நக்சல்பாரிகளை ஓழிக்க முடியுமா?


டி.அருள் எழிலன்
"வர்க்கப் பகைவர்களைக் கொன்றொழித்து அவர்களின் இரத்தத்தில் கை நனைப்பவர்களே இறுதியில் புரட்சியாளர்களாக ஏற்றுக் கொள்ளப்படுவார்கள்.ஆகவே நீங்கள் கிராமங்களுக்குச் செல்லுங்கள் கிராமங்களில் ரகசிய குழுக்களை அமைத்து ஏழை எளிய மக்களிடம் அதிக வட்டிக்கு பணம் கொடுத்து சொத்தைப் பறிப்பவர்கள்,மோசமான நிலப்பிரபுக்கள்,பள்ளி,கோவில் நிலம் உள்ளிட்ட பொதுச் சொத்துக்களை அபகரிப்பவர்களை அழித்தொழிக்க வேண்டும்.அழித்தொழிப்பு நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்."
1969-ல் இரண்டாவது முறையாக தமிழகத்துக்கு வந்த நக்சல்பாரிகளின் நாயகன் சாருமஜூம்தார் தமிழகத்துக்கு வந்த போது தங்கள் தோழர்களிடம் ஆற்றிய உரையின் சாரம்தான் இது.சாருமஜூம்தாரின் வருகைக்குப் பிறகு தமிழகம் முழுக்க பண்ணை முதலாளிகள்,கந்து வட்டிக்காரர்கள்,பெண் கொடுமை செய்யும் மைனர்கள் என பலரும் அழித்தொழிக்கப் பட்டார்கள்.ஒடுக்கப்பட்ட விவாசாயக் கூலிகளோடு நக்சல்பாரிகள் இணைந்து நிகழ்த்திய இந்த கொலைகள் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்த போலீஸ்சுக்கும் நக்சல்பாரிகளுக்குமான மோதல் தொடங்கியது.எழுபதுகளில் தொடங்கிய நக்சல்பாரிகளின் போராட்டத்தை ஒடுக்க போலீஸ் அதன் பிரதான தலைவர்களை வேட்டையாடியது.தமிழகத்தில் எல்.அப்பு,ஏ.எம்.கோதண்டராமன்,புலவர் கலியபெருமாள் போன்றோரின் தலைமையில் துவங்கிய நக்சல்பாரிகளின் புதிய ஜனநாயக் புரட்சி போலீசால் ஒடுக்கப்பட்டு கால் நூற்றாண்டு காலம் கழிந்து விட்டது.எண்பதுகளோடு முடிந்து போனதாக சொல்லப்பட்ட நக்சல்பாரிகள் தேனி மாவட்டத்தின் முருகமலை வனப்பகுதிகளிலும் வருசநாட்டு மலைப் பகுதிகளிலும் வேர் விட்டிருக்கிறார்கள்.என பதறிப்போய் அவர்களை மீண்டும் வேட்டையாட கிளம்பியிருக்கிறது தமிழக போலீஸ்.
இது தொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய முதல்வர்‘‘இயர்க்கைப் பேரிடர்களின் போது எல்லா கட்சிகளும் இணைந்து ஒன்றாக செயல்படும்.அதைப் போலவே தீவீரவாதம் தலையெடுக்கும் போது அதைத் தவிர்க்கவும் தடுக்கவும் எல்லாக் கட்சிகளும் முன் வரவேண்டும்’’என்ற முதல்வர்.அவர்கள் ஏன் இந்த நிலைக்கு ஆளானார்கள்? அவர்கள் படிப்பறிவு இல்லாமல் இருப்பதற்கு இருப்பதற்கு என்ன காரணம்?வசதி இல்லை.வசதி இல்லாததற்கு என்ன காரணம் அதை ஆழமாக அந்த ஆணி வேரை தோண்டிப் பார்த்து அறிய வேண்டும்.அது அகற்றப்பட்டால் வருங்கால சமுதாயம் புரட்சிகர இளைஞர்களாக மாறாமல்.புதிய நாட்டை உருவாக்குகிற இளைஞர்களாக மாறுவார்கள்"என்றிருக்கிறார் முதல்வர்.
நக்சல்பாரி புரட்சியாளர்கள் பொதுவாக கம்யூனிஸ்டுகளாலும்.அரசதிகார மட்டங்களால் நக்சலைட்டுகள் என்றும் அழைக்கப்படும் ஆயுதமேந்திய இந்த இளைஞர்கள் யார்? இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்றால் அது இந்திய பொது உடமைக் கட்சியின் நீண்ட வரலாறு.இரத்தத்தாலும் தியாகத்தாலும் தோய்த்தெடுக்கப்பட்ட வீர வரலாறு என்றுதான் ஒரு தரப்பு மக்களால் இன்றும் நம்பப்படுகிறது.
1968-ல் மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் ஐக்கிய முன்னணியின் கூட்டணி அரசில் கம்யூனிஸ்டுகளும் இடம் பெற்றிருந்த போது டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நக்சல்பாரி என்னும் கிராமத்திலிருந்து வெடித்த அந்தக் குரல் சாருமஜூம்தாருடையது.கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாம் மட்ட தலைவராக இருந்த சாருவின் குரலை அவரது கட்சியே எதிர்பார்க்கவில்லை.பணக்காரர்களிடம் இருக்கும் நிலங்களைப் பிடுங்கி ஏழைகளுக்கு பங்கிட்டுக் கொடுக்க வேண்டும்.விவாசாயிகளே நேரடி நடவடிக்கையில் ஈடு பட்டு தங்களின் நிலத்தை பணக்காரர்களிடம் இருந்து எடுத்துக் கொள்வார்கள்.என அதிரடியாக அறிவிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்டது.சாருவின் இந்த அறிவிப்பு ஆயிரமாயிரம் இளைஞர்களை உரமேற்ற அவர்கள் கல்லூரிகளை விட்டு வெளியேறி மார்க்சிய லெனினிய கட்சியான நக்சல்பாரி இயக்கத்தில் இணைந்தார்கள்.பல இளைஞர்கள் குடும்பங்களைத் துறந்து வெளியேறினார்கள்.சாருமஜூம்தாரின் இந்த அதிரடி அறிவிப்பை அப்போது கொண்டாடியது சீன கம்யூனிஸ்ட் கட்சி.சாரு மஜூம்தாரின் இந்த அறிவிப்பை "வசந்தத்தின் இடி முழக்கம்"என பெயரிட்டு கௌரவப்படுத்தியது சீன கம்யூனிஸ்ட் கட்சி.வரலாறும் சாருமஜூம்தாரின் அந்த நக்சல்பாரி எழுச்சியை "வசந்தத்தின் இடி முழக்கம்"என்றே இன்று வரை பதிவு செய்கிறது.
ரஷ்யப் புரட்சியாளர் லெனினின் பிறந்த நாளான ஏப்ரல் இருபத்தி இரண்டாம் தேதி கல்கத்தவில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் நீண்ட கால மக்கள் யுத்தத்தை பிரகடனப்படுத்தி மார்க்ஸ்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியை சாருமஜூம்தார் துவக்கி வைத்து இன்று நாற்பதாண்டுகளுக்கு மேலாகி விட்டது.தமிழகத்தில் நக்சல்பாரி இயக்கத்தைப் பொறுத்த வரையில் அது எவளவு வேகமாக எழுந்து வந்ததோ அதே வேகத்தில் ஒரு பக்கம் பிளவைச் சந்தித்தது.இன்னொரு பக்கம் ஈரமிக்க அந்த தோழர்கள் போலீசால் வேட்டையாடப்பட்டார்கள்.சாருமஜூம்தார் தமிழகத்துக்கு வந்து அழித்தொழிப்பு நடவடிக்கையில் துரிதம் தேவை என அறிவித்த பிறகு பரவலாக பலர் அழிதொழிக்கப்பட கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக இருந்த தோழர் அப்பு காவல்துறையினரால் வேட்டையாடப்பட்டார்.நகச்ல்பாரிகள் சந்தித்த முதல் இழப்பும் இட்டு நிரப்ப முடியாத பேரிழப்பும் அதுதான்.கோதண்டராமன் போன்ற பக்குவம் மிக்க தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட சீராளன்,பாலன்,கோவிந்தன்,கண்ணாமணி போன்றோர் அடுத்தடுத்து போலீஸ் மோதலில் பலியாகி விழுந்தார்கள்.நக்சல்பாரிகளின் மூர்க்கமும் போலீசின் மூர்க்கமும் மோதிக் கொண்டது நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தமிழகம் முழுக்க எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் வேட்டையாடப்பட்டார்கள் அந்த வேட்டைக்கு தலைமை தாங்கியது முன்னாள் போலீஸ் அதிகாரியான தேவாரம்.இந்நிலையில் நக்சல்பாரி இயக்கத்தைத் தொடங்கிய சாருமஜூம்தார் 1972&ல் காவல்துறை மோதலில் கொல்லப்பட கட்சி உடைந்தது.தமிழகத்தில் நக்சலைட்டுகளை ஒழித்து விட்டதாக நிம்மதி பெருமூச்சு விட்டது தமிழக காவல்துறை.
அழித்தொழிப்பு கொள்கைக்கும் கட்சியின் சித்தாந்தத்துக்கும் போர் தொடங்கியது.நீங்கள் கிராமங்களுக்கு செல்கிறீர்கள் விவசாயக் கூலிகளோடு இணைந்து பணி செய்து ரகசியக் குழு அமைத்து விவசாயக் கூலிகளின் உதவியோடு பண்ணையாகளை கொல்கிறீர்கள்.பின்னர் அந்த கூலி விவசாயிகளை கட்சியில் இணைந்து கொண்டு தலைமறைவாகி விடுகிறீர்கள்.நீங்கள் எப்படி உங்கள் குடும்பங்களைத் துறந்து புரட்சிக்காக கிராமங்களுக்கு வந்தீர்களோ அப்படியே அந்த விவாசயக்கூலிகளும் குடும்பங்களை நிராதரவாக விட்டு விட்டு உங்களுடன் வந்து விடுகிறார்கள்.முன்னணி தோழர்கள் கொல்லப்படுகிறார்கள்.இது புரட்சிக்கு ஏற்பட்ட மிக மோசமான பின்னடைவு.ஆயுதங்களிலிருந்து அதிகாரம்தான் பிறக்கிறது சித்தாந்தமல்ல.மக்களை திரட்டி அவர்களின் ஒத்துழைப்போடு நடத்தப்படுவதுதான் புதிய ஜனநாயக் புரட்சியாக் இருக்கும் என முரண்பட்டு நின்றவர்கள்.நக்சல்பாரி அமைப்பின் அனுபவங்களோடு s.ஷீ.நீ என்றழைக்கப்படும் மார்க்ஸிய லெனினிய சித்தாந்த அடிப்படையிலான மாநில அமைப்புக் கமிட்டியை நிறுவினார்கள்.ஆயுதங்களை சுமந்து திரியும் சாகசவாதங்களை நம்பாமல் இவர்கள் கிராமங்களுக்குப் போய் மக்களை புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணி திரட்டுகிறார்கள்.
இந்தியா முழுக்க நக்சல்பாரி இயக்கம் பின்னடைவைச் சந்தித்த காலமது.கேரளாவில் அது முழுக்க தோல்வியைத் தளுவியது.இந்நிலையில்தான் ஆந்திராவில் கொண்டப்பள்ளி சீத்தாராமைய்யாவின் தலைமையில் இயங்கிய மக்கள் யுத்தக்குழுவும் பீஹாரைத் தலைமையிடமாக கொண்ட மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டரும் இணைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவோயிஸ்ட் என்கிற இந்தியா முழுமைக்குமான பரந்து பட்ட அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள்.முன்னர் நக்சல்பாரிகள் என்றழைக்கப்பட்டவர்கள் இன்று மாவோயிஸ்டுகள் என்று அறியப்படுகிறார்கள்.
"இந்தியாவின் 16 மாநிலங்களில் 172 மாவட்டங்களில் மாவோயிஸ்டுகளின் தாக்கம் உள்ளது.இது ஒட்டு மொத்த இந்தியப் பரப்பளவில் 48 சதவீதமாகும்" என தெஹல்கா இதழ் தெரிவிக்கிறது.அதிரடியாக கடந்த பத்தாண்டுகளில் மவோயிஸ்டுகள் வளர என்ன காரணம் என்றால்.எழுத்தாளர் அருந்ததிராய் இப்படிச் சொல்கிறார்."சாத்வீக அஹிம்சா அமைப்புகள் நமது ஜனநாயக அமைப்பின் கதவுகளை ஆண்டுக் கணக்கில் தட்டிக்கொண்டிருக்கிறார்கள்.அவ்வாறு தட்டித் தட்டி அவர்கள் கண்டது என்ன?போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான போராட்டமும் நர்மதை பாதுகாப்பு பிரச்சனையையும் எடுத்துக் கொள்ளுங்கள் வேறு எந்த பிரச்சனையையும் விட இந்த இரண்டுக்கும் ஊடகங்களின் ஆதரவும் பிரபலமான தலைமையும் இருந்தும் என்ன பிரயோஜனம் போராடியவர்களால் வெற்றிபெற முடியவில்லையே.அந்த மக்கள் போராட்ட வழிமுறைகளை மறுபரிசீலனை செய்ய விரும்புகிறார்கள்.மற்ற எல்லா வழிகளையும் முயன்று விரக்திதான் மிச்சம் என்ற நிலையில் மக்கள் இந்த வழியைத் தேர்ந்தெடுக்கும் போது நாம் அவர்களை கண்டிக்க முடியுமா?நந்திகிராம் மக்கள் தர்ணா நடத்திக் கொண்டு பாட்டுப்பாடிக் கொண்டு இருப்பார்களேயானால் மேற்கு வங்க அரசுதான் பணிந்திருக்குமா?"என்று கேட்கிறார் எழுத்தாளர் அருந்ததிராய்.
நாடு முழுக்க ஒரு இலட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட பிறகு மத்திய அரசு 60,000 கோடி பெருமான முள்ள விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்திருக்கிறது.நாடெங்கிலும் விவசாயிகளின் முதுகெலும்பு உடைக்கப்பட்டுக் கிடக்க தமிழகத்தில் தருமபுரி,சேலம்,மதுரை என எல்லா இடங்களிலும் வாழும் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளின் வாழ்க்கையையே குலைக்கும் கோர அரக்கனாக கந்து வட்டிக் கும்பல் கிராமங்கள் தோறும் முளைத்திருக்கிறது.சாதா வட்டியில் துவங்கிய இவர்களின் இந்த வட்டித் தொழில் மீட்டர் வட்டியாக வளர்ந்து இன்று ஆம்புலன்ஸ் வட்டியாக விவசாயிகளின் கழுத்தை நெறிக்கிறது.இவர்கள் வெறும் கந்து வட்டிக் கும்பல் அல்ல ரியல் எஸ்டேட் தொழில்தான் இவர்களுக்கு பிரதானம் வட்டிக்கு கொடுப்பது போல் கொடுத்து அதை ஆம்புலன்ஸ் வேகத்தில் எகிற வைத்து விவசாயியால் வாங்கிய கடனுக்கு வட்டி கூட செலுத்த முடியாத நிலை வரும் போது அவர்களிடம் இருந்து இருக்கிற நிலங்களையும் பிடுங்கிக் கொள்வதுதான் இந்த கந்துவட்டிக் கும்பலின் நோக்கம்.கந்துவட்டிக் கும்பலுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக இருந்தும் இவர்கள் சர்வசாதாரணமாக கிராமங்களில் ஏழை விவசாயிகளின் கழுத்தை நெறிக்கிறார்கள்.விளைவு நஷ்டப்பட்ட விவசாயம் கைமீறிப்போன கடன் என குடும்பத்தோடு தங்களின் பூர்வீக நிலத்திலிருந்து வெளியேறும் சூழல் இன்று தமிழக கிராமங்கள் முழுக்க நடக்கின்றன.
நிலரீதியிலான பிளவு மட்டுமல்ல சாதியால் பிளவு பட்ட தமிழ்ச் சமூகத்தின் நோய் கொஞ்சம் கூட சரியாக வில்லையோ என்றுதான் இன்றும் தோன்றுகிறது மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள உத்தப்புரத்தில் தலித்துக்களையும் சாதி இந்துக்களையும் பிரிக்கும் பத்தடிக்கும் மேலன உயரமுள்ள தடுப்புச் சுவர் மனித குலத்தின் அவமானச் சின்னமாக உயர்ந்து நிற்கிறது.1990 களில் எழுப்பப்பட்ட அந்தச் சுவருக்கு மேலே இப்போது இப்போது மின்சார வேலி அமைத்திருக்கிறார்கள்.தீண்டாமை புதிய புதிய முறையில் காலவளர்ச்சிக்கேற்ப நாவீனப்படுத்தப்பட்டு வருவதற்கு உத்தப்புரம் சாட்சி.
ஒரு காலத்தில் சாதி ஒடுக்குமுறையாலும் பொருளாதாரத்தாலும் பின்தங்கிய மாவட்டம் என அடையாளம் காணப்பட்ட தருமபுரிதான் நக்சல்பாரிகளின் கூடாரமாக இருந்தது.இன்று தமிழகம் முழுக்க மவோயிஸ்டுகள் பரவியிருக்கிறார்கள் என்றால் வறுமையும் ஏழ்மையும் எல்லா மாவட்டங்களையும் பின் தங்கிய மாவட்டங்களாக மாற்றியிருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.அதிமுக ஆட்சியில்தான் இந்நிலை அல்லது திமுக ஆட்சியில்தான் இந்நிலை என்றில்லை. உலகமயச் சூழலுக்குள் எப்போது இந்தியா அடியெடுத்து வைத்ததோ அப்போதே இந்தியச் சமூகம் சமுகம் பிளவுபடத் துவங்கிவிட்டது எனக் கருதுகிற சமூக ஆர்வலர்களும் உண்டு.
நிலம்,சாதிஆதிக்கம்,மறுக்கப்படும் நீதி,பாரபட்சமான கல்வி,வறுமை என எத்தனையோ சமூகக் காரணங்கள் மவோயிஸ்டுகளின் பெருக்கத்துக்கு பின்னணிக் காரணமாக அறியப்பட்டாலும் இவைகளை சரி செய்து விட்டால் நக்சல்பாரிகளோ,மாவோயிஸ்டுகளோ அழிந்து விடுவார்கள் என்கிற அரசின் கருத்துக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.ஏனென்றால் சாருமஜூம்தார் சோற்றுக்கிலாமல் பட்டினி கிடந்ததில்லை.மக்களின் பட்டினியைப் பார்த்துத்தான் அவரும் அவரை பின்பற்றிய இளைஞர்களும் விவாசாயிகளிடம் போனார்கள்.இது மாவோயிஸ்டுகளுக்கும் பொருந்தும்.தங்களின் சிகப்புச் சிந்தனையை உலகம் முழுக்க ஒரே குரலில்தான் பாடுகிறார்கள் இப்படி,
"பட்டினிக் கொடுஞ்சிறைக்குள்
பதறுகின்ற மனிதர்காள்
பாரில் கடையரே எழுங்கள்
வீறு கொண்ட தோழர்காள்!
கொட்டு முரசு கண்ட நம்
முழக்கம் எங்கும் முழங்கிட
பாடுவீர் சுயேட்சை கீதம் விடுதலைப் பிறந்தது"
பிரெஞ்ச் கவிஞன் யூஜின் பட்டியரின் இந்த பாடல் உலகத்தில் ஏழ்மையும் பாரபட்சமும் இருக்கும் வரை இந்தப் பாடல் பாட்டாளிகளால் அதன் நிறம் மாறாமல் பாடப்பட்டுக் கொண்டுதானே இருக்கும்.

6 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நக்சல்பாரிகள் / மாவோயிஸ்டுகள் பற்றிய நல்ல கட்டுரைக்கு, நன்றி.

ஏகலைவன் said...

தோழர் அருள் எழிலன் அவர்களே,

அருமையான கட்டுரை இது. தமிழரங்கம் இணையதளத்தில் இணைக்கப்பட்டிருந்த உமது இந்தக் கட்டுரையைப் பார்த்து எனது வலைதளத்திலும் மீள்பதிவு செய்திருக்கிறேன். நன்றி!

தோழமையுடன்,
ஏகலைவன்.

bala said...

அருள் எழிலன் அய்யா,
நக்சல் வெறி நாய்களை ஒழித்துத் தான் ஆக வேண்டும்.இல்லையென்றால் இந்த நாய்கள் மக்கள் அனைவரையும் பிச்சைக் காரர்களாக ஆக்கி விட்டு இவர்கள் மட்டும் சிலி பீஃப்,சாராயம் என்று கும்மாளமிட்டுக் கொண்டிருப்பர்.

பாலா

bala said...

//"எனது சரித்திரத்தில் எனக்கு தலைவனே இருந்ததில்லை" -தந்தை பெரியார்//

அருள் எழிலன் அய்யா,

அடேங்கப்பா, அப்பேற்பட்ட பெரிய பொறிக்க்கியாரா அந்த தாடிக்கார முண்டம்?இருக்கும் இருக்கும்.

பாலா

Gurusuresh said...

பெரியாரையும் நக்சல்பாரிகளையும் பற்றி பேசுவதற்கு முன் அவர்களையும் அவர்களது சித்தாந்தங்களையும் கொஞ்சம் படியுங்க தோழர் , அப்புறம் திட்டலாம்.

Unknown said...

அருமையான வரலாற்று பொக்கிஷம்