இனியன் என்னும் ராஜராஜசோழன் தூக்கில் தொங்கினான்.சட்டக்கல்லூரி நான்காம் ஆண்டு மாணவரும் ஈழப் போராட்டம், மனித உரிமை விஷயங்களுக்காக போராடியவருமான தோழர் அசோக்குமார் என்னும் இனியன் இரண்டு நாட்களாகியும் நினைவு வராமல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருக்கிறார். நினைவு வருமா? பிழைப்பாரா? பிழைத்தாலும் முன்பைப் போல நினைவாற்றலோடு எழுந்து நடக்க முடியுமா? எதுவுமே தெரியவில்லை.தன் பிள்ளையின் எதிர்காலம் குறித்த எந்த நம்பிக்கையும் இல்லாத அந்த ஏழைத் தாய் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வருவோரையும் போவோரையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். நமக்காக பல பிரச்சனைகளுக்காகவும் போராடிய தோழர் இனியனைத் தாக்கிய திருக்கழுக்குன்றம் காவல்நிலைய அதிகாரி ஆல்பர்ட் விலசனும் அவரது அடியாள் படையும் இன்னும் தண்டிக்கப்படாத நிலையில் சாதி வெறி என்னும் இருண்ட மேகம் மிக வேகமாக நம்மை சூழ்ந்து கொண்டிருக்கிறது. தலித்துக்களுக்காகப் பேசவோ போராடவோ உண்மையான தலைவர்கள் எவரும் இல்லாத நிலையில் சில காலம் குறைந்திருந்த தாக்குதல் மீண்டும் தமிழகம் முழுக்க தலையெடுக்கிறது.

அத்தியாவசியப் பிரச்சனைகளான விலைவாசி உயர்வு, மின்வெட்டு, நிலங்கள் பறிக்கப்படுதல், வலுக்கட்டாய இடப்பெயர்ச்சி என மக்களின் துன்பங்கள் அதிகரித்துச் செல்லச் செல்ல மக்கள் வன்முறையும் ஒரு பக்கம் வெடித்து வருவதைக் காண முடிகிறது. அத்தகைய தன்னெழுச்சிப் போராட்டங்களைக் கூட போலீஸ் இரும்புக் கரம் கொண்டு நொறுக்கும் போது தலித்துக்கள் எல்லாம் எம்மாத்திரம். அப்படி தன்னெழுச்சியாய் கிளர்ந்ததுதான் கடந்த இரண்டு நாட்களாக நடக்கும் சட்டக்கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள் போராட்டம்.சென்னை சட்டக்கல்லூரியில் நான்காம் ஆண்டு மாணவரான அசோக்குமார் என்னும் இனியனை திருக்கழுக்குன்றம் போலீசார் தாக்கியது தொடர்பாக, 18-ஆம் தேதி சென்னை பாரிமுனைச் சந்தியை மறித்து நடந்த ஏழு மணி நேரப் போராட்டம். வழக்கம் போல மத்யமரின் பப்ளிக் நான்சென்ஸ் மனோபாவத்தையும் மீறி சுமார் ஏழு மணி நேரம் சென்னையை உலுக்கியது.17-ஆம் தியதி அசோக்குமார் பயணம் செய்த பேருந்தில் அவருக்கும் பக்கத்து இருக்கைக்காரருக்கும் வாய்த்தகராறு ஏற்பட டிரைவர் பேருந்தை திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி இருவரையும் போலீசிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றிருக்கிறார். தன்னை ஒரு சட்டக்கல்லூரி மாணவர் என்று அறிமுகம் செய்து கொண்ட இனியனை திருக்கழுக்குன்ற காவல் நிலைய ஆய்வாளர் ஆல்பர்ட் வில்சன் தலைமையில் சில போலீசார் விசாரித்துக் கொண்டிந்த போது.

அங்கு வந்த இன்னொரு காவலர் ‘’சார் இவன் தான் சார் இலங்கையில் போர் நிறுத்தம் கேட்டுப் போராடுவான். போஸ்டர் ஒட்டி டார்ச்சர் பண்ணுவான். செங்கல்பட்டு இலங்கைத் தமிழர் அகதி முகாம் பிரச்சனையிலும் நமக்கெதிராக கூட்டம் போட்டு போஸ்டர் ஒட்டினதெல்லாம் இவனும் இவனோட ஆளுங்களும்தான் சார்” என்று வந்த காக்கிச் சட்டை போட்டுக் கொடுக்க. திருக்கழுக்குன்ற காவல் நிலைய ஆய்வாளர் ஆல்பர்ட் வில்சன் ’’பறத் தேவுடியாப் பயலா நீயி…… என்றபடி எட்டி உயிர் நிலையில் உதைத்திருக்கிறார். அடுத்தது அத்தனை காக்கிச் சட்டைக்காரர்களும் ஒன்று சேர்ந்து இனியனைச் சுற்றி நின்று ஆல்பர்ட் விலசன் தலைமையில் நிர்வாணமாக்கி உதைத்திருக்கிறார்கள். அடிவயிற்றிலும், விதைப் பகுதியிலும் விழுந்த உதைகளைத் தாங்கிக் கொள்ள முடியாத இனியன் அப்படியே நிலைகுலைந்து விழ நிர்வாணமாக லாக்கப்பில் போட்டிருக்கிறார்கள். மெள்ள மெள்ள இனியன் லாக்கப்பிலேயே நினைவும் இழக்க பொய்யான தகவலைச் சொல்லி போலீஸ் இனியனின் உறவினர்களை அழைக்க அவர்கள் வந்து மருத்துவமனையில் சேர்த்திருக்க்கிறார்கள்.

அங்கு கொண்டு செல்லப்பட்ட இனியன் காவல்துறையினரின் தாக்குதலால் வலி தாங்க முடியாமலும் அவமானத்தாலும் தூக்கில் தொங்கி விட்டார். தூக்கில் தொங்கி கொஞ்ச நேரம் கழித்து தூக்கில் தொங்கியவரை இறக்கி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இனியன் இப்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவீர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.தாக்குதல் நடந்து இரண்டு நாட்களாகியும் இன்னமும் குற்றவாளிகளான திருக்கழுக்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் ஆல்பர்ட் வில்சன் சஸ்பெண்ட் செய்யப்பட்டு கைது செய்யப்படவில்லை.இனியன் தூக்கில் தொங்கினார் என்று செய்தி கசியத் துவங்க சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் பாரிமுனை சந்திப்பை நான்கு பக்கமும் அடைத்து போராடினார்கள்.திருக்கழுக்குன்றத்தில், செங்கல்பட்டில், விழுப்புரத்தில், கோவையில், என வழக்கறிஞர்களும் சட்டக்கல்லூரி மாணவர்களும் போராடத் துவங்க சென்னையில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை சுமார் ஏழு மணி நேரம் நீடித்தது. அந்த போராட்டத்தில் கூட போலீசும் அரசும் நீதித்துறையும் மாணவர்களை எப்படியாவது ஏமாற்றி கலைந்து போகச் செய்ய மட்டுமே நினைத்ததே தவிற குற்றவாளியான ஆல்பர்ட் வில்சனை கைது செய்யவோ சஸ்பெண்ட் செய்யவோ முன்வரவில்லை. ஜாமீனில் வெளிவரக்கூடிய லேசான காயத்தை ஏற்படுத்தியதாக ஒரு வழக்கை மட்டும் ஒப்புக்கு பதிவு செய்து அந்த சாதி வெறியனை பாதுகாத்திருக்கிறது தமிழக அரசு.

முப்பது லட்சம் நாற்பது லட்சம் செலவு செய்து தனியார் பொறியியல் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் கோடீஸ்வர வீட்டுப் பிள்ளைகளும் சமீபத்தில் சில போராட்டங்களை நடத்தியதைப் பார்த்தோம். காரணம். கல்லூரி வண்டி சரியில்லை, லேபில் விளக்கில்லை, டீயில் டிகாஷன் இல்லை, காபியில் கலர் இல்லை என்பதுதான் அவர்கள் போராட்டத்தின் நோக்கம்.இம்மாதிரி பணக்கொழுப்பெடுத்த இவர்களின் போராட்டங்களில் எனக்கு எப்போதுமே அனுதாபம் இருந்ததில்லை காரணம். எந்த பொதுப்பிரச்சனைக்காவது இவர்கள் வந்திருப்பார்களா? கல்வி தனியார் மயமாக்கப்பட்டு பெரும் வணிகக் கொள்ளையில் ஈடுபடும் கல்வி வள்ளல்கள் குறித்தெல்லாம் இவர்கள் என்றாவது கவலைப்பட்டிருப்பார்களா? இடஒதுக்கீடு,சமச்சீர்கல்வி, அனைவருக்கும் ஆரம்பக்கல்வி போன்ற கோஷங்களில் இந்த மாணவர்களின் கருத்தைக் கேட்டுப்பாருங்கள் அப்போது தெரியும் இந்த பாப்கார்ன் பேபிகளின் உண்மை முகத்தை.சரி உன் பிரச்சனைக்குத்தானே போராடுகிறாய் அதற்கு ஏன் முகத்தை மாவோயிஸ்டுகள் மாதிரி இப்படி துண்டால் மூடி விட்டு டிவியில் பேசுறீங்க………….துணியை எடுத்துட்டு துணிச்சலா பேச வேண்டியதுதானே என்றால் பயம் அவன் ஆள் வெச்சு அடிப்பானாம்………….ஆனால் சட்டக் கல்லூரி மாணவர்கள்.சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் பிரச்சனை என்றாலும் அரசியல் பிரச்சனை என்றாலும் ஈழத்தில் போர் நிறுத்தம் கோரினாலும் இட ஒதுக்கீடு கோரிக்கை என்றாலும் முதலில் போராடுவது சட்டக்கல்லூரி மாணவர்கள் அல்லது வழக்கறிஞர்கள்தான் காரணம்.

அவர்கள் கிராமப்புறங்களில் இருந்து வருகிறார்கள். அதுவும் ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்திலிருந்து படிக்க வருகிறார்கள். ஆகவே சமூக உணர்வும் கோபமும் ஏனைய ஆதிக்க சாதி மாணவர்களுக்கு இருப்பதை விட கூடுதலாகவே இவர்களுக்கு இருக்கும். போராடும் சக்திகளில் தலித் மாணவர்கள் இருக்கும் போது போராட்டங்களை ஒடுக்கும் சக்திகளாக இருக்கும் காவல்துறையில் யார் அதிகம்? ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் குறிப்பிட்ட ஒரு இனத்தை மிக அதிகமாக காவல்துறையில் சேர்த்தார்கள். ஜெ ஆட்சியில் கொடியன்குளம், என்றால் கருணாநிதி ஆட்சியில் மாஞ்சோலை தொழிலாளர்கள் 19 பேர் அடித்துக் கொல்லப்பட்ட தாமிரபரணிப் படுகொலை என எதை எடுத்துக் கொண்டாலும் அதற்கு முழுக் காரணமும் பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதியைச் சார்ந்த சாதி வெறி போலீஸ்தான் காரணம். இதை நான் மண்டைக்காடு கலவரத்தில் அநாமதேயமாக கொல்லப்பட்ட மீனவ மக்கள் படுகொலையில் துவங்கி கண்டு வருகிறோம். நாடார்கள், தேவர்கள், நாயக்கர்கள், போன்ற சமூகத்தவர்கள் போலீசில் செல்வாக்குச் செலுத்தும் நிலையில் தலித்துக்களின் எதிர்ப்புப் போராட்டத்தை தமிழக போலீஸ் எதிர்கொள்கிற விதத்தை காக்கிச் சட்டைக்குள் இருக்கும் சாதி வெறியை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

சட்டகல்லூரி மாணவர் இனியனைத் தாக்கியதும் இதே சாதி வெறிதான். இது ஏதோ காவல்துறையில் மட்டுமே உள்ளது என்று நினைத்து விடாதீர்கள். அரசு அலுவலகத்தில், பொது வெளியில் என எல்லா இடங்களிலும் நிரவி நிற்கிறது சாதி வெறி.பார்ப்பன எதிர்ப்பு, சாதி மறுப்பு என்றெல்லாம் பேசிய திராவிட இயக்கம் தமிழ் மக்களை கலசார ரீதியில் மாற்ற என்ன முயர்ச்சியை மேற்கொண்டது எனத் தெரியவில்லை. பார்ப்பனர்களிடம் மட்டுமே குவிந்து கிடந்த அதிகாரத்தை பார்ப்பனரல்லாத முற்பட்ட சாதிகளுக்கும், பிற்படுத்தப்பட்ட ஆதிக்கசாதிகளுக்கும் அதிகாரத்தை பகிர்ந்தளித்த திராவிட இயக்கம் தலித் மக்களை வீதியில் விட்டு விட்டது. பார்ப்பன எதிர்ப்பு என்கிற அளவில் பேசப்பட்ட திராவிடக் கொள்கை அதற்கப்பால் எதையுமே செய்யாமல் பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதி வெறியர்கள் தலித் மக்களுக்கு எதிராகச் செய்யும் வன்கொடுமைகளைத் தட்டிக் கேட்காததோடு அதை ஓட்டுச் சீட்டு அரசியலுக்காக ஊட்டி வளர்க்கவும் செய்து விட்டது. திராவிட இயக்கத்தின் போக்கில் அது பெரியாருக்குப் பின்னர் நீர்த்துப் போய் விட்ட நிலையில், தமிழ் தேசியவாதிகளை மட்டும் சாதி வெறி விஷயத்தில் யோக்கியமானவர்களாக நினைத்து விடாதீர்கள். தமிழ் ஈழம், தனித் தமிழ்நாடு, காவிரி, முல்லை இதைத் தாண்டி ஒரு தமிழன் இன்னொரு தமிழனின் வாயில் திணிக்கிற மலத்தை மறைமுகமாக அவர்களின் சாதி மனம் ஆதரிக்கிறதே தவிற தலித் மக்களுக்காக அவர்களின் சமத்துவ வாழ்வுரிமைக்காக போராடியதே இல்லை. இதை எழுதும் போது ஒரு செய்தி படித்தேன்.

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவரின் பெயரைச் சூட்ட மு.க. அழகிரி பரிந்துரைத்திருப்பதாகவும். சட்டமன்றத் தேர்தலுக்குள் எப்படியாவது மதுரை விமானநிலையத்துக்கு தேவரின் பெயரை வைத்து விட வேண்டும் என்றும் ஆட்சியாளர்கள் ஆவலில் இருப்பதாகவும் அதற்கான மும்மூரமான வேலைகள் நடந்து வருவதாகவும் செய்திகள் வருகின்றன. விமானநிலையம் மட்டுமல்ல அங்கிருக்கும் உயர்நீதிமன்ற கிளைக்குக் கூட தேவர் கோர்ட் என்று பெயர் வைத்தாலும் ஆச்சரிப்பட ஒன்றும் இல்லை. பயமாய் இருக்கிறது. கொண்டாடப்படும் எந்தச் சாதியிலும் பிறக்காத மனிதர்கள் ஒழிந்து கொள்ளவோ தபிக்கவோ ஒரு இடமில்லாமல் போய் விடுமோ என்ற அச்சம் வருகிறது. இந்த பயத்தைத்தான் குஜராத்தில், காயர்லாஞ்சியில், மண்டைக்காட்டில், தாமிரபரணியில், வெண்மணியில், கொடியங்குளத்தில், உத்தபுரத்தில் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம்.இல்லை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த பயம்தான் இனியனை தூக்கில் தொங்கவிட்டது. என்ன செய்யப் போகிறோம்?

0 comments: