மீனவர் படுகொலைகள்- யார் காப்பாற்றுவார்கள்?


சென்ற ஆண்டு செல்லப்பன் கொல்லப்பட்டார் இந்த ஆண்டு பாண்டியன் கொல்லப்பட்டிருக்கிறார். இதற்கு முன் பல நூறு மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்திய, இலங்கை கடலோர எல்லையில் மீன் பிடிக்கக் கூடாது என்பதும். இனி மேல் ஈழத்தில் எவ்விதமான அரசியல் முயர்ச்சிகளும் இல்லாமல் போக வேண்டுமென்கிற நீண்டகால நோக்கில் இராமேஸ்வரம் பகுதி இரு நாட்டு அரசுகளின் பிடிக்குள் வருவதும். மீனவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதும்தான் இந்திய, இலங்கை அரசுகளின் திட்டம். கூட்டுக் கொலை செய்வதோ கூட்டம் கூட்டமாய் மக்களை வெளியேற்றுவதோ நகர்புறங்களில் இலகுவாக இருக்கும் போது எல்லைப் புற கிராமங்களில் அரசுகள் இம்மாதிரியான கொலைகளையும் கடற்கரை மேலாண்மைச் சட்டங்களையுமே நம்பியிருக்கிறது. மற்றபடி இனி இராமேஸ்வரம் மீனவர் படுகொலைகளைக் கூட இனப்படுகொலைகள் என்று சொல்வதற்கான எல்லா அர்த்தங்களும் உண்டு. தண்டகாரண்யா படுகொலைகளை பழங்குடி இனப்படுகொலை என்று சமீபகாலத்தில் அறிவுஜீவிகள் குறிப்பிடும் நிலையில் இராமேஸ்வரப் படுகொலைகளையும் இனி நாம் அப்படியே அழைக்கலாம். இந்த இனப்படுகொலைகளுக்கு பொறுப்பாளி இலங்கை மட்டுமல்ல இந்தியாவும்தான்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கருணாநிதி மன்மோகனை இப்பிரச்சனையில் தலையிடக் கோரி அவசரத் தந்தியை எல்லோருக்கும் முன்னர் முதல் ஆளாக டில்லிக்கு அனுப்ப, இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசத்தை நேரில் அழைத்து இந்தியா இது தொடர்பாக அறிவுறுத்த அவரோ ஊடகங்களில் // மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தக் கூடாது. அவர்களை தாக்கக் கூடாது என்று எங்கள் கடற்படைக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சர்வதேச எல்லையைக் கடந்து வந்தாலும் கூட தாக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளோம். இருப்பினும் இந்தச் சம்பவம் குறித்து இந்தியா அதிகாரப்பூர்வமாக இலங்கை அரசுக்கு தெரிவித்து இருப்பதால் இதுகுறித்து இலங்கை அரசு விசாரணை நடத்தும் என்று அவர் கூறினார். இலங்கைத் தரப்பிலும் இந்தியத் தரப்பிலும் விசாரணை நடத்தப்படும்போதுதான் உண்மையிலேயே நடந்தது என்ன என்பது தெரிய வரும் என்று அவர் கூறினார். எனக்குக் கிடைத்த தகவல்படி சம்பவம் நடந்த பகுதியில் எங்கள் கப்பல் இல்லை என்று கூறப்படுகிறது // என்று நாங்கள் கொலை செய்ய வில்லை என்று சொல்லியிருக்கிறார்.
போரின் போதும் போருக்குப் பின்னர் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வன்னி மக்களை கூட்டுக் கொலை செய்த பௌத்த பாசிச பேரினவாத சிங்கள அரசு. இப்போதும் படுகொலைகளை அரங்கேற்றி வருகிறது. தன் சொந்தக் குடிகளான சிங்கள மக்கள் மீதும், வடக்கிக் கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் மீதும் இப்படுகொலைகள் ஏவப்படுகின்றன. ஒரே ஒரு வித்தியாசம்தான் நேரடியாக இராணுவம் இப்படுகொலைகளில் ஈடுபடுத்தப்படுவதில்லை. இலங்கை அரசின் சட்ட விரோத ஆயுதக் குழுக்களைக் கொண்டே இப்படுகொலைகளை இலங்கை செய்கிறது. ஈ.பி.டி.பி, கருணா குழு, முன்னாள் புலி உறுப்பினர்கள் எனப்பலரும் இப்படுகொலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறார்கள். தமிழக மீனவர்களைக் கொன்றதும் இந்தக் குழுக்களாக இருப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி விட்டதால் இந்தப் பிரச்சனையில் இனி ஒரு மாதத்திற்கு சவுண்ட் கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கும். கருணாநிதி அடித்த தந்தியும், ஜெயலலிதா இதை வைத்து ஆடப் போகும் நாடகங்களும், அப்பால் கடந்த ஆண்டு செல்லப்பன் கொல்லப்பட்டதற்கும் இப்போது பாண்டியன் கொல்லப்பட்டதற்கும் இடையில் நடந்தது அந்த முக்கியமான நிகழ்வு. அது இந்திய இலங்கை மீனவர்கள் பேச்சு வார்த்தை.சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் ராமேஸ்வரத்திலும், சென்னை தாமஸ் மலையில் உள்ள தேவாலத்திலுமாக ( இந்தப் பேச்சுவார்த்தையில் சில பாதிரிகளும் உண்டு) இந்த பேச்சுவார்த்தை நடந்தது. அந்தப் பேச்சுவார்த்தை தொடர்பாக அப்போது நான் எழுதியிருந்தேன்.

பேச்சுவார்த்தை கொலைக்கு அங்கீகாரம்.

சுமார்21 பேர் இலங்கை மீனவர் சங்கத் தலைவர் என்று சொல்லப்படும் சூரியகுமாரன் தலைமையில் இலங்கை அரசின் தூதுவர்களாக இராமேஸ்வரம் வந்தனர் . கேரளாவைச் சார்ந்த தென்னிந்திய மீனவ சங்கங்கங்களின் சம்மேளனம் என்ற தன்னார்வ அமைப்பை நடத்தி வரும் விவேகானந்தன் என்பவர் மூலமாகவும் அதன் சகோதர அமைப்பு என்று சொல்லப்படும் நிரபராதிகள் மீனவர் குழு அமைப்பின் மூலமாகவும் இந்தக் கலந்துரையாடலை அல்லது பேச்சுவார்த்தையை இராமேஸ்வரத்தில் நடத்தியது. அந்தப் பேச்சுவார்த்தைக்கு பாரம்பரீய மீனப் பிரதிநிதிகள் அழைக்கப்படவில்லை என்பது வேறு விஷயம். ஒரு விஷயத்தில் மட்டும் அவர்கள் குறியாக இருந்தார்கள். ஈழ விவகாரத்தில் திவீரமாக இருக்கும் சக்திகள் இதில் தலையிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்பதாக இருந்தது.
இத் தூதுக்குழு இராமேஸ்வரம் பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மீனவர் தலைவர்கள் என்று சொல்லப்படும் சிலருடன் பேசியிருக்கிறது

. இதில் கடலே வாழ்வாகக் கொண்ட பாரம்பரீய மீனவச் சங்க தலைவர்கள் குறைவு. அதிகம் பேர் தொழில் நிமித்தம் இராமேஸ்வரத்தில் குடியேறியவர்கள் இவர்களுக்கு எப்போதும் மீன் பிடித்தொழிலும் வருமானம் தொடர்பான வருத்தங்களோ கவலைகளோ இருக்குமே தவிற ஒடுக்கப்படும் பாரம்பரீய மீனவ மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் குறித்த உண்மையான அக்கரையோ கரிசனமோ இவர்களுக்கு எப்போதும் இருந்ததில்லை என்கிற நிலையில் இப்பேச்சுவார்த்தையில் இவர்கள் பாரம்பரீய மீனவ மக்களின் பிரதிநிதிகளாக கலந்து கொண்டிருக்கிறார்கள். இங்கே இன்னொன்றையும் சுட்டிக்காட்ட வேண்டும் மீனவ மக்களை பிரதிநிதுத்துவப் படுத்தும் அரசியல் தலைமைகளோ பிரதிநிதிகளோக் கூட மீனவ மக்களுக்குக் கிடையாது. உள்ளூர் புறங்களின் ஆதிக்கசாதி அதிகாரத்தை, பெரும்பான்மை சாதி ஓட்டு அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தும் திராவிட இயக்க அல்லது தேசிய இயக்கத் தலைவர்களே இவர்களின் தலைவர்கள்.ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்கு வங்கியாக பயன்படுத்தப்படும் இம்மக்களின் பிரச்சனைகள் குறித்து உண்மையான அக்கறை இங்குள்ள அரசியல் தலைவர்களுக்கும் இல்லை.இத்தகைய சூழலில் இருந்துதான் இராமேஸ்வரம் மீனவர்கள் ஏமாற்றப்படும் சூழலையும் அதன் பின்னணியையும் புரிந்து கொள்ள வேண்டும்.
சென்ற ஆகஸ்டில் இலங்கை அரசின் தூதுவர்களாக வந்தவர்களில் பேசாலை ஆயர் அகஸ்டின் மீன்வளத்துறை அதிகாரி சில்வா, பத்திரிகையாளர் நிரோசா மாலா என்று தெளிவான நிறுவனமயமாக்கப்பட்டக் குழுவாக வந்தனர். வந்தவர்கள் // கடந்த முப்பதாண்டுகளாக எமக்கு போர்ச்சூழல் காரணமாக மீன்பிடித்தொழில் இல்லை. போர் முடிவடைந்துள்ள நிலையில் இப்போதுதான் மீன் பிடிக்கத் துவங்கியிருக்கிறோம். ஆனால் நீண்டகாலமாக தமிழக மீனவர்களான நீங்கள் எங்கள் கடல் பகுதியில் மீன் பிடித்து வருகிறீர்கள். இரட்டை மடியைப்படுத்துவதாலும், ஒப்பீட்டளவில் டோலர் படகுகளைப் பயன்படுத்துவதாலும் எங்களின் மீன் வளம் கெடுகிறது. ஆகவே நீங்கள் உங்களின் மீன் பிடி எல்லையைச் சுருக்கிக் கொள்ளுங்கள், இரட்டை மடி வலையைப் பயன்படுத்தாதீர்கள். அது போல எல்லை தாண்டும் மீனவர்களைத் தாக்குவதோ கொல்வதோ சரியில்லை அது பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சனை.// என்று இராமேஸ்வரத்தில் சூர்யகுமாரன் தெரிவித்துள்ளார். பின்னர் சென்னைக்கு வந்த குழுவினர் பெயர் குறிப்பிடப்படாமல் சென்னையில் பரங்கிமலை சர்ச்சில் நடந்த பேச்சுவார்த்தைக்கு சென்னையில் பாரம்பரீய மீனவப் பிரதிநிகள் யாரும் அழைக்கப்பட வில்லை. ஏன் அழைக்கவில்லை என்று கேட்டால் இது இராமேஸ்வரத்தை ஒட்டிய மீனவர் பிரச்சனையாம் அதான் அழைப்பில்லை என்று சமாதானம் சொல்லியிருக்கிறார்கள்.
சென்னை பிரஸ் கிளப்பில் பேட்டியளித்த மீனவர் குழுவினர் தெரிவித்த கருத்துக்களை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும். பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இலங்கை குழுவின் தலைவர் சூரியகுமாரன் கூறியதாவது:

.// இலங்கையில் கடல் வளத்தை அழிக்கும் எந்தவிதமான தொழிலையும் நாங்கள் செய்வதில்லை என்று முடிவெடுத்து சில மாற்று முறைகளில் மீன் பிடித்து வருகிறோம். தமிழக மீனவர்களின் விசைப்படகும், அதில் பயன்படுத்தும் வலைகளும் கடல் வளத்தை அழிக்கக் கூடியது. எனவே இந்த பேச்சுவார்த்தையில் எங்கள் பகுதியில் தடை செய்யப்பட்ட தொழில்கள் எது? அதை எப்படி தடுப்பது? மேலும் இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து பேச இருக்கிறோம்.இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இதன் மூலம் எடுக்கப்படவுள்ள பரிந்துரைகளை இரு நாட்டு அரசுக்கும் தெரிவிக்க இருக்கிறோம். இரு நாட்டு அரசுகளும் எடுக்கின்ற முடிவில் தான் எங்கள் முடிவும் சார்ந்திருக்கிறது. அதற்கு முன் எங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது. கடல் எல்லையை இலங்கை அரசு நிர்ணயம் செய்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடிப்பதை நாம் தடுக்க முடியாது. அதை தடுப்பது இலங்கை அரசு தான். கடல் தான் எங்களை பிரிக்கிறது, எங்கள் உறவு முறையில் பிரிவு இல்லை. எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை சுடுவதை நிறுத்துங்கள், அவர்களை சட்டரீதியாக நீதிமன்றம் முன் நிறுத்துங்கள் என்றும் நாங்கள் பரிந்துரைக்க முடிவு செய்துள்ளோம்.கச்சத்தீவு முன்பு இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்பு ஏற்பட்ட ஒரு ஒப்பந்தம் மூலம் இலங்கைக்குக் கொடுத்திருக்கிறார்கள்.இதனால் தமிழக மீனவர்கள் கச்சத்தீவை பயன்படுத்த முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கவும், வலைகளை காயவைக்கவும், ஓய்வு எடுக்கவும் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அதை அரசுகள் தான் முடிவு செய்ய வேண்டும்.இந்திய மீனவர்களை எல்லை தாண்டி வாருங்கள் என்று நாங்கள் அழைக்க முடியாது. மீன் பிடிக்கும் முறை தான், குறிப்பாக விசைப்படகும், அவர்கள் பயன்படுத்தும் வலைகளும் தான் முறையற்றது. அதற்கு இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது. " என்று தந்திரமாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றியது போல விஷயத்தை ஏற்றுகிறார் சூர்யகுமாரன்.
நீங்கள் எங்கள் கடல்பகுதிக்குள் வரக்கூடாது இரட்டை மடியைப் பயன்படுத்தக் கூடாது என்ற இலங்கை அரசின் நோக்கத்தை ஏதோ இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்பது போல எமது மக்கள் மீது சுமத்துகிறார்கள். ஆனால் எமது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சுடாதே, தொழில் உரிமையை அங்கீகரி, கச்சத்தீவில் மீன் பிடி உரிமையை நிலை நாட்டு என்பதெல்லாம் அரசுகளின் விஷயமாம் அதில் தலையிட முடியாதாம். சூர்யகுமாரனின் இந்தக் கருத்து ஈழத் தமிழ் மீனவர்களின் கருத்தா? அல்லது இலங்கை அரசின் கருத்தா? வந்திருப்பவர்கள் உண்மையிலேயே மீன் பிடித்தொழிலில் நேரடியாக ஈடுபடுவர்களாக இருந்திருந்தால் எல்லை தாண்டும் இயர்க்கை இடர்பாடு குறித்து அவர்களே நேர்மையாகப் பேசியிருப்பார்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் சொன்னதெல்லாம் எங்கள் பகுதிக்குள் வராதீர்கள் என்பதுதான். ஆக எஸ்.எம்.கிருஷ்ணா பாராளுமன்றத்தில் என்ன சொன்னாரோ, அதையே ஒரு குழுவை அனுப்பி இலங்கையும் சொல்லியிருக்கிறது. எப்படியாவது பிரச்சனை தீர்ந்து விடும் என்ற நம்பிக்கையில் இதன் பின்னால் உள்ள சூழ்ச்சி தெரியாமல் இராமேஸ்வரம் மீனவப் பிரதிநிதிகள் இதில் பொறுப்பாளிகளாக பங்கேற்கிறார்கள்.
இந்தக் குழுவினர் இந்தியா வருவதற்கு சில நாட்களுக்கு முன்னர் இந்திய மீன்பிடிப்படகுகள் வடமராச்சி பகுதியில் அத்து மீறி மீன் பிடிப்பதாக வடமராட்சி மீனவர் ஒன்றியம் குற்றம் சாட்டியதை இங்கே நாம் சூழலோடு பொறுத்திப் பார்க்க முடியும்

. வருவதற்கு முன்னால் இப்படியான குற்றச்சாட்டுகளை தமிழக மீனவர்கள் மீது சுமத்தியவர்கள் யார் ஒரு வேளை அது சூர்யகுமாரன் தானோ? என்ற சந்தேகம் வலுத்துள்ள நிலையில் இந்தியப் படகுகள் இப்படி மீன் பிடிப்பதால் தங்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதாக வடமராச்சி மீன் பிடிச்சங்கம் குற்றம் சுமத்தியது. அதற்கு முன்னரே இலங்கை அரசின் ஆதரவாளராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவும் இப்படியான குற்றச்சாட்டைக் கூறியிருந்ததோடு சென்றவருடம் கச்சத்தீவு அந்தோனியார் கோவில் திருவிழா தலத்தில் இரு நாட்டு மீனவர்களும் சந்தித்துப் பேசுவதற்கான ஏற்பாட்டை செய்திருந்ததாகவும் கடைசியில் தமிழக மீனவர்கள் வரவில்லை என்றும் குறைபட்டுக் கொண்டார். இந்நிலையில்தான் தன்னார்வக்குழுக்களின் ஏற்பாட்டின் படி இச்சந்திப்பு நடந்துள்ளது. போருக்குப் பின்னர் இலங்கை இராணுவத்தின் கெடுபிடி காரணமாக இந்தப் பிராந்தியத்தில் ஈழத் தமிழ் மீனவர்கள் எப்போதும் மீன் பிடியில் ஈடுபட்டதில்லை. போருக்குப் பின்னர் ஈழத் தமிழர்களின் பாரம்பரீய மீன்பிடி வலையமாக இருந்த மன்னார் பகுதிக்குள் தென்பகுதி சிங்கள மீனவர்கள் வந்து மீன்பிடிப்பதும்.
வடபகுதி , கிழக்கு மாகாண தமிழ் மீனவர்களைத் தாக்கி மீன்களை கொள்ளையடித்துச் செல்வதும், மீன்பிடியில் தமிழ் மீனவர்களுக்கு கட்டுப்பாடுகளும் சிங்கள மீனவர்களுக்கு கட்டற்ற சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ள நிலையில் யாழ்பாண மீனவர்களின் மீன்பிடித் தொழில் தமிழக மீனவர்களால் பாதிக்கப்படுகிறது என்று இலங்கை அரசு சொல்கிற குற்றச்சாட்டின் நோக்கம்தான் என்ன? உண்மையிலேயே வடக்குக் கிழக்கில் உள்ள மீனவர்களுக்கும் தமிழ் மீனவர்களுக்கும் பிரச்சனைகள் இருந்ததா? என்றால் புலிகளின் போராட்டம் வலுப்பெற்ற காலங்களில் தமிழக மீனவர்களுக்கு புலிகள் எவ்விதமான தொல்லைகளும் கொடுத்ததில்லை. தங்களின் போராட்டத்திற்கு வலுவான பின் தளமாக உள்ள மீனவர்களுடன் அவர்கள் நல்லுறவு பேணினார்கள். (குமரி மாவட்ட மீனவர்கள் ஐந்து பேரை கொன்று விட்டு பழியை புலிகள் மீது போட்டார்கள்) அதற்கு முந்தைய காலங்களில் யாழ்பாண மீனவர்கள் தமிழக மீனவர்களை மேலாதிக்கம் செய்தாலும் காலப்போக்கில் இது இல்லாது போயிருந்தது. புலிகள் அரசியல் நலனை கருத்தில் கொண்டு இந்த முரண்பாடுகளைக் களைவதில் பெரும்பங்காற்றினார்கள்.

புலிகள் இல்லாது போன இன்றைய நிலையில் பேச்சு வார்த்தையின் பெயரால் தமிழக மீனவர்களை இராமேஸ்வரத்தில் இருந்து அப்புறப்படுத்தும் வேலையைத் தந்திரமாக செய்வதோடு, தமிழக மீனவர்களுக்கும் ஈழத் தமிழ் மீனவர்களுக்குமிடையில் ஒரு மோதலை உருவாக்கி அரசியல் ரீதியான பிளவை உருவாக்குவதுமே இலங்கையின் நோக்கம். இப்போது கே,பி- யும் இதற்காக களமிரக்கப்பட்டுள்ளார். இந்தப் பிளவை கவனித்தால் எல்லா துறைகளிலும் இந்தப் பிளவை துல்லியமாக செய்வதை நாம் புரிந்து கொள்ள முடியும். சுட்டுக் கொல்வது நாங்கள் கொல்ல வில்லையே என்று சொல்வது. நெருக்கடி இல்லாத நேரமென்றால் எல்லை தாண்டியதால் சுட்டோம் என்று சொல்லி விட்டுப் போய் விடுகிறார்கள் இலங்கையும் இந்தியாவும்.

என்ன செய்யலாம்?

நீண்டகாலமாக இராமேஸ்வரம் மீனவர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள் . இப்போதும் கொல்லப்படுகிறார்கள் . இது நின்றபாடில்லை, இந்தியா ஈழத் தமிழனை மட்டுமல்ல தமிழகத் தமிழனைக் கூட காப்பாற்றாது. இது மீனவ மக்களுக்கும் தெரியும். அரசியல்வாதிகளுக்கும் தெரியும் ஆனால் தங்களின் தேர்தல் கூட்டு அரசியலுக்கு அவர்கள் என்ன வேண்டுமென்றாலும் பேசுவார்கள். மீனவ மக்கள் அவர்களை அவர்களே காப்பாற்றிக் கொள்வது ஒன்றுதான் தீர்வு அது எந்த வழியிலேனும் என்றாலும் சரிதான்.

1 comments:

Anonymous said...

இலங்கை அரசு இந்தப் போரை வன்னியோடு முடித்துக் கொள்வதாக இல்லை. இராமேஸ்வரம் மீனவர்களையும் அது வேட்டயாடுவது நீண்ட கால அரசியல் நோக்கில்தான். ஆனால் இந்தியா இது பற்றி மௌனமாக ஆதரித்தால் இன்னொரு ஈழத்தை தமிழகத்தில் சந்திக்க வேண்டி வரும்.

ஆனந்தி.