சைக்கிள் வித்தைக்காரர்



நெடுநேரம் சைக்கிளாடிய களைப்பு தெரிகிறது மணியின் வியர்வையிலும் முகத்திலும். சிதறிவிழுகிற சில்லறைகளை பொறுக்கிய படி குனிந்து கரம் கூப்பி குழந்தைகளுக்கு வணக்கம் சொல்லும் போது மொத்தமாக பூத்துச் சிரிக்கிறார்கள் குழந்தைகள். ஆட்டம் முடிகிறது கூட்டம் கலைகிறது. சைக்கிளை ஓரம் கட்டி விட்டு உள்ளங்கைக்குள் பொத்தி வைத்திருந்த சில்லறைகளை எண்ணினால் இருபது ரூபாய்க்கு இரண்டு ரூபாய் குறைவு.‘‘யப்பா இஸ்கூலூ யூனிபாமும் சொக்காயும் வாங்கிக் கேட்டமுல காசு கொட்டாந்தியாப்பா‘‘
என மணியின் சோப்புப் பையை வார்த்தைகளால் தேடும் மகனுக்கு சொல்ல இன்றும் பதிலில்லை இந்த சைக்கிள் வித்தைக்காரனிடம்....

‘‘காதல் சாம்ராஜ்ஜியத்தில் நீயரு சமந்தாபாஸ§....
காதல் போர்க்களத்தில் நீயரு சதாம் ஹ§சைனு
சிவராசனை துரத்தும் சி.பி.ஐ போல நான் உன்னை துரத்தினாலும்
சிந்து பாத் கதைபோல முடிவில்லாமல் ஓடுகிறாயே...
அய்யகோ...
கட்டிக்கரும்பே ...
முட்டி எலும்பே...
தாளிக்காத ரசமே...
கொதிக்காத குளம்பே...வா என் அருகில் வந்து உம் மென்று ஒன்று தா‘‘ நரம்புகள் புடைக்க காதல் வசனத்தை மேடையில் பேசும் போது சீட்டிச் சத்தம் செவிட்டில் அறைகிறது. ‘‘இது நானே எழுதின டயாலாக் ஆடி மாச கோவில் திருவிழாவுல போடுற நாடகங்கள்ல நான் மேடையில ஏறி டயலாக் பேசி நடிச்சாதான் சாரு போணியாவுது. சைக்கிள் ஓடியெல்லாம் பொழைக்க முடியுமா‘‘ என்று கேட்கிற மணி முப்பாதாண்டு காலமாக சைக்கிளில் வித்தை செய்கிறார். வசூலுக்கு சைக்கிள், நடிக்க நாடகம், பார்ட் டைம் வாட்ச்மேன் வேலை என கழிகிற மணி. குரோம்பேட்டை ஏரியா பள்ளிக்குழந்தைகளின் கனவு மாமா...

‘‘தஞ்சாவூர்க்காரங்க அப்பவெல்லாம் வந்து சைக்கிள் வித்தை காட்டுவாங்க ஒரு வாரம் ஒரு இடத்துல டேரா போட்டாங்கண்ணா மூணு நாள் நாலு நாள் வண்டியை விட்டு இறங்காம வித்தை செய்வாங்க. இப்போ உள்ளோ சனத்துக்கு எங்க இதெல்லாம் தெரியும். எப்புடிணா? ரெண்டு சைக்கிளில் ரெண்டு பேர் இந்த வித்தையை செய்வாங்க மதியம் சாப்பாடு நேரம் வந்தா அப்படியே வித்தை செய்ற ரெண்டு பேரும் சைக்கிளை இணைச்சு பூட்டி அதையே படுக்கை மாதிரி ஆக்கி சைக்கிளில் இருந்துக்கிட்டே சாப்பிடுவாங்க தூங்குறதும் அப்படித்தான். அப்போ இந்த வித்தை செய்யும் போது இடையில கொஞ்சம் பிரேக் கிடைக்கும் அந்த பிரேக்கில் ஒரு என்டர்டயிம்மெண்டா நான் ரஜினி, கமல் மாதிரி மிமிக்கிரி பண்ணுவேன் என்னோட சூப்பர் ஸ்டார் சந்திரபாபு மாதிரி சொக்கா போட்டுக்கினு ‘குங்குமப் பூவே‘ பாட்டுக்கு ஆடுவேன் எனக்கு நல்லதான் கைதட்டுவாங்க ஆனா வித்தை காட்டுறாம் பாரு அவனுக்கு கிடைக்கிற மருவாதி எனக்கு கிடைக்காது. அப்புறம் மூணு நாள் போட்டி முடிஞ்சி அவங்க சைக்கிளை ஓரம் கட்டுவாங்க பாரு, அப்போ அவஙக சைக்கிளை எடுத்து நான் பழகுவேன். கோவிந்தன் மாஸ்டர்தான் சைக்கிள் வித்தையை எனக்கு கத்துக் கொடுத்து. ‘‘சரிடா இதை வெச்சுப் பொழைச்சுக்கோ‘‘ ணு அனுப்பிவிட்டார் அன்னைக்கு ஆரம்பிச்சவன்தான் எல்லா வித்தையும் செய்வேன். என்னதான் வித்தையானாலும் தலை கீழா நின்னாலும் காசு வேணுமே. நல்லா கைதட்டுறவங்க காசு போட மாட்டாங்க கம்முனு வேடிக்கை பார்க்கிறவங்க சில நேரம் காசு போடுவாங்க. சைக்கிள்ல காலை பேலன்ஸ் பண்னி நிண்னுகினே டியூப்லைட்டை என் முதுகில் தட்டி உடைப்பேன். அந்தப் பாவத்துக்கோசரம் சிலர் பத்து ரூபா இருபது ரூபா தருவாங்க ஒரு நாள் ஸ்கூல் குழந்தைங்க கிட்ட இதைச் செஞ்சேம்பாரு அந்த ஸ்கூலம்மா ‘‘ஏம்பா இதெல்லாம் இங்க செய்யாதப்பா. உன் ரத்தம் யாருக்காவது தேவைப்படும் அதை இப்படி வீணாக்காதே. இங்க மட்டுமில்ல இனி எங்கேயும் இதை செய்யாதேணு‘‘ ஆயிரம் ரூபாய் கொடுத்தாங்க. அண்ணேலேர்ந்து நான் ட்யூப்லைட் உடைக்க மாட்டேன். சைக்கிள்ல செய்றதுக்கு 24 ஐட்டம் வெச்சுருக்கேன் ஆனா வெறுமனே சைக்கிள் வித்தை காட்டி வசூலாகுற பணத்தை வெச்சு ஒரு புண்ணாக்கும் புடுங்க முடியாதுணுதான் இப்போ நாடகத்துலயும் சினிமாவுலயும் நடிக்கிறேன்‘‘ என்கிற மணி.

தெருவில் வித்தைகள் செய்வதை குறைத்து பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளிடன் வித்தை காட்டுகிறார். பள்ளி நிர்வாகம் கொடுக்கிற வருமானத்தில் கழிகிறது மணியின் வாழ்க்கை.மணிக்கு ஒரு பெண் குழந்தை இரண்டு ஆண் குழந்தைகள்.

‘‘இஸ்கூலில் எப்பவும் வித்தை காட்ட முடியாது. சீசன் மாதிரிதான் இதுவும் இந்த தொழிலே வேண்டாம்டா சாமிணு பெரிய கும்புடா போட்டேன். சைக்கிளை தூக்கி வூட்டுக்கு பின்னாடி வைச்சேன். குரோம்பேட்டையில் ஒரு கம்பெனியில் போய்ச் சேர்ந்தேன். என் வேலையை பார்த்துக்கிட்டு ஒரே வருஷத்துல கன்பார்ம் பண்னினாங்க ஆனா பாருங்க! அந்தக் கம்பெனியை மூடிட்டாங்க திரும்பிவந்தேன் வீட்டுக்குப் பின்னால போய் ஒதுக்கிப் போட்டிருந்த சைக்கிளை பார்த்தேன் துருப்பிடிச்சு அதைப் பார்க்கவே அவமானமா இருந்தது. வித்தைக்கு மட்டும்தான் டப்பா கட்டின இந்த சைக்கிள் யூஸ் ஆகும் சார். என்னாதான் இருந்தாலும் இத்தனை நாள் சோறு போட்டதை ஒரமா ஒதுக்கலாமா? வேலை வெட்டி இல்லண்ணா ஒரு வாய்க் கஞ்சிக்கு அதானே எங்கிட்டே இருக்கு. அன்னைக்கு வேலையில்லாம திரும்பி வந்தேம்பாருங்க இன்னைக்கு வரைக்கும் சைக்கிளை நான் வீட்டுக்குள்ளாரதான் வைக்கிறேன். என்னோட மூத்த பொண்ணு சார் அது.‘‘

‘‘எங்கப்பாரு சரியா இருந்தா எதுக்கு இந்த நாய்ப் பொழப்பு எங்கப்பா நாடக கம்பெனியில் ஆர்மோனியப் பொட்டி வாசிச்சார். படிச்ச முட்டாளுணு சொல்வாங்க பாருங்க அது எங்கப்பாதான். ஆனா அவரைத் திட்டி என்னவாகப் போகுது.அவர் நாடகத்துல மியூசிக் போட்டாரு சத்தியமா அந்தத் தொழிலுக்கு நாம் போக கூடாதுணு இருந்தேன். சைக்கிள் வித்தை பண்ணினேன் என்னாச்சு அப்டியே காத்துக்கு ஒதுங்குற கட்டுமரம் மாதிரி நானும் நாடகத்துல தானே ஒதுங்கியிருக்கேன். ஒரு நாள் ஒருத்தர் வந்தார் சினிமாவில் டூப் போடுவியாணு? கேட்டார் நானும் சரிணு போனேன். ஆயிரம் ரூபாய்க்கு மேலயே கிடைச்சுது நல்ல பொழப்பா இருக்கேணு எல்லா சினிமாக் கம்பெனிக்கும் என் போட்டோவை தூக்கிக்கிட்டு போவேன். எம் படமில்லாத சினிமாக் கம்பெனியே சென்னையில கிடையாது. எல்லா அசிஸ்டெண்டுங்களுக்கும் என்னைத் தெரியும். ஆனா இந்த அசிஸ்டெண்டுங்க இருக்குறானுங்களே இவனுங்கள மாதிரி கேடிங்க வேற எவனும் கிடையாது. நெஜமா சார், ஒரு கம்பெனிக்கு போனா முடியையும் தாடியையும் வளர்த்துட்டு வாம்பானுங்க. இரண்டு மாசம் மெனக்கெட்டு முடியும் தாடியும் வளர்த்துட்டு போனா படம் ஆரம்பிக்க இன்னும் கொஞ்ச நளாகும் சம்மதாமா?ணு கேப்பாங்க. ஒருத்தன் முடியை வளர்க்கச் சொல்லுவான் ஒருத்தன் முடியை எடுக்கச் சொல்லுவான். வளத்த முடிக்கு சம்பளம் கொடுத்தாலே வீட்டுல பாதி பிரச்சனை முடிஞ்சிடும்.மயிர வளத்தே மண்ணாப் போனவன் சார் நான். ஆனா எங்க டைரக்டரு கே.ஜி.குருசங்கரு ஆகாய ஜன்னல் ணு ஒரு படம் எடுக்குறாரு அதுல நானும் நடிக்கிறேன். அந்தப் படம் வெளிய வந்தாதான் எனக்கு மறு ஜென்மம். நம்ம சாதாரண காமெடி ஆக்டரு நம்ம அப்பா என்ன சினிமாவுல பெரிய நடிகராவா இருந்தாரு எடுத்த உடனே வாய்ப்பு வர்றதுக்கு. அரசியல்வாதிங்கள மாதிரி சினிமாக்காரங்களும் அவங்க அவங்க புள்ளைங்களத்தான சினிமாவுக்கு கொண்டாராங்க. நான் எம்புள்ளைய சைக்கிள் வித்தைக்கு கொண்டார முடியுமா? கொண்டார மாதிரி மைனர் வேலையா நாம் பாக்குறோம்.இது என்னோட போகட்டும் சார் அதுங்க நாலெழுத்து படிச்சி அரசாங்க உத்தியோகத்துக்கு போகணும் அதான் சார் என் ஆசை‘‘
‘‘சைக்கிள் கலை மாதிரி உலகத்துலயே சிறந்த கலை வேறு எதுவும் கிடையாது ஏண்ணா இது மரண விளையாட்டு கரணம் தப்பினா மரணம் மாதிரி இதுவும் அப்படித்தான் சைக்கிள் வித்தை செய்யும் போது கழுத்தெலும்பு உடைஞ்சி செத்துப் போனவங்கெல்லாம் நான் பாத்துருக்கேன்.என்னைக்கு ஸ்கூல் குழந்தைங்க ‘‘உன்னோட விளையாட்டு போரடிக்குது நீ ஊட்டுக்குப் போணு’’ சொல்றாங்களோ அடுத்த நிமிஷமே இந்த சைக்கிளை சாமி மாதிரி ஆக்கி சும்மா வெச்சுடுவேன். நான் வேறு வேலைக்கு போயிருவேன். ஆனா அப்படி போறதுக்கு நான் ஒரு சைக்கிள் வாங்கணும்.‘‘என்ற படி தன் சைக்கிளை செல்லமாகத் தடவுகிற மணிக்கு மாரியம்மன் கோவில் கூழ் திருவிழா நாடகத்தில் பேச வேண்டிய டயலாக் நினைவுக்கு வர விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறார்.
‘‘காவியச் சிலம்பாக நானிருந்தால் உன் காலடியில் தவழ்ந்திருப்பேன்...
வீசும் தென்றல் காற்றாக நானிருந்தால் உன் தாவணியில் குடிபுகுந்திருப்பேன்...
பாடும் குயிலே வா..
ஆடும் மயிலே வா. மணியின் வார்த்தைகள் நீண்டு கொண்டிருக்கிறது வாழும் வாழ்க்கைக்குத் தான் அர்த்தங்கள் ஏதும் இல்லை.

4 comments:

ஏகலைவன் said...

தோழரே,

உங்கள் பதிவைப் போன்று அதில் பதியப்படும் படங்களும் கூர்மையாகவும், பதிவில் சொல்லப்படூம் செய்திகளுக்கு வலு சேர்க்கும் வகையிலும் பதிவிடுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

இப்படிப்பட்ட படங்களை நீங்கள் சேகரிப்பது எவ்வாறு?

டி.அருள் எழிலன் said...

ஏகலைவன் நலமா? உங்கள் ப்ளாக் ரெகுலராக பார்க்கிறேன். இந்த போட்டோ சுமார்தான் என நினைக்கிறேன் நானே போட்டோ எடுப்பேன் இந்தப் படம் நான் எடுத்ததில்லை. என் நன்பர் எடுத்ததுதான். மோசமாகவும் இல்லை சிற்ப்பாகவும் இல்லை. உங்கள் கருத்துக்கு நன்றீ.

காலம் said...

சைக்கிள் வித்தைக்காரர்"
மிக அரிதான பதிவு நான் இதுவரை படித்த கட்டுரைகளில்

டி.அருள் எழிலன் said...

நன்றி நாதாரி