பட்டினியின் பிடியில் ஏழைகளும்... கஞ்சித் தொட்டிகளும்



மரக்கா லுருண்ட பஞ்சம் மன்னரைத் தோற்ற பஞ்சம்
நாழி யுருண்ட பஞ்சம் நாயகனைத் தோற்ற பஞ்சம்
ஆழா க்குருண்ட பஞ்சம் ஆளனைத் தோற்ற பஞ்சம்
தாலி பறிகொடுத்து தனிவழியே நின்ற பஞ்சம்
கூறை பறி கொடுத்துக் கொழுநனைத் தோற்ற பஞ்சம்
கணவனைப் பறி கொடுத்து கைக் குழந்தை விற்ற பஞ்சம்-.
(நல்லதங்காள் கதையில் பஞ்சம் வந்த படலம்)


வறுமையின் கொடுமை தாங்காமல் தன் ஏழு குழந்தைகளோடு கிணற்றில் குதித்து மரித்துப் போன நல்லதங்காள் கிணறு இன்றும் இருக்கிறது விருதுநகர் மாவட்டம் அர்ச்சுனாபுறத்தில்,

வறுமையின் கொடுமையில் ஜெயலட்சுமி தன் மூன்று குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொன்று விட்டு தானும் செத்துப் போக குதித்த கிணறு.சேலம் காரியப்பட்டியை அடித்த குள்ளம்பட்டியில் இருக்கிறது.

"கடைசிப் பையன் பரதன் பிறந்த போதே சோத்துக்கு வழியில்லாம பல நாள் பட்டினியா கெடந்திருக்கோம். ஒத்தாச உதவிக்கு யாருமில்ல. சொந்த பந்தமிண்ணு ஒண்ணும் இல்ல. கைத்தறி தொழிலும் படுத்துக்கிச்சு சமையல் சப்ளையர் வேலைக்குப் போனேன். அப்பாவுக்கு வேலை கிடைச்சுதா? சம்பளம் கிடைச்சுதாண்ணு பசிக்குற பிள்ளைக்கு என்ன தெரியும்? அது அழதான் செய்யும். வேலை தேடி நான் போயிருந்த நேரம் எப்படித்தான் இந்த மூணு பச்ச மண்ணுகளையும் கொல்லணும்ணு தோணுச்சோ பாவி மகளுக்கு" என்று தன் மனைவி ஜெயலெட்சுமியை சபித்தபடி அழுகிறார் கணவன் கிருஷணன்.


"அவர் வெளியூர் போய் மூணு நாள் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. அரிசி,பருப்பு, புளி- ணு எந்தப் பொருளும் வீட்டில் இல்லை. ராத்திரி முழுக்க புள்ளைங்க அம்மா பசிக்குதுண்ணு அழுதாங்க. ஒருத்தன் அப்பா எங்கம்மாணு கேட்டு கதறுறான். பரதன் காது வலியில துடிக்கிறான். நான்தான் சகாலாம்ணு நினைச்சேன். நான் மட்டும் செத்துட்டா பிள்ளைங்க நாளைக்கு நாலு பேர் கிட்ட போய் கையேந்திடக் கூடாதில்லியா?கைத்தறிக்காக வாங்கிட கடனுக்கு வட்டி கூட கட்ட முடியல்ல பேசாம நம்மளோட குழந்தைகளையும் சேர்த்து கொலை பண்ணிடலாம்ணுதான் குழந்தைகளை கிணற்றில் போட்டேன். நானும் விழுந்தேன். இப்போ நாம் மட்டும் உயிரோட இருக்கேன் எம் புள்ளைங்க போய்ச் சேர்ந்துட்டாங்க. வறுமையும் பசியும் என் குடும்பத்தையே அழிச்சிடுச்சு." என்று பரிதாபமாக வாக்குமூலம் அளித்திருக்கும் ஜெயலெட்சுமி இப்போது சேலம் சிறையில்.

ஒரு ஏழைக்கூலியின் வாழ்க்கையையும் வலியையும் நீங்கள் புரிந்து கொள்ளக் கூடியவராக இருந்தால். ஜெயலெட்சுமியையும் உங்களால் புரிந்து கொள்ள முடியும். ஏனென்றால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் சூழலில்தான் இன்று தமிழகத்தில் பல லட்சம் கூலி விவசாயிகளின் குடும்பங்கள் இருக்கிறது.

‘‘பூமி வறண்டு விவசாயம் கெட்டுப் போய் பல லட்சம் மக்கள் பட்டினியால் மடிந்து போவதுதான் பஞ்சம் என்றில்லை. 1930&பதுகளில் அமெரிக்கா மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது அதற்கு கிரேட் டிப்ரஷன் (ரீக்ஷீமீணீt பீமீஜீக்ஷீணீtவீஷீஸீ) என்று பெயர் வைத்தார்கள் மீண்டும் அதே சூழல் இப்போது அமெரிக்காவில் உருவாகி வருகிறது. அமெரிக்கா சந்திக்கும் அதே கொடுமை இப்போது இந்தியாவிலும் தமிழகத்திலும் உருவாகிக் கொண்டிருக்கிறது. அதன் ஆரம்பகால அறிகுறிதான் உணவுப் பொருட்களுக்கு ஏற்படும் தட்டுப்பாடு. விலைவாசி உயர்வு.மின்சாரம் முதல் மிளாக்ய்ப்பொடி வரை ஏற்படும் தட்டுப்பாடு.கைத்தறி நெசவு,பட்டு நெசவு, விவசாயம், கூலிவேலை, சிறு வணிகம் என இன்று தமிழகத்தில் எந்தத் தொழிலையும் செய்ய முடியாத சூழல்.நகரமயமாதல் பெருகப் பெருக தனியார் மூலதனம் குவிய குவிய பல லட்சம் விவசாயிகள் பட்டியின் பிடிக்குள் தள்ளப்படுகிறார்கள். என்பதே கசப்பான உண்மை. ஒட்டு மொத்த கூலி தொழிலாளர்களும் கஞ்சித் தொட்டிகளை நம்பி வாழும் சூழலே இன்று கிராமப்புறங்களில் நிலவுகிறது’’ என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத அந்த இடது சாரி சிந்தனையாளர்.

என்னதான் சோத்துக்கு கஷ்டம் வந்தாலும் வீட்டின் மூலையில் குவித்து வைத்திருக்கும் கோட்டை நெல் என்று சொல்லக் கூடிய விதை நெல்லை ஒரு போதும் எடுத்துச் சமைக்க மாட்டார்கள் விவசாயிகள். அது ஆடி மாதம் வரை அடுத்த விதைப்புக்காக காத்திருக்கும். ஆனால் இன்று பெரும்பாலான விவசாயிகள் கோட்டை நெல் வைத்துக் கொள்வதில்லை. காரணம் விளைச்சலுக்கு வழியில்லை அப்படியே விளைந்தாலும் நெல்லுக்கு விலையில்லை. பட்டுநெசவு, கைத்தறி, விவசாயம், கரும்பு உற்பத்தி என்று விவசாயமோ கைத்தறியோ இன்று லாபகரமான தொழிலாக மட்டுமல்ல சராசரி வாழ்வைக் கூட ஓட்டுவதற்கு இந்தத் தொழில்கள் கை கொடுக்காத சூழலில் கடனின் மூழ்கி அதிலிருந்து மீள முடியாமல் சில தற்கொலைகளும் நடந்திருக்கிறது. வழக்கம் போல குடும்பத் தகராறு என்று தற்கொலைக்கான காரணம் எழுதி கணக்கை முடித்துக் கொள்கிறது போலீஸ்.

தமிழகம் முழுக்க உள்ள கைத்தறி தொழிலாளர்கள் இன்று கஞ்சித் தொட்டிக்கு முன்னால் கையேந்தி நிற்க வேண்டிய பரிதாப நிலை. நூல் விலை ஏற்றம் தாள முடியாத கடன் சுமையால் தள்ளாடும் சூழலில் மிக மோசமான கந்து வட்டி கொடுமைக்காரர்களிடம் சிக்கி தற்கொலை செய்து கொண்ட நெசவாளர்களும் உண்டு. பல நாள் பட்டினியின் விளைவு இன்று சோமனூர், பல்லடம் போன்ற பகுதியில் வேலை இல்லாத நெசவாளர்களுக்காக கஞ்சித்தொட்டிகள் திறக்கப்பட்டிருக்கிறது. இதே நிலை தமிழகம் முழுக்க குறிப்பாக விவசாயம் பாழ் பட்ட, நெசவுத் தொழில் கெட்டுப் போன ஊர்களில் எல்லாம் இதே நிலைதான்.

கஞ்சித்தொட்டி மூலம் உணவிடும் வழக்கம் எப்படி வந்தது என்றால்,

வெள்ளையர்கள் நம்மை ஆண்ட காலத்தில் அவர்கள் கொடுத்த பரிசுதான் பஞ்சம்.
இங்கிலாந்தின் நெசவாலைக் கம்பெனிகளுக்கு தேவையான பருத்தியையும் அவுரிச் செடியையும் பயிர் செய்யச் சொல்லி நமது விவசாயிகளை நிர்பந்திக்க வேளாண் உற்பத்தி குறைந்தது. குறைவாக விளைந்ததையும் ஏற்றுமதி செய்தனர் வெள்ளையர். விளைவு 1783&ல் தொடங்கி 1867 வரை சென்னை ஏழு முறை கொடிய பஞ்சத்தைக் கண்டது. ஆயிரக்கணக்கான மக்கள் பட்டினியால் மடிந்தனர். தொடர்ந்து வந்தது தாது வருடப் பஞ்சம். 1876&ல் தொடங்கிய தமிழ் தாது வருடத்தில் வந்த பஞ்சத்தை ‘‘தாது வருடப் பஞ்சம்’ என்று பதிவு செய்திருக்கிறது வரலாறு. 40 லட்சம் தமிழ் மக்களின் உயிரைப் பலி கொண்ட ‘தாது வருடப் பஞ்சத்தின் போது’’ மக்களுக்கு பிச்சை போட நினைத்த வெள்ளை அரசு திறந்து வைத்ததுதான் இந்தக் ‘கஞ்சித் தொட்டி’ ஆனால் திறந்து வைக்கப்பட்ட கஞ்சித்தொட்டிகள் மடிந்து கொண்டிருந்த மக்களுக்கு முன்னால் பல்லிளித்து நின்றன. அன்றைய பஞ்சத்தில் அதிகமாக கொத்துக் கொத்தாக செத்துப் போனது தென் ஆற்காடு மாவட்ட மக்கள்தான் இன்றைக்கும் தென் ஆற்காடு மாவட்ட கிராமங்களில் ‘தாது வருஷ பஞ்சக் கும்மி’ என்ற கும்மிப் பாடல்கள் பாடப்படுகின்றன. பஞ்சமும் வறுமையும் மரணத்தை மட்டும் கொண்டு வரவில்லை. அது பல விதமான சமூக நோய்களை கொண்டு வந்தது கொலை, கொள்ளை, வழிப்பறி, தற்கொலை என்று பல விதமான துன்பங்களை மக்களுக்குக் கொண்டு வந்தது.
சுதந்திரம் அடைந்த இந்த ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு இன்றும் இதே கொள்ளை,வழிப்பறி, இலவச மோசடிகள்,பணத்துக்கான கொலைகள் எனறு மீண்டும் அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டுகிறார்கள் பலரும்.

வெள்ளையர் ஆட்சியில் பஞ்சகாலப் பணியாக வேலை கொடுக்கும் திட்டத்தின் கீழ் வெட்டப் பட்டதுதான் சென்னை ‘பக்கிங்ஹாம் கால்வாய்’ இன்றும் வேலைக்கு உணவுத் திட்டத்தில் வருடத்திற்கு நூறு நாள் வேலைத் திட்டம் கொண்டு வரப்பட்டது ஆனால் அதில் கொடுக்கும் கூலியில் ஒரு குடும்பம் ஒரு வேளை கூட உண்ண முடியாத நிலையில் இந்தத் திட்டத்தில் பெரும் முறை கேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகிறது. எண்பது ரூபாய் கூலியில் கால் பங்கை சுருட்டி விட்டு மீதியை கொடுப்பது என்கிற முறை கேட்டால்தான் திண்டிவனம் ரெட்டணையில் கூலி கேட்ட போராட்டமும் போலீஸ் தடியடியும். வேலைக்கு உணவுத் திட்டத்தில் நாடு முழுக்க தேர்ந்தெடுக்கப் பட்ட மாவட்டங்கள் 200. இதில் தமிழகத்தில் விழுப்புறம், கடலூர்,திருவண்ணாமலை, நாகப்பட்டினம். என நான்கு மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. பின்னர் திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்கள் இணைக்கப்பட்டன. சிவகங்கை நமது நிதி அமைச்சரின் சொந்த மாவட்டம். குறைந்த கூலி பேசிய கூலி கொடுக்கப்படாமை, கிடைக்கிற கூலியும் வாழ்க்கைச் செலவுக்கு போதாமை என்று மக்கள் இந்தத் தொழிலுக்கு இப்போது செல்ல மறுக்கிறார்கள்.

"வறுமையை ஒழிக்கச் செலவிடப்படும் ஒவ்வொரு நூறு ரூபாயிலும் 85 ரூபாய் ஊழல் பேர்வழிகளால் உறிஞ்சப்பட்டு 15 ரூபாய் மட்டுமே மக்களுக்குப் போய்ச் சேருகிறது. இந்தியாவில் ஓராண்டு காலத்தில் கைமாறும் லஞ்சப் பணம் மட்டும் சுமார் 25,000 கோடியைத் தாண்டும்"என்று லஞ்ச ஒழிப்புத்துறை கூறுவதன் உண்மை நெருப்பாய் சுடுகிறது.

மாதம் ஓன்றுக்கு பத்து நாள் வேலை கிடைத்தாலே இன்று வாழ்க்கை பெரும் பாடாக இருக்கிறது. அரிசிச் சோறும் பருப்பில்லாத, காய்கரி இல்லாத புளிக் குழம்பும்தான் இன்று பெரும் பாலான ஏழைகளின் உணவு. இதை எல்லாம் கருத்தில் கொண்டு தான் ரேஷனில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு என்று திட்டம் கொண்டு வந்தது தமிழக அரசு. ஆனால் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி நாற்பது ரூபாய்க்கு எண்ணைய், பருப்பு, காய்கரி வாங்கினால்தான் சமைத்துச் சாப்பிட முடியும். இதுதான் இன்றைய ஏழை மக்களின் நிலை.
ஒரு மனிதனின் உளைப்பு நேரமாக எட்டு மணிநேரத்தை தீர்மானித்திருக்கிறது சர்வதேசம். ஆனால் தமிழகத்தில் அந்த எட்டு மணிநேரத்தில்தான்
அறிவிக்கப்படாத மின்வெட்டு அமுலாக்கப்படுகிறது. பண வீக்கத்தின் நெருக்கடியோடு போராடும் ஏழை மக்கள் சந்திக்கும் அடுத்த பிரச்சனை இதுதான். பெருமளவு உணவு உற்பத்தி பாதிப்படைய இந்த மின்வெட்டுதான் பிரதான காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

கூலிக்கான பொருளாதாரப் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொஞ்சம் கொஞமாக கிராமங்கள் அழிந்து வருகிறது. அரசியல் போட்டிக்காக முன்னர் கஞ்சித் தொட்டிகள் திறந்த காலங்கள் உண்டு. ஆனால் இன்று நிஜமாகவே கஞ்சித் தொட்டி திறக்கும் நிலையில்தான் அனைத்து கூலி விவசாயிகளும் தொழிலாளர்களும் இருக்கிறார்கள்.இன்னொரு தாது வருடப் பஞ்சத்தையோ, கல் தட்டிப் பஞ்சத்தையோ தாங்கும் நிலையில் தமிழகம் இல்லை.

2 comments:

K.R.அதியமான் said...

அன்புள்ள அருள் எழிலன்,

உங்களை சந்தித்தில் மகிழ்கிறேன். பொருளாதாரம் பற்றிய எமது முக்கிய பதிவுகள் :

1991இல் இந்தியா திவாலாகியிருந்தால் ?
http://nellikkani.blogspot.com/2008/05/1991.html

விலைவாசி ஏன் உயர்கிறது ?
http://nellikkani.blogspot.com/2007/07/blog-post_17.html

வறுமைக்கு காரணமும், விளைவுகளும்
http://nellikkani.blogspot.com/2007/09/blog-post.html

K.R.அதியமான் said...

this is the link of JeMo that i mentioned yesterday about langugages : Tamil and Sanskrit ; and Dravidian movement :

http://jeyamohan.in/?p=3863

pls mail me your email id to my id : athi68@gmail.com (as i don't have your id)