ஒரு எழுத்தாளன் நான் இதற்கும் ஆசைப்பட்டிருக்கிறேன் -நாஞ்சில் நாடன் பேட்டி.


‘‘ விருப்பு வெறுப்புகளுப்பால் நான் இந்த மக்களோடும் மண்ணோடும் ஊடாடிக் கொண்டிருக்கிறேன். மனதுக்குப் பட்டதைச் சொல்லியிருக்கிறேன். வெட்கம், அவமானம், பெருமிதம், பசி, இரக்கம், காமம், அறச்சீற்றம் என எல்லா உணர்வுகளாலும் எல்லா மனிதர்களைப் போலவே கட்டப்பட்டவன்தான் நானும். 1977 - ல் நான் ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவலை எழுதிய போது நான் மதிக்கும் விமர்சகர்கள், எழுத்தாளர்கள் என எல்லோரும் அந்த நாவலைப் பற்றி மதிப்பிட்டதிலிருந்து என்னை நான் சாகித்ய அகாடமி விருதுக்கு தகுயானவன் என்று நினைத்திருந்தேன். அந்த நாவல் சுமார் எட்டு பதிப்புகள் கண்டு இருபதாயிரம் பிரதிகள் வரை விற்றுத் தீர்ந்து சுமார் 35 ஆண்டுகளாக நான் எழுதியும் விட்டேன். இப்போது எனக்கு சாகித்ய அகாடமி விருது கொடுத்திருக்கிறார்கள். இப்போது எனக்கு வயது 63’’என்று விருதின் மகிழ்வைப் பகிர்ந்து கொள்ளும் நாஞ்சில் நாடன் தனது இளமையின் வசீகரத்தை இன்னும் வயதில் தொலைத்து விடவில்லை. எழுத்தைப் போலவே எப்போதும் கலகலப்பாக இருக்கிறார் நாஞ்சில் நாடன். ஆறு நாவல்களும், ஒன்பது சிறுகதைத் தொகுப்புகளும், 112 சிறுகதைகளும், கட்டுரை கவிதைகளும் எழுதியிருக்கிறார். தமிழில் வட்டார வாழ்வியலை நவீன இலக்கியத்திற்கு பரிச்சயப்படுத்தியது நாஞ்சில் நாடனின் எழுத்து.

‘‘எல்லோருடைய சந்தோசங்களையும், எல்லோருடைய துக்கங்களையும் நான் சுமந்து நடப்பவன் என்கிற முறையில் ஒரே நேரத்தில் இந்த விருது எனக்கு சந்தோசத்தையும் கொடுக்கிறது. கூடவே சில கவலைகளையும் நான் பார்க்க எழுதவந்தவர்கள் எழுதத்துவங்கிய சில ஆண்டுகளுக்குள்ளாகவே சாகித்ய அகாடமி விருது பெற்று விட்டார்கள். ஆனால் தமிழ் எழுத்துப்பரப்பில் என்னை விட மூத்தவர்களும் உண்டு என் சமகால எழுத்தாளர்களும் உண்டு அம்பை, வெங்கட்சாமிநாதன், நா.முத்துசாமி, கோவை ஞானி, ஞானக்கூத்தன், வண்ணதாசன், வண்ணநிலவன், பூமணி, ஜெயமோகன், பா.செயப்பிரகாசம், எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன், கலாப்ரியா, ம.இல.தங்கப்பா என்று நீண்டு செல்லும் இந்த பட்டியலின் பின்னே ஒரு புறக்கணிப்பு அரசியல் உண்டு. இன்று எனக்குக் கிடைத்ததற்காக நான் பெருமைப்படலாம், என் எழுத்தால் மட்டுமே இது சாத்தியமானதென்று மார்தட்டலாம் ஆனால் என் வாழ்வில் என் சிந்தனையில் ஏதோ ஒருவகையில் இவர்கள் எல்லோரும் இணைந்த ஒரு கலவையாகவே நான் இருக்கிறேன். இவர்களின் எல்லா காலடித் தடங்களுள் என்னுடையதும் ஒன்றாக இருக்கும் போது இந்த புறக்கணிப்பை சுட்டிக் காட்டுவதை என் கடமையாக நினைக்கிறேன். இவர்களோ நனோ விருதுகளுக்காக தேடி அலைந்தவர்களில்லை. ஆனால் அது தீவீரமாக இயங்கும் எழுத்தாளர்களுக்கு கிடைக்காமல் போகும் போது அது இந்த மக்களுக்குத்தான் இழப்பே தவிற எழுத்தாளனுக்கில்லை. ’’ என்கிறார் நாஞ்சில் நாடன்.


நாஞ்சில் நாடனுக்கு இப்போது சூடிய பூ சூடற்க என்னும் சிறுகதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டிருக்கிறது. அவரோ நாஞ்சில் நாட்டு உணவு வகைகள் குறித்து ஒரு நூலை எழுதி முடித்திருக்கிறார். இன்னும் ஐந்து வருடங்களுக்கான எழுத்துத் திட்டங்களோடு இருக்கும் நாஞ்சில் நாடன் தற்போது கோவையில் வசிக்கிறார்.


‘‘ ஆண்டாளை ‘சூடிக் கொடுத்த சுடர்க் கொடி’ என்று சொல்வார்கள். திருவில்லிப்புத்தூரில் இருக்கிற பெருமாள் மீது கொண்ட காதலால் தன் கழுத்தில் சூடிய மாலையை பெருமாளுக்குக் கொடுத்தாளாம் ஆண்டாள். பொதுவாக ஒருவர் சூடிய பூவை இன்னொருவருக்குக் கொடுக்கும் மரபு நம்மிடம் இல்லை. ஆனால் ஆண்டாளின் அந்த செயல் பிடித்திருந்ததால் ஒரு சிறுகதைக்கு சூடிய பூ சூடற்க என்று பெயர் வைத்தேன். அந்த நூலுக்குத்தான் விருது கிடைத்திருக்கிறது. இந்தப் பொழுது சந்தோசமாக கழிகிறது. ஒரு எழுத்தாளன் நான் இதற்கும் ஆசைப்பட்டிருக்கிறேன் என்ன செய்ய? ’’ என்கிறா நாஞ்சில் நாடன்.

நன்றி- குங்குமம்.

0 comments: