போலிஸ் கொலைகளும் பொதுப் புத்தியும்....

போலீசாரை நோக்கி சுடத் தொடங்கினார்களாம். அதில் ஒரு குண்டு அதிகாரி மீது பாய்ந்ததாம். ஆனால் குண்டு அவர் உடலுக்குள் இல்லையாம், அதனால் கட்டுப் போட்டிருக்கிறார்களாம், பொது மக்களை சுடுவோம் ( அதாவது கொள்ளையர்களை சுற்றி வளைத்தது இரவு ஒரு மணி, அதுவும் யாருக்கும் தெரியாமல்) என்று கொள்ளையர்கள் மிரட்ட கூடுதல் ஏற்பாடுகளோடு முன்னேறிய போலீசார் சரணடையச் சொன்னார்களாம். பதிலுக்கு அவர்கள் சுட போலீசார் ஐந்து பேரையும் சுட்டுக் கொன்றார்களாம்.... இது நேரடியாக போலீசார் சொன்ன தகவல் இல்லை. அறிவிக்கப்படாத போலீசாக செயல்படும் சில காட்சி ஊடகங்கள் சொன்ன தகவல்கள்.

கடந்த பத்து வருடங்களாக தமிழகமெங்கிலும் கொலை, கொள்ளை, வழிப்பறி திருட்டு, நகைக்கடை கொள்ளை, வங்கிக் கொள்ளை என பல குற்றங்கள் சிறியதும் பெரியதுமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் கொண்டு குவிக்கப்பட்ட தனியார் மூலதனங்கள் அதற்கு முன் நிபந்தனையாக மக்களின் நிலங்களை அபகரித்தது, பாரம்பரீய தொழில்களிலிருந்து மக்களை அந்நியப்படுத்தி பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமாட்டு கூலிக்கு வேலை செய்யும் வாட்ச் மேன்களாக மாற்றியது,வறுமை, என மக்கள் பெரும் துன்பங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 3,000- க்கும் மேல் ஆனால் இவைகள் வெறும் குடும்பப் பிரச்சனையாக பதியப்படுகின்றன. ஆனால் கடன் தொல்லைதான் இந்த மரணங்களுக்குக் காரணம்.
கேடு கெட்ட பொருளாதார சுரண்டலுக்கு மக்கள் ஆட்படும் போது கொலையும் கொள்ளையும் மிகச் சாதாரணமான ஒன்றாக மாறும். ஆக மொத்தம் தனியார் தாராள மயத்தின் விளையாய் நாடு முன்னேறியிருப்பதன் கண்கூடான காட்சிகளே இந்த கொள்ளைகள். இதில் பல் வேறு விஷயங்கள் மறைந்துள்ளன. அவர்கள் பொறியியல் படித்த மாணவர்கள் என்பது உண்மையாக இருக்கும் என்றால் அவர்களை வெறும் கொள்ளையர்களாக மட்டுமே புரிந்து கொள்ள நான் தயாரில்லை.

இந்த குற்றவாளிகளை உயிரோடு பிடிப்பதை போலீசார் விரும்பாத ஒரு நிலை இதில் தெரிகிறது. சமீபகாலமாக உங்களின் பிரச்சனைகளுக்கு நீங்களே காரணம் என்று மக்கள் மீதே பிரச்சனைகளுக்கான பழியை அரசு போடுவதை நாம் கண்டு வருகிறோம். மின் வெட்டா கூடங்குளத்தை திற, பெரும்பலான பொது மக்களும் மந்தைகளைப் போல ஊடகங்கள் சொல்வதையும் போலீசார் வாந்தி எடுப்பதைப் போன்ற மந்தைகளாக உருவாகி விட்டன. கோவையில் மோகன்ராஜை சுட்டுக் கொன்ற போலீசார் ஊடகங்களில் அவன் பெண் குழந்தையை பாலியல் வன்முறை செய்ததாக செய்திகளை கசிய விட்டு பின்னர் மோகன்ராஜை சுட்டுக் கொன்றனர். மக்களோ மோகன்ராஜின் கொலை வெடிக் கொளுத்தி கொண்டாடினார்கள். ஆனால் மோகன்ராஜால் கொல்லப்பட்ட குழந்தைகள் பாலியல் வன்முறைக்குள்ளானதற்கான சான்றுகள் எதுவும் இல்லை.

இதுதான் போலீஸ் புத்தி இப்போதும் இந்தக் குற்றத்தின் முழுப் பின்னணியும் போலீசார் மூடி மறைக்கப்பட்டுள்ளது என்றே தெரிகிறது, போலீசார் என்பவர் தீர்ப்பு வழங்குகிறவர்கள் அல்ல நீதிமன்றங்களே அந்த உரிமையைப் பெற்றுள்ளன. போலீசார் இங்கே தங்கள் மீது கவிந்துள்ள மக்கள் தங்கள் மீது கொண்டுள்ள வெறுப்பை போக்கிக் கொள்ள இம்மாதிரி கொலைகளை நடத்திக் கொண்டே செல்கின்றனர். கருணாநிதி ஆட்சியிலும் சகட்டு மேனிக்கு என்கவுண்டர்கள் நடந்தன. இன்றைக்கு ஜெயலலிதா சந்திக்கும் நெருக்கடிகளை பொது மக்கள் புத்தியில் மறக்கடிக்கும் வல்லமை இந்த என் கவுண்டர்களுக்கு உண்டு.

“ இவனை எல்லாம் கேஸ் கோர்ட் என்று அழைத்துச் சென்று அரசு பணத்தை வீணடிப்பது வேஸ்ட்”

‘இவனுங்களெல்லாம் இதுதாம்பா சரியான பனிஸ்மெண்ட்”

’’கொன்னது சரிதான் தப்பே கிடையாது”

பொதுவாக போலீஸ் கொலைகளைக் கொண்டாடும் பொது மக்கள் குறிப்பாக மத்யமர் மன நிலைதான் இது. பெரும்பாலான பத்திரிகைத் துறை சார்ந்தவர்கள். தொலைக்காட்சியில் நியூஸ் ரிப்போர்ட்டர்சின் பார்வைகள் கூட இப்படித்தான் இருக்கின்றன. இங்கே அவர் ஒரு ஊட்கவியலாளர் என்பதை மறந்து தேசப்பற்றாளானாக அவரே தன்னை ஒரு போலீசாக நினைத்துக் கொண்டு செய்திகளை போலீசாரிடம் பெற்று உற்சாகமாக வெளியிடுகிறார். இந்த ஐந்து பேர் என் கவுண்டரில் தொடங்கி தமிரபரணி படுகொலைகள் 19 பேர், பரமக்குடி படுகொலை 7 பேர் என கொத்துக் கொத்தாக போலீஸ் கொடுமைகளுக்கு மக்கள் சாகும் போது கூட பொதுப்புத்தி கேடு கெட்ட போலீஸ் கொலைகளை கொண்டாடுவதாகவே இருக்கிறது.

போலீஸ் கொலைகளை கொண்டாடும் மனம் கொடூரமானது அந்த மனோபாவம் எந்த ஒரு கொலைகளிலும் நமக்கு இருக்கக் கூடாது குற்றங்கள் அதிகரிக்க காரணமான சமூகக் காரணிகள் களையப்பட வேண்டும், என் கவுன்டர் எனப்படும் போலீஸ் கொலைகளை மக்கள் வெடி வெடித்து எப்போது கொண்டாடுகிறார்களோ அப்போதே அந்த துப்பாக்கி அவர்களுக்கு எதிராகவும் திரும்பி குறி பார்த்திருக்கிறது என்பதை அறியாமல் அவர்கள் வெடிக் கொளுத்துகிறார்கள். பார்ப்போம் இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து என்கவுண்டர்கள் என்பது இதே வடிவங்களோடு தொடராது என்றே நினைக்கிறேன்.

1 comments:

Some of us speak in cliches. Some of us love. said...

இந்தக் கட்டுரையை எழுதியதற்கு எனது நன்றிகள், அருள் எழிலன்.