நபிகளின் கருணையும் கருத்துரிமையும் - டி.அருள் எழிலன்.

மதச்சார்பின்மையின் மகாத்தான வரலாற்றில் இந்தியாவின் வேறெந்த மாநிலங்களை விடவும் தமிழகம் மேம்பட்ட ஒன்று. பாபர் மசூதி இந்து மதவெறியர்களால் இடித்து தரை மட்டமாக்கப்பட்ட போது எல்லா மாநிலங்களிலும் கலவரம் வெடிக்க தமிழகம் அமைதியாக இருந்தது. இதே அமைதியை நீங்கள் கோவை சிறுபான்மை மக்களுக்கு எதிரான கலவரங்களின் போதும், அதற்கு முன்னர் கிறிஸ்தவ மீனவர்கள் மீதான மண்டைக்காடு கலவரங்களின் போதும் கண்டிருக்கலாம். ஆக அமைதி என்பது வளர்ச்சி பெற்ற மௌனமாக விரிவடைந்து சென்றிருக்கிறது. முற்போக்கு என்பது ஒடுக்கப்படும் மக்களுக்காகப் பேசாமல் ஒதுங்கிச் செல்வது, அல்லது ஒதுங்கிக் கொள்வது என்கிற அளவில் மத்யமர் மனோபாவமாக தமிழகத்தில் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. கடந்த நாற்பதாண்டுகளாக செல்வாக்குச் செலுத்தும் திராவிட இயக்கங்கள் சாதி விஷயங்களில் கவனம் செலுத்தாதது போல, சிறுபான்மை மக்கள் விஷயத்திலும் கவனம் கொள்ளவில்லை என்னும் நிலையில், இந்து மதவெறி அமைப்புகள் எங்கெல்லாம் சிறுபான்மை மக்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் வலுவான மத வெறி அமைப்புகளை கட்டி விட்டார்கள். இன்றைக்கு வரை சாதிரீதியாக ஒடுக்கப்படும் மக்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் நம்பிக்கையளிக்கும் சக்திகளாக இடதுசாரிகளே தமிழகத்தில் ஓரளவு செயல்படுகிறார்கள் என்பதுதான் நம்பிக்கையளிக்கிறது.

பெரும்பான்மை மதவாதச் சக்திகளின் பாசிசப் படுகொலைகள், துரத்தல்கள் ஒரு பக்கம் என்றால் சிறுபான்மை மக்கள் மத அடிப்படைவாதத்திற்கோ மூட நம்பிக்கைகளுக்கோ பலியாவது சிறுபான்மை சமூகங்களில் உள்ள சாபக்கேடு. இந்த அடிப்படைவாதிகளில் இருந்துதான் தலிபான்களும், முஜாஹீதீன்களும் உருவாகுகிறார்கள். பாசிசத்தை எதிர்கொள்ள மக்கள் திரளை நம்பாமல் ஆயுதங்களை நம்பி தங்களின் சொந்த சமூகத்திற்கே வாழும் கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். சமூகத்தை கண்காணிக்கவும், மக்களை ஒழுக்கமாக வாழவும் இறைவன் தங்களை நியமித்திருப்பதாக நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையிலிருந்தே பதில் பயங்கரவாதம் உருவாகிறது.

ஆனால் தாங்கள் நம்பும் இறைவனை வழிபடவோ, அதை தூய்மையானதென்று சொல்லவோ அந்த மதத்தை பின் பற்றும் மக்களுக்கு உரிமை உண்டு. ஆனால் தன் மதம்தான் உயர்ந்தென்றும் ஏனைய மதங்கள் கீழானவை, மற்றவர்களெல்லாம் மிலேச்சர்கள், வந்தேறிகள் என்றும் மூளைக்குள் ஏற்றப்படும் மூட நம்பிக்கை மற்ற மக்களையும் பாதிக்கிறது. கடவுள் உண்டு என்று சொல்கிறவன் பெருவாரியான மக்களுக்கு மறுக்கப்பட்ட வழிபாட்டு உரிமைக்காக போராடியவன் இல்லை. ஆனால் கடவுள் இல்லை என்று எவன் எல்லாம் நம்பினானோ, அதற்காக காலம் முழுக்க பிரச்சாரம் செய்தானோ அவனே சமூகத்தில் எல்லா பிரிவு மக்களின் வழிபாட்டு உரிமைக்காகவும் குரல் கொடுத்தார். இதிலிருந்தே கடவுள் மறுப்பாளர்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சம்பவம்-1

ஆகஸ்ட் 15, 2000 குமரி மாவட்டம் தக்கலையில் மைலாஞ்சி (மருதாணி) என்ற கவிதைநூலை வெளியிட்டார் ரசூல் என்ற கவிஞர். கவிதை நூல் இஸ்லாத்தை இழிவு படுத்துகிறது. என்பது ஜமாத்தின் குற்றச்சாட்டு. தமிழகம் முழுக்க கவிஞர் ரசூலுக்கு எதிராக துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. சுமார் 120 பேர் கையெழுத்திட்டு ரசூல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளிக்கப்பட்டது. ரசூல் ஜம்மாத்திடம் கொடுத்த விளக்கங்காள் நிராகரிக்கப்பட்டு பத்வா எனப்படும் தீர்ப்பு அவருக்கு வழங்கப்பட்டு அவர் ஊர் விலக்கம் செய்யப்பட்டார். எஞ்சியிருக்கும் மைலாஞ்சி நூலை ஜமாத்திடம் ஒப்படைத்து விட்டு மன்னிப்புக் கேட்குமாறு ஜமாத் கோர அதற்கு கட்டுப்படாத ரசூல் இன்று வரை மத நீக்கம் செய்யப்பட்டவாரகவே வாழ்கிறார்.

சம்பவம் -2

ஜோடிகுரூஸ் ஆழி சூழ் உலகு என்னும் தமிழின் மிகச்சிறந்த நாவலை எழுதினார். அது வரை மீனவர் வாழ்வை ஒரு சிலர் பதிவு செய்திருந்தாலும் ஜோடி குரூஸ் அதற்கு முன்னர் மீனவர் வாழ்வியல் தொடர்பாக எழுதப்பட்ட எல்லா பிரதிகளையும் நிராகரிக்கும் படியான ஒரு எழுத்தைக் கொடுத்தார். காரணம் அவர் ஒரு மீனவர். குமரி மாவட்டத்தில் உவரி என்னும் கடலோரக் கிராமத்தைச் சார்ந்தவர். ஆனால் அந்த சிறப்பான நாவலை கொண்டாடியிருக்க வேண்டிய அவரது சமூகம் அவரை நிராகரித்தது. காரணம் கிறிஸ்தவ பாதிரிகள். வெளிப்படையாகவே ஜோடிகுரூஸ் அவர்களுக்கு தடை விதித்தார்கள். ஊரை விட்டு அறிவிக்கப்படாத விலக்கு இன்று வரை அவர் குடும்பத்தின் மீது உள்ளது. கோவில் வழிபாட்டிலேயே ஒரு பாதிரியார் ஜோடிகுரூசின் நூலைக் காட்டி உண்மையான கிறிஸ்தவனாக இருந்தால் இந்த நூலை எரிக்க வேண்டும் என்று பேசினார். அன்றிலிருந்து இன்று வரை ஜோடிகுரூசால் தன் சொந்த ஊருக்குச் செல்ல முடியவில்லை. திருச்சபை பாதிரிகள் அவர் மீது தடை விதித்திருக்கிறார்கள்.

சம்பவம்-3

மக்கட்டி துராப்ஷா என்பவர் கடையநல்லூர் ஜமாத்தை சேர்ந்தவர். ஆனால் தன் பெயரை கம்யூனிஸ்ட் கொள்கையின் பால் கொண்ட ஈர்ப்பால் செந்தோழன் ஷா என்று மாற்றியிருக்கிறார். ஊரில் கறிக்கோழிக்கடை ஒன்றையும் இந்த செந்தோழன் நடத்தி வருகிறார். இவரை இன்று கடையநல்லூர் ஜ்மாத்திலிருந்து விலக்கி வைத்திருக்கிறார்கள். பின்னர் போலீஸ் சென்று மீட்டு ஒரு வழியாக அவர் இப்போது தலைமறைவாகியிருக்கிறார். செந்தோழன் நபிகள் நாயகத்தை விமர்சனம் செய்யும் கட்டுரைக்ளை தன் முகநூலில் பகிர்ந்ததாகவும், நபிகள் நாயகத்தின் குடும்பத்தினரை இழிவு செய்ததாகவும் குற்றச்சாட்டு. உண்மையில் துராப்ஷா தன் கோழிக்கடையில் கோழிகளை வெட்டும் போது ‘’இஸ்லாமிய முறைப்படி யா..அல்லா என்று சொல்லி வெட்ட வேண்டுமாம். ஆனால் அவர் அப்படிச் சொல்லாமல் கோழிகளை வெட்டியிருக்கிறார். சிலர் இதை சுட்டுக்காட்டிய போது நான் என் இஷ்டப்படிதான் வெட்டுவேன். என்றும் சொல்லியிருக்கிறார். இதனால் கோபமடைந்த உள்ளூர் முஸ்லீம் மக்கள் அவருடைய கடையில் கோழிகள் வாங்குவதில்லை என்று சொல்லப்படுகிற நிலையில், நீண்டகாலமாகவே அவர் மீது உள்ளூர் ம்ககளுக்கு கோபம் இருந்துள்ள நிலையில், கடும் போக்குடைய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பைச் சார்ந்த சில இளைஞர்கள் இவரை சில முறை எச்சரித்திருக்கிறார்கள். இந்நிலையில் அவர் வேறு ஒருவர் எழுதிய இஸ்லாம் தொடர்பான கட்டுரை ஒன்றை முக நூலில் பகிர இளைஞர்கள் இவர் மீது புகார் கொடுக்க நேற்று துராப்ஷா ஜமாத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.

சுமார் 150 முதல் 200 பேர் வரை ஜமாத்தில் திரண்டிருக்கிறார்கள். தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சார்ந்தவர்கள் கடும் கொந்தளிப்பில் இருக்க பயந்து போன துராப்ஷாவின் உறவினர்கள். ஜமாத்திற்கு அழைத்துச் சென்று மன்னிப்புக் கேட்கச் சொல்லியிருக்கிறார்கள்.அவரும் மன்னிப்புக் கேட்கச் சென்ற போது அவரைக் கண்டவுடன் கூட்டம் ஆவேசமாகி, அவரது விளக்கம் எல்லாம் தேவையில்லை. நீங்கள் தீர்ப்பைச் சொல்லுங்கள் . தீர்ப்பைச் சொன்ன பிறகு அவர் ஜமாத்தில் வந்து மன்னிப்புக் கேட்டு எழுதிக் கொடுத்தால் ஜமாத்தில் இணையலாம் என்றிருக்கிறார்கள். ஜாமாத்தாரும் உடனே அவர் நபிகளை இழிவு செய்ததாகக் கூறி ஊர் விலக்கம் செய்திருக்கிறார்கள். சிலர் அவரை அடிக்கப் பாய்ந்ததாகத் தெரிகிறது. உடனே அங்கு வந்த போலீசாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். இப்போது தலைமறைவாக இருக்கிறார். நான் எழுதிய இந்தத் தகவல்கள் முழுக்க முழுக்க கடையநல்லூர் ஜமாத்தைச் சார்ந்த ஒரு இஸ்லாமியப் பெரியவர் சொன்னது. அவர் பேச்சில் நபிகளை அவர் இழிவு செய்து விட்டார். அவர் மன்னிப்புக் கேட்டால் வந்து ஜமாத்தில் இணையலாம். மற்றபடி அவருக்கு எதிரான எந்த ஒரு வன்முறைச் செயல்களும் நடக்கவில்லை என்றார்.

உலகெங்கும் எப்போதெல்லாம் எதிர்ப்பு வலுத்ததோ அப்போதெல்லாம் இஸ்லாமிய மதம் ஆழமாக மக்களிடம் வேரூன்றியது என்பதுதான் அதன் கடந்த கால வரலாறு. உலகில் கிறிஸ்தவ மதவாதிகளாலும், இந்தியாவில் இந்து மத வாதிகளாலும் இஸ்லாமும் இஸ்லாமிய மக்களும் இழிவு படுத்தப்பட்ட போது அது வலுவாக தன்னை இந்த மண்ணில் அழுத்தமாக காலூன்றிக் கொண்டது. உதிரியாக சிதறிக் கிடந்த இஸ்லாமிய மக்கள் தங்களுக்கான தனி அமைப்புகளை உருவாக்கிக் கொண்டார்கள். தங்கள் மீதான தாக்குதல்கள், படுகொலைகள், இழிவுகள், இவைகளுக்காக பொதுச் சமூகமோ பொது அரசியல் இயக்கங்கங்களோ குரல் கொடுக்கவில்லை என்ற உண்ர்வில் அவர்கள் அமைப்பாக ஒன்று திரண்டார்கள் . இந்த திரட்சியே அவர்களுக்கு இன்று பாதுகாப்பாக உள்ளது. ஆனால் அந்த திரட்டி மத ரீதியானது, ஒரே மக்கள் குலம் என்கிற ரீதியில் இருப்பதால் அது தன்னகத்தே பலவீனத்தையும் கொண்டிருக்கிறது. அந்த பலவீனங்களில் ஒன்றுதான் சொந்த சமூகங்களில் இருந்து வரும் கலகக்குரல்களுக்கு தடை விதிப்பது என்பதும். தனிமைப்படுத்தப்பட்ட ஒரு இனம் தான் நம்பும் கடவுளை பற்றிப் பிடிப்பதன் மூலம் அதை பேணுவதிலிருந்து உருவாகும் சமூக உளவியல் பிரச்சனை.

துராப்ஷாவை பொறுத்தவரையில் அவர் கம்யுனிஸ்டாக இருந்துள்ளார். அவரது தளத்தில் இஸ்லாமிய கோட்பாடுகளை விமர்சித்ததை விட இந்து மத வெறியர்களை விமர்சித்தது அதிகம். சொந்த மதத்திற்கும், சாதிக்கும் துரோகம் செய்வதையே இன்றைய புரட்சிகர அரசியலின் ஒரு நிபந்தனையாக நாம் பார்க்கும் போது துராப்ஷாவின் எண்ணங்களை நாம் புரிந்து கொள்ளலாம். சொந்த மதம் என்று நான் சொல்வது மக்களை அல்ல, நிறுவனமயமாகி விட்ட அதன் அதிகாரத்தை என்பதாக புரிந்து கொள்ளவும். இஸ்லாமிய உலமாக்கள் தங்களின் நம்பிக்கைகளுக்கப்பால் வெளியில் தங்களுக்கான வாழ்வுரிமையை உறுதியாய் ஆதரித்து நிற்கிற ஜன்நாயக வெளி ஒன்று உள்ளதை கண்டு கொள்ள வேண்டும். அது பெரும்பான்மை வாதத்திற்கு எதிரானது என்பதையும், சிறுபான்மை மக்களை ஆதரிக்கும் சக்திகள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் எதிர்ப்பு என்பதும் எல்லையில்லா கருணை உள்ளம் கொண்டவர்களாலேயே முன்னெடுக்கப்படுகிறது. அது உலமாக்களை விட மேலான அன்பொன்றை மனித குலத்திற்கு வழங்குகிறது. எல்லையில்லா அன்பின் அடையாளமாக இருக்கும் நபிகள் நாயகத்தைப் போல.

0 comments: