பிநாயக்சென் நீதிமன்ற அச்சுறுத்தல்.



மௌனமாக இருப்பவர்கள் புத்திசாலிகள். ஏனென்றால் அடக்குமுறைகளுக்கு எதிராக நீங்களும் நானும் எப்போது பேசத் துவங்குகிறோமோ அப்போது உங்களை நானும் என்னை நீங்களும் தோழர் என்று அழைத்துக் கொள்கிறோம். தோழர் என்றால் அவர்களைப் பொறுத்தவரை கம்யூனிஸ்ட். அதுவும் ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்ட் , புண்ணிய பாரத்தின் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் தோழர்கள். சேவின் மரணத்தின் பின்னர் மிகவும் கவர்ச்சிகரமான வார்த்தையாகிப் போன தோழர் என்ற சொல்லை அதற்குரிய உண்மையான அர்ப்பணிப்போடு பெற்றுக் கொள்ளும் எவருக்கும் எந்த வயதிலும் விதிக்கப்படலாம் ஆயுள் சிறை. அதைத்தான் மக்கள் மருத்துவர் பிநாயக்சென் உள்ளிட்ட தோழர்களுக்கு வழங்கி செய்தி சொல்லியிருக்கிறது ராயப்பூர் நீதிமன்றம். உள்நாட்டு அச்சுறுத்தலை எதிர்கொள்ள நீதிமன்றங்களும் விசாலமான சிறைகளும் நாடெங்கிலும் உள்ள போது இன்னொரு அமைச்சகம் தனியாகத் தேவையில்லை. இந்த உள்நாட்டு அச்சுறுத்தல்களை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம் என்று உள்துறை அமைச்சகத்திற்கும் சிதம்பரத்திற்கும் சொல்லியிருக்கிறது ராயப்பூர் நீதிமன்றம்.

2007- ல் ஆந்திராவில் வைத்து மாவோயிஸ்ட் தலைவர் நாராயணன் சன்யால் கைது செய்யப்பட்டார். பின்னர் விடுவிக்கப்பட்டு மூன்றாவது நாள் ராயப்பூரில் கைது செய்யப்பட்டார். அடுத்து பழங்குடி மக்களை ஆதரிக்கிற பியூஸ் குஷா கைது செய்யப்பட்டார்.பியூஸ் குஹாவிடமிருந்து கைப்பற்றியதாகச் சொன்ன கடிதத்தின் அடிப்படையில் டாக்டர் பிநாயக்சென் கைது செய்யப்பட்டார். இந்த மூவருமே மாவோயிஸ்சுகளோடு தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறவர்கள் மட்டுமே , குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் அல்ல என்னும் நிலையில் சட்டீஸ்கர் உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் டாக்டர் சென்னுக்கு ஜாமீன் மறுத்தது. இரண்டாவது முறை உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த பின்னர்தான் பிநாயக்சென்னுக்கு ஜாமீன் கிடைத்தது. இதில் 71 வயது முதியவரான நாராயணன் சன்யாலுக்கு கடைசிவரை ஜாமீன் கிடைக்கவே இல்லை. இப்போது ஆயுள் தண்டனை வேறு. நக்சல்பாரி கிளர்ச்சியின் நாயகன் சாருமஜூம்தார் அழைப்பை ஏற்று வசதியாக தான் பார்த்து வந்த அரசு வேலையான வங்கி வேலையை உதறிவிட்டு அமைப்பிற்கு வந்தவர் சன்யால். முதுமையான இந்த வயதில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.


பிநாயக் சென் மீதான குற்றச்சாட்டுகளோ வேடிக்கையானவை 33 முறை சிறைக்குள் நாராயணன் சன்யாலைச் சந்தித்தார். நாராயணன் சன்யால் பியூஸ் குஹாவுக்கு எழுதிய கடிதத்தில் பிநாயக்சென்னை தோழர் என்று அழைக்கிறார். மாவோயிஸ்டுகளோடு தொடர்பில் இருந்தார், தேசப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தார் இதெல்லாம்தான் சென் மீதான குற்றச்சாட்டு. ஒரு மருத்துவர் வயது முதிர்ந்த ஒரு மனிதரை சிகிச்சை தொடர்பாக சிறைக்குள் சந்திப்பதையும், இந்திய பி.யூ,சி. எல் அமைப்பின் ஒரு தலைவர் என்ற முறையில் சன்யாலைச் சந்திப்பதையும் கூட இந்திய நீதிமன்றம் தண்டனைக் குரிய குற்றமாகப் பார்த்திருக்கிறது. சிறைக்குள் பரிமாறிக் கொண்ட கடிதம் தொடர்பான குற்றச்சாட்டை சிறையதிகாரிகளே நீதிமன்றத்தில் மறுத்திருக்கிறார்கள். ஆனால் நீதிமன்றம் அவர்களின் வாக்குமூலத்தை ஏற்க மறுத்து ஏற்கனவே எழுதப்பட்ட தீர்ப்பை வாசித்திருக்கிறது. இந்த வழக்கில் மாறிப்போன பிறழ் சாட்சிகளைக் கூட கணக்கில் எடுக்காமல் உலகம் முழுக்க அறியப்பட்ட ஒரு மனித உரிமை செயற்பாட்டாளரை ராயப்பூர் கீழ் நீதிமன்றமே ஏன் தண்டிக்க வேண்டும்?


மக்களிடம் நிலம் இருப்பதை அரசுகள் விரும்பவில்லை. கனிம வளங்கள் நிரம்பிய நிலம் மட்டுமல்ல விவசாய நிலங்கள் மக்களிடமிருப்பதைக் கூட அரசுகள் விரும்பவில்லை. அவைகள் பன்னாட்டு நிறுவனங்களின் ஏகபோகக் கொள்ளைக்குத் தேவைப்படுகின்றன. தேவைப்படும் நிலத்தை சொந்தக் குடிகளிமிருந்து அபகரித்துக் கொடுக்கும் ஒரு தரகு வேலையை அரசு இயந்திரங்கள் செய்கின்றன. நிலம் பறிபோகிற பொது மக்களின் எதிர்ப்பென்பது இயல்பான ஒன்றுதான். அப்படியான எதிர்ப்பை வெளிப்படுத்துகிறவர்கள் மாவோயிஸ்டுகளாக இருந்தாலும் மக்களாக இருந்தாலும் அவர்களை அழிக்க அரசு இயந்திரம் களமிரக்கப்படும் சல்வார்ஜூடும் மாதிரியான சட்ட விரோதப்படைகளும் களமிரக்கப்படும். நீங்கள் அரசி இயந்திரத்தை மட்டுமல்ல சட்டவிரோத ஆயுதக் குழுக்களையும் எதிர்க்க முடியாது. அப்படி எதிர்ப்பவர்கள் யார் என்றாலும் அவர்களுக்கு வயது வித்தியாசம் இல்லாமல் தண்டிக்கப்படுவார்கள். அதற்கு சாட்சியங்கள் அவசியமில்லை.

டாக்டர் சென் துவக்கத்தில் சட்டீஸ்கர் மாநில சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் இணைந்தும் சுரங்கத் தொழிலாளர்களுக்காக பணி செய்திருக்கிறார். எப்போது அவர் அரசு இயந்திரத்திற்கு எதிராகப் பேசத் துவங்கினாரோ அப்போதே குறி வைக்கப்பட்டு விட்டார். காந்தீயக் கொள்கையின் படி பழங்குடி மக்கள் மத்தியில் வாழ்ந்த ஹிமான்சு குமாருக்கு என்ன நடந்தது? அவர் சட்ட விரோத சல்வார் ஜூடும் படைகளின் படுகொலைகளுக்கு எதிராகப் பேசினார். அவரது ஆஸ்ரமம் நொறுக்கப்பட்டு டில்லிக்குத் துரத்தப்பட்டார். இப்போது அவர் சட்டீஸ்கரில் இல்லை. பிநாயக்சென்னும் சல்வாய்ஜூடும் படைகளின் கொலைகளுக்கு எதிராகப் பேசினார் அப்போதே அவருக்கு எதிரான தீர்ப்பை எழுதி முடித்து விட்டார்கள்.இடையில் நடந்ததெல்லாம் வெறும் கண் துடைப்பு நாடகங்கள். இப்போது சல்வார்ஜூடும் போலவே பத்திரிகையாளர்களையும் மனித உரிமை ஆர்வலர்களையும் அச்சுறுத்த இன்னொரு படையை உருவாக்கியிருக்கிறார்களாம் சட்டீஸ்கரில்.

எழுபதுகளில் தொடங்கி இன்றுவரை அஸ்ஸாமில், ஆந்திராவில், கேரளாவில், சட்டீஸ்கரில், பஞ்சாபில், காஷ்மீரில் என்று பல் வேறு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இராணுவப் படைகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் கொல்லப்பட்ட இந்த மனித உரிமையாளர்கள் எவரும் அருந்ததிராய், பிநாயக்சென் போன்று உலகெங்கும் அறியப்பட்டவர்கள் அல்ல அதனால் எளிதாகக் கொன்று விட முடிகிறது. ஆனால் அதை விட மோசமான அடக்குமுறையாக இந்த ஆயுள் தண்டனை அச்சுறுத்தல் உள்ளது. இந்திய வரலாற்றில் முதன் முறையாக ஒரு மனித உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இது அருந்ததிராய்க்கு மட்டுமல்ல அறிவுலகில் அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக பேசவோ எழுதவோ துணியும் எல்லோருக்கும் எதிரான அச்சுறுத்தல். எழுதி முடிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பட்டு விட்ட நம் மக்கள் மருத்துவர் பிநாயக்சென்னை விடுவிப்பது என்பது நாம் உலகெங்கிலும் முன்னெடுக்கும் போராட்டங்களில் மட்டுமே தங்கியிருக்கிறது.

இந்திய அரசே!

டாக்டர் பிநாயக்சென்னை விடுதலை செய்!

எழுபது வயது முதியவர் நாராயணன் சன்யாலை விடுதலை செய்!

பழங்குடி மக்கள் மீதான வழக்குகளை திருமப்பெறு!

10 comments:

Anonymous said...

தாய்திரு நாட்டிற்கு எதிராக செயல்படும் அருந்ததிராயும் இப்படி கைது செய்யப்படவேண்டும். அப்படிதான் நாடு விளங்கும் கூடவே இவன் மாதிரி ஆட்களையும் தூக்கி உள்ளே போடணும்.

பாரதி மைந்தன்.

Sundararajan P said...
This comment has been removed by the author.
Sundararajan P said...

தாய்திரு நாடு என்பது யார் என்ற கேள்வி முக்கியம்.

நாட்டின் உயர்பதவிகளை ஆக்கிரமித்துக் கொண்டு மக்களை சுரண்டிவாழும் ஒரு சிறுகூட்டம்தான் தேசம் என்றால் அந்த மக்கள் விரோத தேசம் செத்தொழியட்டும்.


இந்த பிரசினை தொடர்பான என் கருத்துகள்:

டாக்டர் பினாயக் சென் – ராஜத் துரோகியா? மக்கள் நேசனா?

http://lawyersundar.blogspot.com/2010/12/blog-post_27.html

Anonymous said...

நன்றி சுந்தர் உங்கள் பதிவை வாசித்து விட்டு பின்னூட்டம் போட முயன்றேன் என்னால் கடைசி வரை பின்னூட்டம் போடுவதற்கான வழியைக் கண்டு பிடிக்க இயலவில்லை. நல்ல பதிவு நேற்று சென்னிற்காக நடத்துவதாக இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்தியிருக்கிறது. ஆர்.எஸ். எஸ் காரன் ஊர்வலம் போவதையும் பொது அமைதிக்கு குந்தகம் என்று தடுக்கிறார்கள். இந்த மாதிரி ஜனநாயகக் குரல்களையும் பொது அமைதிக்கு குந்தகம் என்று தடுக்கிறார்காள்.

அருள் எழிலன்

Anonymous said...

தமிழில் எழுதுகிறவர்கள் குறைவு. அதுவும் சமூக நோக்கில் எழுதுகிறவர்கள் குறைவு. விடாமல் தொடர்ந்து எழுதும் அருள் எழிலன் போன்றவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

முத்து மாணிக்கம்.

ஜோதிஜி said...

வணக்கம்.

உங்கள் எழுத்துக்களை குறிப்பாக உங்கள் தெளிவான பல விமர்சனங்களை படித்தவன் என்ற முறையில் உங்கள் டி அருள்எழிலன் என்ற பெயரில் ஏன் இந்த டி க்கு மாற்று தமிழிலில் பயன்படுத்தலாமா?

maha said...

சமுக நோக்கில் செயல்படுபவர்களை, இந்த அரசு தொடர்ச்சியாக பழிவாங்குகிறது.
எதிப்பை வலுப்படுத்த வேண்டும்

maha said...

சமுக நோக்கில் செயல்படுபவர்களை, இந்த அரசு தொடர்ச்சியாக பழிவாங்குகிறது.
எதிப்பை வலுப்படுத்த வேண்டும்

Anonymous said...

நண்பர் ஜோதிஜி // டி என்ற சொல்லை மாற்றும் எண்ணம் இல்லை. மாற்றுவதற்கான நியாயமான காரணங்கள் எதுவும் என்னிடம் இல்லை. ஏன் மாற்ற வேண்டும் என நினைக்கிறீர்கள் நண்பரே?

அருள் எழிலன்.

Anonymous said...

//எழுத்தாளர் மாநாட்டை வரவேற்கிறோம். அது நடத்துவது எங்கள் பிறப்புரிமை..// என்று ஷோபாசக்தியும், வ.ஐ.ச ஜெயபாலனும் அறிக்கை விட்டிருக்கிறார்களே பார்த்தீர்களா? உங்கள் கருத்து என்ன?