இடிக்கப்பட்ட உத்தபுரம் சுவரும்.இடிக்கப்பட வேண்டிய உத்தபுரங்களின் சுவர்களும்.....

டி.அருள் எழிலன்1994 ஆகஸ்ட் மாதம் என்று நினைக்கிறேன்.நாகர்கோவிலில் இருந்து எங்களது மீனவ கிராமமான புத்தன்துறைக்கு செல்லும் 38பி பேருந்தில் அமர்ந்திருந்தேன்.வண்டி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பி பீச் ரோடு ஜங்சனில் நின்றிருந்தது.அந்த நிறுத்தத்தின் எதிரில் பீச் ஒயின்ஸ் என்ற மதுக்கடை இருந்தது.இப்போது அது டாஸ்மார்க் ஆகியிருக்கும்.போதை உச்சிக்கு ஏறியிருந்தது அவருடைய பேச்சு வழக்கிலிருந்து அவரை ஒரு நாடாராக நான் புரிந்திருந்தேன்.
எங்களுடைய பேருந்து வந்து நிறுத்தத்தில் நின்றதும் அந்த பேருந்தில் இருந்த பெண்களை பார்த்து கெட்ட வார்த்தை போட்டு திட்டினார்.அதை கேட்ட பெண்கள் முகத்தை திருப்பிக்கொண்டனர் அவர் திட்டியது பெண்களைத்தான்.‘‘இந்த மினுக்கு மினுக்கிக் கிட்டு எங்க போயிட்டு வாராளுவொ தேவுடியாமாருக்கு வீட்டுல கெடப்புவராதா?’’என்கிற ரீதியில் அவர் திட்டிக்கொண்டிருந்தார்.வண்டியில் இருந்த சில இளைஞர்களால் அந்த குடிகாரரின் வசவுகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.வண்டியிலிருந்தபடியே அந்த குடிகாரரை அடிக்க பாய்கிற வேகத்தில் திட்டினார்கள் அந்த இளைஞர்கள்.போதையில் இருந்தவர் உண்மையில் பயந்து விட்டார்...அவர் உட்னே,
"ஐய்யே புள்ளே நாஞ் நம்ம நாடாக்கமார சொல்லல்ல கடப்புறத்துகாரியளயில்லா சொன்னேன்"என்ற உடன் பேருந்து கிளம்பியது.ஒரு வேளை நின்றிருந்தாலும் என்னால் அவனை ஒன்றும் செய்திருக்க இயலாது..அவனல்ல அந்த வண்டிக்குள் நிலவிய ஒரு விதமான திருப்தியும் ‘‘அவன் நம்ம பொம்பளையள சொல்லவில்லை கடற்கரை பெண்களைத்தான் சொல்லியிருக்கிறான்’’என்கிற ரீதியில் அமைதியும் நிலவியது.அந்த குடிகாரர் சார்ந்த சாதி எழுப்பியிருந்த சுவர் ஒழுக்கப்பட்ட மீனவ மக்களுக்கு எதிரானதோடு.
இன்று அதிகாலை மதுரை உத்தபுரத்தில் தலித் மக்களின் முகத்தில் முழிக்கக் கூடாது என்கிற நினைப்பில் வெள்ளாளர் இன மக்களால் தொண்ணூருகளில் கட்டப்பட்ட உத்தபுரம் சுவரின் பொதுப்பாதைகள் மூன்றை காவல்துறையினர் இடித்துத் தள்ளியிருக்கிறார்கள்.ஆனால் இரண்டு பக்கமும் தலா இருபது பேர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது காவல்துறை நிர்வாகம்.என்ன வழக்கு எந்த செக்ஷனில் போடப்பட்டது என்கிற எந்த விபரமும் தெரியவில்லை.ஒரு வேளை வெள்ளாளர்கள் மீது வன்கொடுமை வழக்கும்.தலித்துக்கள் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது என பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்கிற பாணியை பின்பற்றி விட்டார்களோ என்னவோ.
ஆனாலும் பட்டா நிலத்தில் கட்டப்பட்ட உத்தபுரம் தீண்டாமைச் சுவர் மட்டும் இனி தொடரக்கூடும்.சட்டம் பட்டா ரூபத்தில் அந்த பாதுகாப்பை வெள்ளாள இன மக்களுக்கு வழங்கியிருக்கிறது.சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட உத்தபுரம் சுவரின் பொதுப்பாதையை ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் இனி பயன் படுத்தக் கூடும்.அல்லது திறந்து விடப்பட்ட வழி வழியே அவர்களின் சுவாசமும் கவிச்சி வாசனையும் மட்டுமே சென்று வரக்கூடும்.
மதிற்சுவரை இடித்து சாதித் திமிரை தகர்த்தாலும் இடியாத மனச்சுவர் நம் ஒவ்வொருவருக்குள் பல்லாயிரம் அடி உயரமாய் எழுந்து நிற்கிறதே அதை எப்போது இடிக்கப்போகிறோம்.
கண்ணுக்குத் தெரியாத அபப்டி ஒரு சுவர் எங்களின் மீனவ கிரமங்களை மொத்தமாக மூடி எழுப்பப் பட்டுள்ளது.இந்திய வரைபடத்தில் கொண்டை ஊசியை ஒத்த வடிவம் கொண்ட குமரி மாவட்ட கடற்கரை ஓரங்களில்தான் நாங்கள் நீண்டு வாழ்கிறோம்.அரபிக்கடலோரத்தின் அலைவாய்க்கரையில் பரதவர்களான நாங்களும்,எங்களைப் போலவே ஒரே மதத்தையும் தொழிலையும் கொண்டிருக்கும் முக்குவ மக்களும் கரைகளில் வாழ்கிறார்கள்.
இரட்டை டமளர் முறையோ,தடுப்புச் சுவர்களோ,கோவிலில் நுழையும் உரிமை என சாதி இந்துக்களாலோ கிறிஸ்தவ நாடார்களாலோ அல்லது வெள்ளாளர்களாலோ எங்களுக்கு எந்த தொல்லையும் கிடையாது...ஏனென்றல் நாங்கள் தனித்து வாழ்கிறோம்.எங்கள் கிராமங்களில் ஒரு சாதி இந்துவை பார்க்க முடியாது.கன்னியாகுமரியில் தொடங்கி கேரளத்தின் எல்லையான நீரோடி வரை நீளாமாய் நீட்டிப் படுத்திருக்கும் இந்த மீனம மக்கள் பல நூறூ ஆண்டுகளாய் புறம் போக்கு நிலங்களில் வாழ்கிறார்கள்.
கடலில் வேட்டையாடுவதும் கரைகளில் கூடிக்கழிப்பதும் மீதி நேரத்தில் தேவாலயங்களுக்கு மண் சுமப்பதும்தான் இவர்களின் வாழ்க்கை.சுனாமி அனர்த்தனம் தாண்டவமாடிய போது உள்ளூர் பணணைகள் எங்களுக்கு அவர்களது வீட்டின் பழைய துணிகளையும் கெட்டுப் போன சாதங்களையும் கொண்டு வந்து கொட்டி உதவினார்கள்.
எங்களுக்கு கொஞ்சம் மீன குழம்பு கிடைக்குமா?என கேட்டபோது....‘‘கொழுப்பப் பாத்தியாலே அய்யோ பாவம்ணு நாம சோறு கொண்டு கொடுத்தா மீன் குழம்பு கேக்குறத?போய் பிடிச்சி குளம்பாக்கி தின்ன வேண்ணியதுதானே’’
இது மட்டுமல்ல சுனாமியின் போது சடலங்களிலிருந்து நகைகளை திருடியவர்கள்.கிடைக்கும் பொருட்களை திருடிச் சென்றவர்கள் என்கிற மாதிரி குத்தப்பட்ட பொதுப்புத்திகள்.
தமிழகம் முழுக்க கண்ணுக்குத் தெரியாத உத்தபுரம் சுவர் எழுப்பட்டிருக்கிறது அந்தச் சுவர் எங்கள் கிராமங்களையும் மூடியிருக்கிறது என்பதை எண்பதுகளில் இந்து முன்னணியால் நிகழ்த்தப்பட்ட மண்டைக்காடு தாக்குதல் மூலம் தெரிந்து கொண்டோம்.கிறீஸ்தவ மீனவர்களுக்கும் இந்து நாடார் விவசாயிகளுக்குமான மோதலாக மட்டுமே அதை பார்க்க முடியாது கிறிஸ்தவம் மீனவ மக்களிடம் கொண்டு வந்த சிறிதளவு மாற்றத்தைக் கூட சகிக்க முடியாத கொடூர மனதில் வெளிப்பாடுதான் அந்த மாண்டைக்காடு தாக்குதல் அப்போது நாங்கள் மொத்தமாக இந்தியாவின் நிலப்பரப்பிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்தோம்.
அன்றைக்கு கண்ணுக்குத் தெரிந்த சுவர் இன்று கொஞ்சம் வளர்ந்த சுவராக மாறியிருக்கிறது.இடிக்க முடியாத மனச்சுவராக வளர்ந்திருக்கிறது.சுனாமிக்கு பிறகு மீனவ மக்களை கடற்கரையிலிருந்து வெளியேறச் சொல்கிறது அரசு அங்கிருந்து வெளியேறி நாங்கள் சாதி இந்துக்களின் குடியிருப்புகளுக்குள் வாழச் செல்லும் போது அங்கும் ஒரு உத்தபுரம் சுவர் வெளிப்படையாக எழுப்பப் படலாம்.
மூன்று விதமான சுவர்கள் எங்கள் கிராமங்களின் உள்ளது.

ஒன்று...சாதி இந்துக்கள் மீனவ மக்களுக்கு எதிரான எழுப்பியிருக்கும் மனச் சுவர்.

இரண்டு...கிறிஸ்த மீனவ மக்களுக்கு எதிராக கிறிஸ்தவ நாடார்களும் கிறிஸ்தவ பாதிரிமார்களும் எழுப்பியிருக்கும் சுவர்.

மூன்று...எங்கள் இன மக்களான பரதவர்கள் அவர்களைப் போலவே ஒடுக்கப்படுகிற முக்குவ இன மக்களுக்கு எதிராக எழுப்பியிருக்கும் சுவர்.
வெளியில் தெரியாத இம்மாதிரி சாதிச் சுவர்களைத்தான் இன்றைய தலைமுறை தன் மூளைக்குள் ஏற்றி வைத்திருக்கிறது.படித்த ஆங்கிலம் தெரிந்த தலைமுறை கட்டப்பட்ட இந்த சுவர்களில் மின்சாரக் கம்பிகளை விஞ்ஞான அணுகுமுறையோடு நட்டு வைக்க நினைக்கிறது.கலகத்தை கொண்டு வர வேண்டிய காலமிது.

4 comments:

Unknown said...
This comment has been removed by the author.
ஜோ/Joe said...

//கிறீஸ்தவ மீனவர்களுக்கும் இந்து நாடார் விவசாயிகளுக்குமான மோதலாக மட்டுமே அதை பார்க்க முடியாது கிறிஸ்தவம் மீனவ மக்களிடம் கொண்டு வந்த சிறிதளவு மாற்றத்தைக் கூட சகிக்க முடியாத கொடூர மனதில் வெளிப்பாடுதான் அந்த மாண்டைக்காடு தாக்குதல் அப்போது நாங்கள் மொத்தமாக இந்தியாவின் நிலப்பரப்பிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்தோம்.//

முற்றிலும் உண்மை .எங்கள் ஊரான (உங்கள் அடுத்த ஊர்) பள்ளம் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்ட போது அதில் இந்து நாடார்களோடு சில கிறிஸ்தவ நாடார்களும் ஈடுபட்டார்கள் என்பதே இதற்கு சாட்சி.

//எங்கள் இன மக்களான பரதவர்கள் அவர்களைப் போலவே ஒடுக்கப்படுகிற முக்குவ இன மக்களுக்கு எதிராக எழுப்பியிருக்கும் சுவர்.//
ஆம் .இரு பக்கங்களிலும் இந்த சுவர் உடைத்தெறியப்பட வேண்டும்.

அருள்,
முடிந்தால் djmilton at gmail.com -க்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்

thiru said...

அருள்,

நெஞ்சை அறையும் உண்மையை எழுதியிருக்கிறீர்கள். சாதிப்படி நிலையில் மேலிருப்பவன்/ள் கீழிருப்பவனை/ளை தன்மானமற்ற நிலையில் நடத்துவது இந்தியாவில் எங்கும் நடக்கிறது. அருந்ததிய சாதிப் பெண்ணின் பார்வையில் இந்த சமூகத்தை பார்க்கவேண்டும் என்பதாக எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா பேட்டியில் படித்த நினைவு. ஒரு அருந்ததியப் பெண் மற்ற சாதியினரால் அவமதிப்பு, இழிவு, உரிமைமீறல், வன்கொடுமைக்கு ஆளாகிறாள். ஒவ்வொரு படிநிலையிலும் உயர்த்திய இடங்களில் இருப்பவர்கள் கீழே இருப்பவர்களை அடக்கும் கொடுமையை சரியாக புரிந்த பெரியார் சொன்ன வழி அமைந்தால் ஒழிய இதற்கு தீர்வு இல்லை. இந்துமதத்தின சாதியை கொடுமைகளை கிறித்தவ மதத்திற்கு தழுவியவர்களும் கடைபிடிப்பது மிகப்பெரிய அநீதியும், முரண்பாடுமாகும். மதங்களால் மனிதனது விடுதலைக்கான தீர்வு இல்லை. இடிக்கப்பட இன்னும் சுவர்கள் பல இருக்கின்றன.

டி.அருள் எழிலன் said...

ஆமாம் அருந்ததியர் இட ஒதுக்கீட்டை இன்று எதிர்ப்பவர்கள் இன்றும் சாதி இந்துக்களின் அடிமைகள்தான் என்பதை மறந்து.செயல் படுகிறார்கள்.ஆனால் அருந்ததிய்ர்களை ஒதுக்கி வைக்கும் தாழ்த்தப்பட்ட மக்களை சாதி இந்துக்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதற்கு உத்தபுரம் சாட்சி...வெயிலிலும் காற்றிலும் கிட‌ந்தாலும் கிட‌ப்போம் ஆனா அந்த‌ ஈன‌சாதி ப‌ய‌க் முக‌த்தில‌ விழிக்க‌ மாட்டோம்ணு தீண்டாமை வீம்பு பிடித்துக் கிட‌க்கிறார்க‌ள்.இந்த‌ பாட‌த்திலிருந்துதான் அனைத்துக்கும் கீழான‌ அருந்த‌தியின‌ ம‌க்க‌ளுக்கான‌ உரிமைக‌ளுக்காக‌ த‌லித் ம‌க்க‌ள் போராட‌ முன்வ‌ர‌வேண்டும்.