சட்டம் ஒழுங்கு பிரச்சனை அல்ல.....சமூகப் பிரச்சனை...



கன்னியாகுமரியில் தொடங்கி சென்னை வரை வாழும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ரௌடிகள் கலங்கிப் போய் கிடக்கிறார்கள்.எந்த நேரத்தில் யார் மீது இடி விழுமோ என்ற பயத்தில் பாதிபேர் ஊரை காலி செய்திருக்கிறார்கள்.விடாது துரத்தும் போலீஸ்.எப்படியாது தப்பிப் பிழைத்தால் போதும் என உயிர் வாழ்தலுக்கான ஓட்டம் என ஒரு க்ரைம் ரிலே ரேஸ் போலீசுக்கும் ரௌடிகளுக்குமாக நடந்து கொண்டிருக்கிறது தமிழகத்தில்.முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தொடர் ரௌடி வேட்டையால் தமிழகமே அதிர்ந்திருக்கிறது.
"சில வழக்கறிஞர்கள்,காவல்துறையினர் அரசியல்வாதிகள் இவர்களின் அனுசரணையோ ஆதரவோ இல்லாமல் ரௌடிக் குழுக்களால் இயங்கவே முடியாது.பல நேரங்களில் ரௌடிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு அலோசனை வழங்கும் சேவையை சில வழக்கறிஞர்களும் காவல்துறை அதிகாரிகளும் செய்திருக்கிறார்கள்"
இப்படிச் சொன்னது என்கவுண்டர்களுக்கு எதிராக செயல் படும் மனித உரிமை அமைப்பினரோ என்கவுண்டர்களால் பாதிக்கப்பட்ட யாரோ ஒருவர் சொன்ன வரிகளில்லை.தனது டாக்டர் பட்ட ஆய்வுக்காக "Organized Crime" என்கிற தலைப்பில் ஐ.பி.எஸ் அதிகாரியான காந்திராஜன் சமர்ப்பித்த ஆய்வில் உள்ள வரிகளின் தொனிதான் இது.

ஆனால் இப்போது போலீஸ் ரௌடிகள் மொதல் புதிய சாவாலக உருவாகியிருக்கிறது தமிழகத்தில்.கடந்த பத்தாண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 66-பேர் போலீஸ் மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.நகசல்பாரிகள்,தமிழ்த் தேசிய போராளிகள்,ரௌடிகள் என இந்த மோதல் கொலைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.இப்போது கடைசியாக பாம் பாலாஜி கொல்லப்பட பல நூறு ரௌடிகள் தமிழகத்தை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்.அண்டை மாநிலங்களுக்குப் போனாலும் உயிருக்கு உத்திரவாத மில்லை என பதறிப் போய் இருக்கிறார்கள் அந்த ரௌடிகளை நம்பி வாழும் குடும்பத்தினர்.
என்கவுண்டர் எனப்படும் மோதல் கொலைகள் இந்தியாவுக்கு அறிமுகமானது அறுபதுகளில்தான் மேற்குவங்கத்தில் வேர் விட்டுக் கிளம்பிய நக்சல்பாரிகளை வேட்டையாட என்கவுண்டரை ஒரு கருவியாக பயன் படுத்தியது காவல்துறை.மேற்குவங்கம்,ஆந்திரம்,கேரளம் பின்னர் தமிழகம் என என்கவுண்டர் கொலைகள் பரந்து விரிந்திருந்தது.அதிரடியாக கிராமங்களைத் தாக்கி கொள்ளையிடும் சம்பல் பள்ளத்தாக்கின் கொள்ளையர்களையும்,காஷ்மீரில் தீவீரவாத பாதையில் காலடி வைக்கும் இளைஞர்களையும்,பஞ்சாபில் காலிஸ்தான் தீவீரவாதிகளை வேட்டையாடவும் என்கவுண்டரை போலீஸ் ஒரு கருவியாக பயன் படுத்திக் கொண்டது.


எழுபதுகளில் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் நெருக்கடி நிலை கொண்டு வரப்பட்ட போது நாடு முழுக்க கட்டவிழ்த்து விடப்பட்ட போலீஸ் வன்முறை வெறியில் பலியான உயிர்களும் உண்டு.தமிழகத்தைப் பொறுத்த வரையில் நெருக்கடி நிலையை எதிர்த்த காரணத்தால் திமுக தலைவர் கலைஞரின் குடும்பமும் கட்சியும் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளானதும்.சென்னை சிட்டிபாபுவும் சாத்தூர் பாலகிருஷ்ணனும் சிறைக்குள்ளேயே அடித்துக் கொலை செய்யப்பட்டது.சோகமான கருப்பு என்கவுண்டர் வரலாறுதான்.1975&ல் நெருக்கடி நிலை காலத்தில் திமுக தன் ஆட்சியையே இழந்தது.ஆனால் ஐந்தாவது முறையாக பதவியேற்றிருக்கும் கலைஞரின் ஆட்சியில் இந்த இரண்டாண்டு காலத்தில் தமிழகம் முழுக்க என்கவுண்டரில் கிட்டத்தட்ட 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

உலகமயச் சூழலில் வெடித்தெழும் மக்கள் போராட்டங்களை ஒடுக்க அரசும் போலீசும் கையாளும் ஒரு வழிமுறைதான் இத்தகைய என்கவுண்டர்கள்.சத்தீஸ்கர் மாதிரியான மாநிலங்களில் அரசே "சல்வார்ஜுடூம்"மாதிரியான குண்டர் படையை உருவாக்கி அரசுக்கு விரோதமாக போராடுபவ்ர்களை அழித்தொழிக்கும் பொறுப்பை இம்மாதிரி அடியாள் படைகளுக்கு வழங்கிவிடுகிறது.ஆனால் தமிழகத்தில் அம்மாதிரி சூழல் இல்லை எல்லா காலத்திலும் நகச்ல்பாரிகளை வேட்டையாடவும் அடங்க மறுக்கும் ரௌடிகளை மட்டுமே வேட்டையாடவும் என்கவுண்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.ஆனால் இந்த நீண்ட கொலைகளுக்கு பிறகும் ஒரு ரௌடி உருவாகி வருவதையோ தீவிர சோஷலிச எண்ணமுள்ள இளைஞர் ஒருவர் ஆயுதம் தூக்குவதையோ அரசாலோ போலீசாலோ தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதுதான் உண்மை.இந்த காவல்துறை ரௌடிகள் மோதல் தொடரத் தொடர இன்னொரு பக்கம் சேரிகளில் இருந்தும் கூவம் நதியின் கரையோரங்களில் இருந்தும் ரௌடிகள் உருவாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள்,என்றாவது ஒரு நாள் நாம் போலீசால் வேட்டையாடப் படுவோம் என்பது தெரிந்திருந்தும் அவர்கள் புதிய ரௌடிகளாக உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.
பொதுவாக இன்று நடந்து கொண்டிருக்கும் என்கவுண்டர்கள் தொடர்பாக இரண்டு கேள்விகள் மக்கள் மனதில் தோன்றுகிறது.

ஒன்று இம்மாதிரி கொலைகளை செய்யும் அதிகாரம் சட்டபூர்வமாக போலீசுக்கு வழங்கப்பட்டிருக்கிறதா?

போலீஸ் மோதலின் போது நிகழும் இம்மாதிரி கொலைகளை சட்டம் அனுமதிக்கிறதா?எனக் கேட்டால் தற்காப்புக்காக போலீசார் இம்மாதிரி கொலைகளை செய்யலாம் என்கிறது இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 46&வது பிரிவு.மரணதண்டனையோ ஆயுள் தண்டனையோ பெறக் கூடிய அளவுக்கு குற்றம் புரிந்த ஒரு நபரைக் கைது செய்ய முயலும் போது தற்காப்புக்காக தேவைப்பட்டால் குற்றவாளி என கருதும் நபருக்கு மரணத்தை விளைவித்தால் கூட குற்றமில்லை என்கிறது.ஆனால் சட்டம் எப்படி காவலர்களுக்கு சட்டப் பாதுகாப்பை வழங்கியிருக்கிறதோ அதே பாதுகாப்பை குற்றவாளிகளுக்கும் வழங்கியிருக்கிறது.என்கவுண்டரில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டால் அந்தக் கொலையில் தொடர்புடைய காவலர் அல்லது அதிகாரி மீது இந்திய தண்டனைச் சட்டம் 307&வது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட வேண்டும்.
அந்த அதிகாரி சான்றுச் சட்டத்தின் கீழ் தான் செய்த கொலையானது தற்காப்பின் நிமித்தமே நிகழ்த்தப்பட்டது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.இம்மாதிரி மோதல் சாவுகளை நிகழ்த்தும் காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகளோ அன்பளிப்பு பரிசுகளோ கொடுத்து ஊக்குவிக்கக் கூடாது என தேசீய மனித உரிமைகள் ஆணையம் அனைத்து மாநில அரசுகளுக்கும் வழிகாட்டும் நெறிமுறைகளையும் வழங்கியுள்ளது.

ஆனால் இம்மாதிரி வாழ்வுரிமை ரீதியிலான வழிகாட்டுதலகள் எதையும் என்கவுண்டரின் போதும் அதற்குப் பின்னரும் காவல்துறை பின்பற்றுவதில்லை என்பதுதான் குற்றச்சாட்டு.என்கவுண்டரின் தொட்டில் என்றால் அது மும்பை நகரம்தான்.அதற்கு கொஞ்சம் சளைத்ததாக இருந்தாலும் டில்லி நகரிலும் என்கவுண்டர்களுக்கு பஞ்சமில்லை.சமீபத்தில் டில்லியில் இரு வியாபாரிகளை தீவீரவாதிகள் எனச் சொல்லி சுட்டுக் கொன்ற காவல் உதவி ஆணையர் ரதி உட்பட பத்து போலீசாருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.பல மாநிலங்களிலும் சில காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள்.மும்பை நகரத்தின் காவலதிகாரியாக இருந்த பிரதீப் வர்மாவுக்கு காவல் வட்டாரத்திலும் ரௌடிகள் மத்தியிலும் வைக்கப்பட்ட செல்லப் பெயர் ‘அப்தக் 100’அதாவது நூறு என்கவுண்டர் செய்தார் என்பதால் அப்படி செல்லப் பெயர் வந்ததாம்.பிரதீப் வர்மாவின் காவல் வாழ்வை சித்தரித்து எடுக்கப்பட்டதுதான் நானாபடேகரின் ‘அப்தக் 56’ இந்தப் படத்தில் நடித்த நானா படேகருக்கு பிரதீப் வர்மா எபபடி என்கவுண்டர் செய்வது,நடந்த மோதலை எப்படி தந்திரமாக கையாள்வது என்றெல்லாம் வகுப்பெடுத்தாராம்.அப்பேர்ப்பட்ட பிரதீப் வர்மாவின் வாரிசுதான் தயாநாயக் இவர் செய்த என்கவுண்டர்களோ 83.மாதம் எட்டாயிரம் ரூபாய் ஊதியம் வாங்கும் தயாநாயக்கின் சொத்து மதிப்போ நூறு கோடி.ரௌடிக் கும்பலிடம் பணம் வாங்கிக் கொண்டு எதிர் கோஷ்டிகளை அழித்தொழிப்பதுதான் இருவரின் வேலையும் இன்று இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

2007-ல் தெஹல்கா இதழ் இந்தியா முழுக்க உள்ள என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் காவல்துறை அதிகாரிகளின் பட்டியலை வெளியிட்டிருந்தது.அதில் தமிழக காவல்துறை அதிகாரிகளின் பெயர் எதுவும் இல்லை.ஆனாலும் பெயர் சொல்லக் கூடிய என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டுகள் தமிழக காவல்துறையிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.சட்ட ரீதியாக இவர்கள் தாங்கள் செய்த மோதல் கொலைகளை நீதிமன்றத்தில் சட்டப்படி நீரூபித்திருக்க வேண்டும்.தேசீய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதல்களோ உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களோ தமிழகத்தில் பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை.
சமூகத்துக்கு ஒரு ரௌடி இடையூராக இருக்கிறார் என்று தெரிந்தால் அவரை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிப்பதுதான் நீதிமன்ற ஜனநாயகம்.உண்மையில் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன் படுத்தி ஒரு குற்றவாளி தப்பிவிடுகிறார் என்றால் ஒன்று காவல்துறையின் புலனாய்வு நியாயமாக இல்லை அல்லது காவல்துறையை விட குற்றவாளிகள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.

சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட வெள்ளைரவி மீதான வழக்குகளை விசாரிக்க தனிநீதிமன்றம் அமைக்கச் சொல்லி 1999&ல் உத்தரவிட்டது அரசு.அப்போது அவரது மீதிருந்த வழக்குகளின் எண்ணிக்கை 24.ஆனால் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டதோ 2003&ல் அதற்குள் பல வழக்குகளில் இருந்து நிரபராதி என விடுதலை ஆனார் வெள்ளைரவி.மேலும் பல வழக்குகள் அவர் மீது போடப்பட்டது.கடைசியில் எந்த ஒரு வழக்கிலும் தண்டிக்காப்படாமல் போலீஸ் மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மணல் மேடு சங்கரின் கதையோ வித்தியாசமானது.அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் போதே தான் என்கவுண்டர் செய்யப்படுவோம் என பயந்தார்.அவரது தாய் மனித உரிமை அமைப்புகளிடம் போய் முறையிட்டார் மனித உரிமை அமைப்பினர் நீதிமன்றம் சென்றனர்.மணல் மேடு சங்கரின் தாய் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.நீதிமன்றம் தமிழக அரசிடம் இது குறித்து விளக்கம் கேட்ட போது அப்படி மணல் மேடு சங்கரைக் கொல்லும் திட்டம் எதுவும் தமிழக காவல்துறைக்கு இல்லை என நீதிமன்றத்தில் சொன்னது அரசு ஆனால் அடுத்த சில வாரங்களிலேயே நீதிமன்றத்திலிருந்து சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் மணல் மேடு சங்கர் மோதலில் கொல்லப்பட்டார்.
அடுத்து எழும் கேள்வி ரௌடிகள் எந்த மாதிரி பின்னணியில் உருவாகிறர்கள்?

1993-ஆம் ஆண்டு நடந்த மும்பை குண்டு வெடிப்பில் மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராஹிம் மெமன் சகோதரர்கள் ஆகியோருக்கும் உள்ளூர் அரசியல்வாதிகளுக்கும் தொடர்புருப்பதாக சர்ச்சை எழுந்த போது.அதை விசாரிக்க முன்னாள் உள்துறை செயலாளர் என்.என்.வோரா தலைமையில் ஒரு விசாரணைக்குழுவை அமைத்தது காங்கிரஸ் அரசு.1995-ல் அந்த கமிட்டியின் அறிக்கை நாடாளுமன்றத்தில் வைத்த போது அந்த அறிக்கையின் விபரங்களைப் பார்த்து நாடே அதிர்ந்து நின்றது.உள்ளூர் அளவிலும் துறைமுக நகரங்களிலும் மிகப்பெரிய நகரங்களிலும் கள்ளச்சாரயம் சூதாட்டம் பாலியல் புரோக்கர் என வளரும் சிறு குற்றவாளிகள் பின்னர் போதைபொருள் கடத்தல் ரியல் எஸ்டேட் கந்து வட்டி என வளர்ந்து போலீஸ் அரசியல்வாதிகளின் கூட்டோடு எப்படி கோலோச்சுகிறார்க்காள்.என என வோரா கமிட்டி சுட்டிக்காட்டியது.ரௌடிகளுக்கு அரசியல்வாதிகளுக்கும் உருவாகியிருக்கும் கூட்டணியை ஒழிக்க வோரா கமிட்டி NODAL AGENCY என்கிற உயர் அதிகாரம் படைத்த அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என பரிந்துரைத்தது.ஆனால் காங்கிரஸ் பிஜேபி உடபட அனைத்து கட்சிகளுமே வோரா கமிட்டியின் பரிந்துரைகளை எதிர்த்தார்கள்.காரணம் கட்சி வேறு பாடில்லாமல் அனைத்து கட்சிகளிலும் சமூக விரோதிகள் கலந்திருந்தார்கள்.கடந்த பதினைந்து ஆண்டுகளில் தமிழகத்திலும் இந்த தாதா அரசியல் கூட்டு அனைத்து கட்சிகளிலும் வளர்ந்திருப்பது துரதிருஷ்டமான ஒன்றுதான்.தேவைக்கு ரௌடிகளை வளர்ப்பதும் அரசியல் வாதிகள்தான் வளர்த்த கடா வேண்டாத கடா ஆகி மார்பில் பாயும் போது போலீசை ஏவி அவர்களை அழித்தொழிப்பதும் அரசியல்வாதிகள்தான்.கடந்த காலங்களில் போலீஸ் மோதல்களில் கொல்லப்பட்ட நக்சல்பாரிகளைத் தவிர ரௌடிகள் அனைவருமே ஏதோ ஒரு அரசியல் கட்சியால் பாலூற்றி வளர்க்கப்பட்டவர்கள்தான்.தேர்தல் காலங்களில் தங்களின் அராஜக அரசியலுக்கு தொண்டர்களைக் காட்டிலும் இம்மாதிரி ரௌடிகளை நம்பியே இருக்கிறது பெரும்பாலான அரசியல் கட்சிகள்.பிரமுகர்கள்,அரசியல்வாதிகள்,காவல்துறை உயரதிகாரிகள்,கல்வி நிறுவன அதிபர்கள் என அனைவ்ருமே ஏதோ ஒரு ரௌடியை தங்களின் தொழிலுக்கு துணையாக வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.ஏனென்றால் ரௌடிகள் இல்லாமல் இந்த தொழில்களை இவர்களால் செய்ய முடியாத அளவுக்கு சூழல் மாசுபடுத்தப்பட்டிருக்கிறது.கிராம கூட்டுறவு வங்கிகள்,ரேஷன் கடைகள் என சிறு ராஜ்ஜியமாக உருவாகும் இம்மாதிரி அரசியல் ரௌடிகள் அரசியல் வாதிகளின் ஆசியோடும் போலீசின் துணையோடும்தான் வளருகிறார்கள் என்பதற்கு கடந்த காலங்களில் சுட்டுக் கொல்லப்பட்ட ரௌடிகளின் இறந்த கால அரசியல் தொடர்புகளை கிளரினாலே தெரியும்.
இறுதியாக அதிகார மையங்களான போலீஸ்,அரசியல்வாதிகள்,ரௌடிகள் கூட்டை ஒழிக்காமல் ரௌடியிசத்தை ஒழிக்கவே முடியாது.பல நேரங்களில் அரசியல் பழிவாங்கல் கொலைகள் கூட இந்த ரௌடிகளால் நடத்தப் பட்டதன் உச்சமாகத்தான் தமிழக அரசு அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் பாதுகாப்பை அதிகரித்திருக்கிறது.ஆனால் பிரச்சனை அதுவல்ல.ரௌடிகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதை விட அவர்கள் கிரிமினல் தாதாக்களாக உருவாகாமல் தடுப்பது எப்படி என்பதில் இனிமேலாவது நாம் கவனம் செலுத்தியாக வேண்டும்.ஏனென்றால் இந்த என்கவுண்டர்கள் தியாகங்களாக மாற்றப்பட்டதால்தான் ராதிகா செல்வி என்கிற ஒரு எம்பி தமிழகத்து கிடைத்தார்.ஆனால் சாதிச் செல்வாக்கற்ற ரௌடிகள் மரணங்கள் இவ்விதமாய் மாற வாய்ப்பில்லை.அம்மாதிரி அதிகாரமாய் மாற வாய்ப்பற்ற என்கவுண்டர்களை அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்வதுமில்லை.இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இம்மாதிரி என்கவுண்டர் கொலைகளின் எண்ணிகையை வைத்தே மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சிகள் பிரச்சனை கிளப்பக் கூடும்.தமிழக அரசு இந்த மோதல் கொலைகளுக்கு எதிராக ஏதாவது செய்தாக வேண்டும்.

6 comments:

லக்கிலுக் said...

என்கவுண்டர் குறித்த ஒரு ஹீரோயிஸ பேண்டஸி எனக்கு இருந்தது. நான் அதிர்ச்சி அடைந்த எண்கவுண்டர் வீரப்பன் எண்கவுண்டர் மட்டுமே. தங்களது இந்த கட்டுரை இப்பிரச்சினை குறித்த நிறைய மாற்றுப்பார்வையை முன்வைக்கிறது. தீவிரவாதம் எவ்வளவு ஆபத்தானதோ, அதே அளவு அரச தீவிரவாதமும் ஆபத்தானது என்பதை உணரமுடிகிறது.

Sundararajan P said...

போலிஸ் என்கவுன்டர் கொலைகளை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் 2003ம் ஆண்டிலேயே அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

இந்த அறிவுறுத்தலின்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி, தமிழக காவல்துறை தலைவருக்கும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் 08-08-2007 அன்று கடிதம் எழுதியுள்ளார்.

இதன்படி இந்த சம்பவங்கள் குறித்து கொலை வழக்கு தொடரப்பட வேண்டும். வழக்கின் முடிவில் காவல்துறை தவறிழைத்ததாக முடிவு செய்யப்பட்டால் தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது போன்று என்கவுன்டர் சம்பவங்கள் குறித்து ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தலைமைச் செயலாளருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த கடிதத்தின்படி இதுவரை இரண்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கப் பட்டிருக்க வேண்டும்.

இதுகுறித்து கேள்வி எழுப்புமாறு கடந்த சட்டமன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்புமாறு அனைத்து கட்சி உறுப்பினர்களையும் ஒரு NGO வலியுறுத்தியும் இந்த கேள்வி எழுப்பப்பட்டதாக தெரியவில்லை.

bala said...

//கன்னியாகுமரியில் தொடங்கி சென்னை வரை வாழும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ரௌடிகள் கலங்கிப் போய் கிடக்கிறார்கள்
//
அருள் எழிலன் அய்யா,

என்னது தமிழ் நாட்டில் இரண்டாயிரம் ரெளடிகள் தான் இருக்கிறார்களா?தி மு க/தி க/ம க இ க கும்பலில் மட்டும் சுமார் ரெண்டு லட்சம் ரெளடிகள் இருப்பதாக, புள்ளிவிவரங்கள் சொல்கின்றனவே அது தவறா?ஆனாலும் நம்ம ரெளடிகளுக்காக,அவர்களுடைய, வாழ்வாதாரத்துக்காக ஒரு கொள்கையோட போராட முன் வந்திருக்கிறீர்களே, உங்களை எவ்வளவு போற்றினாலும், அது போதாது, போதாது.வாழ்க உங்கள் தொண்டு.நீங்க ஏன் "தனி தமிழ் ரெளடி நாடு" கேட்டு போராடக்கூடாது?நானும், லக்கி லுக் அய்யாவும் உங்களோடு சேர்ந்து போராட்டத்துக்கு ஆதரவு தருவோமே,செய்வீர்களா?

பாலா

டி.அருள் எழிலன் said...

லக்கிலுக் மிகவும் நன்றி.சுந்தர்ராஜன் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் என்கவுண்டர் தொடர்பாக அனுப்பப்பபட்ட சுற்றரிக்கை என்பது கண்துடைப்புதான்.
பாலா பொதுப்புத்தியிலிருந்து வாந்தி எடுக்கப்படும் இம்மாதிரி கருத்துக்களுக்கு பதில் சொல்ல நேரம் இல்லை.நன்றி.

bala said...

//பொதுப்புத்தியிலிருந்து வாந்தி எடுக்கப்படும் இம்மாதிரி கருத்துக்களுக்கு பதில் சொல்ல நேரம் இல்லை.நன்றி.//


அருள் எழிலன் அய்யா,

அடேங்கப்பா, அப்படிப் பட்ட சுறு சுறுப்பின் திரு உருவமா நீங்கள்?ஆனா உங்க மூஞ்சியைப் பாத்தா அது மாறி தெரியலயே.கேவலமான பதிவுகள் போட மட்டும் நேரமிருக்கு போலிருக்கு;வாழ்க வாழ்க.

பாலா

அசுரன் said...

///
போலீஸ்,அரசியல்வாதிகள்,ரௌடிகள் கூட்டை ஒழிக்காமல் ரௌடியிசத்தை ஒழிக்கவே முடியாது.///

Well Said....

//தீவிரவாதம் எவ்வளவு ஆபத்தானதோ, அதே அளவு அரச தீவிரவாதமும் ஆபத்தானது என்பதை உணரமுடிகிறது.
//

Luckylook,

It is always அரச தீவிரவாதம் is the origin of தீவிரவாதம்....

If there exists any தீவிரவாதம் that means there exists அரச தீவிரவாதம்