ராஜபட்சே பிரிட்டன் தோல்வி தற்காலிகமானதே.


அம்சாவைப் பற்றி அடிக்கடி எழுதுவதால் கோபமடையும் நண்பர்களை இது மேலும் கோபமூட்டும் என்பதாலும் ஈழ விடுதலையை ஆதரிக்கும் சக்திகளை மேலும் இது உற்சாகத்திலாழ்த்தும் என்பதாலும் இதை எழுத நினைக்கிறேன். ஒரு வழியாக ஆக்ஸ்போர்ட் யூனியன் அமைப்பின் அழைப்பின் பெயரில் பிரித்தானியாவுக்கு வந்து இனக்கொலை குற்றவாளி ராஜபட்சே நிகழ்த்த விருந்த உரை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில் கொண்டு ரத்து செய்வதாக ஆக்ஸ்போர்ட் யூனியன் கூறியிருந்தாலும் (http://www.oxford-union.org/?a=129) இந்த முழு வெற்றிக்கும் உரியவர்கள் புகலிடத் தமிழர்களே, அதிலும் குறிப்பாக பிரிட்டன் வாழ் தமிழர்களுக்கும், பிரித்தானிய தமிழ் பாரம் அமைப்பிற்கும் , இதில் பங்குபெற்ற பொது மக்களுக்கும், பத்திரிகயாளர்களுக்கும், போருக்கு எதிரான முற்போக்கு சக்திகளுக்கும் நன்றி சொல்லியே ஆக வேண்டும். இது ராஜபட்சே உள்ளிட்ட பௌத்த பேரினவாத இலங்கை அரசுக்கு மட்டும் கிடைத்த தோல்வியல்ல, பதவி உயர்வு பெற்று லண்டனுக்குச் சென்று சென்னையில் நடத்தியமாதிரியே ஒரு சதுரங்க விளையாட்டை நடத்தலாம் என்று நினைத்திருந்த அம்சாவுக்கும் கிடைத்த தோல்வியாகும். எனது இந்த உற்சாகத்திற்கு காரணம் இதுவேயாகும். எல்லோரும் விலைபோய் விட வில்லை என்பதையும் எல்லோரையும் விலைக்கு வாங்கி விட முடியாது என்பதையும் பிரிட்டன் வாழ் தமிழ் மக்கள் இனவெறிச் சக்திகளுக்கு உரைத்திருக்கிற அதே நேரம். இது ஒரு தற்காலிக வெற்றி மட்டுமே என்பதனை நினைத்து எதிரி செல்லும் இடமெல்லாம் எதிர்ப்பை விரிவு படுத்தி அவரையும் அவரது குடும்பத்தினரையும் போருக்கு துணைபோனவர்களயும் தண்டிக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் விருப்பம்.

ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான தமிழ் மக்களை அவர்களின் பாரம்பரீய நிலங்களிலேயே கூட்டுக்கொலை செய்து நாடற்றவர்களாக்கி இருக்கிறது. தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்களை பௌத்த விஹாரைகளாக மாற்றுகிறது பேரினவாத இலங்கை அரசு
. பௌத்த பேரினவாத சிங்கள அரசு தமிழ் மக்களை நிம்மதியாக வாழவும் அனுமதிக்காத நிலையில் இந்தியாவின் ஆதரவோடு சர்வதேச ரீதியில் தனக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைக் கழுவ லண்டனுக்குப் பயணமாகியிருக்கிறார் இனக்கொலை குற்றவாளி ராஜபஷ்சே.. ஒவ்வொரு முறை தமிழ் மக்கள் இனப்படுகொலை, அரசு பயங்கரவாதம் என்றும் பேசும் போதெல்லாம், இந்தப் படுகொலைகளுக்கு புலிகளே காரணம் என்று குற்றம் சுமத்தி சிங்கள இனவெறி அரசின் படுகொலையை சமன் படுத்தி, பயங்கரவாத இலங்கை அரசை காப்பாற்றும் வேலையை செய்து கொண்டிருக்கிற சீர்குலைவு சக்திகள் இப்போது இந்தப் போராட்டங்கள் யாவும் புலிகளின் தூண்டுதலின் பெயரில் நடந்ததாக பிரச்சாரம் செய்கிறார்கள். ஈழ விடுதலை எதிர்ப்பாளர்கள் சொல்லும் இதே வார்த்தைகளைத்தான் லலித் வீரதுங்கவும் சொல்லியிருக்கிறார். (http://www.priu.gov.lk/news_update/Current_Affairs/ca201012/20101202oxford_union_camcels_presidents_address.htm) சேனல் 4 தனது இரண்டாவது இனக்கொலை வீடியோவை வெளியிட்டுள்ளது. பாலியல் ரீதியான வசவுகளும், காட்சிகளுமான இந்த வீடியோவை இதற்கு மேல் ஒளிபரப்ப முடியாத அளவில் கோரமானதாகவும், கொடூரமான சொற்பிரயோகம் உள்ளதாகவும் உள்ளதாக ஒளிபரப்பை இடை நிறுத்திய சேனல்-4 அதை போர்க்குற்ற விசாரணைக்குழுவுக்கு அனுப்பி தன் கடமையைச் செய்துள்ளது.

இந்தியா

.பயங்கரவாத இலங்கை அரசை அதன் போர்க்குற்றங்களில் இருந்து பேணிப்பாதுகாப்பது இந்திய அரசுதான். இந்திய பெருமுதலாளிகளுக்கான சந்தையாக ஒட்டு மொத்த இலங்கையும் மாற்றப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் இலங்கை சென்று வந்த எஸ்.எம்.கிருஷ்ணா தமிழ் அரசியல் கட்சிகளைச் சார்ந்த எவரையும் சந்திக்க மறுத்து விட்ட நிலையில், டக்ளஸ் தேவானந்தாவுக்கு இந்தியா வரும் படி அழைப்பு விடுத்துள்ளது. பூட்டான், நேபாளத்தில், தனது கைப்பொம்மைகளை ஆட்சியில் இருத்தி அல்லது இருத்த துடிப்பது போல தமிழர்களின் பிரதிநிதியாக டக்ளஸ் என்னும் பொம்மையை உருவாக்கிவைத்துள்ளது. இத்தனைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகவும் தாழ்ந்து ராஜபட்சேவுடன் அனுசரணையாகச் செல்லத் தயார் என்று அறிவித்த பின்னரும் இந்தியாவோ, இலங்கையோ அவர்களை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. ஈழத் தமிழ்ர்களுக்காக ஐம்பதாயிரம் வீடுகளைக் கட்டுவதாக அறிவித்துள்ளது இந்திய அரசு. கார்கில் போரில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்காக ஆதர்ஷ் வீட்டு வசதித் திட்டத்தில் நடந்த ஊழல்தான் நினைவுக்கு வருகிறது. தட்டிக்கேட்க ஆளில்லாத ஈழ மக்களுக்கான வீடு கட்டும் திட்டத்தில் எவளவு கொள்ளையடித்தாலும் கேட்க நாதியற்ற சூழலை இந்திய கட்டுமான நிறுவனங்களும் அரசியல் வாதிகளும் பயன்படுத்திக் கொள்ளப் போவதன் முன் அறிவிப்பே இந்த வீடு கட்டும் திட்டம். இந்தியாவின் இந்த சொந்த நலனைப் புரிந்து கொள்ளாமல் இன்னமும் அநேக ஈழத் தமிழர்களும், தமிழக ஈழ விடுதலை ஆதரவாளர்களும் இந்தியாவை நம்பி ஈழப் போராட்டத்தை முன்னெடுக்கலாம் என நினைக்கின்றனர். இந்தியாவை மட்டுமல்ல உலகின் எந்த ஒரு அரசையும் நம்பி ஒரு இனவிடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பது எஞ்சியிருக்கும் மக்களின் அழிவுக்கே இட்டுச்செல்லும் ஆனால் அதே நேரம் அரசுகளுக்கிடையிலான முரணை ஒரு போராளிக் குழு பயன்படுத்துவதென்பது வேறு. அரசுகளை அண்டி போராடுவதென்பது வேறு, மாவோயிஸ்டுகள் ஆளும் வர்க்க முரண்களை மிகவும் துல்லியமாக கையாள்கிறார்கள். இந்தியாவை இன்னமும் புரிந்து கொள்ளாத மக்கள் இனியாவது இந்தியாவின் விஸ்தரிப்பு நோக்கத்தை அதன் எல்லை கடந்த வணிக யுத்தத்தை , மக்களிடம் இருந்து நிலங்களை பறித்தெடுக்கும் அதன் முதலாளித்துவ நலனை புரிந்து கொள்ள முன்வரவேண்டும்.

தமிழ் மக்களால் முடியும்.

ஈழ மக்கள் முடமாக்கப்பட்டு முடங்கியிருக்கும் நிலையில் இலங்கைக்கு வெளியே வாழும் கோடிக்கணக்கான தமிழ் மக்கள் மீது ஈழப் போராட்டத்தின் பொறுப்பும் கடமையும் தங்கள் மீது சுமத்தப்பட்டிருப்பதாக நினைக்கிறார்கள். அது உண்மையும் கூட முன்னரைப் போலல்ல பெரும் இனப்படுகொலையின் பின் கிடைத்துள்ள அனுபவம் புகலிடத் தமிழர்களின் பார்வையை விரிவு படுத்தியிருக்கிறது. பல் வேறு சிங்கள முற்போக்கு சக்திகளுடன் அவர்கள் தங்களின் உரையாடலை இப்போது தொடங்கியிருக்கிறார்கள். இப்போது ராஜபட்சேவுக்கு நடந்த எதிர்ப்பிலும் சிங்களத் தோழர்களின் பங்கு இருக்கிறது. கருணாரட்ண விக்கிரமாகு போன்றவர்களின் மாவீரர் தின உரை மிகவும் நம்பிக்கையளிப்பதாய் உள்ளது. நான் லண்டன் சென்றிருந்த போதும் சில சிங்கள நண்பர்களைச் சந்தித்தேன் தமிழ் மக்களின் நிலை குறித்து ஆழ்ந்த கவலைகளை வெளிப்படுத்திய அவர்கள் தமிழ் மக்களோடு இணைந்து இலங்கை அரசுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்கள். இப்போது இந்த இனக்கொலை குற்றவாளிகளை தண்டிப்பது யார் என்பதே தமிழ் மக்களிடம் உள்ள கேள்வி. இன்னர் சிட்டி பிரஸ், லே மாண்டே, சேனல் 4, கார்டியன், என தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட போர்க்குற்றங்களை சர்வதேச அளவில் கொண்டு சென்ற ஊடகங்களுக்குப் பின்னால் இப்போது ஈழப் படுகொலைகள் தொடர்பாக விக்கிலீக்ஸ் இணையமும் குறைந்த அளவிலான குறிப்புகளை வெளியிட்டுள்ளது. விரைவில் மூன்றாயிரத்திற்கும் அதிகமான போர்க்குற்ற ஆவணங்களோடு அமெரிக்க ராஜாங்க அதிகாரிகளுக்குமான தொடர்பு குறித்தும் அது விரைவில் வெளியிட இருக்கிறது .( http://cablegate.wikileaks.org/articles/2010/Sri-Lankan-President-s-alleged-war.html) ஆக ஈழப் படுகொலைகளை சாட்சியமற்ற படுகொலைகள் என்று சொல்ல முடியாது. எண்ணற்ற சாட்சியங்கள் இரைந்து கிடைக்க குற்றவாளிகளை தண்டிப்பது யார் என்றுதான் தெரியவில்லை. உலக நாடுகளின் இந்த மௌனத்தை பயன்படுத்திக் கொண்ட இலங்கையும் கண் துடைப்பிற்காக ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. கொலை செய்தவர்கள் தங்களைத் தாங்களே விசாரித்துக் கொள்ளும் ஒரு புதிய நடைமுறையை உலகிற்கு பகடியாக வைக்கிறது இலங்கை அரசு. விசாரணை நடந்து வந்த நிலையிலேயே காணாமல் போனோரின் உறவினர்கள் சொன்ன குற்றச்சாட்டுகளை நிராகரித்திருக்கிறார் இராணுவத் தளபதி. இந்த கற்றுக் கொண்ட பாடங்கள் குழுவின் அறிக்கை என்னவாக வெளிவரப் போகிறது. என்பதை இப்போதே நாம் புரிந்து கொள்ள முடிகிறது என்னும் நிலையில் , சர்வதேச அளவில் விசாரணைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. உண்மையிலேயே விசாரிப்பார்களா? அல்லது விசாரிப்பது போல நடிக்கிறார்களா? என்பது தெரியவில்லை. இலங்கை இனப்படுகொலை என்பது இந்தப் பிராந்திய அரசுகளின் கொலைகளை ஊக்குவிக்கும் ஒரு முன்னுதாரணமாக மாறி விட்டது. வன்னியில் மேற்கொண்ட யுத்த வடிவத்தை இந்தியா தனது சொந்தக் குடிகள் மீது ஆனால் மெல்ல மெல்ல பயன்படுத்தத் துவங்கி விட்டது. நவீன மயப்படுத்தப்பட்டு விட்ட போர் முறையில் பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்திய இலங்கையை தண்டிக்க வேண்டும். அவர்களை தண்டிக்கும் உரிமை உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கே உண்டு. ராஜபட்சேவுக்கு லண்டனில் தமிழ் மக்களின் போராட்டத்தால் சாத்தியமானதை விரிவு படுத்த வேண்டும். இந்தப் போராட்டமும் மகிந்தாவுக்கு கிடைத்துள்ள தோல்வியும் தற்காலிகமானதே, போர்க்குற்றவாளி தண்டனைக்குள்ளாகும் வரை தமிழ் மக்கள் போராட வேண்டும். மனித குலத்திற்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் ராஜபட்சே குழுவினர் தண்டிக்கப்படும் வரை தமிழ் மக்களின் மங்களில் ஏற்பட்டுள்ள ரணங்கள் ஆறாது.

2 comments:

Anonymous said...

Hi Arul,
Arivazhagan Kaivalyam commented on your note "ராஜபட்சே பிரிட்டன் தோல்வி தற்காலிகமானதே.".
Arivazhagan wrote: "/////இந்தியாவை இன்னமும் புரிந்து கொள்ளாத மக்கள் இனியாவது இந்தியாவின் விஸ்தரிப்பு நோக்கத்தை அதன் எல்லை கடந்த வணிக யுத்தத்தை , மக்களிடம் இருந்து நிலங்களை பறித்தெடுக்கும் அதன் முதலாளித்துவ நலனை புரிந்து கொள்ள முன்வரவேண்டும்.///// யாரு நம்ம தமிழ் நாட்டு மக்களா? பேசாம நம்மளும் லண்டன், சுவிஸ் எங்கேயாவது போய் பிழைக்கலாம், மானமுள்ள மக்களோட வாழ்ந்த நிறைவாவது கிடைக்கும் எழில் சார், நம்ம சமூகம் ஒரு மாதிரி அழுகிப் போச்சு முதலாளித்துவ எண்ணங்கள் நிறைந்த பொருளீட்டு எண்ணங்கள், சாதி, மதம், சினிமா, கடவுள், டிவி, (புரிதல் இல்லாத) அரசியல் விமர்சனங்கள், இதைத் தாண்டி ஒரு அடியும் முன்னேற இயலாத சூழல். ஆனாலும், நீங்க எழுத வேண்டியது எழுதிக் கிட்டே இருங்க, நம்பிக்கை தானே சார் வாழ்க்கை?????"

நன்றி- face book

Anonymous said...

"நல்ல ஆய்வு. தனது வல்லரசு கனவுக்காக ஈழத்தை சுடுகாடாக்கிய இந்தியா, இப்போது சொந்த குடிமக்கள் மீதும் அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. தங்களது போராட்டத்தின் மூலம் ராஜப்க்சே முகத்தில் கரி பூசிய புலம்பெயர் தமிழர்களை வாழ்த்துகிறேன். ஆனால் இதே போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவேண்டும். ஈழம் அமைவதும், போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதும் புலம்பெயர் தமிழர்கள் கையில் தான். போராட்டம் கை மாற்றி விடப்பட்டிருக்கிறது. நிச்சயம் வெல்வோம்.."

கார்டூனிஸ்ட் பாலா.