சென்னைக்கு வயது -372....கபாலிக்கு?



தமிழகத்தின் வேறெந்த நகரங்களையும் விட எனக்குப் பிடித்த நகரம் சென்னை. இந்த சுதந்திரமும் புதிய முகங்களும் ஊரில் கிடைக்க வாய்ப்பில்லை. திருமணமான 2006- ல் ஒரு வீடு வாடகைக்கு எடுக்க வளசரவாக்கம் போனேன். இரண்டாயிரம் வாடகையில் ஒரு வீட்டைப் பேசி டோக்கன் அட்வான்ஸ் கொடுத்து விட்டேன். நீலாவும் பார்த்து விடட்டும் என்று அவளை அழைத்து வந்து ஓனருடன் பேசிக் கொண்டிருந்த போது..........எதுக்கோ நீலா என்னிடம் ..... இயேசுவே.........என்றாள். அடிக்கடி இப்படித்தான் இயேசுவே.....கர்த்தாவே.... என்று நீலா சொல்வார். இவர் இயேசுவே என்றதும்......ஓனர் ஓடி வந்து ''சார் நீங்க கிறிஸ்டியனா? என்றார். நான் ஆமா என்றேன். சாரி சார் நாங்க கிறிஸ்டியன்சுக்கோ, முஸ்லீம்சுக்கோ வீடு கொடுக்கமாட்டோம் என்றார்.......எனக்கும் நீலாவுக்கும் ஒரே சண்டை ஏண்டி வாயை வெச்சுட்டு சும்மா இருக்க மாட்டியா? அங்க வந்து இயேசுவோ....அல்லாவே... ண்ணுக்கிட்டு இப்போ இயேசு வந்தா? வீடு பார்த்துக் கொடுப்பார் என்று சண்டை போட்டு ஒரு டப்பா வீட்டில் குடியேறினோம். அந்த வீட்டில் நான்குமாதம் இருவரும் வாழ்ந்தோம். மழைக்காலத்தில் வெள்ளம் வந்ததும் அங்கிருந்து வெளியேறி எர்ணாவூர் சென்றோம்............சுமார் இரண்டரை வருடம் என்னால் சென்னைக்குள் பொருளாதாரம் காரணமாக எட்டிப்பார்க்கக் கூட முடியவில்லை.

இப்போ ஒப்பீட்டளவில் ஒரு சின்ன ஆனால் நல்ல வீட்டில் இருக்கிறோம். பொன்னிலா பள்ளிக்குப் போகிறாள். இன்னும் எத்தனை பேர் வந்தாலும் அத்தனை பேரையும் உண்டு செரித்து விட்டு எதுவுமே தெரியாதது போல இருக்கிறது சென்னை. திருமணத்திற்கு முன்னர் என் அறை ஒரு குட்டி திரையரங்கு மாதிரி இருக்கும் சுமார் 300 உலக சினிமாக்கள் என்னிடம் இருந்தது. இருக்கிறது. அஜயன்பாலா, பாண்டியராஜன். செழியன், ராஜுமுருகன். இன்னும் நிறைய நண்பர்கள் (நினைவில் இல்லை) எல்லோரும் சினிமா பார்க்க வருவார்கள், நான் கேட்டால் கொடுக்க மாட்டேன் என்று எடுத்துச் செல்கிறவர்களும் உண்டு. ஒரு நாள் விகடன் அலுவலகத்தில் லேட்டாகி விட்டது. இரவு 12 மணிக்கு வருகிறேன். ஹவுசிங் போர்டில் நுழையும் போதே எங்கும் கரண்ட் இல்லை.எங்கும் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. மிக வேகமாக அறைக்கு வந்தால் கதவு பாதி திறந்திருந்தது. உள்ளே வெளிச்சம், அந்த வெளிச்சம் வருவதற்கான எந்த நியாயங்களும் இல்லை மெழுகுவர்த்தியோ, விளக்குகளோக் கூட அறையில் இல்லை. ராஜுமுருகன் அப்படி எல்லாம் வாங்கி ஏற்றுகிற அளவுக்கான உழைப்பாளி இல்லை. உள்ளே சென்றேன் வெளிச்சம் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தேன்............அறையெங்கும் பரவியிருந்த பாதி வெளிச்சத்தில் இரண்டு உருவங்கள் நடு வீடாய் சம்மணமிட்டிருந்தது. ராஜுமுருகன், ராகேஷ், அந்தப் பாவிகள் இரண்டு பேரும் கேஸ் அடுப்பின் இரண்டு ஸ்டீம்களையும் எரியவிட்டு அந்த வெளிச்சத்தில் காரியத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தார்கள். "ஏண்டா நாயே ஸ்டவ் வெடிச்சா என்னடா பண்ணுவே...என்றால் சாரி சாரி மச்சான்........நீயும் வாடா என்று அழைக்கிறான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்................... சென்னையில் துன்பமாகவும், இன்பாகவும் எத்தனையோ அனுபவங்கள் பசித்தால் ஏதோ ஒரு திருமண மண்டபத்தில் சென்று உண்டு விட முடியும்.....இப்போ முடியுமா? என்று தெரியவில்லை.

சென்னைக்கு 372 வயதாகி விட்டதாக அரசு சொல்கிறது. கேசவநாயக்கர் கொடுத்த இடத்தில் உருவான சென்னைப்பட்டினம் என்று அரசு சொல்லி அதிலிருந்து சென்னை வரலாற்றை மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, எழும்பூர் என்று அடையாளப்படுத்தி ஒரு வார விழாவாக கொண்டாட இருக்கிறது. இன்றைய சென்னையின் முகம் நாம் அல்ல. இப்போதுள்ள சென்னைக்கு நானும் நீங்களும் தேவையும் இல்லை. பத்து அருள் எழிலன் வெளியேறிச் செல்வதையோ, ஒரு பதினைந்து ரா,கண்ணனும், ராஜுமுருகனும், அஜயனும், பாரதியும், வருவது பற்றியோ போவது பற்றியோ எந்தக் கவலைகளும் அச்சங்களும் இல்லை.ஏனென்றால் நகரம் என்னவோ இவர்களுடையதுதான் ஆனால் ஆட்சி இவர்களிடம் இல்லையே.... இந்த இடத்தில் சென்னைக்கு ஏன் வந்தோம் என்று சிந்திக்கத் துவங்கினால் அதை யாராவது தனியாக எழுதாலாம். விரிவாக யோசித்தீர்கள் என்றால் ஊருக்கே திரும்பிப் போகும் முடிவை எடுக்கத் தோன்றும் ஆனால் சென்னைக்கு முன்னால் காயடிக்கப்பட்டது நமது கிராமங்கள் என்பால் சென்னையே எல்லாவிதத்திலும் பெட்டர் என்ற முடிவுக்கு வரலாம்.

இந்தியாவின் நான்காவது பெரிய நகரான டெட்ராய்ட் சென்னை கோடீஸ்வரர்களுடைய நகரமாக மாற்றியமைக்கப்பட்டு விட்டது. வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் பார்ப்பனர்கள் மயிலாப்பூர் பார்ப்பனர்கள், எழும்பூர் பார்ப்பனர்கள் என்று இரண்டு பிரிவாக செயல்பட்டதாகச் சொல்வார்கள். பின்னர் நீதிக்கட்சி வந்த பின் பார்ப்பனரல்லாத உயர் சாதிகளின் அதிகாரம் பலப்படுகிறது. இன்று வரை அதன் படிப்படியான வளர்ச்சியை நாம் சென்னையில் காண முடியும். ஆனால் சென்னை ஒரு மீனவப்பட்டினம். கிராமப்புறங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கூலிகள் வந்து குவிந்த இடம். துறைமுகம் உருவாக்கப்பட்ட பின்னர் வட சென்னை உதிரிகளின் இடமாக உருவானது. புவியியல் ரீதியாகவே வட சென்னை கடுமையாகப் பாதிக்கப்பட்டது, 100 ஆண்டுகளுக்கு முன்னர் மெரீனா பீச் என்ற ஒன்றே இல்லை. மிக நீண்ட மெரீனா மணற்பரப்பு உருவானது இந்த 100 ஆண்டுகளில்தான். ஆனால் மெரீனா உருவாக உருவாக காசிமேடு, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் கடற்பகுதிகளில் உள்ள பூர்வகுடி மீனவர்கள் கடல் அரிப்பு காரணமாக வெளியேற வேண்டிய நிலை எண்ணூரில் இரு கிராமமே கடலுக்குள் சென்று விட்டது. அன்றிலிருந்துதான் சென்னை பூர்வகுடிகள் அழிப்புத் தொடங்கி இன்று அது முடியும் தருவாயில் இருக்கிறது.

புவியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சென்னையின் பூர்வகுடிகள் பாதிக்கப்பட்டார்கள் வளர்ச்சியில் பெயரால், சுத்தத்தின் பெயரால், எழில் மிகு சென்னையின் பெயரால் நவீன அடுக்குமாடி குடியிருப்புகளின் பெயரால் இது அரங்கேறிக் கொண்டிருக்கிறது. சென்னைண்ணா என்ன? என்றால் ''இஸ்கூலீ......அப்பாலிக்கா.......நாஸ்டா....""இப்படியான எளிய மக்களின் வழக்குதான் நினைவுக்கு வரும் இல்லையா? ஆனால் சென்னை என்றால் இப்போது இந்த மொழி அடையாளாங்களைச் சொல்வார்களா? கபாலி இன்று நகைச்சுவை ஜோக் எழுத்தாளர்களுக்கு மட்டுமே பயன்படுகிறான். இவர்களின் நகைச்சுவையில் கபாலி ரௌடி, பிக்பாக்கெட்,சாராய வியாபாரி, கஞ்சா விற்பவன், இதுதான் இவர்கள் அறிந்த கபாலி............நான் அறிந்த கபாலிகள் வேறு................

எம்.ஜீ.ஆர் சமாதி, அண்ணா சமாதி, தலைமைச் செயலகம் என்றாகிப் போனது. எம்.ஜீ.ஆர் மெரீனாவில் அழகு கெடுகிறது என்று நான்கு மீனவர்களைச் சுட்டுக் கொன்றார். அன்றைக்கு அந்த நான்கு மீனவர்களின் பிணங்களையும் வைத்து சரியான எம்ஜீஆருக்கு எதிராக ஆட்டம் காட்டினார் கருணாநிதி. ''ஆழ்பவரே உங்கள் ஆட்சி முறைகளோ அதிலும் மோசமாய் நாறும்" என்று பாடினார் இன்குலாப். என்ன நடந்தது? இன்றைக்கு கருணாநிதி ஆட்சியில் சுமார் முப்பதாயிரம் மக்கள் சென்னையை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். பத்து வருடங்களுக்கு முன்னர் நீங்கள் பார்த்த குடிசைப் பகுதிகளை நினைவுபடுத்தி இப்போது சென்று பாருங்கள் அது எதுவுமே இருக்காது. அரசு நிறுவனங்களோ அரசுக் கட்டிடமோ அங்கு இல்லை. எல்லாம் அரசியல் வாரிசுகள், ஊரில் இருந்து வந்த ராஜராஜசோழன்களும், ராஜேந்திர சோழன்களும் எடுத்துக் கொண்டார்கள். ஊரில் இவன் என்ன மதிப்பீடுகளோடு வாழ்ந்தானோ அதே நிலபுரபுத்துவ மதிப்பீடுகளை சென்னைக்குப் பொறுத்தினான். அந்த மதிப்பீடுகள்தான் முஸ்லீம்களுக்கு, தலித்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கு வீடு கொடுக்க மறுக்கிறது. சென்னை மாறியிருக்கிறதே தவிற குடியேறியவர்களின் பூர்ஷுவாத்தனங்கள் மாறவில்லை. இந்த மாற்றங்கள் அடித்தட்டு மக்களின் ரத்தங்களின் மீது நடந்தேறியுள்ளது. அந்த மாற்றங்களுக்கு ஏற்பவே நகரம் தன் நெகிழ்ச்சியான தன்மையைத் தொலைத்துக் கொண்டிருக்கிறது.
பிச்சைக்காரர்கள். வீடற்றவர்கள், ஓட்டுரிமை இல்லாதவர்களை எளிதில் கையாளவும் ஓட்டுரிமை உள்ளவர்களைத் தந்திரமாகக் கையாளவும் தெரிந்து வைத்திருக்கிறார்கள் நமது ஆட்சியாளர்கள். ஆக மொத்தம் பச்சைத் தமிழர்கள் சென்னையை ஒரு அழகான பண்ணைக் கிராமமாக மாற்றி விட்டார்கள். டூ வீலரே இல்லாமல் இருந்த போது நினைத்த இடத்திற்கு சென்று வந்த வசதி இரு சக்கர வாகன வசதி வந்து விட்ட இன்று வாய்க்கவில்லை. நெடும்பாலங்கள், அல்லது சிறுபாலங்கள் சென்னை டிராபிக்கை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றி விட்டிருக்கிறது.

கபாலிகளின் வரலாறு சென்னையிலும் இல்லை அவர்கள் தூக்கி வீசப்பட்ட செம்மஞ்சேரியிலும் இல்லை..........ஆக சென்னை மாறிக் கொண்டிருக்கிறது நமக்குப் பிடித்த எளிய சென்னை மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. மவுண்ட்ரோட்டில் ஏர்டெல் நிறுவனம் சிங்கங்களைக் காப்பாற்றக் கோரி பிரமாண்ட பிளெக்ஸ் போர்டுகளை வைத்துள்ளது...... பாதிரியார் ஜெகத் கஸ்பர் ராஜின் தமிழ் மையமோ 'நீங்கள் ஓடினால் இவர்களின் வாழ்வில் ஒழியேற்றப்படும்" என்று ஒரு ஏழையின் படத்தை நம் முகத்தின் முன்னே கொண்டு வந்து கொண்டு வந்து காட்டுகிறார். பிளெக்ஸ் போர்டுகளிலும், ஆளுயர விளம்பரங்களிலும் நமது ஆண்டைகள் நமக்கு இரக்கத்தையும் கருணையையும் கற்றுக் கொடுக்கிறார்கள். ஏழைகளைக் கண்டு இரக்கம் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள்.சென்னைக்கு வெளியே கபாலி உழைக்க வழியில்லாமல் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறான். தண்ணீர் வாழ வேண்டிய மீனை நிலத்திலும், நிலத்தில் வாழ வேண்டிய முயலை தண்ணீரிலும் வளர்க்கிறார்கள் நமது எஜமானர்கள்.

4 comments:

cartoonist bala said...

நல்ல கட்டுரை.

தேவன் மாயம் said...

இந்த இடத்தில் சென்னைக்கு ஏன் வந்தோம் என்று சிந்திக்கத் துவங்கினால் அதை யாராவது தனியாக எழுதாலாம். விரிவாக யோசித்தீர்கள் என்றால் ஊருக்கே திரும்பிப் போகும் முடிவை எடுக்கத் தோன்றும் ஆனால் சென்னைக்கு முன்னால் காயடிக்கப்பட்டது நமது கிராமங்கள் என்பால் சென்னையே எல்லாவிதத்திலும் பெட்டர் என்ற முடிவுக்கு வரலாம். //


உண்ர்ச்சிகரமான கட்டுரை !

தேவன் மாயம் said...

இத்தகைய சோகங்கள் தொட்ர்ந்து கொண்டுதான் உள்ளன. மனம் வருந்துகிறேன்!

Anonymous said...

தேவன் மயம்/ “இல்லை அதை ஒவ்வொருவருமே எழுதலாம் மிகவும் சுவராஸ்யமாக இருக்கும். ”