ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, டிசம்பர் 13&ம் தேதி இந்திய பாராளுமன்றம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது. அந்தக் கொடூர நிகழ்வின் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முகம்மது அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று குரல்கள் ஒலிக்கத் துவங்கிவிட்டன. அந்தத் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பங்களோ, தூக்கில் தொங்க விட்டு தண்டிப்பதே சரி என்று ஆவேசம் பொங்க கூறுகின்றன.ஜனாதிபதியின் கைகளில் இருக்கும் கருணை மனுவில், அப்சலின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்க... இந்தியாவின் மிக முக்கியமான மனித உரிமை போராளியும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான வி.ஆர்.கிருஷ் ணய்யரை கேரளத்தின் எர்ணாகுளத் தில் இருக்கிற அவரது இல்லத்தில் சந்தித்தோம்.
முதுமையின் சுருக்கங்கள் உடம்பில் தெரிந்தாலும் மனதில் தளர்வு துளியும் இல்லை. இரண்டு பேரை கைத்துணையாக அழைத்துக்கொண்டு இப்பவும்கூட மனித உரிமை கூட்டங்களுக்கு போகி றார் கிருஷ்ணய்யர். ஒவ்வொரு புனிதனுக்கும் ஓர் இறந்தகாலம் உண்டு. ஒவ்வொரு பாவிக்கும் ஒரு வருங்காலம் உண்டு என்று நான் வழங்கிய சில தீர்ப்புகளில் குறிப்பிட்டிருக்கிறேன். இதைத்தான் இந்த தருணத்தில் நினைவூட்ட விரும்புகிறேன் என்றபடி நிறுத்தி நிதானமாகப் பேசுகிறார் கிருஷ்ணய்யர். நானும் நீதிபதியாக இருந்தவன். சுதந்திர இந்தியாவில் மக்களால் ஓட்டுச்சீட்டின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கேரள அமைச்சரவையில் சட்ட அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்தவன் என்கிற முறையில் சொல்கிறேன். நாமெல்லாம் சாதாரண மனிதர்கள். எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் தவறிழைக்கவும் பாரபட்சமான தண்டனை வழங்கவும் வாய்ப்பிருக்கிறது. ஒரு கொலைக்கு தண்டனையாக அரசு இன்னொரு கொலையை நிகழ்த்துவது மகா பாவம்.
1957 - ல் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட இந்தியாவின் முதல் கேரள அர சாங்கத்தில் ஈ.எம்.எஸ்&ன் தலைமையிலான அரசாங்கத்தில் நான் உள்துறை அமைச்சராக இருந்தபோது என்னிடம் சி.ஏ.பாலன் போட்ட மனு என்னிடம் வந்தது. அவருக்கு உச்சநீதிமன்றம் மரணதண்டனையை உறுதி செய் திருந்தது. ஜனாதிபதி அவருடைய கருணை மனுவை நிராகரித்திருந்தார். உயிர் வாழ்வதற்கான அவரது கோரிக்கை என்னிடம் வந்தபோது நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அவருக்கு மரண தண்டனையில் இருந்து விடுதலை வாங்கி கொடுக்க முடிந்தது. அதே மாதிரி உச்சநீதிமன்றத்தில் என்னிடம் வந்த எடிகா அன்னம்மா வின்வழக்கையும் நினைவுபடுத்த விரும்புகிறேன். இரண்டு இளம் பெண்கள் ஒரு ஆணை காதலித்தார்கள். அதில் எடிகாவும் ஒருத்தி. தன்னைவிட மற்றவளிடம் அவன் நெருக்கமாக இருப்பதாக எடிகா பொறாமைகொண்டாள். எடிகா சமயம் பார்த்து அந்த இன்னொ ருத்தியையும் அவளது குழந்தையையும் கொன்று போட்டாள்.
எடிகாவுக்கு அப்போது வயது 21 அல்லது 22 தான் இருக்கும். அவளுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்ய, வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பாயத்தில் என்னோடு நீதிபதி சர்க்காரியாவும் இருந்தார். நான் அவரிடம், இந்த இளம் பெண்னை நாம் தூக்கிலிடகூடாது என்றேன். கடவுள் தந்த உயிரைப் பறிக்க மனிதனுக்கு உரிமை இல்லை. உயிரைப் பறிக்கும் உரிமை அரசுக்கும் கிடையாது என்று காந்தி சொன்னதை அந்த தீர்ப்பில் குறிப்பிட்டேன். மரண தண்டனையில் இருந்து தப்பிய பாலனும் சரி, எடிகாவும் சரி... அதன் பின்னர் பயம் தொலைந்து கொலை வெறியோடு அலையவில்லையே!
உலகின் நூற்றுக் கணக்கான நாடுகள் மரண தண்டனையை ஒழித்துள்ளன. ராஜீவ் காந்தியைவிட வஞ்சகமான முறையில் மவுண்ட் பேட்டன் பிரபு கொல்லப்பட்டார். ஆனால், அவரைக் கொன்ற வருக்கு பிரிட்டன் மரண தண்டனை வழங்கவில்லை. கொலை என்பது ஒருவன் ஆத்திரத்தில் தன்னை இழக்கிற கணத்தில், அவன் அறவே வேறு மனிதனாகி விடுகிற சூழ்நிலையில் நடப்பது. அப்போது எந்தத் தண்டனையைப் பற்றியும் யோசித்துவிட்டு அந்தக் கொடுமையை அவன் செய்வதில்லை. மூளைச் சலவை செய்யப்பட்டு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் இளைஞர் களுக்கும் இது பொருந்தும். நான் மரண தண்டனைதான் வேண்டாம் என்று சொல்கிறேனே தவிர, குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளே வேண்டாம் என்று சொல்ல வில்லை. ஏனென்றால் நானும் இந்த நாட்டின் சட்டத்தின் ஆட்சியை ஏற்று வாழும் குடிமகன்தான். மரண தண்ட னையோ, கண்ணுக்கு கண். பல்லுக்கு பல் என்ற பிற்போக் குத்தனம் கொண்டது!
அப்சலின் மரண தண்ட னைக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் தேசத்துரோகிகள் என்று ஒரு சாரார் கூறுகிறார்களே?
நீதிமன்றம் விதித்த தண்டனையால் ஒரு மனித உயிர் பறிக்கப்படுகின்ற ஒவ்வொரு அதிகாலையிலும் மனித உரிமையின் கொடி அரைக் கம்பத்தில் பறக்கிறது என்று ஒரு தீர்ப்பில் எழுதி னேன். அதைத்தான் இப்போதும் கூறுகிறேன். காந்தியடிகள் இன்று உயிரோடு இருந்திருந்தால் அப்சல் மட்டுமல்ல யாரையுமே தூக்கிலிட அனுமதித்திருக்க மாட்டார். அவர் மீது அப்சலுக்கோ, தீவிரவாதிகளுக்கோ ஆதரவானவர் என்று முத்திரை குத்த முடியுமா?
நீங்களெல்லாம் சொல்கிற அளவுக்கு, மரண தண்டனைக்கு எதிரான குரல்கள் மக்களிடமிருந்து எழவில்லையே? மக்களின் மனநிலை வேறாக அல்லவா இருக்கிறது?
மக்களிடம் மரண தண்டனைக்கு ஆதரவான சிந்தனைப் போக்கு இருக்கிறது என்பதற்காக நானும் அதை ஆதரிக்க முடியாது. எல்லா நேரமும் மக்கள் மிக நியாயமாக யோசிப்பார்கள் என்றோ நல்ல தீர்ப்பையே கொடுப் பார்கள் என்றோ எப்படிச் சொல்ல முடியும்? மக்களை மந்தைகளாக நினைத்து ஏமாற்றப் பார்க்கிற அரசியல் தலைவர்கள் வேண்டுமென்றால் மக்களின் இந்தக் குறிப்பிட்ட கருத்துடன் பின் செல்லட்டும். நான் மக்களுக்கு நல்ல மேய்ப்பனாக இருக்க விரும்புகிறேன். நான் சொல்வதெல்லாம் இதுதான்... அன்பை பளிங்கில் பதித்திடுங்கள்... காயங்களை தூசியைப்போல துடைத்திடுங்கள் என்கிற பாரசீக பழமொழியை நினைவில்கொள்வோம். ஏனென்றால் அன்பு எல்லாவற்றையும் பெற்றுத் தரும். சமாதானத்தையும் நிம்மதியையும் தரும் என்றார் உருக்கமாக!
நன்றி- ஆனந்தவிகடன்,
25- 10- 2006
ஒரு கொலைக்கு தண்டனை இன்னொரு கொலையா? - நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் நேர்காணல்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment