இந்தியா பேரினவாதத்தின் ராஜாவா?



டி.அருள் எழிலன்.

‘ஏன் மகனே தூக்கமில்லாமல் தவிக்கிறாய்?

‘‘இந்து மகா சமுத்திரமும் ஈழத் தமிழரும் என்னை நெருக்கும் போது நான் எப்படியம்மா நிம்மதியாக நித்திரை கொள்வேன்’’

சிங்கள மகாகாவியத்தின் நயகனான துட்டகைமுனு தூக்கமில்லாமல் தவித்த ஒரு இரவில் அவனது தாய் கேட்ட கேள்விக்கு அவன் சொன்ன பதிலாக மகாவம்சம் இந்த உறையாடலை நிகழ்த்துகிறது. சிங்களர்களின் காவிய நாயகன் துட்டகைமுனுவுக்கு மட்டுமல்ல இலங்கைத் தீவில் வசிக்கும் சகல மக்களையுமே இன்று இந்து மகாச் சமுத்திரம் துரத்திக் கொண்டிருக்கிறது. எழுபதாண்டுகால இனப் பிரச்சனை இன்னும் தீர்க்கப்படாமல் இழுபட இந்து மகாச் சமுத்திரமும் அதை ஆதிக்கம் செய்ய முனையும் ஏகாதிபத்திய நாடுகளுமே காரணம் என்பதை காலம் இந்த இருபது ஆண்டுகளில் நிரூபித்திருக்கிறது. முன்னர் அமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்டதற்குப் பிறகு இன்று இந்தியா இந்து மகாச் சமுத்திரத்தில் தன் நலனையும் பேணி அமெரிககவின் நலனையும் பேணுகிறது என்ற குற்றச்சாட்டு பல தரப்பாலும் முன்வைக்கப்படும் சூழலில் அப்படி இந்து மகாச் சமுத்திரத்தில் என்னதான் இருக்கிறது? உலகின் வேறு எந்த கடற்பிராந்தியமும் இன்று இவளவு மோசமான போர் பதட்டத்துடன் காணப்படுமா? என்று தெரியவில்லை. யுத்தங்கள், சுரண்டல் வர்த்தகங்கள் என ஆதிக்கக்கனவின் விருட்சமாக இன்று மாறி இருக்கிறது இந்து மகாச் சமுத்திரம். ஆப்ரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, அன்டார்டிக்கா ஆகிய நான்கு கண்டங்களுக்கிடையில் பரந்து விரிந்து கிடக்கும் இந்துச் சமுத்திரம் 28,350,000 சதுரமைல் ( இன்று அன்டார்டிக்காவின் பனிப் பாறைகள் வெகுவேகமாக உருகுவதால இந்து மகாச் சமுத்திரத்தின் நீர்மட்டம் வெகு வேகமாக உயர்ந்து வருகிறது)பரப்பைக் கொண்டது. மூன்று கண்டங்களிலும் 47 நாடுகள் இந்து மகாச்சமுத்திரத்தை அண்டிய பிராந்திய நாடுகளாக அமைந்துள்ளன. இதில் 36 நாடுகள் இந்துச் சமுத்திரத்தின் கரையோர நாடுகள். 11 நாடுகள் இந்துச் சமுத்திரத்தின் இயர்க்கை, செயர்க்கை துறைமுக (Hinter Land) பின்னணி கொண்ட நாடுகளாக உள்ளன.

இந்து சமுத்திரம் அய்ரோப்பிய, அமெரிக்க, மேற்குலக, நாடுகளை வர்த்தக ரீதியாக பாரசீகத்துடன் இணைக்கும் ஒரு அதி முக்கிய பகுதியாகவும் இருந்து வருகிறது. உலக அளவில் ஐந்து புவியியல் அரசியல் பிரதேசங்களை உள்ளடக்கி ஒன்றோடு ஒன்றை தொடர்பு படுத்துகிறது. கிழக்கு ஆப்ரிக்கப் பிராந்தியம், தென் மேற்காசிய பிராந்தியம், தென்னாசியப் பிராந்தியம், தென்கிழக்காசியப் பிராந்தியம், அஸ்திரேலியப் பிராந்தியம் என பெரும் வளங்களை கொட்டி வைத்திருக்கும் இந்தப் பிராந்தியம் ஏகாதிபத்திய சுரண்டல் காரர்களின் கூடாரமாக இப்போதும் எப்போதும் இருந்தே வருகிறது. உலக அளவிலான பெட்ரோலிய இருப்பில் 55% கொண்டிருக்கும் சவுதி, குவைத், ஈரான் போன்ற நாடுகளும் இந்த இந்துச் சமுத்திரத்தை அண்டியே இருகின்றன. பாரசீக வளைகுடாக்கள் காஸ்டிலியான பெட்ரோலியத்தின் இருப்பிடம் என்றால் தென்கிழக்காசிய நாடுகளோ அபூர்வ கனிமங்களின் கிடங்காக இருக்கிறது. தகரம், செம்பு, ஈயம் போன்றவை தென் கிழக்கிலும் தென் ஆப்ரிக்காவிலும் கிடைக்க இன்றைய அணு ஆயுதப் போட்டியின் அவசியத் தேவையான யுரேனியமோ இந்தியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் பெருமளவில் கொட்டிக்கிடக்கிறது. செம்புவுக்கு ஷாம்பியாவும் ஈயத்திற்கு ஆஸ்திரேலியாவும், யுரேனியத்துக்கு இந்தியாவும், பெட்ரோலுக்கு வளைகுடாவும், தகரத்திற்கு மலேசியாவும் இருக்க ஒட்டு மொத்தமாக இந்த வளங்கள் அனைத்தையும் அள்ளிச் செல்ல அரிய வாய்ப்பாக இந்துச் சமுத்திரமும் இருக்கும் போது அதை நாடு பிடிக்க வந்த வெள்ளை ஆக்ரமிப்பாளர்கள் விட்டு விடுவார்களா? என்ன?

இரண்டாம் உலகப் போருக்குப் பின் அமரிக்காவின் தலைமையில் NATO என்கிற பெயரில் வலதுசாரி நாடுகளும் சோவியத் யூனியனின் தலைமையில் WARSAW என்னும் அமைப்பின் கீழ் நாடுகளும் அணிசேர்ந்த போது அமெரிக்கா, சோவியத் யூனியன் என இரண்டு வல்லரசுகளுமே இந்து மகாச் சமுத்திரத்தை தங்களின் நோக்கங்களுக்காக பயன் படுத்திக் கொண்டன. அமெரிக்காவின் ராணுவ ரீதியான போர் வெறிக் கொள்கை இந்துச் சமுத்திரத்தை ஆக்ரமித்த போது அது சோவியத் யூனியனின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியது. சோவியத் யூனியனும் இந்துச் சமுத்திர பிராந்தியத்தில் தனக்கும் தன் கூட்டாளிகளுக்கும் எழுந்துள்ள அச்சுறுத்தலை எதிர் கொள்ள நிர்பந்தத்திற்கு ஆளானது.

அமைப்புகள் அறிகைகள் மாநாடுகள் என்னும் பெயரில் தென்கிழக்கையும் மத்தியக் கிழக்கையும் சுரண்டுகிற அமெரிக்காவின் சுரண்டப் பொருளாதார நலனுக்கு மேற்குலக நாடுகள் துணைபோயின மூன்றாம் உலக நாடுகளோட் பலியாகின.அமெரிக்கா 1954 செப்டம்பர் எட்டாம் தேதி ஆஸ்திரேலியா,பிரிட்டன், பிரான்ஸ், நியூசிலாந்து, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, போன்ற நாடுகளை ஒருங்கிணைத்து சியாட்டோ(CEATO) என்ற கூட்டமைப்பை உருவாக்கியது. சியாட்டோ 1961-ல் "ANZUS" அன்சுஸ் என்ற கூட்டமைப்பாக விரிவு பெற்றது. பின்னர் துருக்கியும் ஈராக்கும் செய்து கொண்ட பாக்தாத் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சென்டோ ""SENTO" உருவானது இதில் அமெரிக்கா பிரிட்டன் உட்பட எல்லா நாடுகளும் இணைத்துக் கொள்ளப்பட்டன. அமெரிக்காவின் போர் வெறிக்கும் பிரிட்டனின் சுரண்டல் வர்த்தகத்திற்கும் வழி அமைத்துக் கொடுக்கும் விதமாக தேச நலனின் பெயரால் இத்தனை அமைப்புகள் உருவாக்கப்பட்டன. ஒப்பந்தங்களில் கையொப்பம் இட்ட இந்து சமுத்திரத்தை ஒட்டிய நாடுகளில் அமெரிக்க பிரிட்டன் படைகளின் ராணுவ தளங்கள் அமைக்கபட்டன.அமெரிக்கா தன் ராணுவ தளத்தை மிக வலுவாக ஆஸ்திரேலியாவில் அமைத்தது 1968&ல் இந்துச் சமுத்திரத்தில் ஏவுகணைச் சோதனையையும் நடத்தியது. இதே காலக் கட்டத்தில் பிரிட்டனின் காலனிப் பகுதியாக இருந்த டியாகோ கார்சியா(Diego Garcia ) தீவில் பிரிட்டனும் தன் ராணுவ இராணுவத் தளத்தை நிறுவி இந்து மகாச் சமுத்திர பிராந்தியத்தை பதட்டத்திற்குள்ளாக்கியது.இன்றும் இத்தீவு பிரிட்டனால் உரிமை கொண்டாடப்பட்டு வருகிறது.

அமெரிக்க, பிரிட்டனின் ராணுவ பலங்கள் இந்து மகாச் சமுத்திரத்தில் அதிகரிக்க அதிகரிக்க சோவியத் யூனியனோ தென்மேற்காசியாவில் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கியது. 1958&ல் ஈராக்கில் ஏற்பட்ட புரட்சி சோவியத் யூனியன் இந்து மகாச் சமுத்திரத்தில் காலூன்ற ஒரு வாய்ப்பாக கிடைத்தது. செனட்டோ கூட்டமைப்பில் இருந்து ஈராக் வெளியேற அதை சோவியத் ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டது. 1968&ல் ஏமன் பிரிட்டனிடமிருந்து விடுதலையடைந்த போது ஏமனில் பிரிட்டனின் பலம் குறைந்தது. வல்லரசாதிக்கப் போட்டிகள், ராணுவ மேலாதிக்கங்கள், இயர்க்கை வளங்களின் கொள்ளை இடுதல் என ஏதோ ஒருவகையில் எப்போதும் இந்து மகாச்சமுத்திரம் அமெரிக்காவின் வர்த்தக வலையமாகவே இருந்து வந்திருக்கிறது. வர்த்தக நோக்கம் கொண்ட, ராணுவ நோக்கம் கொண்ட இத்தகைய ஏகாதிபத்திய ஆக்ரமிப்புகள் எப்போதும் இந்த பிராந்தியத்தை போர் பதட்டத்துடனே வைத்திருக்கிறது.இந்த சுரண்டல் நோக்கத்தினால் ஆசியா, ஆப்ரிக்கா நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் என பெரும்பதட்டத்தில் மூழ்கியதோடு இந்த நாடுகளில் சுயமான திடமான நிரந்தர பொருளாதார வளர்ச்சியை மேற்குலகம் மட்டுபடுத்தி வந்திருக்கிறது. வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரத்தில் மூலதனம் ஏது மற்ற மேற்குலகம் இந்த நாடுகளைச் சுரண்டியே பல நூற்றாண்டுகளாய் தின்று கொழித்தது.

இம்மாதிரி சூழலில்தான் இந்து மகாச் சமுத்திரத்தில் முக்கியமான பாத்திரத்தை வகிக்கும் இந்தியாவின் நோக்கமும் அதன் பிராந்திய நலன் என்னும் பெயரில் இந்தியா அரங்கேற்றிக் கொண்டிருக்கும் வர்த்தக நோக்கமும் இன்று ஆழ்ந்து கவனிக்க வேண்டியவை. சுதந்திர இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களாக இருந்த ஜவஹர்லால் நேருவும், கிருஷ்ணமேனனும் குடியேற்றவாத எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிறவாத எதிர்ப்பு, இனவாத எதிர்ப்பு, தேசீய விடுதலைப் போராட்டங்களை அங்கீகரித்தல் என்னும் கொள்கைகளை ஏட்டளவில் உருவாக்கி வைத்தனர். இதனூடாக இந்தியா அணிசேராக் கொள்கையை தங்களின் அயலுறவுக் கொள்கையாகக் கொண்டிருந்தது. எல்லோருக்கும் நல்லப் பிள்ளை என்கிற மாதிரியான இவ்வகைக் கொள்கைக்கு உலகில் எவ்வித முக்கியத்துவமும் இல்லாமல் போனதோடு இந்தியா அந்த கொள்கைக்கு உண்மையாக எப்போதும் இருந்ததும் இல்லை.

1962-ல் சீனா இந்தியா மீது படையெடுத்த போது அமெரிக்கா சீனாவை ஆதரித்து நின்றது. பின்னடைவைச் சந்தித்த இந்தியா சோவியத் யூனியனைச் சார்ந்திருந்தது.சீனாவின் அமெரிக்கச் சார்புக் கொள்கையும் திபெத்தின் மீதான ரஷ்யாவின் கவனம் என ரஷயா தன் பிராந்திய நலன் பொருட்டு இந்தியாவை ஆதரித்தது. ஆனால் அமெரிக்கா நேட்டோ அமைப்பின் கீழும் சோவியத் யூனியன் வார்ஷோ அமைப்பின் கீழும் உலகைப் பங்கிட்டு இந்து மகாச்சமுத்திரத்தில் ஆதிக்கம் செய்த போது இந்த இரண்டு வல்லாதிக்கங்களுக்கிடையில் அணிசேராக் கொள்கையை வைத்துக் கொண்டு அணிசேராக் கொள்கையை என்றும் தலியிடாக் கொள்கை என்றும் சோஷலிசப் பொருளாதாரம் என்று இந்தியா பேசித்திரிந்தது. ஆனால் இந்து மகாச் சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவமோ அதன் வர்த்தகப் பாதையின் அதி முக்கிய பாதுகாப்பின் அவசியத்தையோ இந்தியா அறிந்திருக்க வில்லை. அல்லது அறிந்திருந்தும் அதை முக்கியத்துவம் அற்ற ஒரு விஷயமாக இந்தியா நினைத்திருக்கலாம்.

இந்நிலையில் தான் இந்து மகாச் சமுத்திரம் குறித்த தன் பார்வையை முதன் முதலாக பதிவு செய்தார் கே.என் பணிக்கர்.‘‘அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியன், போன்ற நாடுகளுக்கு இந்து மகாச் சமுத்திரம் ஒரு முக்கியமான கடல் பிராந்தியம் மட்டுமே. ஆனால் இந்தியாவுக்கு இந்து மகாச் சமுத்திரம்தான் அதன் உயிர்நாடி. இந்தியாவின் உயிர்வாழ்வு இப்பிராந்தியத்திலேயே அடங்கியுள்ளது. இக்கடல் பிராந்தியம் பாதுகாக்கப்படாது விட்டால் இந்தியாவிற்கு கைத்தொழில் அபிவிருத்தி இல்லை. வர்த்தக வளர்ச்சி இல்லை, ஒரு ஸ்திரமான அரசியல் அடித்தளமும் சாத்தியமில்லை’’என்று இந்தியாவின் மிக முக்கிய வரலாற்றாசிரியரும் அன்றைய சிந்தனையாளருமான கே.என். பணிக்கர் இவ்விதமாய் எழுதியிருக்கிறார்.அராபியரின் மத்தியக் கால கடல் வழிக் குறிப்புகளையும், பிற்கால நிகழ்வுகளையும் கொண்டே பணிக்கர் இவ்விதமான கருத்தைக் கூறியிருந்தாலும் ஐம்பதுகளில் பணிக்கரின் இந்தக் கருத்துக்களுக்கு இந்தியாவில் எதுவிதமான முக்கியத்துவமும் இல்லை. அறுபதுகளின் பிற்பகுதியில் உலகச் சூழல் மாறிய பிறகும் தென் கிழக்கில் தனக்கு நேர்ந்த அனுபவம் காரணமாகவுமே இந்தியா இந்து மகாச் சமுத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தது. பணிக்கரின் இந்தக் கருத்து ஏகாதிபத்தியங்களின் ஆசையை உள்ளடக்கியது என்றாலும் இந்திய நோக்கில் அதற்கு புவியியல் முக்கியத்துவம் இல்லாமல் இல்லை. பணிக்கரின் கருத்து இந்தியாவின் மேற்குப்பகுதியைப் பாதுகாக்கிற கொள்கையாகவும் இந்திய துணைக் கண்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை வெளி வல்லரசுகளிடம் விழுந்து விடாமல் தடுப்பதாகவும் இந்துச் சமுத்திர பிராந்தியத்தில் இந்தியாவின் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதாகவும் இருந்தது.

அன்றைய சூழலில் அமெரிக்காவும் பிரிட்டனும் இந்து மகாச் சமுத்திரப் பிரேதசத்தை தங்களின் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இந்து மகாச் சமுத்திரத்தை கட்டுப்படுத்த மூன்று முக்கிய துறைமுகங்களை எந்த நாடு கட்டுப்படுத்துகிறதோ அந்த நாடு இந்தப் பகுதியில் செல்வாக்குச் செலுத்துவதாக இருந்தது. ஒன்று ஏடன் துறைமுகம் இதுதான் இந்துச் சமுத்திரத்தின் நுழைவாயில் ஏடன் துறைமுகம் சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டில் இருந்தது. இரண்டாவது திருகோணமலைத் துறைமுகம் இது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தது. மூன்றாவது சிங்கப்பூர் துறைமுகம் இதுவும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்து மகாச் சமுத்திரத்தின் மீது இந்தியா கவனம் செலுத்திய போது அது மிகவும் பலவீனமாக இருந்தது. மூன்று முக்கிய துறைமுகங்களிலும் செல்வாக்குச் செலுத்த இயலாவிட்டாலும் அந்நியப் படைகளின் ஆதிக்கத்தையாவது தடுத்து நிறுத்த வேண்டும். என் நினைத்தது இந்தியா.

இந்து சமுத்திரத்தின் அமைதி குறித்த பதட்டங்களும் கேள்விகளும் கூடி வந்த போது 1971&ல் ஐ.நா சபை இந்து மகாச் சமுத்திரம் சமாதானப் பிராந்தியமாக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் இன்றைக்கு ஐநாவின் தீர்மானங்களுக்கு உலகில் எவ்விதமான முக்கியத்துவமும் இல்லாமல் போனதோ அது போலவே அன்றைக்கும் ஐநாவின் தீர்மானங்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போனது.இந்து மகாச் சமுத்திர அரசியலில் இந்தியா எப்போது கவனம் செலுத்தத் தொடங்கியதோ அன்றைக்கு அது சீனாவுடனுன் பாகிஸ்தானுடனும் இரு யுத்தங்களைச் சந்தித்தது. 1971&ல் பாகிஸ்தானுக்குள் நுழைந்து வெறும் பதிநான்கு நாட்களுக்குள் பாகிஸ்தானை பிரித்து வங்காளதேசத்தை உருவாக்கியது இந்தியா. பாகிஸ்தானை அத்து மீறித் தாக்கிய இந்தியாவுக்கு ஆதரவளித்தது சோவியத் யூனியன். சீனாவும் அமெரிக்காவும் பாகிஸ்தானை ஆதரித்தாலும் போரின் முடிவுகளைத் தெரிந்து அதற்கு தோதானது போல நடந்து கொள்கிற மனோபாவத்தில் இருந்தது அமெரிக்கா.உண்மையில் போரின் முடிவு இந்தியாவுக்கு சாதகமாக அமைய பாகிஸ்தானை அப்படியே கைவிட்டது அமெரிக்கா. இந்தியாவை சமாளிக்க வேண்டுமானால் பாகிஸ்தான் இராணுவ ரீதியாக பல பெற்றாக வேண்டிய சூழலில் பாகிஸ்தான் பிரான்சின் உதவியை நாடியது. இந்தியா புதிதாக உருவாக்கிக் கொடுத்த வங்காளதேசத்தை இலங்கை பல ஆண்டுகளாக அங்கீகரிக்க மறுத்தது.

இந்நிலையில் சோவியத் யூனியனின் ஆதரவு நாடான ஈராக் தன் நாட்டில் அணுசக்தி நிலையங்களை அமைத்தது அதை அமெரிக்கா உருவாக்கிய இஸ்ரேலோ குண்டு வீசி அழித்தது. இந்நிலையில் பாகிஸ்தானும் அணு சக்திக்கான நிலையங்களை அமைக்க இஸ்ரேல் அதை ‘இஸ்லாமியக் குண்டு’ என்று வர்ணித்தது. அமெரிக்காதான் இஸ்ரேல் இஸ்ரேல்தான் அமெரிக்கா என்றான பிறகு பாகிஸ்தானுடன் நெருங்காமல் இந்தியாவுடன் நெருங்குவதையே அமெரிக்காவும் இஸ்ரேலும் விரும்பின. 1977&ல் அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் ‘‘தென்னாசியாவில் இந்தியா வல்லரசாக தலைமை வகிக்க வேண்டும்’’ என்றார். அமெரிக்க எதிர்ப்புணர்வுகள் பாகிஸ்தான் முழுக்க எரிய இஸ்லாமாபாத்தில் அமெரிக்க தூதரகம் எரிக்கபப்ட்டது.

இந்நிலையில் ஈரானின் புரட்சி வெடித்ததை ஒட்டி ரஷ்யப்படைகள் ஆப்கானுக்குள் நுழைய ஈரானில் அமெரிக்கா தோற்கடிக்கப்பட்டது. பாகிஸ்தானிலும் எதிர்ப்பலை, ஈரானிலும் முயர்ச்சிகள் தோல்வி, இந்தியாவிலும் அமெரிகாவின் கருத்துக்களுக்கு போதிய முக்கியத்துவம் இல்லை, வங்காளதேசம், நேபாளம்,பூடான் என எல்லா நாடுகளுமே இந்தியாவின் மேலாதிக்கத்தின் கீழ்தான் இருந்தது. ஆனால் அமெரிககாவின் மிக நெருங்கிய நண்பனாக இருந்து தனது துறைமுக நகரங்களை அமெரிக்க படைகளின் பயன்பாட்டுக்கும் இராணுவ சோதனைகளுக்கும் விட்டுக் கொடுத்து வந்தது இலங்கை மட்டுமே. எப்படி அமெரிக்கா கொடுத்த நல்லெண்ண சமிக்ஜைகளை இந்தியா கண்டு கொள்ளவில்லையோ அது போல இலங்கைக்கு இந்தியா கொடுத்த நல்லெண்ண தூதுகளையும் இலங்கையும் கண்டு கொள்ளவில்லை.

எல்லா நடுகளும் கைவிட்டுப் போகும் சுழலில் அமெரிக்க அதிபர் 200 மில்லியன் அளவுக்கு ராணுவ உதவியும் 200 மில்லியன் அளவுக்கு பொருளாதார உதவியும் பாகிஸ்தானுக்கு செய்யப்படும் என அறிவிக்க, பாகிஸ்தானின் அப்போதைய அதிபராக இருந்த ஜியா&உல்&ஹக் ‘‘ இம்மாதிரியான அற்பத்தனமான உதவிகள் நாம் பெறுவதென்பது சோவியத் யூனியனின் பகைமை விலை கொடுத்து வாங்குவதற்கு சமம்’’ என்று அந்த உதவியை நிராகரித்தார். ஜியா.பின்னர் வந்த ரீகன் பாகிஸ்தான் உறவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.பிரிட்டீஷ் இந்தியாவில் இந்தியாவின் பரந்துபட்ட பாதுகாப்பிறாகான ஒரு பிரேதசமாக இருந்தது திபெத்தும் ஆபாக்னிஸ்தானும்தான் கடைசியில் ஆப்கானை ஆக்ரமிக்கும் நோக்கில் ரஷ்யா ஆப்கானுக்குள் நுழைந்தது. திபெத் 1950&ல் சீனாவுடன் இணைக்கப்ப்ட்டது அமெரிக்காவின் நட்பு நாடான சீனா திபெத்தை இணைத்துக் கொண்டது இந்தியாவின் பாதுகாப்பு நலனுக்கு உகந்ததல்ல என்று ரஷ்யா இந்தியாவின் கவனத்தை ஈர்த்தாலும் நேருவோ மாவோவை ஆதரித்தார். திபெத்தின் இணைப்பு வெளிப்படையான ஆதரவை இந்தியா தெரிவிக்காவிட்டாலும் அதை எதிரிக்கவில்லை. ஆனால் துரதிருஷ்டவசமாக 1962&ல் இந்தியா சீனப் போர் நடந்துஅ திபெத்தை மயமிட்டே சீனப்படைகள் இந்தியாவை வெற்றி கொண்டது. திபெத் வழியாகவே சீனப்படைகள் இந்தியாவை எதிர் கொண்டது.

எப்படி திபெத்தும் ஆப்கானும் பிரிட்டீஷாரால் உருவாக்கப்பட்ட இந்தியாவுக்கு அரண் என்று தங்களின் ஏகாதிபத்திய போர் வெறிக் கொள்கைக்காக கற்பித்தார்களோ அது போலவே இந்தியாவின் தென் பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு இலங்கை மீதான இந்திய ஆதிக்கமும் தேவையானது என கற்பித்தார்கள். முதலில் ஐய்ரோப்பிய வர்த்தகர்களாலும். பின்னர் போர்த்துக்கீசியராலும், டச்சுக்காரர்களாலும், பின்னர் ஆங்கிலேயராலும் இந்தியா அடிமைப்படுத்தப்பட்ட போது காலனியின் காலனிப் பிரேதசமாக இலங்கையையும் வெள்ளையர்கள் மாற்றினார்கள். வர்த்தக, வணிக கேந்திர முக்கியத்துவமும்,கேளிக்கை பொழுதுபோக்கிற்காகவும் தீவு பயன்படுத்தப்பட்டது.எப்படி இந்தியாவில் இருந்து வெளியேறிய பிறகும்.‘‘ சிந்தனையால் இந்தியனாகவும் ருசியால் வெள்ளைக்காரனாகவும்’’ ஒரு இந்தியக் குழந்தை வளரவேண்டும் என மெக்காலே ஆசைப்பட்டாரோ அது போலவே சிந்தனையால் இலங்கையராகவும் ருசியால் வெள்ளையர்களாகவும் வளர்க்கப்பட்டவர்தான் டி.எஸ். சேனநாயகாவும் அவரது ஐக்கிய தேசீய கட்சியும்.

வெளிஉறவு தொடர்பான இலங்கைக் கொள்கையை வகுத்த சோல்பாரியும், ஜெனிங்ஸ்சும், மேற்குலக வெள்ளை ஒழுக்கத்தை இலங்கைத் தீவின் ஒழுக்கமாக கொண்டார்கள். இடதுசாரி எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு என்று கட்டமைத்தார்கள்.இந்திய எதிர்ப்பும் வெள்ளை ஒழுக்கமும் சேர்ந்துதான் இனவாத நெருப்பை சிங்கள ஆட்சியாளர்களின் மனதில் கொளுத்தியது.

மேற்குலக சிந்தனை மரபில் சிங்களத் தலைமை தாயார்படுத்தப்பட்ட போது வெள்ளையர்கள் பரிசளித்துவிட்டுப்
போன இந்திய காங்கிரஸ் தலைமை இலங்கையிடம் எப்படி நடந்து கொண்டார்கள். இலங்கைக்குள் இந்தியாவுக்கு எதிரான போக்கை கட்டமைத்த வெள்ளை ஏகாதிபத்தியம் இந்திய துணைக்கண்டத்தில் சிதறிக்கிடந்த பல நூறு சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து இந்தியா என்னும் ஒரு துணைக்கண்டத்தை உருவாக்கினார்களோ அது போல இலங்கையையும் இந்தியாவோடு இணைத்துவிடும் ஆசை இந்திய பூர்ஷவாக்களுக்கும்

இருந்தது. ‘‘இந்திய சமஷ்டி அரசில் இலங்கையும் ஒரு சுயாதிக்கமுள்ள பகுதியாக நீடிக்கலாம்’’ என்று தன் ஆசையை 1945&ல் வெளிப்படுத்தினார் ஜவஹர்லால் நேரு. இந்திய வரலாற்றாசிரியர் கே.என்.பணிக்கரோ ‘‘ இந்தியாவின் பாதுகாப்பிற்கு இலங்கை இந்தியாவுடன் இணைக்கப்பட வேண்டும்’’ என்றார். இந்தியாவில் உருவாகி வரும் எண்ணங்களைப் பார்த்த இலங்கை பூர்ஷவாக்கள் இந்தியா இலங்கையை ஆக்ரமித்து இந்தியவோடு இணைத்துக் கொள்ளுமோ என்று பயந்தனர். உடனே இந்தியாவிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் 1947&ல் டி.எஸ். சேனநாயகா பிரிட்டீஷாரேடு இரண்டு ஒப்பந்தங்கள் செய்து கொண்டார். ஒன்று திருகோணமலையில் பிரிட்டீஷாருக்கு கடற்படை தளம் அமைப்பது.இன்னொன்று இலங்கையின் பாதுகாப்பை பிரிட்டீஷார் பொறுப்பேற்பது. உடனே 1949&ல் இந்திய தேசீய காங்கிரஸின் தலைவர் சீதாரமைய்யாவோ ‘‘ இந்தியாவுக்கு விரோதமான நாடுகளுடன் இலங்கை உறவு கொள்ளக் கூடாது என்றும் இரு நாடுகளுக்கும் பொதுவான ஒரு பாதுகாப்புக் கொள்கையே இருக்க வேண்டும் என்று தன் விருப்பத்தை
எச்சரிக்கும் தொனியில் சொன்னார். இலங்கை மீதான் இந்த விருப்பங்கள்.

இந்தியா, சீனா, ரஷயா இந்த மூன்று தரப்பினருமே தங்களை நெருக்குவதாக உணர்ந்த ஐக்கிய தேசீய கட்சியின் அணுகுமுறை இந்தியாவுக்கு எதிராகவே இருந்தது. இந்தியப் பாகிஸ்தான் போரின் போது இலங்கை பாகிஸ்தானை ஆதரித்ததோடு இந்தியாவால் உருவாக்கப்பட்ட வங்காளதேசத்தை நீண்ட நாள் அங்கீகரிக்காமல் வைத்திருந்தது. அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் அணிசேராக் கொள்கையின் பிதாமகன்கள் என்றும் அமெரிக்காவின் முகாமிலிருந்து விலகி ரஷ்யாவின் தலைமையை ஏற்றுக் கொணடவர்கள் என்றும் ஒரு தோற்றம் இருந்தது, ஜனதாககட்சி ஆட்சிக்கு வந்து மொராஜ்ஜிதேசாயாய் இந்தியாவின் பிரதமரான போது. 1978&ல் ஒரு முறை இலங்கையின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க சிறப்பு அழைப்பாளராக இலங்கைக்குப் போனார். அங்கு பேசிய தேசாய் ‘‘இலங்கையின் இனப்பிரச்சனை உள்நாட்டுப் பிரட்டனை என்றும் தமிழீழக் கோரிக்கை கைவிடப்பட வேண்டும்’’ என்றார். மொராஜ்ஜிதேசாயும் அன்றைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேயும் அமெரிக்க ஆதரவு சக்திகளாக இருந்ததால் இருதரப்பினருமே பரஸ்பரம் அனுசரித்துப் போக விரும்பினார்.

ஏகாதிபத்தியங்களுக்கு சேவை செய்யும் போட்டிக்கான பரிவர்த்தனையில் இந்தியா எப்படி நடந்து கொண்டது என்றால் அது எப்போதும் இலங்கையை தன் காலனிப்பகுதியாகவே வைத்திருக்க விரும்பியது. மேற்குலக நாடுகளோடு இராணுவ ஒப்பந்தங்களை செய்ய எண்பதுகளில் பிரேமதாசா முயர்சித்த போது இந்தியாவால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்திரா ஆட்சிக்கு வந்த புதிதில் அமெரிக்க எதிர்ப்புணர்வு இந்தியாவில் இருந்த அதே நேரத்தில் இலங்கையை இந்தியா ஆக்ரமிக்கும் என்ற சிந்தனையும் வேறோடிப் போயிருந்தது. தென்னாசியாவில் இந்தியாவை தனிமைப்படுத்த நினைக்கும் முயர்ச்சிகளை இந்தியா அறிந்திருந்தது. இலங்கை மீது தலையிடுவதற்கான அதை ஆக்ரமிப்பதற்கான தார்மீக அரசியல் நியாங்கள் எதுவும் இல்லை. ஆனால் இலங்கையை அச்சுறுத்த நினைத்தது இந்தியா.இடமிருந்தால் ஆக்ரமிக்கவும்.

சுதந்திர இந்தியாவில் நேருவுக்குப் பிறகு குல்சாரிலால் நந்தா, லால்பகதூர் சாஸ்திரி, மொராஜ்ஜிதேசாய் என சில பிரதமர்கள் பதவிக்கு வந்த போதும் அவர்கள் இந்துச் சமுத்திரம் தொடர்பாக அதிக நாட்டம் கொள்ளவில்லை. 1966&ல் இந்தியரா காந்தி பிரதமரான போது இந்து மகாச் சமுத்திர அரசியலில் அதிக ஆர்வம் காட்டினார். 1974&ல் பிரதமராக இருந்த இந்திரா தமிழகப் பகுதியான கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தார். அன்றைக்கு இருந்த சூழலில் இலங்கையை அமெரிக்காவின் பிடியில் இருந்து மீட்டு இந்தியாவின் அனுசரணையாளராக மாற்றவே இந்தியா இவ்விதமாய் நடந்து கொண்டது. இன்றைக்கு கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மீண்டும் தமிழகத்தில் தலை தூக்கி உள்ளன. இந்துச் சமுத்திரத்தில் செல்வாக்குச் செலுத்திய அமெரிக்காவை வெளிப்படையாக எதிர்க்க முடியாத இந்திரா இலங்கைக்கு ஏராளமான மறைமுக உதவிகளையும் செய்தார்.ஆனால் இந்தியாராவின் உதவிகள் இலங்கையை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றவில்லை ஏனென்றால் இந்திரா ஆட்சியில் இருந்த போது இலங்கையின் அதிபராக இருந்த ஜெயவர்த்தனே அமெரிக்காவின் நெருங்கிய நண்பராக இருந்தார்.

1980-ல் இந்திரா மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட புதுடில்லி மாநாட்டில் பேசும் போது ‘‘ கடந்த காலத்தில் இந்து சமுத்திரமானது ஆதிக்கச் சக்திகளை இந்தியாவுக்கு அழைத்து வந்தது. இன்று இப்பிராந்தியம் அபாயகரமான கொந்தளிப்பாக காட்சியளிக்கிறது இந்து மகாச் சமுத்திரத்தில் கட்டு மீறிச் செல்லும் இராணுவ மயமானது இந்தியாவின் 3,500 மைல் நீள கரையோர எல்லைப் பாதுகாப்பை பலவீனப்படுத்தி உள்ளது. எமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ள அந்நிய நாடுகளின் இராணுவத் தளங்கள் இப்பிராந்தியத்தில் அண்மித்திருப்பதையும் அந்நிய யுத்தக் கப்பல்கள் இப்பிராந்தியத்தில் பவனி வருவதையும் நியாயப்படுத்தக் கூடிய எந்த ஒரு கோட்பாட்டினையும் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது’’ என்று கேள்வி எழுப்பி எச்சரித்தார் இந்திராகாந்தி.

இந்திராவின் இந்தப் பேச்சு தென்கிழக்கில் சிறு சலசலப்பை உறுவாக்கிய போது இந்திய வெளிவிவாகரத்துறையின் அமைச்சகம் 1981&ல் வெளியிட்ட அறிக்கையில்,
''உலகப் பதட்ட நிலையில் மையம் அய்ரோப்பாவில் இருந்து ஆசியாவிற்கு திருப்பி விடப்பட்டிருக்கிறது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அத்து மீறி நிர்ணயிக்கப்படும் இராணுவத்தளங்களும் புதிய அணிசேர்க்கைகளும் மேற்காசியாவிலுள்ள பொதுவான பதட்ட நிலையும் பாகிஸ்தான் உட்பட இந்நாடுகளுக்கு வழங்கப்படும் நவீனரக ஆயுத உதவிகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன.இத்தகைய வளர்ச்சிப் போக்குகள் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது ’’ என்ற அந்த அறிக்கை டியாகோ கார்ஷியாவில் ஞிவீமீரீஷீ நிணீக்ஷீநீவீணீ ) உள்ள பிரிட்டன் தளம் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் இந்தியாவின் தென் பிராந்தியத்தில் இருந்து 1,100 மைல் தொலைவில் அமைக்கப்பட்டுள்ள பிரிட்டன் அமெரிக்க கூட்டு இராணுவத் தளம் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் வெளியுறவு அமைச்சக அறிக்கை குறிப்பிட்டது.

இந்தியாவின் இந்தக் கொதிப்புகள் உயர்ந்த காலத்திலேயே 1983&ல் இலங்கையில் தமிழ் மக்களுக்குன் எதிரான இனக்கலவரமும் வந்தது. அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார் இந்திராகாந்தி.இலங்கை மீதான இந்தியத் தலையீடு என்பது சுரண்டல் நோக்கங்களைக் கொண்டது. தலையிடாக் கொள்கைதான் எங்களின் அயலுறவுக் கொள்கை என்று சொல்லிக் கொண்டே அத்து மீறி பாகிஸ்தானிலும் இலங்கையிலும் தலையிட்டது இந்தியா இன்றும் தலையிட்டுக் கொண்டிருக்கிறது. சோவியத் ஒன்றியத்தின் சிதைவுக்குப் பின்னர் கம்யூனிசத்தின் பின்னடைவுக்குப் பிறகு இன்று உலகம் ஒற்றை அதிகாரத்தின் கீழ மறுகாலனியாக்கம் செய்யப்படுகிறது. எப்படி அமெரிக்கச் சந்தைக்கான நுகர்வுப் பொருளாக இந்தியார்கள் மாற்றப்பட்டிருக்கிறார்களோ. அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகளுக்கு ஏற்ப இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எப்படி மாற்றப்பட்டதோ அது போல தங்களின் தரகு முதலாளித்துவ வணிக நோக்கத்துக்காக இலங்கையின் போர் வெறியை ஆதரிப்பதோடு. இலங்கையின் இருப்பையே தீர்மானிக்கும் பொறுப்பை இந்தியா இன்று ஏற்றுக் கொண்டிருகிறது. மத்திய கிழக்கிலும் ஆசியாவிலும் பெரும் பதட்டத்தை உருவாக்கிவரும் அமெரிக்கா இன்று தென்கிழக்கின் அடியாளாக இந்தியாவை உருவாக்கி வைக்கிறது. அமெரிக்கா, இஸ்ரேல், பிரிட்டன் வரிசையில் இந்தியாவும் இன்று பயங்கரவாத ஆபத்துள்ள நாடுதான். இந்தியாவின் பார்ப்பன இந்து மதவெறிப்பாசிசம் எப்படி ஆரிய சிந்தனைகளின் அடிப்படையில் அமெரிக்காவுடன் கைகோர்க்கிறதோ அது போலவே இலங்கையின் சிங்கள இனவெறிப்பாசிசமும் மேற்குலகோடு கூடுகிறது. இந்தியா அதை ஊதி விடுகிறது.

இலங்கை மீதான இந்தியாவின் இன்றைய நோக்கங்கள்.

இலங்கைத் தீவு பதட்டமாக இருக்கிற வரை அது தென்கிழக்கில் தன்னை அண்டியே இருக்கும் என இந்தியா நம்புகிறது.அது மட்டுமல்லாமல் வர்த்தக நலன் நோக்கில் இலங்கையை தனது காலனிப்பகுதியாக வைத்து சுரண்டலாம் என்கிற நோக்கமும் இந்தியாவுக்கு உண்டு. மீள்கட்டுமானம் என்கிற பெயரில் எப்படி இன்று ஆப்கானுக்குள் இன்று இந்தியா நுழைந்திருக்கிறதோ அதே பாணியிலான மீள்கட்டுமானத்திற்கு இந்தியாவின் சந்தைகளைக் கேட்கிறார்கள் இந்திய முதலாளிகள். அமெரிக்கா மூன்றால் உலக நாடுகளுக்கு விரித்த வலையை இந்தியா இலங்கைக்கு விரித்தது. இலங்கையோ தனது உள்நாட்டு இன முரணையே தென்கிழக்காசியாவின் பிராந்திய அரசியலாக்கி ஆயுத வியாபரத்தில் ஈடுபடுகிறது.


எண்பதுகளில் இருந்துதான் இலங்கையின் இனமுரண் தொடங்குகிறதா? இலங்கைக்குள் சிங்கள பெருந்தேசீய இனத்தின் இனவாதத்திற்கு தமிழ் மக்களா முதல் பலியாகினர் என்று பார்த்தால் சிங்கள இனவாதத்தின் வேர் வெள்ளை ஓழுக்கத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதை புரிந்து கொள்ள முடியும்.

1930&பதுகளில் அமெரிக்கா மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது அதற்கு கிரேட் டிப்ரஷன் (great depration) என்று பெயர் வைத்தார்கள் அப்போது, அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி அன்றைய உலகையும் பாதித்தது. தமிழகத்தின் பஞ்சத்தை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்ட வெள்ளையர் எப்படி பத்து லட்சம் கூலி அடிமைகளை தோட்டத் தொழிலுக்காக இலங்கைக்குள் இறக்குமதி செய்தார்களோ அது போலவே கொச்சியிலிருந்தும் ஏராளமான மலையாளிகள் வெள்ளைத் துரைமார்களின் வீடுகளில் வீட்டுப்பணிகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டார்கள். இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த தொழிலாளர்கள் இலங்கையில் நூற்றாண்டுகாலம் வாழந்து பழகிய பிறகு அவர்கள் தேயிலைத் தோட்டங்களையும் காப்பித் தோட்டங்களை வளம் கொழிக்கும் பூமியாக மாற்றிய பிறகு இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு பலியானார்கள். பொருளாதார வீழ்ச்சி தேயிலைத் தொழிலை பெரும் வீழ்ச்சிக்குக் கொண்டு சென்றது. அன்றைய தேயிலை பொருளாதாரம் என்பது மேற்குலகிற்காகவும் அமெரிக்க சந்தைகளுக்காகவுமே இலங்கையில் செய்ற்பட்டது. ஏராளமான தேயிலைத் தோட்டங்கள் மூடப்பட்டு தேயிலைத் தொழிலாளர்கள் வேலையிழந்த போது. இலங்கை ஆட்சியாளர்கள் சிங்கள தொழிலாளர்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்தது. நாடெங்கிலும் வேலையில்லாத் திண்டாட்டமும் வறுமையும் மலைத்தோட்டத் தொழிலாளரையும் மலையாள உழைப்பாளிகளையும் சிங்கள உழைக்கும் மக்களையும் மிகப் பெருமளவில் பாதித்தது. பெருமளவு தொழிலாளர்கள் வேலையிழந்த போது பூர்ஷ்வாக்களின் வீடுகளில் வீட்டுப்பணியாளர்களாக இருந்த மலையாளிகள் சிங்கள இனவாதிகளின் கண்களை உறுத்தினார்கள். பொருளாதார வீழ்ச்சிக்கும் வேலையின்மைக்கும் இன ரீதியான காரணங்கள் சுட்டப்பட்டன. தொழிற்சங்கங்களே இனரீதியான காரணங்களை கற்பித்து பெரும்பான்மை சிங்களர்களை மலையாளிகளுக்கு எதிராக திருப்பி விட்டனர்.

1930&பதுகளில் கிட்டத்தட்ட முப்பாதாயிரம் பேர் வரை மலையாளிகள் வீட்டுப்பணியாளர்களாக இலங்கையில் இருந்தார்கள். அவர்கள் கேரளத்தின் கொச்சியில் இருந்து அழைத்து வரப்பட்டதால் ‘கொச்சியர்’ என்றும் அழைக்கப்பட்டனர். வெள்ளையரின் பிரித்தாளும் சிந்தனை மரபை கைக்கொண்ட ஐக்கிய தேசீயக் கட்சியும் அன்றைய தொழிற்சங்கங்களும் இனவாதத்தை ஒரு அரசியல் கருவியாக கையெடுத்த போது அதற்கு முதல் பலியானது கொச்சியர் என்று அழைக்கப்பட்ட மலையாளிகளே! மே நாள் ஊர்வலங்களில் மலையாளிகளுக்கு எதிரான கருத்துக்கள் உருவாக்கப்பட்டு சிங்கள பெரும்பான்மை வாதத்தை முன்வைத்தனர்.
‘‘எவ்வாறு ஒரு மலையாளி தொழிற்சாலைக்குள் நுழைகிறான் என நாம் பல வழிகளில் அறிகிறோம். மலையாளிகள் குறைந்த ஊதியத்துக்கு பணியாற்றி இலங்கையின் சிங்கள மக்களின் வேலைவாய்ப்புகளை பறிக்கும் நிலையில் இருப்பதால் அவர்கள் இலங்கைத் தொழிலாளர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள்.’’ என்று சிங்கள ஏடான ‘வீரயா’ இதழ் 1936&மார்ச் 31 &ஆம் தேதி தலையங்கம் எழுதியது. மேன்மை தாங்கிய ஆரிய இனத்தின் வழித்தோன்றல்களாகிய சிங்கள இனம் இனி இந்தத் தீவில் பெரும்பான்மை மக்களைச் சுரண்டப்படுவ அனுமதிக்காது என அறிவித்தார்கள் இந்த புதிய எஜமானர்கள். ஜெர்மனியிலும் இத்தாலியிலும் உருவான இனத் தூய்மைத் தத்துவத்தை கைக் கொண்ட டி.எஸ்.சேனநாயகாவும், ஏ.ஈ. குணசிங்காவும் இந்த பெரும்பான்மை தூய்மைவாதத்தை முன் வைத்து அதை ஒரு இயக்கமாக நடத்தினர். 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய பௌத்த கடமைகளை நிறைவேற்றும் பொறுப்பு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக இவர்கள் தங்களுக்குத் தாங்களே கறிப்பித்துக் கொண்டனர். பெரும்பான்மை சிங்கள மக்களையும் அந்த கற்பிதத்தின் பால் நகர்த்தினர்.

ஆரியர் அல்லாதோரின் வீடுகளில் ஆரியப் பெண்கள் பணிசெய்வதை ஹிட்லர் எப்படி தடை செய்தாரோ அது போல சிங்களர் இல்லங்களில் மலையாளிகள் பணி செய்வதை தடை செய்ததோடு சிங்கள இளைஞர்கள் மலையாளப் பெண்களை மணம் முடிப்பதையும் மலையாள இளைஞர்கள் சிங்களப் பெண்களை மணம் முடிப்பதையும் தடைசெய்தார்கள் இவர்கள். ‘‘மலையாளிகளை பகிஷ்கரிப்போம்’’ என்ற கோஷத்தின் அடிப்படையில் கொச்சியருக்கு எதிரான சிந்தனைகள் சிங்கள மக்களிடம் வேகமாக பரப்பட்டது, தங்களின் துன்பமான வாழ்வுக்கு மலையாளிகளே காரணம் என்றும் வேலைவாய்ப்பும் வறுமையும் மலையாளிகள் கொடுத்த பரிசு என்றும் பெரும்பான்மை சிங்கள மக்கள் நம்ப வைக்கப்பட்டார்கள்.

சிங்கள வலதுசாரிகள் ஒரு பக்கம் சிறுபான்மை மலையாளிகளை தனிமைப்படுத்தி பெரும்பான்மை இனத்திற்கு எதிராக நிறுத்திய போது. ‘வீரயா’ ஏடு தொடர்ந்து மலையாளிகளுக்கு எதிராக விஷத்தைக் கக்கிக் கொண்டிருந்தது.‘‘அது மலையாளிகளை ‘‘கொள்ளை நோய்’’ என்று எழுதியது. ‘‘ கொச்சி சொய்சோ’’ என்ற கோஷம் வெகுவாக பறவிய போது மலையாளத் தொழிலாளர்கள் வீடுகளுக்குள் அடிமைகளைப் போல முடக்கப்பட்டார்கள்.

கேரள கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே கோபாலன் 1939&ல் இலங்கைக்கு பயணம் சென்றார் இலங்கை கம்யூனிஸ்களோடு தொடர்பை ஏற்படுத்தவும் இலங்கையில் வாழும் சிறுபான்மை மலையாளிகளுடன் தொடர்பை ஏற்படுத்தும் நோக்கத்தோடும் ஏ.கே. கோபாலனின் பயணம் இருந்தது. கோபாலனின் வருகையை ஒட்டி சிங்கள இடதுசாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டங்களை அன்றைக்கு ஐக்கிய தேசிய கட்சி நடத்த அனுமதிக்கவில்லை. கோபாலனுக்கு சிங்கள பேரினவாதிகள் தங்களின் எதிர்ப்பைக் காட்டினார்கள்.விவாசாயிகள் இயக்கத்தின் தலைவரும் கம்யூனிஸ்டுமான ஏ.கே.கோபாலன் தான் எழுதிய சுயசரிதையில் இப்படி எழுதியிருக்கிறார்.
‘‘மிக மோசமானதும் ஆபத்துமான ஒரு காலக்கட்டத்தில் நான் இலங்கைகுச் சென்றேன். மலையாளிகளுக்கு எதிரான பகையுணர்வு சிங்களர்களிடம் கொழுந்து விட்டெரிந்தது. சிங்களர் மலையாளிகளின் பகை அதன் உச்சத்தை அடைந்திருந்தது’’ என்று தன் சுயசரிதையில் எழுதினார் ஏ.கே.கோபாலன்.

கடைசியில் பல்லாயிரம் மலையாளிகள் இலங்கையில் இருந்து வெளியேறி இந்தியாவுக்கு வந்தனர். மீதியிருந்த மலையாளிகள் சிங்கள இனத்தோடு கலந்து தங்களின் அடையாளத்தை இழந்தார்கள்.மேன்மைதாங்கிய ஆரிய இனம் என்கிற கருத்தாக்கமும், ஐய்ரோப்பிய இனத்தூய்மைத் தொடர்பும் பண்பாட்டுப்பாசிசமாக உருவான அதே வேளையில் சிங்களப் பெரும்பான்மை மக்களிடம் ‘மண்ணின் மைந்தர்கள்’ என்ற கருத்துருவையும் ஏற்படுத்தியது.
முதலில் மலையாளிகள், பின்னர் மலைத்தோட்டத் தொழிலாளர்கள், முஸ்லீம்கள், கடைசியில் தமிழ் மக்கள் என சிங்கள பேரினவாதம் பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு அரசு பயங்கரமாக உருவானது இப்படித்தான்.

இந்துச சமுத்திர பிராந்தியத்தை ஆக்ரமிக்கும் நோக்கோடு வல்லரசுகளுக்கிடையில் நடந்த போட்டியும் நேரடியாக அல்லாமல் காலனி நாடுகளை தங்களின் கட்டுக்குள்ளேயே வைத்திருக்கும் மேற்குலக தந்திரமும்தான் இலங்கையில் பெரும்பான்மை வாதத்தை ஊதி விட்டது. உலகம் இரு துருவங்களாக பிளவுண்டிருந்த போது இந்தியாவால் இலங்கையை நினைத்தபடி ஆட்டுவிக்க முடியவில்லை. அமெரிக்காவின் அந்தப் புறமாக எப்போதும் இருந்து வரும் இலங்கை மீதான இந்திய அணுகுமுறை அறுபதுகளிலும் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் வேறு மாதிரியாக இருந்தது. தொண்ணூருகளுக்குப் பிறகு இன்று அமெரிக்காவின் அந்தப்புரமாக மாற்றப்பட்டிருக்கும் இந்தியா இன்று இலங்கையை அணுகிற விதமும் மாறுபட்டிருக்கிறது. நடந்து கொள்கிற விதம் மாறியிருக்கிறதே தவிற அப்போதும் இப்போதும் இந்தியா இலங்கையை தன் காலனிப்பகுதியாகவே வைத்திருக்க விரும்புவதை இன்று நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

அப்படி காத்திருந்த இந்தியா இலங்கைமீது தலையிடுவதற்கு ஒரு வாய்ப்பாக வந்து கிடைத்ததுதான் ஈழத் தமிழ் மக்கள் மீதா ஜூலைக்கலவரம். அதை சரியாக பயன் படுத்திக் கொண்ட இந்திரா இலங்கை அரசை பணிய வைக்க போராளிக்குழுக்களை பயன்படுத்திக் கொண்டார். பணியவும் வைத்தார், ராஜீவ்காந்தியின் ஆட்சியிலும் இதே விதமான அணுகுமுறைதான் ஆனால் ஒரு வித்தியாசம் ஆயுதப் பயிர்ச்சிகளைப் பெற்ற போராளிக் குழுக்கள் இந்தியாவின் சொற்படி கேட்டு நடக்கவில்லை. இங்குதான் இந்திராவிலிருந்து ராஜிவ்காந்தி இலங்கை இனப்பிரச்சனையில் வேறு படுகிறார். அதனால்தான் நிர்பந்தம் செய்து புலிகளை கொண்டு வந்து ஒப்பந்தமும் போட்டார். விடுதலைப்புலிகள் இந்தியாவுடன் முரண்பட்டதும் இந்தியப் படைகள் ஈழத்துக்குள் நுழைந்ததும் அங்கு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதும். அதைத் தொடர்ந்து ராஜீவ்கொலை நடந்ததும் . என அதற்குப்பிறகான இந்த பதினைந்து ஆண்டுகாலத்தில் இந்தியா இலங்கை விவாகரத்தில் இருந்து ஒதுங்கியிருந்தது போன்ற ஒரு தோற்றம் இருக்கிறது.ஆனால் அது பொய்.

விரைவில் வெளிவரவிருக்கும் ”அழுவதற்கு இனி கண்ணீர் இல்லை” என்ற எனது நூலின் ஆறாவது அத்தியாயம்

0 comments: