அம்பேத்கர் சினிமா.



அம்பேத்கர் படம் வெளிவந்திருக்கிறது. நான் அம்பேத்கரை வாசித்ததில்லை. தலித் முரசு, நிறப்பிரிகை இதழ்களில் வந்த சில கட்டுரைகளையும் அம்பேத்கரின் சிறு வெளியீடுகளை தமிழில் வாசித்திருப்பதோடு சரி, பெரியாரை மட்டும் நீ வாசித்திருக்கிறாயா? என்று கேட்காதீர்கள் ஓரளவுக்கு வாசித்திருக்கிறேன். அந்த அளவுக்கு அம்பேத்கர் பற்றி வாசித்ததில்லை. அகன்ற நெற்றியோடும் வசீகர அழகுடைய கண்களோடும் அந்த மனிதரை கோட், சூட்டில் பார்க்கும் போது எனக்குத் தோன்றுவது இதுதான். தலித்துக்கள் என்றால் அழுக்கானவர்கள் என்ற எண்ணத்தை துடைத்தெரியவே அம்பேத்கர் அப்படி தோற்றமளிக்கிறார். தோற்றத்தில் மட்டுமல்ல தன் வாழ்வையே இந்திய ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்காக அர்ப்பணித்துக் கொண்ட மகான் அவர். இவளவுதான் அம்பேத்கரைப் பற்றி எனக்குத் தெரியும் என்கிற நிலையில் இருந்துதான் நான் அம்பேத்கர் படம் பார்க்க பாலா அழைத்த போது சென்றேன். சமீபத்தில் நான் பார்த்த படங்களிலேயே மிகச் சிறந்த படங்களுள் இதுவும் ஒன்று.

ஒரு தலித் பிறந்தது முதல் சாகும் வரை இந்து மதம் தன் மீது திணித்த இழிவை தூக்கிச் சுமக்கிறான். கடல்கடந்து கல்வி கற்றாலும், கோட் சூட் போட்டாலும், ஆங்கிலம் பேசினாலும், உயரதிகாரி ஆனாலும் அந்த இழிவு அவனை விட்டு அகலுவதில்லை. இந்து மதத்திலிருந்து மட்டுமல்ல அதை உள்வாங்கி வளர்ந்து நிற்கும் கிறிஸ்தவ மத்திற்கு மாறினால் கூட அந்த இழிவை தூக்கிச் சுமக்க வேண்டியிருக்கிறது. இந்து மதத்தில் இருந்து விலகி தன்னை இந்த சகதியில் இருந்து அறுத்துக் கொள்கிற போதே ஒரு தலித் உண்மையான விடுதலை அடைகிறான். இதைப் புரிந்து கொள்ள நாம் அண்ணலைப் படிக்க வேண்டியதில்லை பெரியாரைப் படித்தாலே போதும். ஆனால் அண்ணலின் இந்தப் படத்தைப் பார்க்கும் போது முழுமையாக இதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. கதை சொல்லும் விதம், திரைக்கதை, நடிப்பு என்று அம்பேத்கர் என்னும் ஒரு சமூக போராளியின் வாழ்வைச் சொல்லும் இந்த சினிமா இலகுவாக ரசிகனிடம் அவரை புரிய வைத்து விடுகிறது. குடும்ப வாழ்வு, லண்டன் கல்வி, வறுமை, பலவீனம் என அம்பேத்கரின் வாழ்வை மிகத் துல்லியமாக நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ஜப்பார் பட்டேல்.
இந்தப் படத்தை மொழி மாற்றம் செய்தவர்களின் அரசியல் கோளாறுகள், வழக்கம் போல சிறுபத்திரிகையாளர்கள் மொழிபெயர்க்கும் அந்நியத்தன்மை, அம்பேத்கராக நடித்திருக்கும் மம்முட்டியில் நடிப்பை உள்வாங்கி டப்பிங் பேச முடியாமை என தமிழுக்கு வந்திருக்கும் இந்தப் படத்தில் மொழி எளிமையாக கையாளப்படவில்லை. மௌனமான சிறு விசும்பல் கண்ணீரைக் கூட மூக்கைச் சீந்தி காலி செய்திருக்கிறார்கள். அழுகைக்கும் விசும்பலுக்குமான வித்தியாசம் தெரியாமல் சீரியல் தனமான டப்பிங் எரிச்சலையும் மீறி நம்மை வசீகரிப்பது அம்பேத்கர் ஆமாம் அம்பேத்கர் மட்டுமே.

தலித்துக்களுக்கு இந்துச் சமூகங்கள் இழைக்கும் கொடுமைகள் அம்பேத்கரை உருவாக்கும் விதமும், ஓரளவுக்கு ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களை விட வசதியான வாழ்வும் வாய்த்ததால் மட்டுமே இந்தியாவுக்கு அம்பேத்கர் கிடைத்தார். ''ஆடுகளைத் தான் பலிகொடுக்க முடியும் சிங்கங்களை அல்ல" என்று அம்பேத்கரின் தகப்பனார் மகனிடம் சொல்வதிலிருந்து இந்துச் சமூகங்களுக்கு எதிரான போராட்டம் துவங்குகிறது. கண்ணீரை அவமானமாக கருதிய அந்த மனிதர் தன் தலை மீது சுமத்தப்பட்டிருக்கும் பெரும் பொறுப்புகளை உணர்ந்து வாழ்ந்தார். லண்டனில் அவரது கல்விக்காகவும் பொருளாதார ஆய்வுகளுக்காகவும் அவர் படுகிற அவமானங்களை கூசாமல் எதிர்கொள்கிறார். தன் மக்களுக்காக கொண்ட கொள்கையில் அவர் உறுதியாக நிற்கிறார். வெள்ளை இன மாணவர்கள் அம்பேட்கரை இந்தியர் என்று இழிவு செய்யும் போது அதை அவர் எதிர்கொள்ளும் விதமும் அம்பேட்கரை தேசத் துரோகி என்று காங்கிரசாரும் காந்தியின் கைத்தடிகளும் தூற்றும் போது அதை எதிர்கொள்ளும் போதும் தொடரும் தனிமையில் அந்த மனிதர் கரைந்து போகாமல் தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறார். படம் முழுக்க அம்பேட்கரின் இந்த தனிமையை நாம் உணர முடியும். மனைவி நோயோடு போராடும் போது ''எனது தனிமைத் துயர் உனக்குப் புரியாது" என்கிறார்.
சேரிமக்களின் நீர் உரிமைக்காக பொதுக் குளத்தை பயன்படுத்தும் போராட்டம் அறிவிக்கும் போதும், தேர் இழுக்கும் போராட்டம் அறிவிக்கும் போதும் அரசு நிர்வாகமும், சாதி இந்துக்களும் தலித் மக்களை மட்டுமல்ல மேதை அம்பேத்கரையும் ஏமாற்றுகிறார்கள். வன்முறைக்கு பதில் வன்முறை என்று கூட அம்பேத்கர் இறங்கவில்லை. அவர் தொடர்ந்து மக்களைத் திரட்டி ஜனநாயக ரீதியான போராட்டங்களையே நடத்துகிறார். அவரும் அவரைப் பற்றிய சனக்கூட்டமும் அரசி சாதி இந்துக்களாலும் அவர்களின் அரசு நிர்வாகத்தாலும் ஏமாற்றப்படுகிறார்கள். பாகிஸ்தான் பிரிவினையை ஆதரிக்காத அம்பேத்கர் ஜின்னாவிடம் உள்ளுக்குள் இருந்து கொண்டுதான் சிறுபான்மையினர் தங்கள் உரிமைக்காக போராட வேண்டும் என்கிறார். இந்து மதத்தில் இருந்து கொண்டுதான் இந்து மதத்தை விமர்சிக்க முடியும் என்கிற தார்மீக உரிமை அளவு கோலில் சிறுபான்மை பிரச்சனையையும் அவர் அணுகியிருக்கலாம். இந்து மதத்தில் இருந்து கொண்டே தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடுகிறார். தனித் தொகுதி, விகிதாசார பிரதிநிதித்துவம், வழிபாட்டு உரிமை போன்ற விஷயங்களில் தான் நினைத்த மாதிரி எதையும் அம்பேத்கரால் இந்து மதத்தையும் காந்தியையும் மீறி செய்ய முடியவில்லை. காந்தி ஒவ்வொரு முறையும் உண்ணாவிரதத்தை ஒரு ஆயுதமாக்கி நியாயமான அரசியல் கோரிக்கைகளை மிரட்டி நிராகரிக்கிறார். காந்தி உண்ணாவிரதம் இருக்கிறார் நீங்கள் பணிந்து செல்லுங்கள் என்று வந்து வற்புறுத்துகிறவர்களிடம் " காந்திக்கு உணவு ஒரு பிரச்சனையாக இல்லாமல் இருக்கலாம் " என்று சொல்கிறார். கடைசியில் பலவீனமான மனதோடு விட்டுக் கொடுத்தும் நடந்து கொள்கிறார். மனைவி கோவிலுக்குச் செல்ல விரும்பும் போது நம்மை ஏற்றுக் கொள்ளாத கடவுள் ஒரு கடவுளா? என்று கேட்கிறார். '' நீங்க அங்க போய் பின்ன ஏன் ஆலயப் பிரவேசப் போராட்டம் நடத்துறீங்க? " என்று கேட்கும் போது "அது உரிமையை நிலை நாட்ட ? " என்கிறார். தொடர்ந்து போராடுகிறார் லட்சக்கணக்கான மக்களைத் திரட்டுகிறார். ஆனால் ஒடுக்கப்பட்ட அந்த மக்களின் கோரிக்கைகள் எல்லாம் அவருக்கு முழுமையாக நிறைவேறாத கனவாகவே இருக்கின்றன. அரசியல் ரீதியாக தொடர்ந்து தானும் தனது மக்கள் கூட்டமும் ஏமாற்றப் பட்டுக் கொண்டிருப்பதுதான் அம்பேட்கரின் தனிமையே தவிற கவலைகள் தனது சுய உணர்வுகள் பற்றியதாகவோ, சொந்தக் குடும்பம் பற்றிதாகவோ இல்லை. அரசியல் சாசனம் எழுதப்பட்ட பின்னர், இந்துச் சட்டம் நேருவால் நிராகரிக்கப்படுதலோடு அவர் விலகிக் கொள்கிறார். ஒட்டு மொத்த நிராகரிப்பிற்கான எதிர்ப்பாக அவர் பௌத்த மதத்தை தழுவிக் கொள்கிறார். தன் மீது சுமத்தப்பட்ட இழிவை போக்கிக் கொண்டதாக கூறுகிறார். மக்களையும் இழிவைப் போக்க புத்த மதத்தை தழுவுமாறு செயல்படுத்தியும் காட்டுகிறார். காந்தியின் கபட நாடகங்களில் எவ்வித சமரசமும் செய்யாமல் படம் வெளிவந்திருப்பதால் காந்தியை தலித் அரசியல் நோக்கிலும் புரிந்து கொள்ள படம் உதவும்.

இந்தியில் இன்னும் இயல்போடு இந்தப் படம் வெளிவந்திருக்கிறது. குஜராத்தி நாட்டுப்புறப்பாடலான "டோலு" ( இந்தியா டுடே வெளியிட்ட இந்திய நாட்டுப்புற பாடல் தொகுப்பில் இது உள்ளது) பாடலை மிகவும் அற்புதமாக பயன்படுத்தியிருக்கிறார்கள். எனக்கு அந்தப் பாடல் மிகவும் பிடித்தமான பாடல். தனிமையை நெருக்கமாக அந்த பாடலில் உணர முடியும். மிகவும் முக்கியமாக அம்பேட்கராக நடித்திருக்கும் மமுட்டியின் நடிப்பு. முகங்களில் ஏற்பட்ட வீக்கம், சோர்வு, கோபம், காதல் என அம்பேட்கரோடு நெருக்கமான ஒரு உணர்வை நமக்குள் ஏற்படுத்துகிறார்.

அம்பேத்கர் இறந்து ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகி விட்டது. வாழ்க்கை முழுக்க கசப்புகளை மட்டுமே பார்த்த ஒரு மனிதன் சிந்தித்த, எழுதிய, பெற்றுக் கொடுத்த அரசியல் உரிமைகள் தலித் மக்களை ஓரளவுக்கு முன்னேற்றியிருக்கிறது. ஒரு பார்ப்பனீயம் புதிய வடிவம் பெற்று நாளுக்கு நாள் பெரும்பான்மைவாதமாக தன்னை விரிவுபடுத்திக் கொண்டிருக்கும் அதே வேளை. நவீன பார்ப்பனர்களாக உருவாகிவிட்ட பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகளால் தலித் மக்களின் அந்த ஓரளவு முன்னேற்றங்களைக் கூட சகித்துக் கொள்ள முடியவில்லை. அம்பேத்கரை அவர்கள் தலித் தலைவராக முத்திரை குத்தி முடக்கப்பார்க்கிறார்கள். அல்லது கள்ள மவுனம் சாதிக்கிறார்கள். அம்பேத்கரின் பெயரைச் சொல்லி பிழைத்துக் கொண்டவர்கள் கூட இப்போது அவரைப் பற்றி பேசுவதற்கு கூசுகிறார்கள். இந்த இடத்தில்தான் இந்தப் படம் வெளிவர நீண்டகாலமாக தொடர்ந்து எழுதி வந்த திரு. வே.மதிமாறன். வழக்கறிஞர் சத்திய சந்திரன் உள்ளிட்ட பெரியார் திராவிடர் கழகத் தோழர்களின் பணியை நாம் பாராட்ட வேண்டும். படத்தை இப்போது வாங்கியிருக்கும் எடிட்டர் லெனின், அதை மக்களிடம் கொண்டு செல்லும் பொறுப்பை ஏற்றிருக்கும் தமுஎச அமைப்புற்கும் நன்றி. இந்தப் படத்தை சேரிகளிலும் தலித் குடியிருப்புகளிலும் திரையிட வேண்டும். அதை விட முக்கியமாக சாதி இந்துக்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் இந்தத் திரைப்படத்தை திரையிட வேண்டும். பொருளாதார ரீதியாகவும், இந்துத்துவ சக்திகளின் எதிர்ப்பு காரணமாகவும் இது சாத்தியமாகுமா? என்கிற கேள்வி எழலாம். ஆனால் நிச்சயமாக அதன் சாத்தியங்களை ஆராய வேண்டும்.

2 comments:

nandu said...

அம்பேத்கர் சினிமா பார்க்க ஆவலாய் உள்ளது. நீங்கலே படத்தை வெளியிட்டுஇருக்கலாம்.விமர்சனம் எரிமலையாய் வெடிக்கிறது.

Anonymous said...

நந்தா நீங்க நக்காலாக கேட்ட்கிறீங்கள் என நினைக்கிறேன். நண்பரெ எடிட்டர் லெனின் இந்தப் படத்தை வாங்கியிருக்கிறார். சென்னையில் இன்னமும் ஆல்பர்ட் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது. தியேட்டரில் போய் பாருங்கள் நண்பரே?

டி.அருள் எழிலன்.