மழை


என்ற கதையில் , அவன் வெறுமையோடும், குற்றத்தோடும் ஊர் திரும்புவதாக துவங்குகிறார் சந்திரா. அந்த அவன் என்பவன் பஞ்சகால மொன்றில் முறுக்குச் சுட ஆந்திராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டவன். வாழ்க்கையின் திசைபோக்கில் சூறையாடப்பட்டு இப்போது சித்தியைக் கொன்று விட்டு கிழவின் முன்னால் நிற்கிறான் ‘’ எல்லாமே மாறிப்போச்சுடா நீயும் ஆம்பிளையா வந்து நிக்கிற.... உங்க அம்மா மகளை எல்லாம் கட்டிக்குடுத்திட்டாங்கடா.... என்ற கிழவி அவனது குடும்பம் சீரழிந்து போன அந்த சின்ன வரலாற்றைச் சொல்லி விட்டு அவனுக்கு சோறு போடுகிறார். தனது பால்யம் சித்தியால் சூறையாடப்பட்டது, தங்கைகள் தூக்கு மாட்டிக் கொண்டது, அப்பாவும் இறந்து போனது என பழிவாங்கும் வெறியோடு அவன் இப்போது சித்தியைக் கொன்று விட்டான்.கஞ்சா பயிரிட்டும் , காடு விளைந்தும் ஊர் வசதி பெற்று விட ஆம்பிளை என்பது இங்கே பரிதாபத்திற்குரியதாகி நிற்கிறது.அவன் தன் இளமைக்காலத்தை இதோ ஒரு கொலைக்குற்றவாளியாக சிறையில் கழிக்கப்போகிறான். அவன் கைது செய்யப்படுவதற்கு முன்னால் அந்த மழை பெய்யத் துவங்குகிறது என்று அதை காட்சிப் படுத்துகிறார் சிறுகதையாசிரியர்.

கட் சொன்ன பின்னும் கேமிரா ஓடிக் கொண்டிருக்கிறது.

இச்சிறுகதைத் தொகுப்பில் மிகச் சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று. அதில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளோடு பழகும் வாய்ப்புக் கிடைத்தால் அதுவே பத்து சினிமாவுக்காக வாசலைத் திறக்கும், இன்றைக்கு ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருக்கும் 99.9 % பேரும் அரவமற்ற ஒரு அதிகாலையில் ஹீரோயினாகும் கனவோடு வந்தவர்களாகவே இருப்பார்கள். பீல்டிங்கில் நடக்க, கும்பலோடு சேர்ந்து நிற்க, திருவிழாக்கூட்டத்தில் கும்பல் காட்ட, கலவரக்காலத்தில் குறுக்கும் நெடுக்குமாக ஓட, என்று இவர்கள் பயன்படுவார்கள். மேக்கப்மேனில் தொடங்கி காஸ்ட்யூமர், ஜெனரேட்டர் ஆப்பரேட்டர் வரை இந்த பெண்களுக்கு கிடைக்கும் மரியாதை கொடுமையானது. அவர்கள் சினிமாவில் கைவிடப்பட்ட மனிதர்களே. ஜுனியர் ஆர்ட்டிஸ்டை விட கொஞ்சம் மேம்பட்டவர்கள் ரிச் கேர்ளஸ், பெரும்பாலும் ஜீன்ஸ் அணிந்திருப்பார்கள். அதிலும் பல வகை பெங்களூர் ரிச் கேர்ள்ஸ், மும்பை ரிச் கேர்ள்ஸ், என்று வரவழைப்பார்கள் அதுக்கு தனி ரேட், சென்னை கல்லூரி மாணவிகளும் ரிச் கேர்ள்சாக வருவார்கள். ஆனால் முகம் தெரிகிற மாதிரி ஷாட்டுகளில் மட்டுமே நடிப்பார்கள். டயலாக் பேசி நடிக்க வேண்டிய ஷாட்டுகளில் நடிக்க மாட்டார்கள். சினிமாவில் நடிகையாக வேண்டும் என்ற கனவு இம்மாதிரி பெண்களுக்கு பெரும்பாலும் இருக்காது. ஒன்லி பாக்கெட் மணி. இவ்வகை ரிச் கேர்ள்சை விட ஜூனியர் ஆர்ட்டிஸ்ட், குழந்தைகளை வாடகைக்கு எடுத்து வரும் பெண்களின் நிலை பரிதாபகரமான கதைகளால் நிரம்பியிருக்கும். அப்படியோரு பெண்ணின் கதையை பதிவு செய்திருக்கிறார் சந்திரா. இத்தொகுப்பில் மிகவும் தரமான கதைகளில் இதுவும் ஒன்று. இக்கதையை படித்துக் கொண்டிருந்த போது மாதுர் பண்டார்கரின் ‘சாந்தினி பார் ‘ சினிமாதான் எனக்கு நினைவுக்கு வந்தது.

தொலைவதுதான் புனிதம்.

சினிமா ஒரு மாயப்புல்லாங்குழல் இனம் புரியாத அந்த இசை மயக்கம் இன்னும் நான் உள்ளிட்ட எல்லா நண்பர்களையுமே அலைக் கழித்துக் கொண்டிருக்கிறது. சென்னை வந்த புதிதில் எங்கு கிளம்பினாலும் பளிச்சென்று கிளம்புவோம். மணி ரதனம் சார் அலுவலகத்தில் அப்ளிகேஷன் கொடுக்க போன போது அங்கே ரிஷப்சனிஷ்டாக இருந்தவர் உமா ஷக்தி. நான் பயோடேட்டாவை கொடுத்ததும் அவரிடம்தான். அப்புறம்தான் ஒரு நண்பன் சொன்னான் ஏண்டா நீயே மணி ரத்னம் மாதிரி போகக் கூடாது டா... கொஞ்சம் தாடி வெச்சுட்டு பஞ்சகால பரதேசி மாதிரி போய் பி,சி சாரைப் பாரு அவரோட வீட்டு வாசல்ல போய் நிண்ணு என்றான். நான் ஆழ்வார்பேட்டையில் இருக்கும் அவரது இல்லத்தின் வாசலில் அதிகாலையே போய் நிற்பேன். ஒரு நாள் ஆபூர்வமாக அவரைப் பார்த்ததும் அழைத்துப் பேசியதெல்லாம் தனிக்கதை... உலகசினிமா விழாக்களில் அந்த இயக்குநரை அடிக்கடிப் பார்ப்பேன். அவர் படம் இயக்குகிறார் என்றவுடன் அவரைப் போய் பார்த்தேன். என்னை அமர வைத்து வறுத்தெடுத்து விட்டார். // நீங்களெல்லாம் பசி தாங்க மாட்டீங்க// என்று அட்வைஸ் பண்ணினார். எனக்கு சிரிப்பாகவும் அருவறுப்பாகவும் இருந்தது. கிட்டத்தட்ட மூன்றாயிரம் உதவி இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளுக்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள். வென்றவர்கள் மட்டுமே அவர்களின் அவமானங்களை பதிவு செய்திருக்கிறார்கள். வாய்ப்பில்லாமல் நிராகரிக்கப்பட்ட பலரின் கதைகள் இதுவரை தமிழில் பதிவாக வில்லை. வாய்ப்புகளைத் தேடும் உதவி இயக்குநர்களுள் அதில் சந்திராவும் ஒருவர் . இந்த மூன்றாயிரம் பேருக்கும் சேர்த்து மிக சுவராஸ்யமாக இக்கதையைச் சொல்லிச் செல்கிறார் சந்திரா...


மஞ்சனாத்தி மாலை


என்ற கதை அவரது இளம்பருவ தோழர்களுடனான அனுபவத்தை விரிகிறது... குழந்தைகள் ஒரு வயதுக்குப் பின் ஆண்களாகவும், பெண்களாகவும், மாறி விடுகிறார்கள். எல்லா ஏமாற்றங்களும் அங்கிருந்தே துவங்குகின்றன. குடும்பம், கலாசாரம், கிராமம், என யார் குழந்தைகளின் உலகைப் பற்றி கவலைப்பட்டார்கள். மஞ்சனத்தை மாலையை படிக்கும் போது அதுவே நாம் தொலைத்த பால்யமாக இருக்கிறது.

இந்த தொகுப்பிற்கு அவர் வைத்த பெயர் அழகம்மா.....

அழகம்மா பெயருக்கேற்ற அழகு அதுதான் பிரச்சனையே பெண்கள் அழகாக இருப்பது ஆண்களை துன்புறுத்துகிறது. பல நேரங்களில் பெண்களுக்கான சிறையில் வாசிக்கப்படாத குற்றப்பத்திரிகையாக ஒழிந்திருப்பது அழகுதான். அழகம்மாவும் அழகுதான். ஆனால் அவள் கட்டிக் கொடுத்த மாமன் மேல் மூடத்தனமான அன்பைக் கொண்டிருக்கும் கிராமத்துப் பெண்...ஒரு வழியாக கணவன் குடும்பம் அவளை நிராகரிக்க அழகம்மா மாமனுடன் ஊரை வீட்டு ஓடி விடலாம் எனக் கேட்கிறாள் அவனுடன் ஓடிப்போக அவன் கிளம்புகிற இரவை இப்படிச் சித்தரிக்கிறார் எழுத்தாளர் // மேற்கு மலையும் கிழக்கு மலையும் கூட மடிந்த இரண்டு சவமாய்க் கிடந்தது.கூடடைந்த பட்சிகளும் சிலிர்ப்புக் காட்டவில்லை. ஆந்தையும் பாங்கிணத்துக்குள் பதுங்கிக் கிடந்தது. ஈரப்பனி உடம்பை குறுக்க சேலையால் இறுக்கப் போர்த்தி குறுக்கும் மறுக்குமாக ....கல்லு முறி வைத்தவளைப் போல ஊரைத் திரும்பிப் பார்க்காமல் போனாள்// என்று எழுதுகிறார் எழுத்தாளர். அழகம்மா எல்லையில் காத்திருக்கும் மாமனுடன் சேர்ந்து கிளம்பத்தயாரானாள். // அவிழ்ந்து கொண்டிருந்த கொண்டையை கலைத்து இறுக்கமாக கொண்டை போடுவதற்காக கூந்தலை விரித்தாள்.. அது இன்னொரு காட்டைப் போல் காட்டின் மேலே விரிவது போன்று இருந்தது// என்று எழுதுகிறார். சந்திரா. அழகம்மாவை மாமனும் அவனது நண்பர்களும் கிணற்றில் தள்ளி கொலை செய்து விடுகிறார்கள். கொன்றவர்கள் எல்லோரும் வஞ்சிக்கப்பட்டு சாகிறார்கள். // பேயுருகொண்ட அழகம்மா கிணற்றை தன் ஒற்றைக் காலில் மூடியபடி நிற்கிறாள் பனி கொண்ட இரவின் தனிமையில்// என்று இக்கதையை அற்புதமாக முடிக்கிறார் சந்திரா. கண்ணகி மதுரையை எரித்தாள் என்பது பழமரபுக்கதை. ஆனால் பகுத்தாறிவாளர்களோ //கண்ணகி என்ன தன் முலையில் பாஸ்பரஸ் வைத்திருந்தாளா என்று கேட்டார் கள்// புத்திசாலித்தமான கேள்விதான். பதிலற்ற கேள்வியும் கூட ஆனால் எளிய மக்களின் நம்பிக்கைகளை நான் எப்போதுமே என் அறிவால் தகர்க்க முற்படுவதில்லை. கண்ணகி மதுரையை எரித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அநீயான அந்த அமைப்பை அவரது ஆட்கள் எரித்திருக்கிருக்கலாம். அதை பதிவு செய்த எழுத்தாளன் அதை fantasy யாக முன் மொழிகிறான். கிரேக்க இலக்கியங்களில் இதுமாதிரியான பழ மரபுக் கதைகள் ( legend story) வரும் போது அதைக் கொண்டாடுகிறோம். அதுவே தமிழில் இருந்தால் தடி கொண்டு அடிக்கிறோம். தமிழ் இலக்கியங்களில் பொதிந்துள்ள பல் வேறு பிற்போக்குவாதங்களை நிராகரிக்கும் அதே நேரம் இம்மாதிரியான நம்பிக்கைகளை நான் வரவேற்கிறேன். அம்மாதிரியான நம்பிக்கையை தன் சிறந்த சித்தரிப்புகளால் விரித்துச் செல்கிறார். இப்போது அந்தக் காடு அழகம்மாவின் கூந்தலாக தொரட்டி மரம் கிணற்று வழியாக நடந்து செல்லும் ஆண்களுக்கெல்லாம் கெட்ட சகுனமாக விழித்துக் கொண்டிருக்கிறது இரவும் பகலும்.

தன் மகனை போலீசார் கைது செய்து அழைத்துச் செல்வதையும், அவன் ரிமாண்ட் செய்யப்படாமல் காப்பாற்றப் போராடும் ஒரு தகப்பனின் கதையை அதற்கேயுரிய கரிசனத்தோடு பதிவு செய்கிறார் வன்மம் கதையில், அது போல பால்ய கால காதலை, அது இன்னதென்று தீர்மானிக்கப்படாத அந்த உணர்வையும் ஒரு ஈர்ப்பையும் விட்டுச் செல்லும் ஒரு பெண்ணின் மனப்பதிவையும் அழகேசனின் பாடலில் சொல்கிறார். எதற்காகவும் அவள் அழகேசன் மீது ஈர்ப்புக் கொள்ளவில்லை. அவனோ ஏழை டிராக்டர் ஓட்டும் தொழிலாளி. அவன் கசிய விடும் பாடல்களே ஒரு காதலை உருவாக்கி பின்னர் அதுவும் அழகேசனும் நிற்கதியாய் விடப்படுகிற இடத்தில் மனசு என்னமோ கனத்துத்தான் போகிறது.

இந்த தொகுப்பின் முதல் கதை அறைக்குள் புகுந்த தனிமை.


வாழ்வின் வெவ்வேறு தனிமை மன உணர்வுகளைக் கொண்ட இரண்டு தோழிகள் கடற்கரைக்குச் செல்கிறார்கள். உடன் சென்றவள் அங்கிருந்து இன்னொரு நட்புடன் செல்ல தனிமையில் கைவிடப்பட்டவள் திரும்பிப்பார்க்கிறாள். இந்த திரும்பிப் பார்த்தல் அவ்வளவு எளிமையானதல்ல அது மகா நகரத்தைப் பார்ப்பது, சந்தடியைக் காண்பது, அப்போதுதான் ஒரு பையன் இவளைப் பார்க்க... தன் தனிமையைப் போக்கும் ஒரு இடையீடாக பட்டும் படாமலும் அவனைத் தொடர அனுமதிக்கிறார். எனக்கு பொறிக்குள் சிக்கிக் கொண்ட எலியை இரவு முழுக்க, ஏன் பகம் முழுக்க அடைத்து வைத்து விட்டு திறந்து விட்டால் அது தப்பித்து ஓடுமே அப்படித்தான் அவனும் நினைவுக்கு வருகிறான். ஆமாம் ஏன் இந்த பெண் அவனுடன் இந்த விளையாட்டை நடத்த வேண்டும். சும்மா ஒரு சுவராஸ்யத்திற்கா? அல்லது இன்னமும் வாழ்வின் வண்ணங்கள் மிச்சமிருக்கின்றன என்கிற நினைப்பிலா? அல்லது தனிமையைக் கொலை செய்யவா? அவர் இப்படி எழுதுகிறார் // எல்லா நினைவுகளையும் ஆயுதமின்றிக் கொலை செய்ய தனிமையால் மட்டும்தான் எப்பொழுதும் இயல்கிறது// என்கிறார் அதெப்படி தனிமை நினைவுகளைக் கொல்லும். தனிமைதான் நினைவுகளை உற்பத்தி செய்யும் அது மட்டுமே வசீகரமான ஒரு உலகைக் கொடுக்கிறது. ஆனால் இவர் தனிமையை நினைத்துத்தான் அவனை அனுமதிக்கிறார். ஆனால் அவனை எங்கே தடுத்து நிறுத்துவது எனத் தெரியவில்லை. கடைசியில் அவனை அறையில் அடைத்து காலையில் பொறியைத் திறந்து ஓட விடுகிறார். அதே தனிமை...அதே தேடல் தொடர்ந்து கொண்டிருக்கிறது...


சந்திராவின் கதைகள் ஆழமானவை அதில் வரும் மனிதர்கள் கைவிடப்பட்ட மனிதர்கள், உணர்வுகளைக் கைவிட்டவர்கள், மறுக்கப்பட்டவர்கள், தனித்து நடக்கத் தெரியாதவர்கள், எளிய நம்பிக்கைகளால் சூழப்பட்டு அதன் பேரில் வாழக் கடமைப்பட்டவர்கள். வித விதமான இந்தக் கதைகளில் இசையும், காட்சியும் சந்திராவை ஒரு நல்ல திரைக்கதையாசியராக்கியிருக்கிறது. அவர் தன் பாட்டியின் தோள்களில் ஏறி மனிதர்களைப் பார்த்திருக்கிறார்.

சில எழுத்தாளர்களுக்கு வசீகரமான எழுத்து நடை சாத்தியப்பட்டாலும், சொல்ல கதை இருக்காது. எழுத்தை மட்டுமே வைத்து கதை சொல்லி வசீகரித்து விடுவார்கள். ஆனால் மனிதர்களை அவர்களின் வாழ்வை நுட்பமாக பதிவு செய்வது அவ்வளவு எளிதன்று, அப்படி வாய்க்கப்பெற்றவர்கள் வெகு சிலரே. எனக்கு தமிழில் பூமணி, பாமா, வத்சலா, ஆர்.சூடாமணி , நாஞ்சில் நாடன், ஜெயமோகன், பிரபஞ்சன், பாஸ்கர் சக்தி, எழில் வரதன், யூமா வாசுகி, என நீளும் பட்டியலிலிருந்து சொன்னால் பூமணியின் கதைகளில் ஏராளமான கிளைகள் பரந்து விரிந்திருக்கும் ஆனால் திரைக்கதையை அதிலிருந்து எடுத்து தனியாகச் செய்ய வேண்டும். சந்திராவின் கதைகள் கதை சொல்லும் போக்கிலேயே வேறு பட்டிருக்கிறது. அவர் தமிழில் தவிர்க்க முடியாத சிறுகதையாசிரியர் அல்ல மிகச் சிறந்த சிறுகதையாரிசியர்களுள் ஒருவர். எழுத நினைப்பவர்கள், சிறுகதை எழுத நினைப்பவர்கள், மனித உணர்வுகள் அதன் வண்ணங்களை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் சந்திராவின் கதைகளை அவசியம் வாசிக்க வேண்டும்.

அழகம்மா (சிறுகதைத் தொகுப்பு)
ஆசிரியர் - சந்திரா,
விலை- ரூபாய் எழுபது.
வெளியீடு-
உயிர் எழுத்து
9, முதல் தளம், தீபம் வணிக வளாகம்,கருமண்டபம்,
திருச்சி- 620001

0 comments: