தமிழகத்தையும் ஈழத்தையும் இணைப்பது எது எனக் கேட்டால்..? -தீராநதி

சந்திப்பு: டி.அருள் எழிலன்

போருக்குப் பின்னர் ஈழத்திலிருந்து புதிய தலைமுறை எழுத்தாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். சாத்தியாமான எல்லா எல்லைகளையும் தொட்டு விடும் துடிப்பு அவர்களிடம் உள்ளது. அந்த வகையில் தனது ‘ஆறாவடு’ நாவல் மூலம் தமிழ் இலக்கியப்பரப்பில் அறிமுகமாகியிருப்பவர் சயந்தன். நாவல் வெளி வந்த மிகக்குறுகிய காலத்திலேயே புகலிடத்திலும், இலங்கையிலும் விவாதிக்கப்படும் முன்னணி படைப்பாளியாகியிருக்கிறார். “கடவுள் படங்களுக்கு முன்னே நின்று முப்பது வயதுவரையாவது உயிரோடு வாழ்ந்தால் போதுமென வேண்டிய காலங்கள் என் நினைவில் நிற்கின்றன.” என்று சொல்லும் சயந்தன் இப்போது சுவிஸ்சில் வாழ்கிறார். மனதுக்குப் பட்டதை பளிச்சென்று பேசிவிடும் சயந்தனின் நேர்காணல்……




தீராநதி: உங்களுடைய ஆறாவடு நாவலுக்கு கிடைத்த வரவேற்பு எப்படி இருக்கிறது?
சயந்தன்: நாவல் வெளியான நாளிலிருந்து, அங்கீகாரமும் நிராகரிப்பும் மாறி மாறி வந்தபடியிருந்தன. ஆறாவடு எனது முதல் படைப்பு, முதற் படைப்பொன்றின் படைப்பாளி என்ற வகையில் அங்கீகாரங்களும் எனக்கு நெருக்கமான எழுத்துக்களைப் படைத்த எழுத்தாளர்களது பாராட்டுக்களும் ஒரு வித கிளர்ச்சியைத் தந்தன என்பதை மறைக்க முடியாது. விமர்சனங்கள் என்ற வகையில், அது விமர்சகர்களது இலக்கிய அழகியல் கொள்கைகள், அவர்களது வாசிப்புச் சார்ந்த எதிர்பார்ப்புக்கள், வாசிப்புச் சார்ந்த அனுபவங்கள், படைப்பாக்கம் மீதான தேடல்கள் மேலும் அவர்களது அரசியல் பார்வைகள் கூட தீர்மானிக்கின்றன என்பதை அறிந்தேயிருந்தேன். என்னுடையதற்கு மாற்றாக முற்றிலும் மாறுபட்ட எதிர்நிலைப் பார்வையொன்றை ஒருவர் கொண்டிருக்க முடியும் என்ற உண்மையை ஏற்றுக் கொள்வதோடு விமர்சனத்திற்கும் எனக்குமான உறவு முடிந்து விடவேண்டுமென்பதே எனது விருப்பம். மட்டுமல்லாது நாவல் மீதான எதிர் நிலைப் பார்வைகளை ஒளித்தும் மறைத்தும் வைக்காதிருத்தல், அவற்றிற்கான வெளிகளை உருவாக்குதல் என்பவற்றிலும் ஆர்வம் கொண்டிருக்கிறேன்.இன்னொரு நிலையில் நாவல் மீதான அங்கீகாரங்களும் நிராகரிப்புக்களும் தமக்குள் உரையாட ஆரம்பித்தன. அவற்றைக் கூர்மையாக அவதானிக்கத்தொடங்கினேன். ஒரு படைப்பாளியாக பயன்தரு விடயமாக அவ்வுரையாடல்கள் அமைந்தன. அவ்வாறான உரையாடல்களிலிருந்தே கற்கவும் முடிந்தது.
தீராநதி: ஆறாவடு என்பது யுத்தம் ஏற்படுத்திய வடுதான் இல்லையா? அது உங்களுக்குள் என்ன பாதிப்பை ஏற்படுத்தியது. நீங்கள் எப்போது இடம் பெயர்ந்தீர்கள்?
சயந்தன்: இலங்கைத்தீவின் அனைத்து மனிதர்களையும் யுத்தம் ஏதோ ஒரு வகையில் பாதித்தே இருக்கிறது. அவர்களது இயல்பு வாழ்வினைக் குலைத்துப் போட்டிருக்கிறது. நினைத்தும் பார்த்திரா திருப்பங்களை ஒரு பயணத்தின் வழியிலிருக்கும் பாழும் கிணற்றினைப் போல உருவாக்கியிருக்கிறது. எல்லோரையும் மூடி யுத்தம் போர்த்திருந்தது. பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பும் வழியில், கோயிலுக்குச் செல்லும் பாதையில், சந்தையில் கூடி நிற்கையில், தெருவில் செல்கையில் விமானக்குண்டு வீச்சிலோ ஷெல் தாக்குதல்களிலோ அல்லது குண்டு வெடிப்புக்களிலோ உயிரிழந்தும் அங்கங்களை இழந்தும் ஆகிற வாய்ப்புக்கள் எல்லோருக்கும் இருந்தன. சாவுகள் பெரும்பாலும் இவ்வாறன சூழல்களிலேயே ஏற்பட்டன. இவ்வாறான பொதுவான அச்சுறுத்தல்களின் மத்தியிலேயே இருபது வயதுகள் வரை வாழ்ந்திருந்தேன். தவிரவும் யுத்தம் ஒவ்வொரு ஊராக நம்மை விரட்டியடித்தபடியிருந்தது. தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளுக்கு மேல் நான் ஒரே பள்ளியில் படித்ததில்லை. புதிய ஊர்களையும் புதிய பள்ளிக் கூடங்களையும் யுத்தம் தந்து கொண்டேயிருந்தது.
இதனைத் தவிர்த்து, யுத்தம் தனது பிரதிநிதிகளுடாக குறித்த மனிதர்களின் பெயர்களையும் தேடி அலைந்தது. இந்திய இராணுவத்தோடு இணைந்திருந்தவர், புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர், புலிகளுக்கு சாப்பாடு கொடுத்தவர், புலிகளைக் காட்டிக் கொடுத்தவர், அரச பயங்கரவாதத்தை எதிர்த்து எழுதிய பத்திரிகையாளர்கள், புலிகளது செயற்பாடுகளை எதிர்த்தவர்கள் என எல்லோரையும் அது தேடித் தேடி அழித்தது.விரும்பியோ விரும்பாமலோ யுத்தத்தின் சாயலின்றி எந்த ஈழத் தமிழரும் வாழ முடியாது என்ற நிலைக்கு தள்ளியது. இவ்வாறாக, பெயர்களைத் தேடி அலையும் அச்சுறுத்தல்களின்றி பொதுவான அல்லது வழமையான அச்சுறுத்தல்களையே நான் எதிர்கொண்டிருந்தேன்.
ஆயினும் எனது சிறிய வயதில் அது பெரும் மனப்பாதிப்பினை ஏற்படுத்தியிருக்கிறது. பத்துப் பன்னிரெண்டு வயதுகளில் கடவுள் படங்களுக்கு முன்னே நின்று முப்பது வயதுவரையாவது உயிரோடு வாழ்ந்தால் போதுமென வேண்டிய காலங்கள் என் நினைவில் நிற்கின்றன. பத்திரிகைகளில் முதல்நாளில் நடந்த விமானக் குண்டுவீச்சில் செத்தவர்களின் விபரமும் படங்களும் வரும்போது, நேற்று இதே நேரம், அவர்கள் சாகப்போவது தெரியாமல் உயிரோடிருந்தார்கள். நாளைக்கு எனக்கும் நிகழுமோ என்ற வெப்பியாரம் மிகுந்த உணர்வுகள் எனக்குள் ஓடிப்படர்ந்திருக்கின்றன. இன்றைக்கும் சடுதியாக விமான இரைச்சல்களைக் கேட்க நேர்கையில் திடுக்கிட்டு விடுகின்றேன்.
இறுதி யுத்த நாட்களின் கொடூரம் போலொன்றை நான் அனுபவித்ததில்லை. அந்தச் சுழலுக்குள் உறவுகளையும் அவயங்களையும் உடமைகளையும் இழந்து திரும்பிய மனிதர்களதும் சிறுவர்களதும் மனநிலை எதிர்காலத்தில் என்னவாயிருக்குமோ என்பது அச்சமாயிருக்கிறது.
தீராநதி: ஆறாவடு அரசியலை நீக்கி விட்டு நிகழ்வுகளைக் கொண்டு உரையாடுகிறது என்று ஒரு சாரார் சொல்கிறார்களே?
சயந்தன்: ஆம். அரசியல் நீக்கம் செய்யப்பட்ட பிரதி என்றும், எதிர்ப்பரசியலை ஆழமாக முன்னிறுத்தாத நாவல் என்றும் விமர்சனங்கள் வெளியாகின. அண்மையில் நண்பர் சசீவன், ஆறாவடு குறித்து ஒரு விமர்சனக்குறிப்பினை எழுதியிருந்தார். அதில் இவ் அரசியல் நீக்கம் குறித்துப் பேசியிருந்தார். அதனை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்..
இருவேறு அதிகார மையங்களுக்குள் வாழச்சபிக்கப்பட்ட தலைமுறையொன்றின் – ‘எஞ்சியுள்ள வாழ்வைத் தக்கவைக்கும்’ தலைமுறையொன்றின் அலைக்கழிவான வாழ்க்கை அரசியல் நீக்கம் செய்யப்பட்டிருப்பதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. அரசியல் அதிகாரங்களுக்குள்ளே சென்றவர்கள் கூட அரசியல் நீக்கம் செய்யப்பட்டிருந்தததைக் கண்டும் கேட்டும் இருக்கின்றோம். தொன்னுாறுகளுக்குப் பிறகான தலைமுறையின் அரசியல் சார்ந்த சிறு கருத்துதிர்ப்பும் கூட, தீவிரமான அரசியற் செயற்பாடுதான் என்றே கூற வேண்டும். தமிழ்த்தேசியத்திற்கு எதிரான ஒரு சிறு வரியைக் கூட வாசித்திருக்காத , அறிந்தேயிருக்காத ஏராளமான இளைஞர்களை எங்களது தலைமுறையில் கண்டிருக்கின்றோம். அதிலிருந்து மாறுமட்டு, இந்தத் தலைமுறையின் உரையாடலுக்குத் தயாராயிருக்கும் பிரதி இது.
நாவலில் அதிகார மையங்களுக்குமெதிராக எங்கேயும் போர்க்கொடி தூக்கப்படவில்லை. எதிர்த்து வசனம் பேசப்படவில்லை. நாவலில் வரும் பாத்திரங்கள், யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு அப்பால் நகர்பவர்களாகவே நாவல் முழுவதும் வந்து செல்கின்றார்கள். அப்பால் சென்று, அதிகாரத்தை வைகின்றார்கள். தனியே இருந்து தலையிலடித்து கதறி, ஆற்றாமையை வெளிப்படுத்துகின்றார்கள். அதிகாரத்தின் இருப்பை மறுதலிக்க முடியாத தமது இயலாமையை நோகாமல், அதிகாரத்தை ஓயாமல் நையாண்டி செய்கின்றார்கள். நையாண்டி மூலம் தமது உடன்பாடின்மையைத் தெரிவிக்கின்றார்கள். ஆயுதம் மூலமான, உயிரை எந்நேரமும் பறித்துவிடக்கூடிய அதிகாரத்தின் பலமான இருப்பைத் தம்மால் அசைத்துவிட முடியாது என்று தெரிந்தும், தமது நையாண்டிகளும் நக்கல்களும் அதிகாரத்தை எதுவும் செய்துவிடப்போவதில்லை என்பது தெரிந்தும் அதிகாரத்தைத் தொடர்ச்சியாக நையாண்டி செய்தபடியேயிருக்கின்றார்கள். அதிகாரத்தின் காதுகள் தம்மைச் சுற்றி உள்ள போதெல்லாம் மனதிற்குள் நையாண்டி செய்கின்றார்கள். அதிகாரத்தின் துப்பாக்கிகளின் முன்பு கைகட்டி வாய்பொத்தி மௌனியாகி நிற்கின்றார்கள். அதிகாரத்தின் கால்களை தடவிய மறுகணமே அப்பால் சென்று, அதிகாரத்தை நையாண்டி செய்கின்றார்கள். இங்கு, மனிதர்கள் அரசியல் நீக்கம் செய்யப்பட வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அரசியல் நீக்கம் செய்யப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து தம்மைப் பழக்கப்படுத்தினார்கள்.
தீராநதி: ஆறாவடுவில் புலிகள் சாதிப்பிரச்சனையைக் கையாண்ட விதம் தொடர்பாக ஒரு பகுதி வருகிறது. உண்மையில் தமிழர்களிடையேயான சாதி வழக்கத்தை புலிகள் எவ்வாறு எதிர்கொண்டார்கள்?
சயந்தன்: சாதிக்கு எதிராகப் போராடுவதென்பது ஒரு பண்பாட்டுப் போராட்டம். நிலவும் பண்பாட்டை மாற்றி எழுதி ஒரு புதிய பண்பாட்டை நிறுவுவது. அந்த வகையில் புலிகளால் சாதியக் கருத்துருவை அழிக்க முடியவில்லை. சீதனமுறைமைக்கு எதிராக மேற்கொண்ட பரப்புரைகளோடு ஒப்பிடுகையில் சாதியத்திற்கு எதிரான விழிப்புணர்ச்சியை ஒரு செயற்பாடாக அவர்கள் மேற்கொள்ள வில்லை. ஆனால் தீண்டாமைக் கொடுமைகளை துப்பாக்கியின் துணை கொண்டு அவர்களால் ஒடுக்க முடிந்திருந்தது. புலிகளின் ஆளுகைக்கு வெளியில் அது ஒரு போராட்டக்குழுவாக பார்க்கப்பட்டாலும் 90 களுக்குப் பிறகு புலிகள் தம்மை ஒரு குறை நிலை அரசாக பாவனை செய்து கொண்டார்கள். சாதிய அடிப்படையிலான பாகுபாட்டினை ஒரு குற்றமாகக் கருதி, அதனை தாம் உருவாக்கிய சட்டக் கட்டமைப்பின் ஊடாக அணுகினார்கள். அது தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான கொடுமைகளை ஓரளவுக்கேளும் நிறுத்தியிருந்தது. எப்படியென்றால் ஆதிக்க மனங்களில் கசடு அப்படியே நிலைத்திருக்க அவர்களின் கைகளைக் கட்டிப் போட்டிருந்தார்கள். எங்கேனும் அவ்வாறான கொடுமைகள் மேற்கொள்ளப்பட்டால் கடுமையான முறையில் தண்டனைகள் வழங்கப்பட்டிருந்தன. இது காரணமாக தமிழ் சமூகத்தில் முன்னர் தலைவிரித்தாடிய சாதிப்பாகுபாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட புறவயமான கொடுமைகள் நிறுத்தப்பட்டிருந்தன. அவ்வளவே,


மற்றும்படி திருமணம், தொழில் என சாதி தனது கட்டமைப்பை தொடர்ச்சியாகப் பேணியபடியிருந்தது.ஒரு சம்பவம் சொல்கிறேன். தொன்னுாற்று இரண்டுகளாக இருக்க வேண்டும். மாவீரர்தின நிகழ்வுக் கலை நிகழ்வொன்றில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. அப்போது வடபகுதியில் சவர்க்காரம் சீனி மண்ணெண்ணெய் உட்பட பல அத்தியாவசியப் பொருட்களுக்கு இலங்கை அரசால் தடை விதிக்கப்பட்டிருந்தது. வில்லுப்பாட்டில் ஏதோ ஒரு இடத்தில், “ஏன் தெரியுமா.. யாழ்ப்பாணத்திற்கு சவர்க்காரத்தினை அனுப்புவதில்லை. பிரேமதாசா வண்ணான் தானே.. அதுதான் அவர் முழுச் சவர்க்காரங்களையும் எடுத்துவிட்டார்” என்று கூறினார்கள். நிகழ்ச்சியினைப் பார்த்துக் கொண்டிருந்த யோகி உடனடியாக மேடையேறி நிகழ்ச்சியை நிறுத்தச் சொன்னார். பிரேமதாசா நம்முடைய எதிரியாக இருக்கலாம். அதற்காக சாதியைச் சுட்டி கேலி செய்வதை ஏற்கமுடியாதென்றார். நிகழ்ச்சி இடைநடுவில் நிறுத்தப்பட்டது. இதே பிரேமதாசாவை அடுத்த மே தினத்தில் ஊர்வலமொன்றில் வைத்து சைக்கிளில் மோதிய புலிகளின் தற்கொலைக் குண்டுதாரியொருவர் கொலை செய்தார். இந்த இரண்டு சம்பவங்களுமே புலிகளும் சாதியும் என்ற பார்வையில் பதிவு செய்ய வேண்டிய முக்கிய சம்பவங்களாக எனக்குத் தோன்றுகிறது. ஒரு படைப்பாளி என்ற வகையில் இந்த இரண்டையும் நான் பதிவு செய்வேன். இவற்றில் ஒன்றை மட்டுமே பதிவு செய்பவர்களைக் குறித்தும் ஒன்றை மட்டுமே பதிவு செய் என ஆணையிடுபவர்கள் குறித்தும் எனக்கு அக்கறையில்லை.
தீராநதி: போருக்குப் பின்னர் இலங்கை எழுத்தாளர்களின் சிந்தனை முறையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? சுதந்திரமாக சிந்திக்கவும் பேசவும் முடிகிறது என்றொரு கருத்து பொதுவாகச் சொல்லப்படுகிறதே?
சயந்தன்: நீங்கள் இந்தக் கேள்வியை போருக்குப் பின்னர் புலிகள் தொடர்பாக சுதந்திரமாக விமர்சிக்க முடிகிறதே என்ற அர்த்தத்தில் கேட்கிறீர்கள் என நம்புகின்றேன். உண்மையில் போருக்கு முன்னரும் புலிகள் இருந்த காலத்திலேயே புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து சுதந்திரமாக புலிகளையும் அரசினையும் விமர்சித்து எழுதிவருபவர்கள் இருக்கிறார்கள். இலங்கையில் போருக்கு முன்னர் புலிகள் தரப்புக் குறித்து கடுமையான விமர்சனங்களை வைக்க முடியாதிருந்தவர்களுக்குப் பல்வேறு காரணங்கள் இருந்தன. அவர்கள் புலிகளின் ஆளுகைக்குள் இருந்தார்கள். சிலர் புலிகளில் இணைந்திருந்தார்கள். சிலர் புலிகளுக்காக ஏதோரு ஒரு வகையில் செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். சிலர் சிவனே என்று சும்மாயிருந்தார்கள். இவர்களுக்கு போரின் பின்னரான சூழல், இதுநாள் வரை தம்மால் வெளியிட முடியாதிருந்த புலிகள் மீதான விமர்சனங்களை அல்லது திடீரென ஞானம் பெற்று உய்த்த கருத்துக்களைச் சொல்வதற்கு வழியைத் திறந்து விட்டிருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
ஆனால் மறுவளமாக அரச பயங்கரவாதம் குறித்து ஒரு வார்த்தையேனும் கதைக்க முடியாத நிலைமை இப்பொழுது அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.அதாவது புலிகளது சூழலில் அரச பயங்கரவாதத்திற்கு மட்டும் எதிராகவும் இராணுவச் சூழலில் புலிகளது அராஜகச் செயற்பாடுகளுக்கு மட்டும் எதிராகவும் எழுதவும் பேசவும் முடிகிற சுழலுக்குள் மாறி மாறி அகப்பட்டாக வேண்டியிருப்பது பெரும் துயரம். இருப்பினும் கிடைக்கின்ற வாய்ப்பினைப் பயன்படுத்தி பேசக் கூடியவற்றை பேச முடிவதென்பது முக்கியமானதுதான். எப்போதாவது இரண்டு பக்கங்கள் குறித்துப் பேசும் நாளொன்று அவர்களுக்கு வரும்போதே மனச் சாய்வுகள் குறித்து அறியக் கிடைக்கும்.
என்னளவில் ஒரு மூன்றாம் தரப்பாக நின்று புலிகளை விமர்சிக்க முடியவில்லை. அது ஒரு பெரும் குற்ற உணர்ச்சி. விவரணைகளுக்கு அப்பாலானது. எனது நாவலிலும் சிறுகதைகளிலும் வருகிற புலிகளைச் சுட்டுகிற பதிவுகள் முழுக்கவும் சுய விசாரணைக் குறிப்புக்கள்தான். நேற்றுவரை நான் நின்ற வட்டத்தின் உள்ளேயே நின்றவர்கள், இரவோடு இரவாக வெளியே பாய்ந்து காலையில் என்னைக் கை கொட்டிச் சிரிப்பதுவும் எள்ளி நகையாடுவதும் போல எனக்கும் ஓரிரவு அதிசயம் ஏதும் நடந்தால் பாழாய்ப்போன இந்த குற்ற உணர்ச்சியைக் கூட்டியள்ளி எறிந்து விட்டு ஜோதியில் கலந்து விடலாம். முடியவில்லை.
சயந்தன்: புகலிட தமிழ் அரசியல் சூழல் எப்படி இருக்கிறது?
தீராநதி: எனது இருபதுகள் வரை மிகத் தட்டையான ஒற்றைப்பார்வையைக் கொண்டிருந்தேன். புலிகளின் ஆளுகைக்குள் நீண்ட காலம் வாழநேர்ந்த எனது தலைமுறைக்கு இப்படியான நிலையே வாய்த்திருக்கும். சுய வெட்கத்துடன் சொல்வதெனில் முஸ்லீம்களின் வெளியேற்றத்தை நான் விடுதலைப் பயணத்தில் ஒரு தடையை நீக்கியதாகவே அந்த வயதுகளில் நம்புகிற அளவிற்கு மனநிலை இருந்தது.அந்த சூழலில் இருந்து முற்றாக வெளியேறி புகலிடத்திற்கு வந்தபோது அங்கு நிலவியதாக கருதிய மாற்றுச் சூழல் முற்றிலும் புதியதாக இருந்தது. ஒருவகையில் எனது முன்னைய ஒற்றைப் பார்வை குறித்த வெட்கமும் உருவாகியது. ஆயினும் அவ்வாறான மாற்றுச் சூழலின் செயல் இயக்கம் ஒரு குட்டையில் தேங்கிய நீரைப்போலவே தேங்கி நின்றது.
ஒரு கட்டத்தில் அதிகார எதிர்ப்பு நிலையாளர்கள் என்றளவிலாவது அம் மாற்று அரசியல் மீதான மரியாதை நீடித்திருந்தது. அதாவது ஒரு இயக்கமாகச் செயற்படமுடியாத ஆனால் புலிகள், அரசு முதலான அதிகாரங்களுக்கு எதிரான மனநிலை கொண்டதாக அவ் அரசியலை அடையாளம் கண்டுகொண்டேன்.
இருப்பினும் புலிகளுடைய தோல்வியின் பிறகு, புகலிட மாற்றுச் சூழலின் அதிகாரங்கள் மீதான எதிர்ப்புணர்வு தன்னைத் தோலுரித்து உள்ளே பல்லிளித்தபடியிருந்த புலியெதிர்ப்பின் முகம் கோரமாக வெளித்தெரிந்தது. மாற்றுக்கருத்தாளர்கள் என அறியப்பட்ட சிலர் இலங்கை அரசோடு சமாந்தரமாகப் பயணித்ததை கண்டுகொள்ள முடிந்தது. அவர்களது அதிகாரங்களுக்கு எதிரான மனநிலை எங்கேயென்று தேடுகிற அளவிற்கு நிலைமையானது. பலர் யதார்த்தமென்பது இலங்கை அரசோடும் , அரசோடு இணைந்த தமிழ் கட்சிகளோடும் இணைந்தே மக்களுக்காக எதையேனும் செய்ய முடிகிறது என்கிறார்கள். இருக்கலாம். ஆனால் ஒரு விவாதத்திற்காக, போரின் மிகப்பெரும் அழிவுகளின் பின்னரும் ஒருவேளை புலிகளின் கை ஓங்கியிருந்தால் அப்பொழுது மக்களின் நலன் கருதி புலிகளோடு கை நனைத்துக் கொள்ள இவர்கள் தயாராக இருந்தார்களா என்று கேட்டால் பதில் என்னவாக இருக்கும்.. ?
உண்மை என்னவென்றால், புலிகளது வெளியில் தமக்கான அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள முடியாதிருந்ததே, சிலரது பிரச்சனையாக இருந்ததாக நான் உணர்கின்றேன். இன்றைய நிலையில் புலிகள் அற்ற மூன்று வருடங்களின் பின்னரும் புகலிடத்தில் புலி ஆதரவு அரசியலும், புலி எதிர்ப்பும் அரசியலும்தான் நிலவுகிறது.
புகலிடச் சூழலில் பரவியிருந்த புலி ஆதரவு அரசியல் மட்டுமல்ல மேற்குறிப்பிட்ட புலி எதிர்ப்பு அரசியல் என்பதும் புலிகளது இருப்பு என்ற அச்சிலேயே திரண்டிருந்தது. புலிகளது அழிவின் பிறகு அது தன்னைத்தானே உதிர்த்துக்கொண்டிருக்கிறது. புலிகள் என்ற இலக்கு அற்ற நிலையில் தோளில் மாட்டிய அம்புறாத்தோணிகளோடும், வில்லும் அம்புகளோடும் இனிமேல் என்ன செய்வதென்றே அவர்களும் திசைதெரியாது இருக்கின்றனர் என நான் நினைக்கிறேன்,
தீராநதி: போர் முடிந்து மூன்றாண்டுகள் ஆகி விட்ட நிலையில் இப்போது உங்கள் மன நிலை என்ன?
சயந்தன்: ஒரு முட்டுச்சந்தில் நிற்பதைப் போன்றிருக்கிறேன். எனக்குத் தெரியவில்லை. தமிழர்களின் அரசியல் பிரச்சனைகள் அப்படியேதான் இருக்கின்றன. தமிழ் பகுதிகளில் இராணுவப் பிரசன்னம் இன்னமும் இருக்கிறது. இலங்கை அரசுகள் அரசியல் பிரச்சனை விவகாரத்தை அப்படியே தொடர்ந்தும் பேணுவார்கள். ஒரு தீர்வினை எட்டுவதற்கான முயற்சிகளில் அவர்கள் ஒருபோதும் இறங்கப்போவதில்லை. அவ்வாறான அழுத்தத்தை பிரயோகிப்பதற்கு தமிழர்களிடமும் இப்போதைக்கு வழியேதுமில்லை.
சிலர் சொல்கிறார்கள், மீளவும் ஆயுதப்போர் வெடிக்கும், தமிழீழம் கிடைக்குமென்று. உண்மையில் தமிழர் பிரச்சனைக்கான தீர்வொன்றுக்கு எதுவிதமான வேறு வழிகளும் தெரியாதவிடத்து ஆயுதப்போர் வெடிக்கும் என்று கும்பலில் கோவிந்தா போட்டுவிட்டு இருக்கலாம்தான். ஆனால் அது என்னளவில் இயலுதில்லை.
இறுதிப்போரின் அழிவுகளும், அக் குழந்தைகளும் சிறுவர்களும் முதியவர்களும் கருகிய நிலமும் புகை கலந்த காற்றும் இரத்தமும் எரிந்த சதைத்துணுக்குகளும் அவற்றிற்கு சற்றேனும் சம்பந்தமற்ற இடத்தில் நான் இயல்பான வாழ்வொன்றுக்குள் இருப்பதுவும் ஆயுதப்போரினை நான் நினைத்தும் பார்க்க முடியாத நிலையில் என்னை நிறுத்தியிருக்கின்றன.போர்க்குற்ற விவகாரங்களில் எனது ஈடுபாடெல்லாம் கூட மகிந்தவிற்கோ வேறு எவரிற்குமோ தண்டனை வாங்கிக் கொடுத்தலின் பாற்பட்டதல்ல. இவ்விவகாரங்கள் மூலமான அழுத்தம் தமிழர்களுக்கு ஏதேனும் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் என்ற அளவிலேயே. அது நடந்துவிட வேண்டுமென விரும்புகிறேன்.
தீராநதி: சிங்களர்களுடன் பகை மறுப்புத் தேவை? என்று தொடர்ந்து தமிழர்களுக்கு சிலர் சொல்கிறார்கள். உண்மையில் இந்த பகை மறுப்பு என்னும் விஷயத்தை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?
சயந்தன்: ஆம். பகை மறப்பு குறித்து சிலர் பேசியும் எழுதியும் வருகிறார்கள். உண்மையில் பகை மறப்பென்பது இலங்கை அரசோடும் இராணுவ இயந்திரத்தோடுமா அல்லது சிங்கள மக்களோடா என்பது தெளிவுபடுத்தப்படவேண்டியது. சிங்கள அரசோடு இணங்கிப் போவதென்பதை பகை மறப்பு என எண்ண முடியவில்லை.சிங்கள மக்களைக் குறித்த சந்தேகங்களும் கோபங்களும் தமிழர்களிடத்தில் இருக்கிறது. மறுவளமாக சிங்கள மக்களிடத்திலும் அவ்வாறான சந்தேகங்கள் உள்ளன. 2003 இல் சமாதான காலத்தில் ஒருமுறை சிங்களப் பகுதிகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இயற்கை அனர்த்தத்தில் வீடுகள் அழிந்தன. பல குடும்பங்கள் வீதிக்கு வந்தன. அப்பொழுது வன்னியில் திரட்டிய அத்தியாவசியப் பொருட்களோடு புலிகளின் அரசியல் அணியொன்று சிங்களப் பகுதிகளுக்குச் சென்றிருந்தது. அப்பொழுது சிங்களப் பெண்மணியொருவர் புலிகளின் உறுப்பினர் ஒருவரிடம் உண்மையாகவே நீங்கள் புலிகள்தானா.. என்று ஆச்சரியத்தோடு கேட்டதும் கைலாகு கொடுத்தபோது நம்பவே முடியவில்லை. புலிகள் என்பவர்களும் எம்மைப் போலவே மனிதர்களாக இருக்கிறார்கள் எனச் சொன்னதுமான சம்பவங்களை பின்னர் அவ் உறுப்பினர் நினைவு கூர்ந்திருந்தார்.
தமிழீழத்தினை பெற்ற பிறகு கூட சிங்களதேசமே நமது அயல்நாடாக இருக்கப் போகிறது என்றும் இரண்டுக்கும் இடையில் கால்வாய் வெட்டி கடலை உட்கொண்டு வரமுடியாது என்றும் அயல்தேசத்து மக்களாக சிங்கள மக்களே இருக்கப் போகிறார்கள் பொருளாதாரத் தொடர்புகளில் இரு நாடுகளும் பின்னியே இருக்குமென்றும் கருத்துக்களை பாலகுமாரன் போன்ற புலிகளின் முக்கியஸ்தர்கள் கொண்டிருந்தார்கள்.ஆக சிங்களமக்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான பகைமறப்பு என்பது ஆரோக்கியமானதே.ஆனால் இறுதிப்போரில் இலங்கை அரசு வென்றபோது சிங்களமக்கள் வர்க்க பேதமற்று வெடி கொளுத்திக் கொண்டாடினார்கள். அந்த யுத்தத்தில் வெல்வதற்காக இலங்கை அரசு மேற்கொண்ட யுத்த மீறல்கள், அப்பாவிப் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொலைகள் அனைத்தையும் அங்கீகரித்தபடியே அந்தக் கொண்டாட்டங்கள் இருந்ததாக ஒரு தோல்வியுற்ற இனமாக தமிழர்களின் மனங்களில் ஆறாத காயமாக அந்த நிகழ்வுகள் இருக்கின்றன. அவற்றைத் தணிக்கும் பொறுப்பு சிங்கள மக்களிடமே உள்ளது.
ஒரு பெரும் போருக்குப் பின்னதாக பகை மறப்பின் முதல் அடியினை வெற்றி கொண்ட தரப்பே மேற்கொள்ள முடியும். பகை மறப்பென்பது எக்காளமும், குரூரமும், வென்ற திமிரும் அற்ற மனநிலையில் எதிர்காலம் என்ற நோக்கு நிலையில் மட்டுமே தோல்வியுற்ற மனதொன்றோடு செய்து கொள்ளக் கூடியது. மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். அவ்வாறான பகை மறப்பிற்கான சமிக்கைகள் எதுவும், சிங்கள அரசிடமிருந்து வருகிறதா.. மாறாக போராளிகளின் கல்லறைகள் சிதைத்தல், கொலைகளைக் கொண்டாடுதல், கடத்தல் கொலை என்று அச்சம் தரும் சூழலைத் தொடர்ந்தும் பேணுதல், வழிபாட்டு இடங்களை மூடுதல் என மேலும் இடைவெளிகளை அதிகரிக்கும் செயல்களே நடக்கின்றன. தன் பிள்ளையின் உடல் துாங்கிய கல்லறையை புல்டோசரைக் கொண்டு கொத்திக் கிளறிய ஒரு தரப்போடு எந்தத் தாயால் எந்தத் தந்தையால் எந்த அண்ணனால் எந்த தம்பியால் பகை மறப்பு குறித்து யோசிக்க முடியும்..
தீராநதி: ஈழ விவாகரத்தில் இந்தியாவைத் தவிர்க்க முடியுமா? இந்தியாவை எப்படி அணுகின்றீர்கள்?
சயந்தன்: தெற்காசிய அரசியல் நகர்வுகளில் இந்தியாவைத் தவிர்த்து இலங்கையில் தமிழர்கள் தமக்கான தீர்வொன்றினைப் பெற்றுவிட முடியாது என்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள். ஆனால் இந்தியாவை அவ் விடயத்தில் தலையிடாதபடி இலங்கை மிகுந்த இராஜதந்திரத்தோடு காய்களை நகர்த்துவதோடு தனக்கு ஏற்றபடியும் பயன்படுத்திக் கொள்கிறது.நான் இந்தியாவை நம்பிக்கெட்ட ஒருவனின் கண்களுக்கூடாகவே பார்க்கிறேன். இனி என்னிடம் இந்தியா குறித்த எந்த எதிர்பார்ப்புக்களும் இல்லை. இந்தியா மட்டுமென்றல்ல. தமிழ்நாடு குறித்தும் அதுவே நிலைப்பாடு.
தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள், பிரமுகர்களின் தமிழீழம் குறித்த ஸ்டேட்மென்ட்களை ஒரு வித துயரம் சுமந்த ஏளனப் புன்னகையோடு பார்த்தபடியிருக்கிறேன்.இந்தியாவில் ஈழத்தமிழ் விவகாரமென்பது சிலருக்கு செய்தி, சிலருக்கு அரசியல், சிலருக்கு வியாபாரம், சிலருக்கு எரிச்சல், சிலருக்கு ஆற்ற முடியாத பெரும் துயரம். அப்படித் துயரம் கொள்வோரின் கண்ணீர் உண்மையானது. ஆனால் அதனை நாமே துடைத்து விட வேண்டியிருக்கிற யதார்த்தத்தை நான் உணர்ந்து நீண்ட நாட்களாகிவிட்டன.இப்பொழுது தமிழ்நாட்டினையும் ஈழத்தினையும் எதுவெல்லாம் இணைக்கின்றன எனக் கேட்டால் எதுவுமல்ல, பாக்குநீரிணை ஒன்றைத் தவிர என்பதுவே எனது பதில்.
நேர்காணல்: குமுதம் தீராநதி யூலை 2012

0 comments: