ச.பாலமுருகன்
இவ்வருட சுதந்திர தினத்தின்போது, இந்நாட்டின் தேசிய கொடியை மரியாதை செய்ய பாபுலர் பிரண்ட் என்ற அமைப்பினர் முஸ்லீம்கள் சுதந்திர தின விழா கொண்டாட ஏற்பாடு செய்திருந்தனர். முஸ்லிம்களின் இச்சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்திருந்தது. இறுதியில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அனுமதி பெற்றே சுதந்திர தினத்தை முஸ்லிம்கள் கொண்டாட முடிந்தது.
மதத்தின் பெயரால் வேறுபாடு காட்டுவது அரசுக்கு நியாயமானதல்ல. ஆனால் நமது சமூகத்தில் உருவாகியுள்ள பகைமை உணர்வு முஸ்லிம்களின் சுதந்திர தின விழாவைக் கூட தடுக்கும் வகையில் வளர்ந்துள்ளது.
இந்நாட்டின் விடுதலைக்கு இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்தே போராடினர். பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் நாட்டு விடுதலைக்கு இரத்தம் சிந்தியுள்ளனர். ஆனால் தேசபக்தி என்பது பெரும்பான்மை மதத்தவரின் உடமை போன்ற சித்திரங்கள் ஊடகங்களில் கட்டமைக்கப்படுகிறது.
சமீபத்தில் ஒரு சில ஆண்டுகளில் வெளியாகியுள்ள பல தமிழ் திரைப் படங்களில் முஸ்லிம்கள் வில்லன்களாகவும், பயங்கரவாதிகளாகவும், கோயில்களில் குண்டு வைப்பவர்களாகவுமே சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அருவருக்கதக்க விஷமத்தை எந்த குற்ற உணர்வுமின்றி இந்த திரைப்படங்கள் தணிக்கையில் சான்று பெற்று வெளிப்படுத்தியுள்ளது.
ஆரம்ப கால 1920 ஆண்டுகளில் மேற்கத்திய திரைப்படங்களான பேச்சற்ற படங்களில் கூட தாடி வைத்த அரேபியர்கள் மற்றும் முஸ்லிம்களே வில்லன்களாகவும், போக்கிரிகளாகவும் சித்தரிக்கப்பட்டனர். இந்த அபத்தம் இன்னமும் தொடர்கிறது. பல்வேறு அமெரிக்க திரைப்படங்களில் அரேபிய முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
செய்தி ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் தொடர்ந்து முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து வருகிறது. சிமி என்ற முஸ்லீம் அமைப்பிற்கான தடை அடிப்படையில் தவறானது என நீதிமன்றம் முடிவு செய்த செய்தி வெளிவந்தவுடன் ஆங்கிலத் தொலைக்காட்சிகள் அகமதாபாத் குண்டு வெடிப்புக் காட்சிகளையும், செத்துக் கிடந்த மனிதர்களையும் காட்டியது. பின் சிமியின் கைது செய்யப்பட்ட ஊழியர்களைக் காட்டியது. ஏறக்குறைய ஒரு நாள் முழுவதும் இந்தக் கொடூரத்தை செய்து முடித்தது ஆங்கிலக் காட்சி ஊடகங்கள். சராசரி மனிதனின் மனதில் பயங்கரவாத அமைப்புத் தடையை நீதிமன்றம் நீக்கினால் மீண்டும் குண்டுவெடிக்கும் என்ற கருத்தை அது ஆழமாகப் பதிய வைக்க முயன்றது. பயங்கரவாத அமைப்பு என்பது சிமி என்ற வட்டத்தை தாண்டி ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகம் என்ற பதிவு ஏற்கனவே சராசரி பார்வையாளர்கள் மத்தியில் தொடர்ந்து இந்த ஊடகங்கள் பதிய வைத்துள்ளது.
முஸ்லீம் பயங்கரவாதத்தைப் பற்றி பேசிய ஊடகங்கள் வசதியாக இந்து வெறியின் கோரத்தை மறக்கச் சொல்லுகிறது. சிறுபான்மை என்பது பெரும்பான்மைக்குக் கட்டுப்பட்டது என்ற எண்ணம், அரசியல் ஊடகங்களில் மேலோங்கியும் உள்ளது. இது ஜனநாயகத்தின் அடிப்படைக்கே எதிரானது. முஸ்லீம்கள் கையில் உள்ள ஊடகங்கள் கூட இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டு தங்களை தக்க வைத்துக் கொள்ள முயல்கிறது. எனவே தான், முஸ்லீம்கள் சுதந்திர தின விழாவைக் கொண்டாடி இச்சுதந்திரத்திற்கு தாங்களும் தியாகம் செய்தவர்கள் என நிரூபித்துள்ளனர்.
உலகம் முழுவதும் முஸ்லீம்கள் இந்த ஊடக வழி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னிட்டு அமெரிக்கா, ஐரோப்பிய ஊடகங்களில் இது வெகு அதிகமாக அதிகரித்துள்ளது. சாதாரண முஸ்லீம் ஒரு பயங்கரவாதியாகவும், பயங்கரவாத செயல் புரியும் தன்மை கொண்டவனாகவே கருதப்படும் சூழல் உருவாகியுள்ளது. எனது நண்பர் ஒருவர் சிறந்த மனித உரிமைப் போராளி. அவரும், அவர் மனைவியும் ஒரு மனித உரிமைப் பயிலரங்கில் பங்கேற்க வேண்டி அமெரிக்காவிற்கு 2 ஆண்டுகளுக்கு முன் சென்றார்கள். அவர் முகத்தில் அடர்த்தியான தாடி வைத்திருந்தார்.
அமெரிக்காவின் ஒவ்வொரு விமான நிலையத்திலும் அவர் நிர்வாணப்படுத்தப்பட்டு கடும் வேதனைக்கு உள்ளானார். சில இடங்களில் அவரின் மல வாயிலும் கூட கை நுழைத்து ஏதேனும் மறைக்கப்பட்டுள்ளனவா என போலீசார் சோதனை செய்தனர். அவரின் நிலைக்கு காரணம் அவர் தோற்றத்தில் ஒரு முஸ்லீம் போல காணப்பட்டது தான். பெங்களூரைச் சார்ந்த முஸ்லீம் மருத்துவர் & அமீது ஆஸ்திரேலியாவில் பயங்கரவாதி என சந்தேகப்பட்டதையும் ஊடகங்கள் அவரைப் பற்றி தாறுமாறாக சித்தரித்ததையும் பின் அவர் அப்பாவி என விடுவிக்கப்பட்டதையும் நாம் அறிவோம். உலகம் முழுவதும் முஸ்லிம்கள் தங்களின் தார்மீக உரிமையான முஸ்லீம் அடையாளங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் உரிமை (தாடி வளர்ப்பது, குல்லா அணிவது) பெரும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.
ஒரு முறை ஊடகங்களால் பதியப்பட்ட பொய்யான பிம்பம் சராசரி மனிதர்களின் உள்ளங்களில் ஆழப் பதிந்து விடுகிறது.கடந்த 2006 ஜூலை 22ம் தேதி கோவை குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்திருந்த சமயம். பத்திரிகைகளில் ஒரு பரபரப்பு செய்தி வெளியானது. 5 முஸ்லீம் இளைஞர்கள் கோவையை தகர்க்க சதி செய்ததாகவும், வெடி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பேசப்பட்டது. ஆனால் பின்னர் போலீசார் போட்ட பொய் வழக்கு என வேறு ஒரு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளரே நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். ஆனால் முந்தைய செய்திக்கு கொடுத்த முக்கியத்துவத்தில் ஒரு சதவீதத்தைக் கூட பிந்தைய செய்திக்கு வழங்கவில்லை.
ஊடகங்களில் இந்த ஜனநாயக விரோதப் பார்வை நாட்டின் வளர்ச்சி, பண்பாடு மற்றும் ஒற்றுமைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் ஆழமான பிரதிபலிப்பை காவல் துறையில் நாம் காண முடியும். காவல் துறை எப்போதும் முஸ்லிம்களை சந்தேகத்துடனேயே பார்க்கிறது. 1996ஆம் ஆண்டு நேஷனல் அகாடமி ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷன் என்ற முசோரியில் உள்ள ஆட்சித் துறையினருக்கான பயிற்சி கழக ஆய்வில் முஸ்லிம்களை எதிரிகளாகவும், பொது அமைதியை குறைப்பவர்களாக கருதுவதையும் கலவர சமயங்களில் இந்த சார்பு மற்றும் ஓரவஞ்சனையுடன் காவல் துறையில் பணிபுரிபவர்கள் நடந்து கொள்வதையும் வெளிப்படுத்தி உள்ளது.
இந்த நாட்டின் குடிமகன் அவன் சார்ந்த மதத்தின் அடிப்படையில் அவன் நம்பும் ஆன்மீகத்தின் வெளிப்பாடுகளால் சிறுமைப்படுத்தப்படுவதும் சந்தேகத்திற்கு உள்ளாக்கப்படுவதும் ஜனநாயகம், சுதந்திரம் என்ற கருத்துக்களுக்கு அவமானகரமானது. ஊடகங்கள் முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் இழிவை, சுய பரிசோதனை செய்ய வேண்டும்.
காவல்துறை மற்றும் ஆயுதப்படைகளில் ஆழ வேரூன்றி உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வு கலவர காலங்களில் அமைதியான நிலை உருவாகுவதற்கு பதிலாக கடுமையான பின்விளைவுகளை உருவாக்கி விடுகிறது. வி.என்.ராய் என்ற உத்திரபிரதேசமாநில காவல்துறை மூத்த உயரதிகாரி தனது ஆய்வில் காவல்துறையில் வேரூண்றி உள்ள இந்த பாதக பார்வையை மாற்றி சில வழிவகைகளை தெரிவித்தார்.
1. காவல்துறை மற்றும் ஆயுதப் படைகளில் கணிசமான அளவு முஸ்லீம்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஏனெனில் பெரும்பாலும் காவல்துறையில் முஸ்லீம்களின் எண்ணிக்கை வெகு குறைவாகவே உள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் வெள்ளையர்களுக்கு இணையாக கருப்பர்களையும், ஆங்கிலேயர்களையும் வெற்றிகரமாக பணியமர்த்தி பாகுபாடுகளை களைய முயன்றுள்ளனர்.
2. காவல்துறையினர் மற்றும் ஆயுதப் படைகளுக்கு மதச் சிறுபான்மையினரின் உரிமைகள் மத ஒற்றுமை குறித்த அறிவுப்பூர்வமான பயிற்சிகளைத் தொடர்ந்து பயிற்றுவிக்க வேண்டும். பணி உயர்வு பெறும் சமயம் கட்டாயம் இப்பயிற்சிகளை அதிகாரிகள் பெற வேண்டும். உயர் அதிகாரிகள் முறையான கலந்தாய்வினை மேற்கொள்ள வேண்டும். மேலும் தவறு செய்யும் காவல் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். (2002 கோவையில் பொய் வழக்குப் போட்டு 5 முஸ்லீம்களை சிறைப்படுத்திய அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.) உயர் அதிகாரி தவறுக்கு பொறுப்பாக்கப்பட வேண்டும்.
3. மக்களின் பங்களிப்பு காவல்துறையினரின் சிந்தனை மாற்றத்திற்கு காரணம். கலவரப் பகுதிகளில் மக்களின் கருத்து மற்றும் ஒற்றுமைக்கான வழிகளை கேட்டு பரிசீலிக்கவும் வேண்டும். இக்கருத்துக்களை நாம் பரிசீலிப்பது அவசியம்.
நன்றி.விழிப்புணர்வு
ஊடகங்களில் முஸ்லீம்கள்
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
when a bomb exploded in a predominantly muslim area the media buried the story. media will try to defuse the bjrang bombs...let us keep writing to make enough noise on even deaf ears
மைனாரிட்டியினருக்கு எதிரான தாக்குதல்கள் தற்போது அதிகரித்து வருகிறது. இதை தடுக்கவேண்டிய மாநில அரசுகள் இந்த தாக்குதல்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு கொடுப்பது நம் நாடு மதசார்பற்ற நிலையிலிருந்து விலகி காவி சித்தாந்தத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது.
மைனாரிட்டியினருக்கு எதிரான தாக்குதல்களை ஊடகங்கள் ஒன்றில் மறைத்துவிடுகின்றன அல்லது பத்தோடு பதினொன்றாக ஒரு செய்தியாக சொல்லிவிட்டு போகின்றன. இந்தபோக்கு இந்தத் தாக்குதல்களுக்கு பலம் சேர்ப்பதுபோல் ஆகிவிடுகிறது.
முதலில் முஸ்லீம்களின் ஊடகங்கள் காஷ்மீரில் பிரிவினையை ஆதரிக்காமல் இருக்கட்டும்.காஷ்மீர்
இந்தியாவின் பகுதி என்பதில் எங்களுக்கு சந்தேகம் இல்லை
என்று எழுதட்டும். இந்தியாவிற்கு எதிராக செயல்படும் பாகிஸ்தானை
விமர்சித்து எழுதட்டும்.தலிபான்களை
கண்டிக்கட்டும். தஸ்லீமா
வரக்கூடாது, ருஷ்டி வரக்கூடாது என்றும், சானியாவிற்கு எதிராகவும்
ஆர்ப்பாட்டம் செய்வது யார்.முஸ்லீம்கள் வன்முறையில் இறங்கியதில்லையா. மும்பையில் 1993,கோவை 1998 என்று உதாரணங்கள் இல்லையா.
கோத்ராவில் ரயில் பெட்டியில்
தீவைத்தது, கல்வீசியது முஸ்லீம்கள்
என்று தெகல்காவே எழுதிவிட்டதே.
அந்த படுகொலைக்கு முஸ்லீம்கள்
வருத்தம் தெரிவிப்பார்களா?
9/11 தாக்குதல் இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல்தானே.
வேறென்ன ஆதாரம் வேண்டும்.
இந்தியாவை இஸ்லாமிய நாடாக்க
வேண்டும் என்ற லட்சியத்தைக்
கொண்ட சிமிக்கு ஆதரவாகத்தானே
இஸ்லாமியர்கள் வலைப்பதிவுகளில்
எழுதுகிறார்கள். ஊடகங்கள் இஸ்லாமிய தீவிரவாதம் என்று
எழுதினால் குதிப்பவர்கள் சிமியை
ஏன் ஆதரிக்கிறார்கள்.
சிறுபான்மை உரிமை என்ற பெயரில்
கொட்டம் போடுபவர்களை அடக்க
வேண்டும்.
கருத்துச் சொன்ன நண்பர்களுக்கு நன்றி.பொதுவாக இஸ்லாமிய மக்கள் பற்றி இந்து அமைப்புகள் பரப்பி வைத்திருக்கும் புனை கதைகள். ஏராளம் அதில் முதல் புனைவு இஸ்லாமியர்கள் வன்முறையாளர்கள்.என்பது. அரசு பயங்கரவாதத்துக்கும், மதவெறிப்பாசிசத்துக்கும்.மாற்றாக உருவாகி வளருவதுதான் அடிப்படைவாதம். பாபர் மசூதி இடிப்பிற்கு பின்னரே இஸ்லாமிய மக்ளில் பெரும்பாலோர் அல்லது மிகுதியான சிலர் தேசீய நீரோட்டத்திலிருந்து விலகிச் சென்றனர். மற்றபடி இந்திய சுதந்திரப் போரில் இஸ்லாமிய போராளிகள் அளவுக்கு வீரம் செரிந்த வரலாறை நான் படித்ததில்லை.புனைவுகள், புரட்டுகள் எல்லாம் இல்லாதொழிக்கப்பட்டு இந்தியாவின் பன்மைத்தனமை பேணப்பட வேண்டும். நமது பொதுப்புத்தியில் இஸ்லாமிய மக்கள் பற்றி பதிந்திருக்கும் கறைகளை கழுவித்துடைக்க வேண்டும் என்பதே நமது ஆசை.
Post a Comment