தண்டகாரண்யாவில் சல்வார்ஜூடும்- இராமேஸ்வரத்தில் இலங்கை கூலிப்படைகள்.

இதுவரை 539 மீனவர்களை இலங்கைக் கடற்படைச் சுட்டுக் கொன்றிருக்கிறது.இந்திய அரசோ தமிழக அரசோ உருப்படியாக எந்த நடவடிக்கையும் இதுவரை எடுத்ததில்லை. மக்களுக்கு எதிரான ஜெயலலிதாவும், கருணாநியும் நடத்தும் அரசியல் நாடகங்களுக்கு மட்டுமே இந்தப் படுகொலைகள் இதுவரை பயன்பட்டு வந்திருக்கிறது. தமிழகத்தின் பழவேற்காட்டில் தொடங்கி குமரி மாவட்டம் நீரோடி வரை சுமார் ஆயிரத்துச் சொச்சம் கிலோ மீட்டரைக் கொண்ட வங்கக்கடலிலும், அரபிக் கடலிலுமாக மீன் பிடிக்கிறார்கள். இந்திய இலங்கை கடல் எல்லையில் மட்டுமே கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் மீதான இந்தத் தாக்குதலை இலங்கை மேற்கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தகர்ப்பின் பின்னர் எல்லா எதிர்ப்பியக்கங்களுக்கும் அமெரிக்கா உருவாக்கிய பயங்கரவாத முத்திரையை புலிகளுக்கு எதிராக மிகத் தந்திரமாகப் பயன்படுத்திய ராஜபட்சே, இந்தியாவின் தனியார் தாராளமயாக்கலையும் மக்களின் நிலங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் அதன் உள்நாட்டு முதலாளிகளின் நலனையும் புரிந்து கொண்ட ராஜபட்சே இந்திய, இலங்கை நலன்களுக்காக இராமேஸ்வரம் மீனவர்களைக் கொன்று அந்த கடல்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த நினைக்கிறார். மிகச் சரியாக தமிழக தலைவர்கள் குறித்தும் அறிந்து வைத்திருக்கும் ராஜபட்சேவுக்கும் அவரது கும்பலுக்கும் தெரியும் தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் கோமாளிகள் என்று. கோமாளிகளால் முன்னெடுக்கப்படும் தேர்தல் நேர நாடகமென்பதும் ராஜபட்சேவுக்குத் தெரியும். அதனால்தான் வழக்கம் போல இந்தியாவோடு பரஸ்பர புரிதலோடு இந்த மீனவர் படுகொலைகளை வைத்தே கடற்கரை தொடர்பான கட்டுப்பாடுகளைக் கொண்டு வரும் முயற்சியில் இரு நாடுகள் இறங்கியிருக்கிறது. மீனவர்களுக்க்கு லைசென்ஸ் முறை கொண்டு வந்து கடலோரத்தில் மீன் பிடிப்பை ஒழுங்கு செய்வது, பன்னாட்டு நிறுவனங்களின் கடல் கொள்ளைக்கு எதிராக அவர்களின் ஏரியாவுக்குள் ஊடுறுவும் நம்மூர் படகுகளை கைப்பற்றி சட்டவிரோத காவலில் வைத்து, தீர்மானிக்கப்பட்ட தீர்ப்பின் படி ஒன்பது வருடம் வரை சிறையில் தள்ளுவது (கைது செய்யப்படுகிற மீனவர்களை எத்தனை நாள் வேண்டுமென்றாலும் சட்டவிரோத காவலில் வைத்திருக்க அனுமதிக்கிறது இச்சட்டம்) என்கிறது அந்த கருப்புச் சட்டமான கடற்கரை மேலாண்மைச் சட்டத்தின் ஷரத்துக்கள்.


வழக்கம் போல மீனவர் படுகொலைகளின் போதும் நாடகமாடும் ஜெயலலிதா, கருணாநிதி யார் இனி ஆட்சிக்கு வந்தாலும் இச்சட்டத்தை அமல்படுத்துவார்கள். நாம் நடத்திக் கொண்டிருக்கும் திராவிட, தமிழ் தேசிய அரசியல் எதுவாக இருந்தாலும் அது எல்லையோர பழங்குடி மக்களை நிராகரிக்கும் ஒரு அரசியலே. புவியியல் ரீதியாக புறக்கணிக்கப்பட்ட பழங்குடிச் சமூகங்கள் அதிராக வர்க்கங்களுக்கு எதிராக எழுச்சி பெறும் இந்தக் காலத்தில் இந்தியாவின் தெற்கு மூலையில் எல்லையோரப் பழங்குடிகளான மீனவ மக்களை இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தே வஞ்சிக்கிறது. இரு நாடுகளுக்குமே அந்தப் பகுதியில் மீனவர்கள் வாழக்கூடாது என்பதுதான் எண்ணம். நீண்டகால அரசியல் திட்டங்களும், இராணுவ நோக்கங்களும், வர்த்தக நோக்கங்களுமாக பல காரணிகளின் இந்திய இலங்கை அரசுகளுக்கு இருப்பதால் அவர்கள் இக்கொலைகளை ஊக்குவிக்கிறார்கள். முன்னர் நேரடியாக இராணுவத்தை வைத்து இக்கொலைகளை செய்த இலங்கை அரசு இப்போது சட்டவிரோத ஆயுதக் குழுக்களை இக்கொலைகளுக்கு பயன்படுத்துவதாகத் தெரிகிறது. தண்டகாரண்யாவில் சல்வார்ஜூடும் என்ற சட்டவிரோத ஆயுதக் குழுவை பழங்குடி மக்கள் மீது ஏவும் இந்திய அரசு. இராமேஸ்வரத்தில் இலங்கை அரசின் கூலிப்படைகளை தனது சொந்தக் குடிகளாக மீனவப்பழங்குடி மக்கள் மீது ஏவ அனுமதிக்கிறது. இக்கொலைகளை இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தே நடத்தும் இனப்படுகொலை என்று சொல்வதற்கான முழு உண்மையும் இதில் உள்ளது. இந்தியாவின் கோரமான இந்தப் பச்சைப் படுகொலைகளை கண்டிக்கவோ சுட்டிக்காட்டவோ தயங்கும் நாம் சீனா இந்தியாவைத் தாக்குகிறது, பாகிஸ்தான் இந்தியா மீது பாய்கிறது என்று கரடி விட்டுக் கொண்டிருக்கிறோம். மக்களை குண்டு வைத்துக் கொல்லும் பயங்கரவாத அழிவு சக்திகள் செய்யும் நாசகார வேலையைத்தானே இந்தியா அதன் சொந்தக் குடிகள் மீது செய்கிறது.


ஒரு இணைய முயர்ச்சி. www.savetnfisherman.org

மீனவர் படுகொலை தொடர்பாக இருந்த அலுப்பையும் சலிப்பையும் போக்கியது இந்த இணையதளம்தான். யுவகிருஷ்ணா இதை ஆதரியுங்கள் என்று தன் ப்ளாக்கில் போட்டிருந்தார் முதலில் அது என்னவன்று எனக்குப் புரியவில்லை. பின்னர்தான் தெரிந்தது டிவிட்டர் மூலம் குறிப்பிட்ட ஒரு பிரச்சனைக்காக கருத்துப் பரிமாறி உலக அளவில் கவனத்தை ஈர்க்கும் ஒரு இணையதளம் இது என்று. நன்றாக இருந்தது பல முன்னணி பதிவர்களும் டிவிட்டர்களும் வந்து கருத்துச் சொன்னார்கள். பத்ரி, சந்தனமுல்லை, கார்த்திக், அதிஷா, பாலபாரதி, உண்மைத்தமிழன், இன்னும் ஏராளமானோர் கமெண்டுகள் அடிக்கடி வந்தது. நானும் கமெண்ட் போடலாம் என்று போட்டேன் ஒரு கட்டத்தில் என்ன போடுவதென்று தெரியவில்லை. கருணாநிதியைத் திட்டி நான்கைந்து கமெண்டுகளைத் தட்டி விட்டேன். அதாவது கருணாநிதி மீது இருக்கும் அரசியல் விமர்சனம் வேறு. ஆனால் இந்த இணையம் கருணாநிதியைத் திட்ட துவங்கியதல்ல இது நமது மீனவர் பிரச்சனையை, இந்தியாவின், தமிழகத்தின் வஞ்சகத்தை, அதன் கையாலாகத் தனத்தை, அல்லது சொந்தக் குடிகளுக்கு அரசுகள் செய்யும் துரோகத்தை உலக அளவில் பேசி கவனத்தை ஈர்ப்பதே நோக்கம் என்னும் போது குறிப்பிட்ட பிரச்சனை தொடர்பான கருத்துக்களை பரிமாறுவதன் மூலமே நோக்கத்தில் வெற்றி ஈட்ட முடியும். தவிறவும் ரோசா வசந்த் ஒரு கமெண்ட் போட்டிருந்தார் ’’சத்தம் போடாதீங்க ஆங்கிலத்தில் எழுதுங்கள்” என்கிற தொனியில் சொல்லியிருந்தார் எனக்கு கொஞ்சம் கடுப்பாக இருந்தாலும் அதுதான் உண்மை. தமிழை மட்டுமே வைத்துக் கொண்டு இனி காலத்தை ஒட்ட முடியாது. தமிழில் அதிகமானோர் பங்காற்றும் அதே நேரத்தில் காத்திரமான மொழி பெயர்ப்புகள், கட்டுரைகளை ஆங்கிலத்தில் உருவாக்க வேண்டும். தமிழில் இருக்கும் கட்டுரைகள் எந்த அந்நிய மொழிச் சிந்தனைகளுக்கும் சளைத்ததல்ல அக்கட்டுரைகளை ஆங்கிலத்தில் மாற்றி இந்த இணையம் மூலம் கொண்டு செல்ல வேண்டும். வெகுவேகமாக உருமாறிக் கொண்டிருக்கும் தகவல் தொழில் நுட்பமும் உலக அளவில் செய்திகளைக் கொண்டு சேர்க்கவும் ஆங்கிலப் பகிர்தல்கள் அவசியம். ஆங்கிலம் தெரிந்த நபர்கள் உண்மையான அக்கரையோடு இதில் களமிரங்க வேண்டும். என்பது என் கோரிக்கை. மற்றபடி www.savetnfisherman.org இணையத்தை துவங்கியவர்களே இந்த வருடத்தின் மிகச் சிறந்த மனிதர்கள் கருத்துப் பரவலில் சிறந்த முன்னோடிகளாக திகழ்ந்து இந்தியா முழுக்க ஒரு டிவிட்டரில் ஒரு அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இது ஒரு இணையக் கிளர்ச்சிதானே? அந்த நண்பர்களை பாராட்டுகிறேன். மீனவர் படுகொலை தொடர்பாக உங்கள் கட்டுரைகளை savetnfisherman@gmail.com அனுப்புங்கள்.

1 comments:

Anonymous said...

உண்மை அத்தனையும் உண்மை கட்டுரை ஏன் சீனா குறித்து மௌனம் சாதிக்கிறது.